Thursday 2 August 2012

நச் கேள்வி ஐந்து - குரு சிக்ஷ்யன்

1.... 

குருவே! 

மாம்பழத்தை நறுக்கும் போது தோலை ஏன் இவ்வளவு கவனமாக நறுக்குகிறீர்கள், அதில் எவ்வளவு பழத்தை மிச்சம் பிடித்து விடபோகிறீர்கள், அரைத்துண்டு மாம்பழம் கிடைக்குமா? ஒரு அடுக்கு ஆழமாகத்தான் எடுத்தால் என்ன ?

மெலிதாக அறுப்பது, பழத்தை மிச்சபடுத்துவதற்கு மட்டுமல்ல, வெடடும் போது பழம் குளுகுளுப்பாகாமல்,சிதையாமல் தடுக்கவும்தான் சிக்ஷ்யா!

2...

குருவே !

கன்னிகாபுரம் ஆடுதொட்டி பக்கம் போகும் போது ஒரு காட்சியை பார்த்தேன். சிகப்பு நிற சதை மாமிசங்கள் மீன் பாடி வண்டியில் போக, அதை காக்கைகள் கொத்தி கொத்தி தின்கின்றன. அதை பார்த்ததும் அருவருப்பு தாங்க முடியவில்லை.மற்றவர்கள் சாப்பிடும் உணவின் மேல் ஏன் இப்படி தோண்றுகிறது.?

நீ அந்த மீன்பாடி வண்டி பின்னாலே போனால் அது கோயம்பேடு மார்க்கட் பக்கத்தில் உள்ள பிரியாணிகடைக்கு போகும். அந்த மலிவான விலை கறியில் செய்யும் உணவை தின்றுதான், செரித்துதான் காலை ரெண்டு மணிக்கு லாரியில் ஏறி ஒற்றை ஆளாய் எண்பது கிலோ கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, பல்லாரி மூடைகளை கீழே இறக்குகிறான், விழுப்புரம் திருவண்ணாமலை பக்கத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளி.
அந்த காய்கறிகள்தான் வைதீக கோயில்களில் கிச்சடி சாதமாக ருசிக்கிறது என்று நினை, உனக்கு அருவருப்பு வராது சிக்ஷ்யா!

3...

குருவே!

என் நண்பன் அடிக்கடி தன் அந்தரங்கத்தையெல்லாம் சொல்லிவிட்டதாக சொல்கிறான். அதை எப்படி எடுத்து கொள்வது ?

எவன் ஒருவன் தன் அந்தரங்கத்தையெல்லாம் சொல்லிவிட்டதாக சொல்கிறானோ, அவன் அதையும் விட அந்தரங்கத்தை சொல்லாமல் வைத்திருக்கிறான் என்பதுதான் உண்மை. எதை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் இருக்கிறதோ அதுவே அந்தரங்கம் சிக்ஷ்யா !

4...

குருவே!

ஒருவன் பதட்டத்தோடு யோசித்து கொண்டிருக்கும் மனநிலையில் இருக்கிறான் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

அவன் சாதரணமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அவன் கால்விரல்களை பார் !. அது மடங்கி தரையில் அழுத்தி இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று அர்த்தம் சிக்ஷ்யா !

5...

குருவே!

ரோட்டில் போகும் போது எப்படி வழிகேட்க வேண்டும் ?

எப்படி வேண்டுமானாலும் கேள். ஆனால் வழி சொல்பவர், வழி சொல்லும் போது அதை மட்டும் கூர்ந்து கேள். அது புரியாது என்று முதலிலேயே நினைத்து சும்மா தலையாட்டாதே.
உன் தலையாட்டல் அவருக்கு தேவையே இல்லை. வழி கேட்க்கும் போது இவருக்கு எப்படி நன்றி சொல்லப்போகிறோம் என்றும் யோசிக்காதே.வழி புரியாது சிக்ஷ்யா.

No comments:

Post a Comment