Saturday 22 November 2014

அடுத்தவர் மனதை பாதிக்கும்...

வீட்டுக்கு வந்தால் கசகசவென்றிருந்தது.
சவரம் செய்யலாமே, என்று செய்து கொண்டிருக்கும் போது மீசை வெட்டும் கத்திரிக்கோல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். தேடினால் கிடைக்கவில்லை.
உள் அறையில் அம்மாவும் பொண்ணும் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டு, கற்றுக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.
துரிதமாக செயல்பட்டேன்.
சமைலறைக்கு வந்து பால் வெட்டும் கத்திரியை எடுத்து வேக வேகமாக மீசையை ட்ரிம் செய்தேன்.
அதன் பிறகு அதை நன்றாக கழுவினேன்.அதன் பின் அதன் மேல் லிக்விட் டெட்டால் போட்டுக் கழுவினேன்.
அதன் பின் அடுப்பில் குளியலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் முக்கி எடுத்து, மறுபடி அதை டிஸ்யூ பேப்பரில் துடைத்து அதே இடத்தில் வைத்து விட்டேன்.
ஷெர்லாக் ஹோம்ஸ் வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.
சிறுவயதில் அம்மா குத்துவிளக்கு பொருத்துவார்.
விளக்கை நாம்தான் நிறைவேற்ற வேண்டும்.அதுவாகவே நிறைவேறினால்( அணைந்தால்) அது அபசகுனம் என்பது அம்மாவின் நம்பிக்கை.
சில சமயம் மறதியால் அதுவாகவே நிறைவேறியிருக்கும்.
அப்போது அம்மா பதட்டமாக வருவார்” விளக்கு அதுவா நிறைவேறிட்டோ” என்பார்.
நான் முந்திக் கொண்டு “இல்லமா நான்தான் இப்பத்தான் நிறைவேத்தினேன்” என்று சொல்வேன்.
என்ன சொல்லவருகிறேன் என்றால் சில விசயங்களை அந்த இடத்திலேயே தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும்.
அதுவும் அடுத்தவர் மனதை பாதிக்கும் சின்ன சின்ன விசயங்களை அப்படியே மறைத்துவிடுதல் ரொம்ப நல்லது.

No comments:

Post a Comment