Sunday, 12 April 2015

விறகு அடுப்பு....

1.1990 களின் தொடக்கத்தில்,
அம்மா விறகு அடிப்பிலும் மரப்பொடி அடுப்பிலும் சமையல் வேலை செய்வதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
மரப்பொடியோ விறகோ சரியாக காயாமல் இருந்து விட்டால் புகை மண்டும்.வீடு முழுவதும் புகையாய் பரவும்.கண்கள் கரித்து நீர் கொட்டும்.தொண்டை கட்டி இறுகும், இருமல் வரும்.சொந்தபந்தங்கள் வந்து நிறைய சமைக்க வேண்டியது வந்துவிட்டால் நிச்சயம் வீடு முழுவதும் புகையாய் இருக்கும்.
சில சமயம் புகை எரிச்சலால் அம்மாவையே நாங்கள் திட்டுவோம்.பக்கத்தில் இருக்கும் மரம் அறுக்கும் கடையில், சைக்கிளில் நானும் தம்பியும் சென்று விறகும் மரப்பொடியும் வாங்கி வருவோம்.நான் ஒருநாள் விறகு வாங்கி வந்தால், தம்பி மரப்பொடி வாங்கி வரவேண்டும்.அதையும் சரியாக வாங்கிக் கொடுக்க மாட்டோம்.அதற்கு
அம்மா எங்களை கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சுவார்கள்.இப்படி விறகடுப்பு என்பது அம்மாவுக்கு உடல் உளைச்சலையும் மன உளைச்சலையும்தான் கொடுத்தது.
2.ஏப்ரல் மாத ’கேரவன்’ ஆங்கில இதழில் விறகு அடுப்பைப் பற்றிய அருமையான கட்டுரையை வாசித்தேன்.இந்தியா போன்ற விறகடுப்பு அதிகம் உபயோகிக்கும் நாடுகளால் சுற்றுப்புற சுகாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது.
விறகு அடுப்பினால் வீட்டின் காற்று எப்படி மாசடைகிறது.அதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் என்னப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.
3. உலக சுகாதார மையம் 2010 ஆண்டு செய்த ஆய்வின் படி
- விறகடுப்பினால் விட்டினுள் ஏற்படும் காற்று மாசினால் வருடத்துக்கு 35 லட்சம் மக்கள் இறந்து போகிறார்கள்.அதில் நான்கில் ஒருவர் இந்தியர்.
-விறகடுப்பினால் வெளிக் காற்றுக்கு ஏற்படும் மாசினால் வருடத்துக்கு 50 லட்சம் குழந்தைகள் நிமோனியா நோயால் இறந்து போகிறார்கள்
-தெற்காசியாவில் வீட்டிலிருந்து வரும் புகைதான் இரண்டாவது பெரிய அபாயமாக மக்களுக்கு இருக்கிறது.
-கேன்சரை உண்டாக்கும் 14 காரணிகள் இந்த வீட்டு அடுப்பு மாசுகளில் அடங்கியிருக்கிறது.
4.1970 களில்தான் இந்த விறகடுப்பு பிரச்சனை என்பது சாதரணபிரச்சனையல்ல, இதில் தனிமனித ஆரோக்கியம், பிராந்திய ஆரோக்கியம், காடுகளின் அழிப்பு, உலக சுற்றுச் சூழல் பிரச்சனை என்று அனைத்தும் அடங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள்.
ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் விறகடுப்புக்காகவே காடுகளை வேகமாக அழிப்பார்கள் என்ற கருத்து நிருபிக்கப்படுகிறது.
5.பல வகையான அடுப்பு மாடல்களை யோசிக்கிறார்கள்.அடுப்புகளை குழாயின் மூலமாக சிம்னியில் இணைக்கிறார்கள்.
அரசு இதற்கு பல கோடி ரூபாய் பணத்தை இறைக்கிறது.உலக நிறுவனங்கள் பல இதற்கு தானே முன்வந்து உதவுகின்றன.இருப்பினும் இந்தியாவில் இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதற்கு மக்களின் அலட்சிய மனபாவமும் சூழ்நிலையும் முக்கியமான காரணமாக இருக்கிறது.பல கிராமங்களில் புகை வராத அடுப்பை மானிய விலையில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.அதையும் உபயோகிக்கிறார்கள், புகை அடுப்பை உபயோகிக்கிறார்கள்.
6.திட எரிபொருளை எரிக்கும் அடுப்பை (விறகடுப்பை) ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு மாதிரியாக தயாரிக்க வேண்டியதாய் இருக்கிறது.
சிலர் விறகு உபயோகிக்கிறார்கள்.இன்னும் சிலர் கரும்புச்சக்கைகளை உபயோகிக்கிறார்கள்.இன்னும் சிலர் பஞ்சு வேஸ்டை எரிக்கிறார்கள்.
குஜராத்,ராஜஸ்தான் மக்கள் பெரிய வட்ட சப்பாத்திகள் இடுபவர்கள்.அவர்களுக்கு சப்பாத்திக்களின் கரையோரம் கரிபிடிக்காத அடுப்பு வேண்டும்.
தென்னிந்தியர்களுக்கு அரிசி குழையாத அளவுக்கு மிதமாக எரியும் அடுப்பு வேண்டும்.இமாச்சலப் பிரதேச மக்களுக்கு அடுப்பு உணவையும் வீட்டையும் சேர்ந்து சூடாக்க வேண்டும்.இன்னொரு பக்கம் அடுப்பு பற்றி ஆராய்ச்சி செய்ய பலர் சலித்து கொள்கின்றனர்.ஐ.ஐ.டி மாணவர்கள் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் “இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா? “ என்று கேட்கிறாகள்.
7.1980 யில் ஸ்மித் என்பவர் “ஏன் கிராமத்து இளம்பெண்களுக்கு புரிந்து கொள்ளமுடியாத இதயநோய் வருகிறது? “ என்று ஆராய்ச்சி செய்யப் போக இதற்கு காரணம் விறகடுப்பு என்ற விடையை அடைகிறார்.
அதுவரை அணுக்கதிர் பிரச்சனை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த ஸ்மித், அதை விட்டுவிட்டு இந்த விறகடுப்புப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டார்.
ஏன் அணுப் பிரச்சனையை ஆராய்வதை விட்டு விட்டீர்கள் என்று கேட்டால்
“அதில் பிரச்சனை மிகக்குறைவு” என்கிறார்.
8.என் அம்மா எப்படி விறகடுப்பு கொடுமையில் இருந்து தப்பித்தார் தெரியுமா?
வீடு மாறும் போது, மாறிய பிறகு ஹவுஸ் ஒனர் “விறகடுப்பு கூடாது.ஸ்டவ்தான் உபயோகிக்க வேண்டும்” என்றார்.
அதைக் கேட்டு எங்கள் உரிமை பாதிக்கப்படுவதாகக் கொதித்தோம்.
வேறு வழியில்லாமல் ஸ்டவ்வுக்கு வந்தோம்.
இப்போது நினைத்துப் பார்த்தால் கடவுள்தான் ஹவுஸ் ஒனர் ரூபத்தில் அம்மா உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment