Thursday, 16 April 2015

ஊருக்கே தெரிந்த சிரிப்புக் கதைகள்...

சில ஜோக்குகள் ஊருக்கே தெரியும்.ஆனாலும் அதை சமயம் கிடைக்கும் போது வெளியே சொல்லும் ஆனந்தம் அடைவேன்.

அல்லது எப்ப சான்ஸ் கிடைத்தாலும் சொல்வேன்.
அந்த ஊருக்கே தெரிந்த இரண்டு கதைகள் வருமாறு.

1.வற்றிய குளத்திலிருந்து வளக்குளத்துக்கு போய்விடலாம் என்று இரண்டு கொக்குகளும் தீர்மானித்த போது, அவர்களின் நண்பன் ஆமை முழித்து நின்றது..

”பறந்து செல்ல எங்களுக்கு இறக்கை இருக்கிறது, உனக்கோ குவிந்த ஒடு அல்லவா இருக்கிறது ஆமை நண்பனே.எப்படி உன்னைக் கூட்டிச் செல்வோம்” என்று கொக்குகள் திணற,

ஆமை யோசனையொன்றை சொன்னது.

“குச்சி. குச்சியின் இரண்டு பக்கமும் உங்கள் அலகுகள்.நடுவே என் வாய்” என்றது.

கொக்குகள் நண்பனின் அறிவை மகிழ்ந்து வலிகுச்சி எடுத்து, அலகில் பொருத்தி, நடுப்பகுதியை ஆமையின் வாய்க்கு கொடுத்தன.

பறக்கும் பறவைகள் நடுவே ஆமை குச்சியைக் கடித்து செல்வதப் பார்த்த மக்கள் அதிசயப்பட்டனர்.

“இந்த கொக்குகளுக்கு என்ன அறிவு பாத்தியா.ஆமை எவ்வளோ அழகா தூக்கிட்டு போது” என்றார்கள்.

தன்னுடைய அறிவை நண்பர்களின் அறிவாக மற்றவர்கள் சொல்வதைக் ஆமையால் பொறுக்க முடியவில்லை.

“கொய்யால அது என் சொந்த ஐடியா” என்று ஆமை சொல்லி முடிக்கும் போது கீழே பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

2.அதிகப்படியான உழைப்பால், களைத்திருந்த  மூன்று ஆமைகள் டீ சாப்பிட போயிருந்தன.

சுடான டீ ஆமைகள் முன் நீராவியைக் கொடுத்தபடி, ”என்னைக் குடி என்னைக்குடி “ என்று நடனம் ஆடின.

ஆனால் மூன்று ஆமைகளும் பணம் கொண்டுவரவில்லை என்பதை அப்போதுதான் தற்செயலாக தெரிந்து கொண்டன.

நீ கொண்டுவா
ஏன் நீ போயேன்.
நீ போனா ஆகாதோ
என்று போட்டிப் போட்டன.

எப்படியோ மூன்றாம் ஆமையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தன முதல் இரண்டு ஆமைகள்.மூன்றாம் ஆமை ஒரே ஒரு கண்டிஷனோடு பணம் எடுக்க போனது.

“நா போவேன்.ஆனா நா பணம் எடுத்துட்டு வர்ற வரைக்கும் நீங்க டீ சாப்பிடக்கூடாது சரியா”

“சரி” என்று சம்மதம் தெரிவித்து அனுப்பி வைத்தன.
போன ஆமை வரவே இல்லை. வெகுநேரம் காத்திருந்த முதல் இரண்டு ஆமைகளும் சரி தலைவலிக்கிறது டீ சாப்பிடுவோம் என்று டீக் கோப்பையை உதடு நோக்கி எடுத்துச் சொல்லும் போது.

“கொய்யால தெரியும்டா உங்க கேவலமான புத்தி.நீங்க இப்படி செய்வீங்கன்னு தெரிஞ்சிதாண்டா நா மரத்துக்குப் பின்னாடியே ஒளிஞ்சிருந்தேன்” என்றதாம்.

இந்த இரண்டு கதைகள் சொல்லும் போதும் “கொய்யால” என்ற் வார்த்தையை உச்சரிக்க ஆர்வமாயிருப்பேன்.

அதைச் சொல்லும் போதே சிரிப்பு தெறிக்கும் எனக்கு :) :)

எந்தக் கண்கள் அழகானவை

ஏதோ ஒரு பக்திக் கதையில் படித்திருக்கிறேன்.
கடைத்தெருவில் ஒருவன் ஆடாமல் அசையாமல் ஒரு தாசியை வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தானாம்.அவனை அனைவரும் இகழ்ச்சியாகப் பார்க்க,
அப்பக்கம் வந்த ஞானி “என்ன அவளிடம் இருக்கிறது” என்றாராம்.
அவளுடைய கண்கள் அழகாக இருக்கின்றன.அவள் கண்களை விட்டு என் கண்களை எடுக்க முடியவில்லை.நான் உலகில் பார்த்ததிலேயே அழகான கண்கள் அவளுடையதுதான் என்றானாம்.
“ஒருவேளை இதைவிட அழகான கண்களைப் பார்த்தால் என்ன செய்வாய்” என்றாராம் ஞானி.
“இருக்க வாய்ப்பில்லை” என்றவனிடம், அருகில் இருந்த கோவிலின் சாமி சிலையின் கண்களைப் பார்க்க வைத்தாராம்.
அந்த உருவத்தில் தெரிந்த கண்கள் தாசியின் கண்களை விட பலமடங்கு அதிகமாய் இருக்கவே அவன் அப்படியே ஞானியைப் பணிந்து பக்தி மார்க்கத்துக்கு வந்துவிட்டானாம்.
இந்தக் கதையை ஜெயமோகன் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஜெயமோகன் சுந்தரராமசாமி அசோகமித்திரன் ஒருவேளை தமிழின் சிந்தனையாளராக இருக்கலாம்.ஆனால் அவர்கள் எல்லாம் அந்தக் கடைத்தெரு பெண்ணின் கண்கள் மாதிரிதான்.
இவர்களுடைய சிந்தனைகளையெல்லாம் பலமடங்கு தாண்டும் சிந்தனையாளர் ஒருவர் தமிழில் இருக்கிறார்.
அவர் எழுத்தாளர் பிரமிள்.
ஜெயமோகனின் இளம் ரசிகர்கள் தயவு செய்து பிரமிள் எழுதிய படைப்புகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை.
அவருடைய கதைகள் கவிதைகள் கூட படிக்க வேண்டாம்.
அவர் எழுதிய எந்தக் கட்டுரையானாலும் படித்துப் பாருங்கள்.அதில் யோசிக்க பல சிந்தனைமடக்குகள் இருக்கும்.
அவற்றையெல்லாம் படித்தால் சுந்தரராமசாமி அசோகமித்திரன் ஜெயமோகன் கண்களை விட பிரமிளின் கண்களை பிடித்துப் போகும்.
இந்த காரணத்தினாலேயே தமிழின் பல எழுத்தாளர்கள் பிரமிள் பற்றி எழுத மாட்டார்கள்.
பேச மாட்டார்கள்.
ஜெயமோகன் தன் பேட்டியில் தமிழின் சிந்தனையாளர்களாக பேசும் போது பிரமிளை திட்டமிட்டு மறந்துவிடுகிறார்.எங்கே பிரமிளைப் பற்றி பேசினால் தன்னுடைய இளம் வாசகர்களிடத்தில் அது பிரமிளுக்கு விளம்பரமாக அமைந்து விடுமோ என்ற பயம் அவருக்கிருக்கிறது.
பிரமிள் சுந்தரராமசாமி பிரச்சனையால் காலச்சுவடு எப்போதும் பிரமிளை அந்த அளவுக்கு கண்டுகொள்ளாது.
காலச்சுவடுக்கு பாரதி புதுமைப்பித்தனுக்கு அடுத்து சுந்தரராமசாமி என்று மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் ஒரே உயரிய குறிக்கோள்.அந்தக் குறிக்கோளுக்கு குறுக்கே எவன் வந்தாலும் வெட்டப்படுவான்.
எங்கேயோப் போறேன்.இளைஞர்களுக்கு சொல்கிறேன்.
நாமெல்லோரும் பிரமிளை வாசிக்கப் பழகவேண்டும்.அட்லீஸ்ட் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகளை முதலில் வாசிக்க.
ஏன் சொல்கிறேன் என்றால் ஜெயமோகனின் இளம் ரசிகர்களிடத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது.ஜெயமோகன் மீது யாராவது விமர்சனம் சொன்னால் “சூரியனை பார்த்து ஞமலி குரைக்கிறது” என்ற பாவனையில் இருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு சில இளைஞர்கள் ஜெயமோகன் சொன்னா அது கரெக்டுதான் என்று இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் கட்டாயம் பிரமிளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை. நிச்சயமாக தமிழ் சிந்தனை உலகில் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிறைய மாயைகளில் இருந்து வெளியே வருவீர்கள்.
பிரமிளுக்கென்று ஒரு அறிவுஜீவி ரசிகர்கூட்டம் இருக்கிறது.அவர்கள் யாரும் பிரமிளைப் பற்றி அதிகம் பிரச்சாரம் செய்யமாட்டார்கள்.
”எங்கள் பிரமிள் உயர்தரமானவன்.வாசர்கள்தாம் அவனிடத்தில் போகவேண்டும்.பிரமிளை விளம்பரம் செய்தால் அது பிரமிளுக்கு அவமானம்” என்று 1950 ஆண்டுக் காலத்தில் உள்ள பழைய கொள்கைகளை வைத்திருப்பவர்கள்.
எனக்கு அதில் உடன்பாடில்லை.
இந்த நூற்றாண்டில் பொருள் தரமானதாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும்.
சில இடத்தில் கட்டாயப்படுத்த வேண்டும்தாம்.
முதன் முதலில் தேனைப் பார்த்த சிறுகுழந்தை அது ஏதோ ஒரு அருவருப்பான பொருள் என்று வேண்டாம் என்று சொல்லி ஒடினால்,
பிடித்து வைத்து கட்டாயப்படுத்தி நாக்கில் தேய்க்கத்தான் வேண்டும்.
ஒருமுறை தேய்த்தால் குழந்தையாச்சு தேனாச்சு.
அதேதான் பிரமிள் படைப்புகளை பேட்டிக்களை மற்றவர்களுக்கு சேர்க்கும் விசயத்திலும் என்பது என் கருத்து.
இனிமேல் அவ்வப்போது பிரமிள் கட்டுரைகள் பேட்டிகள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.
ஏற்கனவே இது பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் சமீபத்திய ’ஜெயமோகனின் பிரமிள் இருட்டடிப்பு பேட்டி” என்னை பாதித்துவிட்டது.
இவர்களின் இருட்டடிப்பை எல்லாம் பிரமிள் தாண்டுவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

ஏப்ரல் மாதக் காலச்சுவடில் வந்த மாமல்லன் சிறுகதை

விமலாதித்த மாமல்லன் எழுதி ஏப்ரல் மாதம் காலச்சுவடில் வந்த ‘கோபுரம்’ சிறுகதை வாசித்தேன்.
செய்தி கொடுத்த துக்கத்திலும் பதட்டத்திலும்,
கெட்ட செய்தி சொல்லும் தூதுவனை வெட்டிக்காயப்படுத்தும் அரசனாய், பொதுமக்கள் இருப்பதை காட்டுவது போல கதையைத் தொடங்கி மற்றொரு உள்ளடுக்கையும் வைத்து,
வரலாறு பற்றிய மென்மையான பகடியை முடிவில் வைக்கிறார் என்பதாக நான் புரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு ஊரின் ஸ்தல வரலாறை ஒட்டிய பழக்க வழக்கங்கள்,மற்றும் கலைக்காட்சிகள் பின்னால் அசட்டுத்தனமாக கூட ஏதாவது காரணம் இருக்கவும் கூடும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
மாமல்லனின் மொழியை பல இடங்களில் ரசித்தேன்.உதாரணமாக
/கற்றுக்குட்டி புகைப்படக்காரனையும் கலைஞனையும் ஒருசேரக் கவரக்கூடிய வயோதிக வசீகரத்தை அவனுக்கு அளித்திருந்தன/
/அவ்வளவு நெரிசலிலும் எவரும் நசுக்கிவிடா வண்ணம் அழுக்கடைந்த அவனது ஆடைகளே அவனுக்கு பாதுக்காப்பு அரண் அமைத்துக் கொடுத்திருந்தன/
என்பது போன்று பல வாக்கியங்களை சொல்லலாம்.
ஆனால் இந்தக் கதையை சில இடங்களில் உணர்வுப் பூர்வமாக் விவரித்திருக்கலாம்.ஆனால் கதையாசிரியர் ஏனோ அவ்விடங்களை வேக வேகமாக கடந்து செல்கிறார்.
’கதை’ என்பது செறிவாக இருக்கும் இவ்வாறானக் கதைகளை கொஞ்சம் நீட்டித்து எழுதுவதுதான் சிறந்தது என்பேன்.கதையின் இறுதிக்கட்டத்தில் எல்லாம் அசாதரண வேகம் தெரிகிறது.
ஒருவேளை நிறைய சிறுகதையாசிரிகள் அதுபோல பண்ணி பண்ணி நீட்டித்து எழுதுவது அவருக்கு சலிப்பைக் கொடுத்து,அப்படி இருக்ககூடாது என்று அவர் நினைத்திருக்கலாம்.
எனக்குப் பிடித்திருந்தது...

கணிதவியலாளன்

’கணிதவியலாளன்’ என்றொரு சிறுகதையை

காவ்யா இதழ் தொகுப்பில் படித்தேன்.மிகச் சுவாரஸ்யமாக இருந்தது அக்கதை.எழுதியவர் ‘அழகு சுப்பிரமணியம்’.

சந்திரம் யாழ்பாணத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் கணித ஆசிரியராக இருக்கிறார் .சந்திரத்துக்கு எல்லாமே கணிதம்தான்.அவருடைய முதல் குறிக்கோள் கல்லூரிப் பேராசிரியர் ஆவது. இரண்டாவதுக் குறிக்கோள் ராமானுஜன் மாதிரி பெரிய கணிதவியலாளனாவதாகும்.

அவருக்குத் திருமணம் நடக்கிறது.சராசரி ஆண்கள் மாதிரி தன் கணவன் இல்லாதது மனைவிக்கு கவலையாயிருக்கிறது.எளிமையான அன்பு செலுத்துதலோ,கொஞ்சலோ, முத்தமோ இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிறாள்.

சந்திரம் குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவே மாட்டார். திடீர் திடீரென்று வெளியே நீண்ட நடை பயின்று வருவார்.அப்படி நடக்கும் போது கணிதம் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்.தன் மாணவர்களுக்கு எளிமையான கணிதமுறைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார்.மனைவியும் தன் கணவனைப் புரிந்து கொண்டு,கூடிய மட்டும் குழந்தைகள் சந்திரத்தை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.

தன் உழைப்பால் சந்திரம் பல தேர்வுகள் எழுதி கொழும்பு நகரில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக உயர்கிறார்.கல்லூரில் தன் கணித ஞானத்துக்கு மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.அதை வெறும் படிப்பாக சமூகம் பார்த்தது.

கல்லூரியின் சக பேராசிரியர்கள் சமூகப் புகழுக்கு வேறு பல காரியஙகள் செய்தனர்.ஒருவர் தத்துவ உரையாற்றினார்.ஒருவர் கதை எழுதினார்.ஒருவர் சமூக சேவை செய்தார்.அவர்கள் எல்லாம் கல்லூரியில் ஒவ்வொரு அமைப்பின் தலைவர்களாக வேறு இருக்கிறார்கள்.சந்திரம் இதனால் தனக்குக் கணிதம் மட்டுமே தெரியும், உலகில் மற்ற விஷயஙகள் தெரியாதோ என்று மனம் புழுங்க ஆரம்பிக்கிறார்.

தேர்வை கண்கானித்தபடியே அறையில் நடந்து வரும் சந்திரம் ஒரு மாணவன் எழுதிய இரண்டு வரியில் ஒரு வரியை ஏதேட்சையாகப் படித்துவிட்டார்.

பேராசிரியர் சந்திரம் + கணிதவியல் = முடிவிலி

என்பதே அந்த வாக்கியம்.அதைப் படித்தவுடன் சந்திரத்துக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.ராமானுஜன் மாதிரி தானும் புகழ்பெறுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார்.

”சரி இரண்டு வாக்கியம் இருந்ததே.முதல் வாக்கியம்தானேப் படித்தோம்.இரண்டாவது என்ன” என்று மாணவனின் தேர்வுத்தாளை வாங்கிப் பார்த்தார்.

இரண்டாவது வாக்கியம்

பேராசிரியர் சந்திரம் - கணிதவியல் = பூஜ்யம்

என்றிருக்கும்.அதைப் பார்த்து சந்திரத்துக்கு தலை சுற்றும்.அன்று மாலை கல்லூரியில் ஒரு விழா.நிலவொளியில் விருந்துண்டு ரசித்தவாறு மனைவியிடம் கேட்பார்.

”நான் ஒரு விடுகதை சொல்கிறேன்.விடை சொல்வாயா”
மனைவி தலையசைக்கிறார்.சந்திரம் கேட்கிறார்

”பேராசிரியர் சந்திரம் கூட்டல் கணிதவியல். அப்படின்னா விடை என்ன”

மனைவி சொல்வார் “ரொம்பப் பெரிசு.கடல் மாதிரி பெரிசுன்னு சொல்லலாம்”.

இதைக் கேட்டவுடன் சந்திரத்துக்கு மகிழ்ச்சி கொள்ளாது.மனைவியை பலமுறை பாராட்டுவார்.”அதை மிகப்பெரியது என்று சொல்லக் கூடாது “முடிவிலி” என்று சொல்லவேண்டும்.” என்பார்.

மனைவிக்கு மகிழ்ச்சி.அதன் பிறகு திடீரென்று சந்திரம் கேட்பார்.இப்ப அடுத்தக் கேள்வி

”பேராசிரியர் சந்திரம் கழித்தல் கணிதவியல். அப்படின்னா விடை என்ன”

“இதுத் தெரியாதா உங்கக் கிட்ட இருந்த கணிதத்த எடுத்துட்டா என்ன மிச்சமிருக்கு.ஒண்ணுமேயில்ல நீங்க” என்று மனைவி சொல்லி முடிக்கவும் சந்திரம் மனைவி மேல் பாய்ந்து மோசமான வார்த்தைகளைக் சொல்லி அடிக்க ஆரம்பிப்பார்.

கூட்டம் சந்திரத்தைப் பிடிக்கும். சந்திரமோ மனநிலை பிறழ்ந்தவராக மனைவியைத் திட்டியபடியே அடிக்கப் பாய்வார்.உபவேந்தர் சந்திரத்தை ஆஸ்பித்திரிக்குக் கூட்டிச் செல்ல சொல்வார்.ஆட்கள் சந்திரத்தை இழுத்துச் செல்கிறார்.

அப்போது சந்திரம் “ என் மனைவியைப் பார்க்கவேண்டும்” என்று கத்துகிறார்.

“அவரை இனி நீங்கள் பார்க்கவே பார்க்க முடியாது” என்கிறார் உபவேந்தர்.

“ஒஹோ அப்படியே சேரவே சேரமுடியாத சமந்திர வரைகள் (Parallel lines) கூட முடிவிலி (infinity) யில் சேரும் தெரியுமா? நான் அவளை முடிவிலியில் சந்தித்துக் கொள்கிறேன்” என்று கத்திக்கொண்டே இருக்க

கணிதவியலாளன் சந்திரத்தை ஊர்த்தியில் ஏற்றுகிறார்கள்.

நான் இந்தக் கதையை நாடகமாக எடுத்தால் எஸ்.ஜே சூர்யாவைத்தான் சந்திரமாக நடிக்க வைப்பேன்.

சுவாரஸ்யமானக் கதை...

அளத்தல்

’அளத்தல்’

என்பதை பிரேக்ஸ் இந்தியாவில் தொழிற்பழகுநராக ஸ்ரீனிவாச ராஜகோபாலன் சாரிடம் வேலை செய்யும் போது கற்றுக் கொண்டேன்.

வெரினியர் காலிபர்,மைக்ரோ மீட்டர்,பலதரப்பட்ட கேஜஸ், புரொஜக்டர்  மெஸரிங் (?), என்று ஒவ்வொன்றையும் மிக அன்போடும் கனிவோடும் சொல்லிக் கொடுப்பார்.

பிரேக்கின் உதிரிப்பாகம் சப்ளை செய்யும் வெண்டார்கள் மொத்த உற்பத்திக்கு முன்னர்,அந்தக் குறிப்பிட்ட பொருளை, சாம்பிளுக்கு கொடுக்க வேண்டும்.

அந்த சாம்பிள்கள் எல்லாம், பிரேக்ஸ் இந்தியாவின் அங்கீரிக்கப்பட்ட டிராயிங்கோடு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

அதாவது படத்தில் இந்த டிஸ்கின் விட்டம் ஐந்து செமீ. நிஜத்தில் டிஸ்க்கின் விட்டம் ஐந்து செமீ இருக்கிறதா? என்று சரிபார்த்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

அந்த ரிப்போர்ட் கொடுக்கும் வேலை என்னுடையது.ஆக அடுத்த ஆறுமாதங்களுக்கு விதம் விதமாக அளந்தேன்.

பலதரப்பட்ட பொருட்களை, பலவிதமாக அளந்தேன்.சிலவற்றை இரண்டாக வெட்டி அளகக் வேண்டும்.சில சிறிய பொருட்களை புரொஜக்டரில் வைத்து அளக்க வேண்டும், சில பொருட்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் வெடிக்கிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும்.சில பொருட்களின் பளபளப்பு சரியாக இருக்கிறதா என்று கருவி கொண்டு சோதிக்க வேண்டும்.

இப்படி அளப்பதில் சில முறைகள் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஒரு கூடுப் பொருளின் உள்ளே இருக்கும் வளைவின் ஆரத்தை அளக்கவேண்டுமானால்,
உதாரணமாக ஒரு டம்ளரின் உள்பகுதில் இருக்கும் வளைவின் ஆரத்தை எப்படி அளப்பீர்கள்.உள்ளே அதற்குரிய பிரத்யோக களிமண்ணை திணிக்க வேண்டும்.பின் கலையாமல் எடுக்க வேண்டும்.களிமண்ணில் டம்ளரின் உட்பகுதி வடிவம் இருக்கும்.அதனை வைத்து ரேடியஸைக் கண்டுபிடிக்க வேண்டும்.

எனக்கென்னவோ இந்த முறையான அளத்தல் மீது ஒரு ஆர்வம்.” ச்சே எப்படி ஐடியா இது” என்று வியப்பேன்.

சமீபத்தில் என் மகளுக்கு கதை சொல்ல படிக்கும் போது, இந்த அளத்தல் பற்றிய கதை ஒன்று என்னை ஈர்த்தது.

மன்னன் யானைப் பாகனை அழைத்து “நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது.உன்னிடம் இருக்கும் யானையின் எடையை துல்லியமாக அளந்து என்னிடம் சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் தலையை எடுப்பேன்” என்று சொல்வார்.

யானைப்பாகன் கவலையோடு இருப்பதைப் பார்த்து முதியவர் உதவ முன்வருவார்.” யானை தானே நான் எடை போட்டுத் தருகிறேன்” என்பார்.

”இவரென்ன சுத்த அப்பாவியாய் இருப்பார் போலிருக்கே.யானையை எப்படி தராசில் எடை போட முடியும்” என்று யோசிப்பான்.

முதியவர் யானையை ஏரியோரம் நிற்கும் படகு பக்கத்தில் அழைத்து வரச்சொல்வார்.படகில் யானையை ஏற்றச்சொல்வார்.யானை ஏறி படகு நிலையாய் நின்ற பின் படகு எவ்வளவு ஏரியின் உள்ளே மூழ்கியிருக்கிறது என்பதை தெளிவாக குறிக்கச் சொல்வார்.

யானைப்பாகனும் அழியாதவாறு யானை நின்ற படகின் உடல் மூழ்கிய அளவை குறித்து வைப்பான.

யானையை படகை விட்டு இறக்கச் சொல்வார்.

யானை இறங்கிய பிறகு மூட்டை மூட்டையாக படகில் மணலை ஏற்றச் சொல்வார்.யானை ஏறிய போது படகு எவ்வளவு மூழ்கியிருந்ததோ, ””அதே அளவு”” படகு மூழ்கும் வரையில் மணல் மூட்டையை ஏற்றுவார்கள்.மூழ்கியதும் முதியவர் யானைப்பாகனை நோக்கி சொல்வார்.

“நல்லது. இப்போது இந்த மணல் மூட்டைகளை எடை போட்டுக்கொள்.யானையின் எடை துல்லியமாக கிடைக்கும்.போய் மன்னனிடம் சொல்” என்பார்.

ஏனோ இந்தக் கதையைப் படிக்கும் போது அதிகப் பரவசமானேன்.

தர்க்கப்படி யானையை கூறு கூறாக வெட்டி தராசில் எடை போடலாம்.
டம்ளரை இரண்டாக வெட்டி ஆரத்தை அளக்கலாம்.

ஆனால் யதார்த்தப்படி யானை செத்துவிடும்.
ஆனால் யதார்த்தப்படி டம்ளர் உடைந்து உபயோகமில்லாமல் ஆகிவிடும்.

யானையும் சாகக்கூடாது, எடையும் போடவேண்டும் எப்படி?
டம்ளரும் உடையக்கூடாது, உள் ஆரத்தையும் அளக்க வேண்டும் எப்படி?

யானையின் எடையை அளக்க ”படகு அழுத்த மணல் மூட்டை டெக்னிக்”

டம்ளரின் உள் ஆரத்தை அளக்க “களிமண் தினித்தெடுத்து அளக்கும் டெக்னிக்”

அளத்தல்...

கொள்கையும் அரசியலும்...

முன்குறிப்பு: நான் பொலிட்டிக்கல் சயின்ஸ் எதுவும் படித்தவனில்லை.ஆனால் ஒன்றை வைத்து ஒன்றாக சிந்திக்கத் தெரிந்தவன் என்று நம்புகிறவன்.இதில் வரும் சில சொற்கள்,சொற் கலவைகள் என் சொந்த யூகமே

கொள்கையை மக்களிடத்தில் பரப்பும் போதும், விளக்கும்போதும் இயக்கமாகவும்,

பின் அதை செயல்படுத்த தேவையான அதிகாரத்தை அடைய அரசியல் கட்சியாகவும் ”பழுக்கும்” விஷயம் உலகெங்கும் நடக்கக்கூடிய ஒன்று.

இயக்கமாக இருக்கையில் இருக்கும் வீரியமும், சமரசமற்ற தன்மையும், கொள்கையை நோக்கிய கொதிநிலையும்,
அரசியல் கட்சியாக இருக்கும் போது கொஞ்சம் நீர்த்துதான் போகிறது.

1.கொள்கை நீர்த்துப் போகிறது என்று மக்கள் நினைக்கிறார்களோ என்ற பயம் இயக்கத்துக்கோ கட்சிக்கோ ஏற்படும் போது அவர்கள் ”கொள்கை செயலாக்க அரசியல்” செய்கிறார்கள்.

உதாரணம்:தாலி அறுத்தல், காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்யும் இந்துத்துவாக்கள்.

2.ஒரு ”சம்பவத்தை உருவாக்கியோ” அல்லது சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தத்தம் அரசியல் கட்சியை உயர்த்திக் காட்டிக்கொள்வது ஒரு வகையான “அரசியல்”.

