Friday, 23 March 2012

செஸ்ட்டர்டன்

நேற்று திருவான்மியூர் எலியட்ஸ் பீச்சில் , குழந்தைக்கு பலூன் வாங்கி கொடுக்க,கை தவறி மீரா பலூனை விட அதை ஓடிப்போய் பிடிக்காமல் chesterton யின் "On running after one's hat" கட்டுரையை பற்றி யோசித்தேன். +2 ஆங்கில text book யில் படித்தது.எளிய தன்னம்பிக்கை கட்டுரை.படிப்பவர்களுக்கு கண்டிப்பாய் தன்னம்பிக்கை வெறி ஏற்றும்.பலூன் என்னவாயிற்று என்று கேட்கிறீர்கள்.மனைவி ஒடி மூச்சிரைக்க எடுத்து வந்தாள்.(நான்தான் கம்பீரமாய் சிந்தனை செய்து கொண்டிருகிறேனே). அவள் மூச்சிரைப்பு அடங்குவதற்குள் , கட்டுரை பற்றி வியாக்கியானம் பேச ஆரம்பிக்க “ஒரே ஒரூ பார்வை “ பார்த்தாள்.அமைதியாக கடலை கொறிக்க ஆரம்பித்தேன்.

இது சும்மா படிக்க :)

<“நீங்கள் உங்கள் இயலாமையை தத்துவமாக்கி இன்புறுகீறீர்கள்’ - இந்திரா பார்த்தசாரதி > 

தன்மானம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,ஒரு சூட்கேசும் பையும் எடுத்து வர (S9 coach)தொழிலாளி 150 ரூபாய் கேட்டார்.தாங்க முடியாத கோபம் வந்தது.

மற்றுமோர் பெரியவர் இன்னொரு தொழிலாளியை பார்த்து “நீ” என்று ஒருமையில் பேச, “நீ நான்னு” பேசுற வேலை வச்சுகாதீங்க என் கண்டித்ததும், தாங்க முடியாத மகிழ்ச்சி கொப்பளித்தது.

பெரியவரின் மனைவி அந்தம்மாவை பார்க்கும் போது தவறாமல் நவராத்திரிக்கு கொலு வைத்து, பாட்டு பாடி, சுண்டல் பிரசாதத்தை ஏழை பாழைகளுக்கு கொடுத்து புண்ணியம் தேடி கொள்பவர் போன்று தான் தோண்றியது. 

நட்பு

6 th முதல் +2 வரை நானும் உமர் ஃபாரூக்கும் உயிர் நண்பர்கள்.ஓன்றாகவே அலைவோம்.
பேசி கொண்டே இருப்போம்.பாக்கியராஜின் “இன்று போய் நாளை வா” படத்தை காட்சி மாறாமல் சிரிக்கும்படியாக விவரிப்பான்.புதிதாக கற்ற கெட்ட வார்த்தைகள் அனைத்தும் பரஸ்பரம் பிரயோகிப்போம்.டியுசன் காசை எடுத்து வருவான்.கூச்சமே இல்லாமல் பரோட்டா வாங்கி தின்போம்.
காலத்தின் போக்கில் பள்ளிக்கு பிறகு பிரிந்து விட்டோம்.பத்து வருடம் பிறகு அவன் தொலைபேசி எண் எப்படியோ கண்டுபிடித்து பரவசமாய் பேசினேன்.
” மக்கா நா விஜய் பேசுறேன்ல !” .
“ மறுமுனையில் “ஆ ஆங் சொல்லுங்க பாஸ்” .
“யல நாயே, எதுக்கு இப்படி டீசண்டா பேசி சீன் போடுர.”
“பாஸ், அது ...(சிரிப்பு) அப்படி வரமாட்டேங்குது பாஸ்’
பின்னர் formal யாய் பேசி வைத்து விட்டேன்.
உமர் ஃபாரூக் நீங்க என்று மரியாதையாய் விளித்ததினால் நிலை குலைந்தேன்.
செம கடியாய் இருந்தது.ஏதோ ஒன்றை இழந்து விட்டேனோ! என்னவோ !
 

அராஜகம்

ஆறாம் வகுப்பு படிக்கும் போது சுப்பையா வாத்தியார், வகுப்பில் தேவையில்லாமல் சிரித்த “குமார லிங்கேஸ்வரனை” கூப்பிட்டு அடித்தார்.
அவன் 5 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியின் பெயர் கேட்டார்,"christ the king" school என்ற பதில் கிடைக்க , வகுப்பில் யாரல்லாம் "christ the king" படிக்கிறீர்கள் என விசாரிக்க, நான்கைந்து மாணவர்கள் எழுந்தனர்.
எல்லோரையும் அழைத்து வட்டமாக நிற்க வைத்தார்.ஒருவர் காதை ஒருவர் பிடித்து சுற்றி சுற்றி வர வேண்டும்.சுப்பையா சார் அடிப்பார்.குமார லிங்கேஸ்வரன் செய்த தப்புக்கு 5 அப்பாவிகள் ஏன் அடி வாங்க வேண்டும் என்று கேட்கும் வெறி வந்தது.
சுப்பையா சாரின் பிரம்பின் நீளமும், “விசுக் விசுக்” சத்தமும் என்னை முடக்கி போட்டன.ஆனால் அன்று அதை நினைத்து நினைத்து வெம்பி தூங்கி போனதை இப்போது நினைத்தாலும் பெருமிதமாக இருக்கிறது என் மீது எனக்கே...
 

பச்சை

பரஸ்பர சந்திப்பில்
எதிர் பாலரின் கண்களில் தெரியும்,
உடைகளை கடந்த 
உறவுகளை கடந்த 
தத்துவம் கடந்த
அறம் கடந்த
கண நேர காமம் மட்டுமே
பூமி பச்சைக்கான காரணம்
 

அம்மா

அம்மாவிடம் வளரும் போது ரொம்ப அதிகாரம் செய்வேன்.முட்டை ஆம்லேட்,வெந்தும் இருக்க வேண்டும், அதிகம் வேகாமலும் இருக்க வேண்டும்.கொஞ்சம் காய்ந்தும் காயாமலும் இருக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் கத்துவேன்.
’என்னால உங்களுக்கு எதுக்கு தொல்லை, நான் எங்காயாவது போறேன்.” 
”நானே ஆபீஸ் காலைலைல போயிட்டு நைட்டு வரேன், சோறு இப்படி குழுந்து கிடக்கே, நான் மனுசனா இல்ல பிச்சைகாரனா.”
இப்படி பல வசனங்கள்.சில வாக்கியங்கள் மனதை குத்தி கிழித்து விடும்.
ஆனால் அம்மா பதட்டபடுவதில்லை.அமைதியாய் இருப்பார்கள்(உண்மையிலே பா).
ஒரு அன்பு தருணத்தில் , திருச்செந்தூரில் மகளுக்கு மொட்டை போடும்போது அம்மாவிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நான் கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட நிறைய தடவ கத்தியிருப்பேன்.எப்படி அதை எடுத்துகிட்டீங்கம்மா.ரொம்ப நேரம் பதில் சொல்லாமல் தவிர்த்த அம்மா பிறகு “ நீ முதல் முதல்ல மழலை பேசும் போது, தப்பு தப்பா பேசுவதை ரசிப்பேன். அது மாதிரிதான் நீ டயலாக் பேசும்போதும் தோணும்” என்றார்.
 

கந்தர்வன்

மிகக்குறைவாய்தான் அவர் எழுத்தை படித்திருக்கிறேன்.ஆனாலும் கந்தவர்வன் எனக்கு பிடித்த எழுத்தாளர்.அதில் ஒரு சிறுகதையின் சாறு வருமாறு...
”பனைமரத்தை தனி ஆளாக சாய்க்கும் கலை” தெரிந்த வித்தைகாரன் ,ஒரு ஊருக்கு வருகிறான்.அவன் திறமையை வெளிப்படுத்த ஊரார் சம்மதிகின்றனர்.சொன்னபடியே பனைமரத்தை தன் தோளால் இடித்தும், கயிறு வைத்து இழுத்தும் மரத்தை வீழ்த்தி காட்டுகிறான்.
ஊரார் அவனை பாராட்டுகிறார்கள்.அன்று மாலை ஒரு பாத்திரத்தை கையில் வைத்து கொண்டும்,ஒரு துணியை தரையில் விரித்து கொண்டும் பிச்சைக்காக அமைதியாக காத்திருக்கிறான்.
மக்கள் அவனை ”இவ்வளவு பலம்” இருந்தும் திருடாமலும், பிறரை மிரட்டி பணம் பறிக்காமல் இருக்கும் நல்ல குணத்தை பாராட்டி பிச்சையிடுகின்றனர். 

ஆனாலும்....


பரோட்டா கடையை கடக்கும் போது
பொரித்த கோழியும், வதக்கிய முட்டையும்
பசியை தூண்டிதொலைக்கின்றன.
காசு சேர்த்து கடை நுழைந்து
ஆவேச சால்னா குடிப்பிற்கு பின் வருவது குமட்டும் சலிப்பே.
மறுபடியும் வாசம் பிடிக்கும் மறுநாள் மூக்கு.
உரித்து பார்த்தால் ஒன்றுமில்லைதான்...
ஆனாலும்....