Monday, 7 March 2016

911 க்கு போன் போடுங்க

பொதுவாகவே Single Mom என்று தெரிந்தால் ஆண்கள் அன்பை பொழிய ரெடி ஆகிவிடுவான்கள்.
அப்படி வெளிநாட்டில் தங்கி இருக்கும் நம் ