Thursday 16 March 2017

பலாப்பழமும் நட்பும்...

பலாப்பழம் விற்கும் வண்டியில் உறித்தப் பலாப்பழங்கள் இல்லை.
வண்டியையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கடைக்காரர் என்னைப் பார்த்தார்.
“என்ன தல உறிச்சிருந்தா வாங்கலாம்னு
நினைச்சேன் “என்றேன்.
“அட என்ன சார் நீங்க.. வாங்க இங்க...” என்று அதட்டி அழைத்தார். போனேன்.
நல்ல பலாப்பழமாக வெட்டி அதில் சிறுதுண்டை எடுத்துக் கொடுத்து இத வெட்டலாமா சொல்லுங்க என்றார். செம்ம டேஸ்டாக இருந்தது.
”தல பலாப்பழத்துக்கு சீனி ஊசி போட்டீங்களா இப்படி இனிக்குது. அரைக்கிலோ போடுங்க” என்றேன்.
சுறுசுறுப்பாக வெட்டினார். அரைக்கிலோவுக்கு மேலேயே கொடுத்தார்.
அவ்வப்போது பழங்களை உறித்து ஒன்றிரண்டு எனக்கு சாப்பிடவும் கொடுத்தார். வாங்கி லபக் லபக் என்று சாப்பிட்டேன்.
அரைக்கிலோ நூறு ரூபாய் வியாபாரம்தான். ஆனால் அது வியாபாரமாக மட்டும் இல்லை. எனக்கு அவரிடம் அன்பாக இருக்க வேண்டும் போல இருந்தது. அவருக்கும் என் மேல் அன்பாக இருக்க வேண்டும் போல் இருந்திருக்கும் போல.
ஒரு காதலோடு பேசினாற் போல பேசிக் கொண்டோம்.
பலாப்பழச் சுளைகளோடு வீடு வந்ததது.
அதில் உள்ள கொட்டைகளை பக்குவமாக எடுத்து சுளைகளை எடுத்தேன்.
அதை ஒரு தட்டில் வைத்து மகளிடம் எடுத்துச் சென்று நீட்டினேன். சாப்பிடாமல் டிவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
”எப்பிள சாப்பிடு”
“..................”
“ஏன் என்ன கோவமா யார் மேல”
“..................”
“என்னதான் ஆச்சு. இந்தப் பழத்த சாப்பிடுறியா இல்லையா”
“.....................”
“சரி சாப்பிட வேண்டாம் போ”
“எனக்கு மேல் வீட்டு ஆண்டி மேலதான் கோபம். இனிமே அவுங்க கூட நாம பேசக்கூடாதுன்னா அம்மா கேக்க மாட்டேங்குறாங்க. ம்கூம்” என்றாள்.
“ஏன். அவுங்க நல்லா அன்பா இருப்பாங்களே”
“இல்ல அந்தப் பையன ( மூன்று வயது சிறுவன்) நம்ம வீட்டுக்கு விளையாட விட மாட்டேங்குறாங்க”
“சும்மா கத விடாத. எத்தன நாள் விளையாட விட்டுருக்காங்க”
“இல்ல நாதான் அங்கபோறேன். அவன் இங்க வரல”
“சரி சரி விடு விடு”
“அதான் அம்மாகிட்ட நீங்களும் பேசாதிங்கன்னா கேக்க மாட்டேங்குறாங்க”
“இதப் பாரு அத நீ சொல்லாத. பெரியவங்களுக்கு தெரியும் அதெல்லாம். திடீருன்னு வீட்ல ஒரு எமெர்ஜென்சி வந்தா பக்கத்து வீட்டுக்காரங்கதான் ஹெல்ப் பண்ணனும் புரியுதா. அதில்லாம அவுங்க நல்லா நம்ம கிட்ட நடந்துக்கிறாங்க. யோசி”
“இல்ல நா பலாபழம் சாப்பிட முடியாது”
“சாப்பிடாத. நீ கேட்டாலும் உனக்குக் கிடையாது. போபிள்ள”
“.....................”
கைகால் கழுவப் போனேன்.வந்து அவளைப் பிடித்துக் கொஞ்சி
“சாப்பிடு செல்லம்” என்று எடுத்து ஊட்டினேன்.
வாங்கி சாப்பிட்டாள்.
“அப்படி பக்கத்து வீட்டுக்காரங்களச் சொல்லக் கூடாது என்ன”
“சரி”
இரவு தூங்கினோம்.
காலையில் எழுந்து. தற்செயலாக தூங்கிக் கொண்டிருந்த மகளின் முகத்தைப் பார்த்தேன்.
கண்ணிமையில் ஏதோ பூச்சி மாதிரி இருந்தது.
என்னடா எதாவது எறும்பு கிறும்பு இருக்கிறதா என்று நினைத்து, அதைத் தொட்டு எடுக்க முயற்சி செய்தேன்.
அது அவன் நெற்றியில் வைத்திருந்த டாலடிக்கும் மிகச்சிறிய பொட்டு.அவள் இமையைத் தொட்டதும் விழித்தாள். என்னை பார்த்து சிரித்தாள்.
தூங்கினியா என்று முதுகைத்தட்டினேன். ஆமா என்றாள்.
தொடர்ந்து
”ஒரு கனவு கண்டேன்” என்றாள்.
“என்னது சொல்லு”
“நான் மட்டும் வீட்ல இருக்கேன். ஃப்ரிட்ஜுல கேக்கும் சாக்லேட்டும் இருக்கு. அதுல சாக்லேட்ட சாப்பிட ஒரு பெரிய எலி வருது. கேக்கைச் சாப்பிட பெரிய பாம்பு வருது. வந்து ஃப்ரிட்ஜுக்குள்ள உக்காந்திருக்கு. நான் திறக்கும் போது ரெண்டும் என்ன அட்டாக் பண்ண வருது. நா ஃபர்ஸ்ட் ப்ளோர் ஆண்டிகிட்ட சொல்றேன். அவுங்க ஒரு ஆளக் கூட்டிட்டு வந்து அடிக்கச் சொல்றாங்க. அவரு கம்ப எடுத்துட்டு வந்ததும் பாம்பு எலியும் ஒடிப்போயிருந்துங்க. இதுதான் கனவு”
“என்ன பிள்ள கனவு கண்டா நீ. பாம்புக்கு கேக்க விட எலிதான் நல்ல சாப்பாடு”
“கனவுல அப்படித்தான் வந்திச்சி”
“நேத்து பக்கத்துவீட்டுக்காரங்க, எமெர்ஜென்சின்னு சொன்ன உடன அப்படி கனவு வந்திச்சோ”
“தெரியலப்பா”
அப்போதுதான் கவனித்தேன்.
மனைவியும் மகளும் படுத்திருந்த கட்டிலில் நடுவில் இடம் நிறைய இருந்தது.
அப்படியே துள்ளி மகளைத் தாண்டி அந்த இடைவெளியில் படுத்துக் கொண்டு மனைவியைக் கட்டிக் கொண்டேன்.
கொஞ்சம் இறுக்கமாகவே கட்டிக்கொண்டேன்.
மகள் இப்போது சிரித்தாள். நான் கட்டிக்கொள்வதைப் பார்த்து சிரிக்கிறாள் என்று நினைத்து
“ஏன் இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு”
“ஹி ஹி ஹி” என்று குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தாள்.
“எதுக்கு பிள்ள சிரிக்கிறா”
“ஹா ஹா ஹா”
“எதுக்கு சிரிக்கிறா சொல்லிட்டு சிரி”
அப்போதுதான் உணர்ந்தேன். நான் படுத்திருந்த அந்த கட்டிலின் நடுப்பகுதி கொஞ்சம் குளுமையாக இருந்தது போல இருந்தது. உடலை இன்னும் கொஞ்சம் அழுத்திப் பார்த்தேன். ஆம் குளிர்ந்து கிடந்தது.
“எபிள்ள நைட்டு ஒண்ணுக்கிருந்தியோ”
“ஹா ஹா ஹா” குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
“அதுக்குதான் இடம்விட்டு படுத்தியோ”
இப்போது என் நிலைமைப் பார்த்து மனைவியும் சிரித்தார்.
“பரவால்ல இந்தக் குளிர்ச்சியும் நல்லாத்தான் இருக்கு. ஆனா சீக்கிரம் குளிக்கனும்” என்று சொல்லிக் கொண்டு
மனைவியை இன்னும் இறுக்கக் கட்டிக் கொண்டேன்.

No comments:

Post a Comment