Thursday, 16 April 2015

கணிதவியலாளன்

’கணிதவியலாளன்’ என்றொரு சிறுகதையை

காவ்யா இதழ் தொகுப்பில் படித்தேன்.மிகச் சுவாரஸ்யமாக இருந்தது அக்கதை.எழுதியவர் ‘அழகு சுப்பிரமணியம்’.

சந்திரம் யாழ்பாணத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் கணித ஆசிரியராக இருக்கிறார் .சந்திரத்துக்கு எல்லாமே கணிதம்தான்.அவருடைய முதல் குறிக்கோள் கல்லூரிப் பேராசிரியர் ஆவது. இரண்டாவதுக் குறிக்கோள் ராமானுஜன் மாதிரி பெரிய கணிதவியலாளனாவதாகும்.

அவருக்குத் திருமணம் நடக்கிறது.சராசரி ஆண்கள் மாதிரி தன் கணவன் இல்லாதது மனைவிக்கு கவலையாயிருக்கிறது.எளிமையான அன்பு செலுத்துதலோ,கொஞ்சலோ, முத்தமோ இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிறாள்.

சந்திரம் குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவே மாட்டார். திடீர் திடீரென்று வெளியே நீண்ட நடை பயின்று வருவார்.அப்படி நடக்கும் போது கணிதம் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்.தன் மாணவர்களுக்கு எளிமையான கணிதமுறைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார்.மனைவியும் தன் கணவனைப் புரிந்து கொண்டு,கூடிய மட்டும் குழந்தைகள் சந்திரத்தை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.

தன் உழைப்பால் சந்திரம் பல தேர்வுகள் எழுதி கொழும்பு நகரில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக உயர்கிறார்.கல்லூரில் தன் கணித ஞானத்துக்கு மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.அதை வெறும் படிப்பாக சமூகம் பார்த்தது.

கல்லூரியின் சக பேராசிரியர்கள் சமூகப் புகழுக்கு வேறு பல காரியஙகள் செய்தனர்.ஒருவர் தத்துவ உரையாற்றினார்.ஒருவர் கதை எழுதினார்.ஒருவர் சமூக சேவை செய்தார்.அவர்கள் எல்லாம் கல்லூரியில் ஒவ்வொரு அமைப்பின் தலைவர்களாக வேறு இருக்கிறார்கள்.சந்திரம் இதனால் தனக்குக் கணிதம் மட்டுமே தெரியும், உலகில் மற்ற விஷயஙகள் தெரியாதோ என்று மனம் புழுங்க ஆரம்பிக்கிறார்.

தேர்வை கண்கானித்தபடியே அறையில் நடந்து வரும் சந்திரம் ஒரு மாணவன் எழுதிய இரண்டு வரியில் ஒரு வரியை ஏதேட்சையாகப் படித்துவிட்டார்.

பேராசிரியர் சந்திரம் + கணிதவியல் = முடிவிலி

என்பதே அந்த வாக்கியம்.அதைப் படித்தவுடன் சந்திரத்துக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.ராமானுஜன் மாதிரி தானும் புகழ்பெறுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார்.

”சரி இரண்டு வாக்கியம் இருந்ததே.முதல் வாக்கியம்தானேப் படித்தோம்.இரண்டாவது என்ன” என்று மாணவனின் தேர்வுத்தாளை வாங்கிப் பார்த்தார்.

இரண்டாவது வாக்கியம்

பேராசிரியர் சந்திரம் - கணிதவியல் = பூஜ்யம்

என்றிருக்கும்.அதைப் பார்த்து சந்திரத்துக்கு தலை சுற்றும்.அன்று மாலை கல்லூரியில் ஒரு விழா.நிலவொளியில் விருந்துண்டு ரசித்தவாறு மனைவியிடம் கேட்பார்.

”நான் ஒரு விடுகதை சொல்கிறேன்.விடை சொல்வாயா”
மனைவி தலையசைக்கிறார்.சந்திரம் கேட்கிறார்

”பேராசிரியர் சந்திரம் கூட்டல் கணிதவியல். அப்படின்னா விடை என்ன”

மனைவி சொல்வார் “ரொம்பப் பெரிசு.கடல் மாதிரி பெரிசுன்னு சொல்லலாம்”.

இதைக் கேட்டவுடன் சந்திரத்துக்கு மகிழ்ச்சி கொள்ளாது.மனைவியை பலமுறை பாராட்டுவார்.”அதை மிகப்பெரியது என்று சொல்லக் கூடாது “முடிவிலி” என்று சொல்லவேண்டும்.” என்பார்.

மனைவிக்கு மகிழ்ச்சி.அதன் பிறகு திடீரென்று சந்திரம் கேட்பார்.இப்ப அடுத்தக் கேள்வி

”பேராசிரியர் சந்திரம் கழித்தல் கணிதவியல். அப்படின்னா விடை என்ன”

“இதுத் தெரியாதா உங்கக் கிட்ட இருந்த கணிதத்த எடுத்துட்டா என்ன மிச்சமிருக்கு.ஒண்ணுமேயில்ல நீங்க” என்று மனைவி சொல்லி முடிக்கவும் சந்திரம் மனைவி மேல் பாய்ந்து மோசமான வார்த்தைகளைக் சொல்லி அடிக்க ஆரம்பிப்பார்.

கூட்டம் சந்திரத்தைப் பிடிக்கும். சந்திரமோ மனநிலை பிறழ்ந்தவராக மனைவியைத் திட்டியபடியே அடிக்கப் பாய்வார்.உபவேந்தர் சந்திரத்தை ஆஸ்பித்திரிக்குக் கூட்டிச் செல்ல சொல்வார்.ஆட்கள் சந்திரத்தை இழுத்துச் செல்கிறார்.

அப்போது சந்திரம் “ என் மனைவியைப் பார்க்கவேண்டும்” என்று கத்துகிறார்.

“அவரை இனி நீங்கள் பார்க்கவே பார்க்க முடியாது” என்கிறார் உபவேந்தர்.

“ஒஹோ அப்படியே சேரவே சேரமுடியாத சமந்திர வரைகள் (Parallel lines) கூட முடிவிலி (infinity) யில் சேரும் தெரியுமா? நான் அவளை முடிவிலியில் சந்தித்துக் கொள்கிறேன்” என்று கத்திக்கொண்டே இருக்க

கணிதவியலாளன் சந்திரத்தை ஊர்த்தியில் ஏற்றுகிறார்கள்.

நான் இந்தக் கதையை நாடகமாக எடுத்தால் எஸ்.ஜே சூர்யாவைத்தான் சந்திரமாக நடிக்க வைப்பேன்.

சுவாரஸ்யமானக் கதை...

No comments:

Post a Comment