உதாரணம்:ஈழப்பிரச்சனைக்காக முத்துக்குமார் இறந்த போது மொத்த தமிழ்க் கட்சிகளும் முத்துக்குமார் வீட்டிலிருந்தன.
தர்மபுரி இளவரசன் பிரச்சனை.

3.தனிமனித நன்மைக்காக நடக்கும் அரசியல். இதை ”தனிமனித நன்மை அரசியல்” எனலாம்.

உதாரணம்:2ஜிப் பிரச்சனைக்காக திமுக மத்திய அரசை அன்போடு அணுகுகிறது, அதிமுக தன் தலைவரின் நன்மைக்காக மத்திய அரசை அன்போடு அணுகுகிறது என்பதெல்லாம்.

4.அவன் நமக்கு எதிர்கட்சி.அதனால் அவன் என்னவெல்லாம் நிலை எடுக்கிறானோ அத எதிர்ப்போம் என்ற அரசியல். இதை “எதிர்நிலை அரசியல்” என்போம்.

உதாரணம் பொதுவாக திமுக அதிமுக பரஸ்பரம் எடுக்கும் நிலைப்பாடு.

இது மாதிரி யோசித்தால் பல ”அரசியல்கள்” தெரிய வரலாம்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்
அடிப்படையில் ”மக்கள் நலம்” என்பது ஒரு அரசியல் இயக்கத்துக்கோ அல்லது கட்சிக்கோ கொள்கையானால்
அது செய்யும் எந்த அரசியலிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கவே செய்யும்.

மக்கள் நலம் என்றால் யதார்த்த ரீதியாக, தர்க்க ரீதியாக சாத்தியப்பட்ட மக்கள் நலக் கொள்கைகள்.

முதலாளிகள் என்ன செய்தாலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள்?
எதற்கெடுத்தாலும் அமெரிக்காதான் காரணம் என்பார்கள்? என்று கிண்டல் விமர்சனம் செய்வார்கள்.

சமீபத்தில் நான் படித்த தகவலில்
1960 களில் கேரளக் கரையோரம் இரண்டு திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதாம்.

உடனே கம்யூனிஸ்டுகள் “அது உண்மையான திமிங்கலமா? அல்லது அமெரிக்கா அனுப்பி வைத்த வேவு பார்க்கும் பொம்மையா? “ என்று சந்தேகப்பட்டு பிரச்சனையாக்கினார்களாம்.இதை கிண்டலாக எழுதியிருந்தார் கட்டுரையாசிரியர்.

மேலோட்டமாக பார்க்கும் போது அது கம்யூனிஸ்ட்கள் நடத்தும் “சம்பவ அரசியல்” மாதிரிதான் தெரியும்.இல்லை அது சம்பவ அரசியலேதான்.

ஆனால் அதில் நன்மையா? தீமையா? என்றால் நன்மைதான் என்பேன்.எந்த விஷயத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது என்பது மிகச்சரியான விஷயம்.

நினைத்துப் பாருங்கள்.போபால் விஷ வாயு வந்து புழுக்களாக துடிதுடித்து மக்கள் சாகும் போது நம் முதலாளிகள், முதலாளி ஆதரவாளர்கள் எங்கே இருந்தார்கள்.”உங்களுக்கெல்லாம் ஒன்று ஆகாது” என்றுதானே அவர்கள் போபாலில் தொழிற்சாலை தொடங்கியிருந்திருப்பார்கள்.

ஆக கம்யூனிஸ்ட்கள் மக்கள் ஆதரவை பெற,

மக்கள் கவனத்தைப் பெற செய்யும் அரசியல் தந்திரமே , மக்கள் நன்மையாக விளைகிறது.

அதுதான் திகவினர் வீரமணி விஷயத்தில் கூட இருக்கலாம்.

ஆம் அவர் நினைத்திருக்கலாம் “ ஏதாவது செய்யனும்.நம்ம கிராஃப் இறங்கிட்டு வருது” என்று.

அதற்காக அவர் என்ன செய்து விட்டார், ஏதாவது கேவலமாக செய்தாரா? வன்முறை செய்தாரா? ரோட்டில் போகும் பெண்களை தாலியை அறுத்தார்களா?

 தாலி வேண்டாம் என்று ஒரு அரசியல் செய்கிறார்?

சுரேஷ் கண்ணன் சொன்னது மாதிரி தர்க்க மனமாக ஐந்து நிமிடம் யோசித்தாலே தாலி தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தாலி பூ பொட்டு கலர்ச்சேலை என்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் என் குடும்பத்தில் ஒரு சில பெண்கள் வாழ்க்கை முழுக்க திணறியதும்,

திக்கியதும் எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது உண்டு.

வீரமணி அரசியல் செய்கிறார்? வீரமணி அரசியல் செய்கிறார்?

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நம்மூர் அறிவாளிகள் கண்டுபிடித்து எழுதுகிறார்கள்.

கொள்கையினால் அரசியல் உருவாகும்.
அரசியல் கொள்கையை நிலைக்கச் செய்யும்.

பகுத்தறிவினால் திக அரசியல் உருவாயிற்று.
திக அரசியலினால் பகுத்தறிவு நிலைக்கும்.அல்லது அழிக்கப்படாமல் காக்கப் படும்.

ஆக அடிப்படையைப் பார்ப்பதுதான் முறை.

இதே ”அரசியல் - கொள்கை” தியரியை இந்துத்துவாக்களுக்கு அப்ளை செய்து பாருங்கள்.அவர்களும் அபப்டியே நடப்பார்கள்.

”இந்துக்கள் மட்டும்தான் இந்தியாவில்” என்ற கொள்கையை வைத்து இந்து அரசியல் உருவாகிறது.

அதன் பிறகு இந்து அரசியலினால் இந்து வெறி தொடர்ச்சியாக தூண்டப்படுகிறது ( மோடி அமைச்சர்களின் இந்து வெறி பேச்சுகள் இதற்கு சிறந்த உதாரணம்)

பகுத்தறிவு என்ற கொள்கை தமிழக மக்களை எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்துவெறி என்ற கொளகை நம் நாட்டை எப்படி கீழாக இழுத்துக் கொண்டு போகிறது என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

அந்தப் பகுத்தறிவு கொள்கையை வளர்க்கிறேன் என்று ஒருவர் ”அரசியல்” செய்தால் கூட அது நமக்கு நன்மைதான என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு என்ன பிரச்சனை தாலி அகற்றும் போராட்டம் பிரச்சனையா?

அல்லது

தாலி அகற்றும் போராட்டத்தை வீரமணி செய்தது பிரச்சனையா?

”பாக்கிஸ்தான் சுதந்திரதினத்தில் என்னை விடுதலை செய்தால் நான் விடுதலையாக மாட்டேன்” என்றானாம் ஒரு இந்தியப் பற்றாளன்.(பேச்சுக்கு)

விடுதலையாவது முக்கியமா? நாள் கிழமை முக்கியமா ?

நோக்கம் முக்கியமா?

