Thursday 16 April 2015

அளத்தல்

’அளத்தல்’

என்பதை பிரேக்ஸ் இந்தியாவில் தொழிற்பழகுநராக ஸ்ரீனிவாச ராஜகோபாலன் சாரிடம் வேலை செய்யும் போது கற்றுக் கொண்டேன்.

வெரினியர் காலிபர்,மைக்ரோ மீட்டர்,பலதரப்பட்ட கேஜஸ், புரொஜக்டர்  மெஸரிங் (?), என்று ஒவ்வொன்றையும் மிக அன்போடும் கனிவோடும் சொல்லிக் கொடுப்பார்.

பிரேக்கின் உதிரிப்பாகம் சப்ளை செய்யும் வெண்டார்கள் மொத்த உற்பத்திக்கு முன்னர்,அந்தக் குறிப்பிட்ட பொருளை, சாம்பிளுக்கு கொடுக்க வேண்டும்.

அந்த சாம்பிள்கள் எல்லாம், பிரேக்ஸ் இந்தியாவின் அங்கீரிக்கப்பட்ட டிராயிங்கோடு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

அதாவது படத்தில் இந்த டிஸ்கின் விட்டம் ஐந்து செமீ. நிஜத்தில் டிஸ்க்கின் விட்டம் ஐந்து செமீ இருக்கிறதா? என்று சரிபார்த்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

அந்த ரிப்போர்ட் கொடுக்கும் வேலை என்னுடையது.ஆக அடுத்த ஆறுமாதங்களுக்கு விதம் விதமாக அளந்தேன்.

பலதரப்பட்ட பொருட்களை, பலவிதமாக அளந்தேன்.சிலவற்றை இரண்டாக வெட்டி அளகக் வேண்டும்.சில சிறிய பொருட்களை புரொஜக்டரில் வைத்து அளக்க வேண்டும், சில பொருட்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் வெடிக்கிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும்.சில பொருட்களின் பளபளப்பு சரியாக இருக்கிறதா என்று கருவி கொண்டு சோதிக்க வேண்டும்.

இப்படி அளப்பதில் சில முறைகள் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஒரு கூடுப் பொருளின் உள்ளே இருக்கும் வளைவின் ஆரத்தை அளக்கவேண்டுமானால்,
உதாரணமாக ஒரு டம்ளரின் உள்பகுதில் இருக்கும் வளைவின் ஆரத்தை எப்படி அளப்பீர்கள்.உள்ளே அதற்குரிய பிரத்யோக களிமண்ணை திணிக்க வேண்டும்.பின் கலையாமல் எடுக்க வேண்டும்.களிமண்ணில் டம்ளரின் உட்பகுதி வடிவம் இருக்கும்.அதனை வைத்து ரேடியஸைக் கண்டுபிடிக்க வேண்டும்.

எனக்கென்னவோ இந்த முறையான அளத்தல் மீது ஒரு ஆர்வம்.” ச்சே எப்படி ஐடியா இது” என்று வியப்பேன்.

சமீபத்தில் என் மகளுக்கு கதை சொல்ல படிக்கும் போது, இந்த அளத்தல் பற்றிய கதை ஒன்று என்னை ஈர்த்தது.

மன்னன் யானைப் பாகனை அழைத்து “நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது.உன்னிடம் இருக்கும் யானையின் எடையை துல்லியமாக அளந்து என்னிடம் சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் தலையை எடுப்பேன்” என்று சொல்வார்.

யானைப்பாகன் கவலையோடு இருப்பதைப் பார்த்து முதியவர் உதவ முன்வருவார்.” யானை தானே நான் எடை போட்டுத் தருகிறேன்” என்பார்.

”இவரென்ன சுத்த அப்பாவியாய் இருப்பார் போலிருக்கே.யானையை எப்படி தராசில் எடை போட முடியும்” என்று யோசிப்பான்.

முதியவர் யானையை ஏரியோரம் நிற்கும் படகு பக்கத்தில் அழைத்து வரச்சொல்வார்.படகில் யானையை ஏற்றச்சொல்வார்.யானை ஏறி படகு நிலையாய் நின்ற பின் படகு எவ்வளவு ஏரியின் உள்ளே மூழ்கியிருக்கிறது என்பதை தெளிவாக குறிக்கச் சொல்வார்.

யானைப்பாகனும் அழியாதவாறு யானை நின்ற படகின் உடல் மூழ்கிய அளவை குறித்து வைப்பான.

யானையை படகை விட்டு இறக்கச் சொல்வார்.

யானை இறங்கிய பிறகு மூட்டை மூட்டையாக படகில் மணலை ஏற்றச் சொல்வார்.யானை ஏறிய போது படகு எவ்வளவு மூழ்கியிருந்ததோ, ””அதே அளவு”” படகு மூழ்கும் வரையில் மணல் மூட்டையை ஏற்றுவார்கள்.மூழ்கியதும் முதியவர் யானைப்பாகனை நோக்கி சொல்வார்.

“நல்லது. இப்போது இந்த மணல் மூட்டைகளை எடை போட்டுக்கொள்.யானையின் எடை துல்லியமாக கிடைக்கும்.போய் மன்னனிடம் சொல்” என்பார்.

ஏனோ இந்தக் கதையைப் படிக்கும் போது அதிகப் பரவசமானேன்.

தர்க்கப்படி யானையை கூறு கூறாக வெட்டி தராசில் எடை போடலாம்.
டம்ளரை இரண்டாக வெட்டி ஆரத்தை அளக்கலாம்.

ஆனால் யதார்த்தப்படி யானை செத்துவிடும்.
ஆனால் யதார்த்தப்படி டம்ளர் உடைந்து உபயோகமில்லாமல் ஆகிவிடும்.

யானையும் சாகக்கூடாது, எடையும் போடவேண்டும் எப்படி?
டம்ளரும் உடையக்கூடாது, உள் ஆரத்தையும் அளக்க வேண்டும் எப்படி?

யானையின் எடையை அளக்க ”படகு அழுத்த மணல் மூட்டை டெக்னிக்”

டம்ளரின் உள் ஆரத்தை அளக்க “களிமண் தினித்தெடுத்து அளக்கும் டெக்னிக்”

அளத்தல்...

No comments:

Post a Comment