Sunday 29 January 2017

குழந்தை உருளை...

ஊறுகாய்க்கு பதிலாக,
புளி ஊற்றி அவித்த பாகற்காயை தட்டில் வைத்திருந்தார் மனைவி.
எனக்கும் ஊறுகாய்க்கு பதிலாக அதை ஏற்றுக் கொள்வதில் சம்மதமே.
புளிப்பும் கசப்புமாக பாகற்காய்க்கு அடுத்தது ‘குழந்தை உருளைக்கிழங்கு’ ஆறு ஏழு உருண்டைகள் இருந்தன.
மெல்லிய மசாலாவில் புரட்டி எடுக்கப்பட்ட ருசியான குழந்தை உருளைகள்.
அடுத்ததாக தக்காளியும், பச்சை மிளகாயும், சேர்த்து அவித்து, மத்தால் கடையப்பட்ட மசித்த கட்டி துவரும் பருப்புக்கூட்டு இருந்தது.
சுடு சோறு இருந்தது. தக்காளி ரசமிருந்தது.
ஆனால் என்னை சாப்பிட விடாமல் ஒரு தோழி போனில் இருந்தார்.
அவரிடம் நேரடியாக சொல்ல முடியவில்லை. கல்வி சம்பந்தமான சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
பேச்சு நீண்டு கொண்டே போக வேறு வழியில்லாமல் அவரிடம் சொன்னேன்
“என் முன்னால சோறு இருக்கு, கூட்டுப் பொரியல் எல்லாம் இருக்கு, ஆனா சாப்பிடத்தாங்க முடியல” என்றேன்.
அவர் ஏன் என்று கேட்க, நீங்கதான் போன்லதான் இருக்கீங்களே என்றேன்.
ஹலோ முதல்லே சொல்ல வேண்டியதுதான என்று திட்டி போனை வைத்தார்.
போனைத் தூக்கி அந்தப் பக்கம் தூக்கி எறிந்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். ரசத்தை ஊற்றி பிசைந்தேன்.
குழைத்துப் பிசைந்தேன். குழையச் சாப்பிடுவது தமிழர் பண்பாடு என்று கனடா எழுத்தாளர் முத்துலிங்கம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
எடுத்து குழந்தை உருளையோடு, பருப்பையும், பாகற்காயையும் வைத்து சேர்த்து சாப்பிடும் போது,
கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கு ஊட்டுவதற்காக மனைவி கிண்ணத்தில் சோற்றைப் பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தார்.
ஒரு வாய் சாப்பிடும் போது மகள் வந்து
“அப்பா ஒரு பேபி பொட்டட்டோ எடுத்துகிறேன்” என்று எடுத்துக் கொண்டாள்.
என் தட்டில் ஒன்று குறைந்தது. அடுத்து இன்னொரு உருண்டை குழந்தை உருளை எடுத்துக் கொண்டாள்.
ஒரு குழந்தை ”அவள் தட்டில்” குழந்தை உருளையை எடுத்துக் கொண்டே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியும்.
ஆனால் அதே குழந்தை ”என் தட்டில்” உள்ள குழந்தை உருளையை எடுப்பதை என்னால் அனுமதிக்க முடியவில்லை.
”என்ன இவ்வளவுதான் இருக்கா பேபி பொட்டட்டோ” குரல் ஆட்டோமெட்டிக்காக உயர்ந்தது.
“இல்ல இன்னும் நிறைய இருக்கே” இது மனைவி.
“அப்ப எடுத்து இவளுக்கு கொடுக்க வேண்டியதுதான” இன்னும் குரல் உயர்ந்தது.
“.........................”
“சொல்லு அவளுக்கு அத வைக்க வேண்டியதுதான. ஏன் என் தட்டுல வந்து எடுத்திட்டிருக்கா. அந்த மிச்ச இருக்கிறத என்னப் பண்ணப்போற தூக்கி தூரவா எறியப்போற. அல்லது அவிச்சி கஞ்சி வெச்சி குடிக்கப் போறியா”
“ம்ஹ்ஹும் சரி விடுங்க”
“என்ன விடுங்க. பதில் சொல்லு. அத வெச்சி என்னப் பண்ணப்போற”
“டென்சன் ஆக வேண்டாம். அவளுக்கு சாப்பாடு கூட அதக் குடுத்தா பருப்பே சாப்பிட மாட்டா. அதனால குடுக்க மாட்டேன். இத சாப்பிட்டு முடிச்ச பிறகு கார்டூன் பாத்திட்டிருக்கும் போது கிண்ணத்துல போட்டுக் கொடுத்தா சாப்பிட்டுப்பா. அதான் காரணம் போதுமா” என்றார்.
அப்படியே வெட்கித் தலைகுனிந்தேன்.
ச்சே ஒரு நிமிடம் கீறிப்பிள்ளை மேல் குடமிட்டது மாதிரி எவ்வளவு தவறாக நினைத்து விட்டேன் என்று வெட்கித் தலைகுனிந்தேன்.
வலது கை சோற்றோடு இடது கையோடு சேர்த்து அப்படியே கும்பிட்டு மனைவியிடம் “சாரி பிள்ள ஒரு செகண்ட் உன்ன தப்பா நினைச்சிட்டேன். ச்சே ரொம்ப தப்பா நினைச்சிட்டேன்” என்றேன்.
மனைவி என்னை பரிதாபமாகப் பார்த்து
“சரி சரி சாப்பிடுங்க. நா இதெல்லாம் எடுத்துக்கிறதில்ல” என்றார்.
அதன் பிறகு யோசித்தேன் “நான் கத்திய வேகத்துக்கு அந்தப் பக்கமும் எதிர் கத்தல் வந்திருந்தால் என்னவாகியிருக்கும். ஒரு அம்மா குழந்தைக்கு குழந்தை உருளை கொடுக்காமல் வைத்திருப்பார் என்று எப்படி நான் நம்பினேன். நான்தானே அவளுக்கு பருப்பு கொடு, அவ சரியா சாப்பிட மாட்டேங்குறா என்று சொல்லிக் கொண்டிருப்பேன்.அதைக் கொடுக்கும் உத்தியை நானே தவறாக புரிந்து கொண்டு கத்திவிட்டேன்.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு சாப்பிட்டு எழுந்தேன்.
அதாவது கணவன் மனைவிக்குள்ளோ, அல்லது எந்த வேறு உறவுக்குள்ளேயோ புரிதல் இல்லாமல் சடாரென காட்டுக் கத்தல் கத்தினோம் என்று வையுங்கள், 50 கிராம் கூட இல்லாத “குழந்தை உருளை” கூட பிரச்சனையை ஏற்படுத்தி விடக்கூடும்.
ஆகையால் உறவுகளுக்குள் எப்போதும் கத்தாதீர்கள்.
என்னதான் தெளிவாக எதிராளி தவறு செய்வதாகத் தெரிந்தாலும் பொறுமையாக விளக்கம் கேட்கலாம்.
இல்லாவிட்டால் பாருங்கள் ’குழந்தை உருளை’ கூட பிரச்சனை ஏற்படுத்தி விடக் கூடுமாக்கும் :) :)

No comments:

Post a Comment