Wednesday 1 May 2013

கதை போல் ஒன்று - 91


டியர் சார்,

உங்க விளம்பரத்த பத்திரிக்கையில படிச்சேன்.

ரொம்ப நாளா உங்களுக்கு லட்டர் எழுதுவோமா வேணாமான்னு எனக்கு வெக்கமா இருந்துச்சு.ஆனா எனக்கு வேற வழியே இல்லை.

உங்க விளம்பரத்துல திக்குவாய குணப்படுத்துவோம்ன்னு போட்டிருந்தீங்க.அதப் பார்த்ததும் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சி.

எனக்கு திக்குவாய் இருக்கு சார்.ஆனா எப்போதும் திக்காது.

சில சமயம், ஒரு சபையில ஒரு புத்தகத்த வாசிக்க சொன்னா திக்கும்.

சாதரணமா பயம் இல்லாம பேசினா நிறைய பேசுவேன்.கத்துவேன்.பாடுவேன்.ஆனா பயம் வந்துச்சின்னா திக்குவேன்.

அது எப்போ ஆரம்பிச்சிதுன்னும் சொல்றேன்.

சின்ன வயசுல நான் ஸ்கூல்ல எதாவது வாசிக்க சொன்ன டக்குன்னு எந்திரிச்சி வாசிப்பேன்.

அஞ்சாங்கிளாஸ்ல புறாவுக்காக தன் தொடைகறியையே அறுத்துக்கொடுப்பாரே கிள்ளிவளவன், அந்த நாடகத்துல எல்லாம் நடிச்சி பாராட்டு வாங்கியிருக்கேன்.

பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கியிருக்கேன்.

அப்படி எனக்கு நல்ல பேரு இருக்கிறதே எனக்கு பிரச்சனையா முடிஞ்சது.

அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் தான் எங்க ஸ்கூல்ல கோ-எட்.அதுக்கப்புறம் கேர்ள்ஸ் மட்டும்தான் படிக்கலாம்.பாய்ஸ் வேற ஸ்கூலுக்கு போயிருவோம்.

அதனால எங்க கிளாஸ் மிஸ் “சோசியல் டே” ஒண்ணு வெச்சிருந்தாங்க.

அதுக்கு ஹச்.எம் லில்லி புக்ஷ்ப்பம் சிஸ்டரையும்,மதரையும் கூப்பிட்டுருந்தாங்க.

அந்த சின்ன விழாவுல “வோட் ஆஃப் தேங்க்ஸ்” சொல்றதுக்கு நல்லா பேசுற ஆளத்தேடினாங்க.எல்லோரும் என்னச்சொல்ல நான் மிஸ் முன்னாடி நின்னேன்.

“என்னப்பா நல்லா பேசுவியா “

நான் தலையசைத்தேன்.தன் கைப்பையில் இருந்த பேப்பரில் எழுதப்பட்ட கட்டுரையை என்னிடம் கொடுத்து.

“நல்லா படிச்சிட்டு வந்து பேசு” அப்படின்னாங்க.

நான் வீட்டுக்கு வந்து படிச்சேன்.ரெண்டு நாள் முழுசா படிச்சிட்டு மிஸ்கிட்ட போனேன்.

படிச்சிட்டேன் அப்படின்னு சொன்னேன்.

சரி பேசுன்னு சொல்லி நான் பேச ஆரம்பிக்க போகும் போது என் தலையில பிரம்பால கொஞ்சம் வலிக்கிறமாதிரி ஒரு அடி விழுந்தது.

பயத்துல திரும்பி பார்த்தேன்.பின்னாடி லில்லி புக்ஷ்பம் சிஸ்டர் நின்னுட்டிருந்தாங்க.எதுக்கு தலையில அடிச்சாங்கன்னு எனக்கு புரியவே இல்ல.

”பேசும்போது ஒழுங்கா ஸ்டெரெயிட்டா நில்லு” ன்னு அதட்டலா சொன்னாங்க.

அப்புறம் அவங்களும் எனக்கு எதிர்த்தாப்போல உட்கார்ந்து “ம்ம்ம் கண்டினியூ” ன்னு சொன்னாங்க.

மொத மொறையா என்னால பேச முடியல சார்.( எழுதும் போது கைநடுங்குது சார்).

சிஸ்டர பார்த்ததும் நாகெல்லாம் கொழருது. பேசுத்தொடங்கும் போதே சடார்ன்னு தலையில அடிச்சா அதிர்ச்சியாத்தான சார் இருக்கும்.

அத ஏன் சார் அவங்க எனக்கு அப்படி செஞ்சாங்க.பேசும் போதே பயமாயிருந்துச்சி சார்.

சொல்றேன்.

 பேசிக்கிட்டு இருக்கும் போதே சிஸ்டர் உதட்ட பிதுக்கி ரூம விட்டு எந்திருச்சி போயிட்டாங்க.மிஸ்ஸும் என்னப்பார்த்து இன்னும் நல்லா பிரிப்பேர் பண்ணு அப்படின்னு சொன்னாங்க.

மறுநாள் மிஸ்ஸே என்ன கூப்பிட்டு விட்டு “நீ பேச வேண்டாம்ன்னு” சொல்லிட்டாங்க.

அந்த சம்பவம் கொடுத்த அவமானம்தான் சார் எனக்கு திக்குவாய் வர மொத காரணம்.

அது என் மனசுல ஆழமா பதிஞ்சது.

ஆறாங்கிளாஸ்ல வேற ஸ்கூல்.மிஸ்ஸெல்லாம் கிடையாது.வாத்தியார்தான்.

வாத்தியார் எதையாவது வாசிக்க சொன்னா பயமா இருக்கும்.ஆனா எப்படியோ தேத்தி திணறி வாசிச்சிருவேன்.

எங்க கிளாஸ் எழுவது பேர் படிக்கிறதால ரொம்ப வாசிக்கிறதும் அதிகம் வராது.ஏழாங்கிளாஸும் சமாளிச்சிட்டேன்.

எட்டாங்கிளாஸ்ல தான் எனக்கு இந்த பிரச்சனை அதிகமா வந்துச்சி. நடராஜன் சார் என்ன செய்வார் தமிழ் பாடத்த ஓவ்வொரு பத்தியா படிக்க சொல்லுவார்.

ஒருத்தன் படிச்சிட்டிருக்கும் போது பாதில அவன நிறுத்தச்சொல்லி யாரோ ஒருத்தன தொடர சொல்லுவார்.

விட்ட இடத்துல இருந்து படிக்கலன்னா அடிப்பார்.

அவர் பிரீயடு வந்தாலே பயமா இருக்கும்.

வரிசைப்படி வாசிக்க சொன்னாக்கூட சமாளிக்கலாம். மனச கொஞ்சம் தேத்தி வெச்சிக்கலாம்.ஆனா திடீர்ன்னு சொன்னா பயம்தான வரும்.

மூணு வாரம் தப்பிச்சிட்டேன்.

நாலாவது வாரம் என்னப்பாத்து கைநீட்டி “ஏ நீ வாசி” என்றார்.பதறி எழுந்து விட்ட இடத்தில் இருந்து வாசிக்க முயற்சி பண்ணும்ப்போது புக் கிழே விழுந்து விட்டது.

 “எல கண்ணாடிகாரா லூஸால நீ. ஏம்ல கையெல்லாம் நடுங்குவு” என்று நடராஜன் சார் கேட்க கிளாஸே சிரித்தது.அவசரமாய் புக்கை எடுத்து பத்தியை பிடித்து வாசிக்கும் போது என்னுடைய கீச்சி குரல்தான் வருக்கிறது.

பதட்டத்தில் கீச்சு குரலால் இருவரிகள் வாசித்துவிட்டேன்.

டாக்டர் சார். சொல்ல மறந்துட்டேன்.

எனக்கு கீச்சி குரலும் உண்டு, ஆண் குரலும் உண்டு. டபுள் குரல் வரும்.

கவனமாக கீச்சிக்குரலை பின்தள்ளி ஆண்குரலை முன்னிருத்தி பேசுவேன்.அதனால் என்னுடைய குறையை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் அந்த பதட்டத்தில் அது வந்துவிட்டது சார்.

என் கீச்சுகுரலை கேட்டதும் கிளாஸே சிரித்தது.

இந்த சமுதாயம் எவ்வளவு கொடூரமானதென்று அன்று நான் தெரிந்துகொண்டேன் சார்.காலில்லாமல் விழுபவனைப் பார்த்து சிரிக்கும் சமுதாயம்.கொட்டை வீங்கியவன் ஜட்டி போடமுடியாததைப்பார்த்து சிரிக்கும் சமுதாயம்.