அல்லது நோக்கத்தை செயல்படுத்துபவரின் குற்றத்தை லென்ஸ் வைத்து நோண்டி எடுத்து விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் நோக்கத்தையே சிதைப்பது முக்கியமா?

ஆணிவேர் நல்ல தரமான கொள்கையாக இருந்தால்,

ஒரு இயக்கம் எப்பேர்ப்பட்ட ”அரசியல்” செய்தாலும்

அதில் மக்கள் நன்மையே பெரும்பாலும் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

ஆகையால் திராவிடர் கழகத்தை மனதார ஆதரிக்கிறேன்.

டேய் அண்ணன்

நேற்று கடையில் கூடையில் ஒவ்வொரு பொருளாய் எடுத்துக் கொண்டு வரும் போது,
ஒரு அண்ணன் தங்கையைப் பார்த்தேன் (முகஜாடையில்தான்)
அண்ணனுக்கு பதினெட்டு வயது இருக்கும்.தங்கைக்கு பதினைந்து வயது இருக்கும்.
பணக்கார வளர்ப்பு அவர்கள் உடையில் தெரிந்தது.
அந்தப் குட்டிப் பெண் குண்டான கன்னங்களுடன் அப்பாவியாக தெரிந்தாள்.அவ்ள் கேட்கிறாள்.
“ஹேய் நான் வெண்டக்காய் வாங்கிக்கவா”
அண்ணன் வேண்டாம் என்று தலையாட்டுகிறான்.
“இல்ல நான் வாங்குறேன். ஐ வில் மேக் சம்திங் நைஸ் ஃபார் யூ” என்கிறாள் தங்கை. அண்ணன் என்ன சொல்வது என்று முழித்து தங்கையைப் பார்க்கிறான்.
எனக்கு அந்த அண்ணன் மீது கோபம் வந்தது.
“டேய் அண்ணன்.
அண்ணன்.
தங்கச்சி ஆசையா கேக்குது.
வெண்டக்காய் வெச்சித் தந்தா தின்னுடா பயலே.எனக்கெல்லாம் இப்படிப்பட்ட தங்கச்சி இல்லாம எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா?
நான் பொறந்து வளந்தது எல்லாம் காட்டுப்பூனைகளோடத்தான்.
இவ்வளவு நல்ல தங்கச்சி கிடைக்குமாடா”
என்று மனதுக்குள் திட்டி விட்டு வந்தேன்.

போன தலைமுறை காட்டுமிராண்டிகள்...

என் நண்பனக்கு திருமணம்.
என்னிடம் திருமண வாழ்க்கையில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றான்.நான் பொதுவாக
1.உன் அம்மா உனக்கு சேவை செய்வது போல மனைவியும் செய்வார் என்று எதிர்ப்பார்க்காதே.
2.எக்காரணத்தைக் கொண்டும் மனைவி வீட்டை கிண்டல் செய்யாமலிரு.
3.உன் குடும்பப் பிரதாபங்களை அடிக்கடி பேசி மனைவி அதை கட்டாயம் ரசித்து கேட்க வேண்டும் என்று நினைக்காதே.
4.அம்மா அப்பாவா அல்லது மனைவியா என்று வரும் போது உன் சப்போர்டு மனைவிக்குதான் இருக்க வேண்டும்.ஆனால் பிற்பாடு அம்மா அப்பாவையும் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.
என்று ஆலோசனைகள் சொன்னேன்.
”மச்சி என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க.முதல் ரெண்டு மாசத்துல யாரு ரொம்ப டாமினேட் செய்றாங்களோ அவுங்கதான் வாழ்க்கை முழுசும் டாமினேட் செய்வாங்க, அதனால முதல் இரண்டு மூணு மாசம் மனைவிகிட்ட கறாரா நடந்துக்கன்னு சொல்றாங்களே” என்று கேட்டான்.
”நீ கல்யாணம்தான பண்ற.யாரையாவது அடிமையாக்கப் போறியா? அப்படியெல்லாம் முதல் ரெண்டு மாசம் கறாரா இருந்தா அந்தப் பொண்ணுக்கு உன் மேல வெறுப்புதான் வரும். நீ எப்படி இருக்கியோ அப்படி இயல்பாதான் இருக்கனும்.டாமினேட் செய்யனும்,அடக்கிரனும் அப்படின்னும் நினைச்சு எல்லாம் லைஃப தொடங்கினா நரகமாயிரும் மச்சி” என்றேன்.
“ம்ம்ம்”
“உன்ன வாடாப் போடான்னு சொல்வாங்க, நாயே பேயே பன்னி பரதேசின்னு சொல்வாங்க, சில சமயம் அடி கூட விழும்,
மாசத்துல மூணு நாள் மென்ஸஸ் வர்றதுக்கு முன்னாடி ரெண்டு மூணு நாள் எரிஞ்சி எரிஞ்சி விழுவாங்க, அப்ப நீ லாஜிக் பாத்து நீதான் தப்பு செய்தே நான் கரெக்ட்டு அப்படியெல்லாம் ஆர்கியூ செய்யாத. அந்த சமயத்துல எதாவது காரணத்த வெச்சி உன் கூட சண்ட போட்டுட்டு அழுவாங்க.அழுறதுக்குன்னே காத்திருப்பாங்க. பயந்துராத.தொடர்ச்சியா தாங்கிட்டும் கொஞ்சிகிட்டும் இரு.அந்த மாதிரி சமயத்துல கைகால் உடம்ப எல்லாம் அமுக்கி விடனும்”
“மச்சி கைகால் எல்லாம் அமுக்கி விட்டா, ரொம்ப திமிர் வந்திருமே”
இதற்கும் முன்னாடி என்னை ஒருவன் இதே கேள்வி கேட்டிருக்கிறான்.
“கை கால் உடம்பு அமுக்கி விடுறது அப்படிங்கறது ரொம்ப வருஷம் நீங்க ஒற்றுமையா இருக்கிறது வழி செய்யும்.
நல்லா மேட்டர் பண்றது மாதிரி ஹஸ்பண்ட் அண்டு ஒய்ஃப் பரஸ்பரம் மஸாஜ் செய்துக்கிறதும் அவுங்களுக்குள்ள நீடித்த அன்பு நிலைக்கிறதுக்கு முக்கியமான காரணம்.
பார்டனரோட அன்பான டச், லவ்வ இன்னும் கூட்டும்.அடுத்து மஸாஜ் சுகம் என்பது செக்ஸைவிட இன்னும் இன்னும் வேண்டும் கேட்கத்தூண்டும் சுகமாகும்.அதனால கைகால் அமுக்கி விடு”
“ம்ம்ம். ஒருவேள அந்தப் பக்கத்துல இருந்து எனக்கு கால் கை அமுக்கி விடலனன்னா”
“கெஞ்சு மச்சி. கை கால்ல விழுந்து தரையில விழுந்து கெஞ்சு.”
“மச்சி இதெல்லாம் ஒவர்”
“என் அட்வைஸோட கன்குலூசன் இதுதான் மச்சி.
நம்ம அப்பா அம்மா மாதிரி, நமக்கு முந்தைய ஜெனரேசன் ஆம்பிளைங்க மாதிரி இருக்கனுன்னும் நினைக்காத,
அவனுங்க குடிக்க தண்ணி கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தரணும்ன்னு நினைக்கிற காட்டுமிராண்டிங்க,
அந்த எண்ணத்த சுத்தமா துடைச்சிரு,
ஒய்ஃப் கால்ல சாஷ்டாங்கமா விழுந்து
“ப்ளீஸ் ஃப்ரெண்ட்ஸோட இந்த ஒரு சினிமா மட்டும் பாத்துட்டு வந்துர்றேன்” அப்படின்னு கெஞ்சிப்பாரு.
அப்ப உனக்கு வாழ்க்கையோட சுவராஸ்யம் தெரியும்”
என்றேன்.

