அம்பேத்கரின் தொகுப்பு புத்தங்கள் 37 இல், புத்தகம் 9 பற்றி அன்று எழுதியிருந்தேன்.
அடுத்து ”புத்தகம் 10” என்னவெல்லாம் சொல்கிறது என்பது பற்றி ரொம்ப சின்ன சுருக்கம் இது.
நாகரிகமா? கொடுங்குற்றமா?
நாகரிகம் என்றால்,பண்பாடு என்றால் சகமனிதனை மதித்து அவனுடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது.ஆனால் இந்து நாகரிகத்தில் ஒரு சாரார் மக்களை மிருகங்களை விட மோசமாக இன்றும் கேவலப்படுத்துகிறார்கள்.
அதற்கான ஆதாரமாக இந்து மதத்தைக் காட்டுகிறார்கள்.அதை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மனிதனை மனிதன் ஒடுக்குவதை ஆதரிப்பது எப்படி நல்ல நாகரிகமாகும். (அமெரிக்கா,கிரேக்க அடிமைமுறைகளுக்கும் இந்திய ஜாதி அடிமைமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை புத்தகம் 9 யில் அம்பேத்கர் சொல்கிறார்).ஆக எப்படி இந்திய இந்து நாகரிகத்தை பெருமையான நாகரிகமாக சொல்ல முடியும்.
ஆங்கிலேயர்களை காரணமில்லாமல் போற்றினாரா அம்பேத்கர்?
-தக்குகள் என்ற ”ஜாதி இந்துப்” பிரிவைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என்று அனைவரும் கொள்ளையடிப்பதற்கு துணை புரிவார்கள்.ஒருவரிடம் நல்லவனாக நடித்து எதிர்ப்பாராத நேரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்று கொள்ளையடிப்பது தக்குகளின் பாணி.
அவர்கள் அதற்கு ஒரு மதரீதியான ஞாயம் வைத்திருந்தார்கள்.காளி மாதாவுக்குப் பிடித்தது ரத்தம் என்றும் கொலை என்றும் சொல்லி, காளிக்கு படையலும், சர்க்கரை பொங்கலும் வைத்து, தங்கள் கொலை ஆயுதங்களை வைத்து பூஜை செய்வார்கள்.பணம் பொருள் நகை கொள்ளையடித்து வந்து காளிக்கு நன்றி சொல்வார்கள்.கொலை செய்வது அவர்ளைப் பொருத்தவரை தப்பில்லை. இது பற்றி பொதுமக்களோ, இந்திய அரசியல்வாதிகளோ கூட பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.
ஏனென்றால் தக்குகள் அதை இறைவனின் பெயரால் நடத்துகிறார்கள்.ஏதோ ஒரு கடவுளின் ஆசியால் கொலை நடக்கிறது என்ற திருப்தியை தக்குகளை விட சமுகம் அதிகமாக கொண்டிருந்த காலம் இருந்திருக்கிறது.
1835 இல் இருந்து 383 தக்குகள் தூக்கிலப்படுகின்றனர்.பிரிட்டீஷ் அரசாங்கம் இதைச் செய்ய ஆரம்பித்த பிறகு, தக்குகளின் கொலை கொள்ளைத் தொழில் படிப்படியாக தணிகிறது. ( ஜெயமோகன் பூனா ஒப்பந்தம் பற்றிய தன் கட்டுரையில் அம்பேத்கர் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ஆள் என்பதாக எழுதிருந்தார். பிரிட்டீஷ் அரசு மேல் எதன் அடிப்படையில் அம்பேத்கருக்கு நல்ல எண்ணம் இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்.அம்பேத்கர் சில விசயங்களில் பிரிட்டீஷ் அரசாங்கம் தைரியமாக முடிவெடுக்கும் என்று நம்புகிறார் (இது என் கருத்து)
காந்தியால் தலித் பிரச்சனைகளில் தெளிவான முடிவு எடுக்க இயலாமை பற்றிய ஆதங்கம்.
-கவிதா என்றொரு கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கிறார்கள்.அதை எதிர்த்து ஜாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகளை தாழ்த்தப்பட்டவர்களோடு படிக்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.இதையொட்டி ஒரு கலவரத்தை உருவாக்கி தாழ்த்தப்பட்டவர்களை தாக்குகிறார்கள்.
பல நாட்கள் ஊருக்கு வெளியே உயிருக்கு பயந்து இருக்க வேண்டிய நிலை. தலித்கள் தங்களைத் தாக்கிய ஜாதி இந்துக்கள் மீது வழக்குத் தொடுக்கின்றனர்.இது பற்றி கேள்விப்பட்ட காந்தி, தலித்களை ஊருக்கு வெளியே இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொல்கிறார்.தலித்கள் அடைந்த அவமானம் அவமரியாதை அவர்கள் உரிமை பற்றி வருந்தியவராய் தெரியவில்லை.
அதன் பின் சர்தார் வல்லபாய்ப் பட்டேலை அனுப்பி வைக்கிறார் காந்தி. வல்லபாய் பட்டேல் ஊருக்கு வந்து, தாழ்த்தப்பட்டவர்களிடம் பேசி அந்த வழக்கை வாபஸ் வாங்க வைக்கிறார்.( இனிமேல் உங்களை ஜாதி இந்துக்கள் தாக்காதவாரு நான் பார்த்துக் கொள்கிறேன்.நீங்கள் வழக்கை வாபஸ் வாங்குங்கள்). வல்லபாய் பட்டேலின் வற்புறுத்துதலின் பேரில் வழக்கை வாபஸ் வாங்குகிறார்கள்.
வல்லபாய் பட்டேல் ஊரை விட்டுப் போய் கொஞ்ச நாட்களில் மறுபடியும் தலித்கள் தாக்கப்படுகின்றனர்.இப்படித்தான் காந்தியும் பட்டேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி செய்வது போல செய்துவிட்டு, எதையும் செய்யமுடியாத நிலையிலோ அல்லது அக்கறையில்லாமலோ நடந்து கொண்டனர்.
சமூக பாதுகாப்பும் இஸ்லாமியர்களும்
-பல கிராமங்களில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.ஆனால் தலித்கள் பாதுகாப்பில்லாமல் இருப்பார்கள்.
பிளேட்டோ ஒரு விசயம் சொல்வார் முன்னெச்சிரிக்கை உள்ள சமூகம் “அந்நியனை” உபசரிப்பான் என்று. அந்நியன் என்றால் வேறு ஆள். ஏன் வேறு ஆளை உபசரிக்க வேண்டும்.கருணையா,அன்பா,பாசமா. இவையெல்லாம் இல்லை.அந்நியனை ஒருவேளை உபசரிக்காமல், அல்லது அவனை அவமானப்படுத்தினால் அவன் தன் இனத்திடம் அதை முறையிட்டு, அவர்கள் கும்பலாக போர் தொடுத்து விட்டால் அது சேதம்தானே.
அதே விதமாய்தான் இவர்கள் முஸ்லிம்களிடம் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் மேல் கை பட்டால் நாடே திரும்பிப் பார்க்கும் அமைப்பு அவர்களிடம் இருக்கிறது.
ஆனால் தலித்களை யார் எங்கே அடித்தாலும் கேட்க ஆளில்லை.
இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தி திணறினாரா?
-இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தி சரிவர பேசவில்லை, தர்க்கம் செய்யவில்லை என்பதுதான் உண்மை.அவர் மிக அதிகமாகத் திணறினார்.வட்டமேஜை மாநாட்டை எதிர்கொள்ளும் பயிற்சியோ தரவுகளோ அவரிடமில்லை.உணர்ச்சிகள் மட்டுமே இருந்தது.
”எங்களுக்கான சட்ட மாதிரியை வடிவமைக்க ஏன் நீங்கள் உங்கள் பிரதிநிதியை அனுப்பி உதவி செய்யவில்லை” என்று காந்தி கேட்டதும் பலர் புருவம் உயர்த்தினார்கள்.இவர்கள் சட்டத்தை ஏன் பிறர் வடிமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதாகப் பார்த்தார்கள்.பல கேள்விகள் கேட்டார்கள்.காந்தியால் பதில் அளிக்க முடியவில்லை.அல்லது சமாளித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் வட்ட மேஜை மாநாடு காந்தியின் தோல்வியைக் காட்டிற்று.
ஆனால் அவர் நாடு திரும்பியதும் பிரமாண்ட வரவேற்பு பெற்றார். விமானத்தில் அவர் மேல் மலர் தூவ வேண்டும் என்று கூட காங்கிரஸ் முயற்சி செய்தது.
ஆனால் அது நடைபெறவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் ஒரு கூட்டம் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். தனக்கு கறுப்புக் கொடி காட்ட இந்தியாவில் இருக்கிறார்களா என்ற வியப்பு காந்திக்கு வந்திருக்கலாம்.
காந்தியின் உண்ணாவிரதம் பற்றிய அச்சம்.
-தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்குவதில் உள்ள காந்தியின் ஒருதலைப்பட்சமான நிலையிலிருந்து பூனா ஒப்பந்தம் வரை நீளமாக இந்தப் புத்தகத்தில் வருகிறது.
காந்தியின் உண்ணாவிரதம் தனக்கு பெரிய தர்மசங்டத்தைக் கொடுத்ததாக அம்பேத்கர் சொல்கிறார்.ஒருவேளை காந்தியின் உயிருக்கு எதாவது ஆனால் அது இந்தியாவின் ஒட்டுமொத்த தலித்களையும் பாதிக்குமோ என்ற அச்சமும் தனக்கிருந்ததாக சொல்கிறார். தனித்தொகுதி ஒதுக்கினால் தாழ்த்தப்பட்டவர்கள் அப்படியே இருப்பார்கள் என்ற காந்தியின் வாதத்தை மறுத்து பல கருத்துக்களை சொல்கிறார் அம்பேத்கர்.
ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒவ்வொரு மாதிரி ஆதரவு
-காந்தி, மகத் நகரம் மற்றும் நாசிக் நகரில் நடந்த தலித் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.ஆனால் கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தை அதிகம் ஆதரித்தார்.இதற்கு எளிதான காரணம் ஒன்று உண்டு.
மகத் நகரம்,நாசிக் நகரம் போராட்டத்தை செய்பவர்கள் தலித்கள் அமைப்பு. ஆனால் வைக்கும் போராட்டத்தை செய்பவர்கள் காங்கிரஸ் கட்சி. காங்கிரஸின் நலன் தலித்களின் நலனை விட முக்கியம் என்று காந்தி நினைக்கிறார் போலும்.
தம்மை மேய்ப்பராக ஏற்றுக் கொள்ளாத ஆடுகளுக்கும் பாதுகாப்புத் தர காந்தியார் முன்வரமாட்டார் போலும்.