நடராஜன் சாரும் அதிகம் சிரித்து என்னை உட்கார வைத்து விட்டார்.

அந்த சம்பவத்திலிருந்து பொது இடத்தில் எல்லோரும்  பார்க்க பேச வாய் திக்குகிறது சார்.பக்கத்து தெரு கடையில் “அரிசி என்ன விலை? “ என்று எல்லோரும் பார்க்க என்னால் பேச முடியவில்லை.

எல்லோரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற பயத்தால் வாய் திக்குகிறது.கொன்னுகிறது சார்.

பஸ்ஸில் டிக்கட் எடுக்கும் போது சட்டென்று இடம் பெயரை சொல்ல முடியவில்லை.திக்குகிறது.

வகுப்பில் பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரிந்திருந்தாலும் வாய் திக்குவதால் சொல்ல முடியவில்லை. அந்த அவமானத்திற்கு பயந்து பதில் தெரியாதது மாதிரியே இருந்து விடுவேன்.அடி வாங்குவேன்.

இங்கிலீஸ் மிஸ் வரிசையாக வாசிக்க சொல்லும் போது என் முறை வரும் போது, எழுந்து நான் தடுமாறுவதைப்பார்த்து எதிரிக்கும் இரக்கம் வரும் சார்.

கூடப்படிக்கும் பையன்கள் “டீச்சர் அவனுக்கு திக்கும் “ என்று சொல்ல அப்போது அந்த டீச்சர் என்னை ஒரு பரிதாபப்பார்வை பார்த்தார்கள் சார்.அந்த பார்வை என் முதுகிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறது இந்த கடிதத்தை எழுதும்போது கூட.

நான் டியூசன் படிக்கும் வாத்தியார் என்னை புரிந்து கொண்டு, என்னை ஒப்பிக்க சொல்வதே கிடையாது.நோட்டில் எழுதிக்காட்டு என்றே சொல்லிவிடுவார்.எல்லா பசங்களும் அவரிடம் கட கடவென்று ஒப்பிக்கும் போது நான் மட்டும் மாங்கு மாங்கென்று எழுதிக்கிடப்பேன் சார்.

எனக்கு என் பிரச்சனை புரிகிறது.பயத்தால்தான் என் வாய் திக்குகிறது. தினமும் காலையில், பயப்படக்ககூடாது என்றுதான் மனதிற்குள் சொல்லி செல்வேன்.ஆனால் பிரச்சனை என்று வரும்ப்போது பயம் வருகிறது. தனியா இருக்கும் போது

என்னால “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்” மாதிரி பாட்ட முழுசா தெளிவா பாடமுடியுது.ஆனா நிறைய பேர் பாக்கும் போது திக்குது சார்.எப்படியாவது என்ன கொணப்படுத்துங்க சார்.

தினமும் கிளாஸ்ல வாத்தியார்கிட்ட ”யெஸ் சார்” “பிரசண்ட் சார்” அப்படின்னு அட்டெண்டன்ஸ் சொல்றதுக்கு முன்னாடி நான் திணறு திணறல நினைச்சாலே பயமாயிருக்கு சார்.

லைஃபே பிடிக்கல சார். உங்களத்தான் நான் நம்பிருக்கேன்.
இதுக்கு பதில் லெட்டர என் கிளாஸ் அட்ரஸுக்கு அனுப்பிருங்க.

வீட்டு அட்ரசுக்கு அனுப்பினா எல்லாருக்கும் தெரிஞ்சிரும்.

என் அட்ரஸ் எழுதுறேன்.
என்.விஜய்
நைன்த் ஸ்டாண்டர்டு
ஏ செக்சன்
எஸ்.எல்.பி ஸ்கூல்
நாகர்கோவில் -2

இப்படிக்கு அன்புள்ள
விஜய்.

4 comments:

  1. Good one... 9th std. Padicha payan eluthuna letter mathiri illa , rombavea matured. But good. Keep writing....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அப்படியே நான் எழுதின மாதிரி இருக்கு.ஆனா எனக்கு திக்குவாய் மட்டும் கிடையாது.சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் பயங்கரமா அரட்டை அடித்து பேசும் நான் புதுஇடம்,புதிய மனிதர்களிடம் மட்டும் நேரில் பேச நடுங்குகிறேன். இணைய நட்புகளை நான் விரும்புவதற்கு இத்தடுமாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்…

    ReplyDelete