Sunday, 12 April 2015

விறகு அடுப்பு....

1.1990 களின் தொடக்கத்தில்,
அம்மா விறகு அடிப்பிலும் மரப்பொடி அடுப்பிலும் சமையல் வேலை செய்வதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
மரப்பொடியோ விறகோ சரியாக காயாமல் இருந்து விட்டால் புகை மண்டும்.வீடு முழுவதும் புகையாய் பரவும்.கண்கள் கரித்து நீர் கொட்டும்.தொண்டை கட்டி இறுகும், இருமல் வரும்.சொந்தபந்தங்கள் வந்து நிறைய சமைக்க வேண்டியது வந்துவிட்டால் நிச்சயம் வீடு முழுவதும் புகையாய் இருக்கும்.
சில சமயம் புகை எரிச்சலால் அம்மாவையே நாங்கள் திட்டுவோம்.பக்கத்தில் இருக்கும் மரம் அறுக்கும் கடையில், சைக்கிளில் நானும் தம்பியும் சென்று விறகும் மரப்பொடியும் வாங்கி வருவோம்.நான் ஒருநாள் விறகு வாங்கி வந்தால், தம்பி மரப்பொடி வாங்கி வரவேண்டும்.அதையும் சரியாக வாங்கிக் கொடுக்க மாட்டோம்.அதற்கு
அம்மா எங்களை கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சுவார்கள்.இப்படி விறகடுப்பு என்பது அம்மாவுக்கு உடல் உளைச்சலையும் மன உளைச்சலையும்தான் கொடுத்தது.
2.ஏப்ரல் மாத ’கேரவன்’ ஆங்கில இதழில் விறகு அடுப்பைப் பற்றிய அருமையான கட்டுரையை வாசித்தேன்.இந்தியா போன்ற விறகடுப்பு அதிகம் உபயோகிக்கும் நாடுகளால் சுற்றுப்புற சுகாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது.
விறகு அடுப்பினால் வீட்டின் காற்று எப்படி மாசடைகிறது.அதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் என்னப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.
3. உலக சுகாதார மையம் 2010 ஆண்டு செய்த ஆய்வின் படி
- விறகடுப்பினால் விட்டினுள் ஏற்படும் காற்று மாசினால் வருடத்துக்கு 35 லட்சம் மக்கள் இறந்து போகிறார்கள்.அதில் நான்கில் ஒருவர் இந்தியர்.
-விறகடுப்பினால் வெளிக் காற்றுக்கு ஏற்படும் மாசினால் வருடத்துக்கு 50 லட்சம் குழந்தைகள் நிமோனியா நோயால் இறந்து போகிறார்கள்
-தெற்காசியாவில் வீட்டிலிருந்து வரும் புகைதான் இரண்டாவது பெரிய அபாயமாக மக்களுக்கு இருக்கிறது.
-கேன்சரை உண்டாக்கும் 14 காரணிகள் இந்த வீட்டு அடுப்பு மாசுகளில் அடங்கியிருக்கிறது.
4.1970 களில்தான் இந்த விறகடுப்பு பிரச்சனை என்பது சாதரணபிரச்சனையல்ல, இதில் தனிமனித ஆரோக்கியம், பிராந்திய ஆரோக்கியம், காடுகளின் அழிப்பு, உலக சுற்றுச் சூழல் பிரச்சனை என்று அனைத்தும் அடங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள்.
ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் விறகடுப்புக்காகவே காடுகளை வேகமாக அழிப்பார்கள் என்ற கருத்து நிருபிக்கப்படுகிறது.
5.பல வகையான அடுப்பு மாடல்களை யோசிக்கிறார்கள்.அடுப்புகளை குழாயின் மூலமாக சிம்னியில் இணைக்கிறார்கள்.
அரசு இதற்கு பல கோடி ரூபாய் பணத்தை இறைக்கிறது.உலக நிறுவனங்கள் பல இதற்கு தானே முன்வந்து உதவுகின்றன.இருப்பினும் இந்தியாவில் இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதற்கு மக்களின் அலட்சிய மனபாவமும் சூழ்நிலையும் முக்கியமான காரணமாக இருக்கிறது.பல கிராமங்களில் புகை வராத அடுப்பை மானிய விலையில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.அதையும் உபயோகிக்கிறார்கள், புகை அடுப்பை உபயோகிக்கிறார்கள்.
6.திட எரிபொருளை எரிக்கும் அடுப்பை (விறகடுப்பை) ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு மாதிரியாக தயாரிக்க வேண்டியதாய் இருக்கிறது.
சிலர் விறகு உபயோகிக்கிறார்கள்.இன்னும் சிலர் கரும்புச்சக்கைகளை உபயோகிக்கிறார்கள்.இன்னும் சிலர் பஞ்சு வேஸ்டை எரிக்கிறார்கள்.
குஜராத்,ராஜஸ்தான் மக்கள் பெரிய வட்ட சப்பாத்திகள் இடுபவர்கள்.அவர்களுக்கு சப்பாத்திக்களின் கரையோரம் கரிபிடிக்காத அடுப்பு வேண்டும்.
தென்னிந்தியர்களுக்கு அரிசி குழையாத அளவுக்கு மிதமாக எரியும் அடுப்பு வேண்டும்.இமாச்சலப் பிரதேச மக்களுக்கு அடுப்பு உணவையும் வீட்டையும் சேர்ந்து சூடாக்க வேண்டும்.இன்னொரு பக்கம் அடுப்பு பற்றி ஆராய்ச்சி செய்ய பலர் சலித்து கொள்கின்றனர்.ஐ.ஐ.டி மாணவர்கள் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் “இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா? “ என்று கேட்கிறாகள்.
7.1980 யில் ஸ்மித் என்பவர் “ஏன் கிராமத்து இளம்பெண்களுக்கு புரிந்து கொள்ளமுடியாத இதயநோய் வருகிறது? “ என்று ஆராய்ச்சி செய்யப் போக இதற்கு காரணம் விறகடுப்பு என்ற விடையை அடைகிறார்.
அதுவரை அணுக்கதிர் பிரச்சனை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த ஸ்மித், அதை விட்டுவிட்டு இந்த விறகடுப்புப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டார்.
ஏன் அணுப் பிரச்சனையை ஆராய்வதை விட்டு விட்டீர்கள் என்று கேட்டால்
“அதில் பிரச்சனை மிகக்குறைவு” என்கிறார்.
8.என் அம்மா எப்படி விறகடுப்பு கொடுமையில் இருந்து தப்பித்தார் தெரியுமா?
வீடு மாறும் போது, மாறிய பிறகு ஹவுஸ் ஒனர் “விறகடுப்பு கூடாது.ஸ்டவ்தான் உபயோகிக்க வேண்டும்” என்றார்.
அதைக் கேட்டு எங்கள் உரிமை பாதிக்கப்படுவதாகக் கொதித்தோம்.
வேறு வழியில்லாமல் ஸ்டவ்வுக்கு வந்தோம்.
இப்போது நினைத்துப் பார்த்தால் கடவுள்தான் ஹவுஸ் ஒனர் ரூபத்தில் அம்மா உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

Tuesday, 7 April 2015

நீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...

தீபம் ஒண்ணு இருந்துச்சாம்.அதுக்கு கோவமாம்.யார் மேல கோவம்.சிம்னி மேலத்தான்.
சிம்னி விளக்குல இருக்கிற தீபத்துக்கு கண்ணாடி சிம்னி மேல கோவமாம்.
மூஞ்சிய எட்டு மொழத்துக்கு தூக்கி வெச்சிட்டிருந்ததாம்.சிம்னிக்கு புரியுது. ஏதோ பேசிப் பேசிப் பாக்குத்தாம். ம்ஹூம் தீபம் சிம்னிக்கிட்ட பேசவே இல்லையாம்.சிம்னிக்கு மனசு கஸ்டமாப் போச்சாம்.பக்கத்துல இருக்கிற ஃபிரண்டு பேசலன்னா கஷ்டமாத்தான இருக்கும்.திரும்ப திரும்ப சிம்னி தீபத்துகிட்ட காரணம் கேட்டுச்சாம்.அப்போ இன்ன பாரு தீபம் முகத்த இப்படி வெச்சிகிட்டு சொல்லிச்சாம்.

“நா ரொம்ப அழகானவ”

அதுக்கு சிம்னி சொல்லிச்சாம்.” ஆமா நீ அழகானவாத்தான்.எப்படி பளிச்சுன்னு இருக்கிற”
தீபம் மறுபடியும் சொல்லிச்சாம்” ஆனா சிம்னி நீ அசிங்கமானவ.உன் உடம்பெல்லாம் கறுப்பா இருக்கு”

“இல்ல தீபா.நானும் அழகுதான் உன்கிட்ட இருந்து வர்ற சாம்பல்தான் என் மேல படிஞ்சி அழுக்காயிட்டேன்னு புரிஞ்சிக்க”

“அதெல்லாம் தெரியாது சிம்னி. நீ கறுப்பு.உன் கறுப்பால என்ன நீ மறைக்கிற. என் அழகு உலகத்துக்கு தெரியாம பண்ற. உனக்கு என் மேல பொறாமை.அதான் என்ன மறைக்கிற சிம்னி”
இதக் கேட்டு சிம்னிக்கு கஷ்டமா போச்சாம். சிம்னி சொல்லிச்சாம்.

“ தீபா உன் வார்த்தைகள் எல்லாம் என்ன ரொம்ப கஷ்டப்படுத்துது.நான் உன்ன என் பெஸ்ட் ஃப்ரெண்டாத்தான் பாக்குறேன்.நீ ஏன் இப்படி பேசுற.நான் உன்ன விட்டு போகக்கூடாது” 
“போடி சிம்னி உன்ன எனக்கு பிடிக்கல” 

அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா? அந்த சிம்னி விளக்கு இருக்கிற வீட்ல ஒரு குட்டிப்பையன் என்ன செய்தான், விளையாட்டா சிம்னிய தூக்கிட்டான்.சிம்னிய தூக்கின உடனே என்னாச்சு, காத்து தீபம் மேல படும் இல்ல. காத்து பட்டதால தீபம் அணையிரமாதிரி மினுங்குது. எப்படி மினுங்கும். நீ உன் கண்ண வேகமா சிமிட்டு. ஆம் இப்படித்தான்.அப்பா சிமிட்டுறேன் பாரு.இப்படி.இப்படித்தான் தீபம் அணையுறாப்புல சிமிட்டி சிமிட்டி போச்சாம். உடனே அந்த குட்டிப்பையனோட அம்மா “ஐயோ அதோ தீபம் அணையப்போகுது.அது பக்கத்துல கைய வைடா” அப்படின்னு குட்டிப் பையனோட அண்ணா கிட்ட சொல்றாங்க. அந்த அண்ணன் ஒரு சோம்பேறி.அவன் கைய இப்படி தாமரை மாதிரி வெச்சிக்கிட்டு தீபத்த காப்பாத்துறான்.தீபத்துக்கு நிம்மதியா இருந்துச்சி. ஆனா அப்போ பாத்து ஒரு கொசு அந்த அண்ணன் கைய கடிச்சது பாரு.அந்த தீபத்த காப்பாத்துற கைய ஆ வலிக்குதேன்னு எடுத்தான் பாரு.மறுபடியும் தீபம் அணையுறாப்புல போச்சுது.அதுக்கு முன்னாடி குட்டிபையனோட அம்மா என்ன செய்ஞ்சாங்க.அவுங்க அந்த சிம்னிய நல்லா துடைச்சு, பளிச்சின்னு... எப்படி ... சும்மா பளிச்சின்னு துடைச்சி விளக்குல வெச்சாங்க.இப்போ தீபம் ஜம்முன்னு எரிஞ்சது. 

தீபத்துக்கு புரிஞ்சிடுச்சி.”சிம்னி நமக்கு பாதுகாப்பா இல்லன்னா நாம அணைஞ்சிருப்போம்ன்னு தெரிஞ்சிகிடுச்சி.” தன்னோட தவற உணர்ந்து சிம்னி கிட்ட மன்னிப்பு கேட்டிச்சாம்.சிம்னி “இட்ஸ் ஒக்கே தீபா.நான் தப்பா நினைக்கல” அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருந்தாங்களாம்.அதுக்கப்புறம் சிம்னி சொல்லிச்சாம். “நான் தான் உனக்கு சேஃப்டியா இருக்கேன்னு இல்ல தீபா. நீ மட்டும் எரியலன்னா என்ன எப்பவோ உடைச்சி தூக்கிப்போட்டிருப்பாங்கன்னு” சொல்லிச்சாம்.
நீ இல்லாம நா இல்ல. நா இல்லாம நீ இல்ல.
எங்க சொல்லு... நீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...
இப்படி கதையை குழந்தைக்கு சொல்லி, குழந்தையை இந்த வசனத்தை வேடிக்கையாய் சொல்ல வைத்து கதை சொல்லி கிச்சி கிச்சி மூட்ட வேண்டும்..
பின் இருவரும் கெக்கே பிக்கே என்று சிரிக்க வேண்டும்... :) :)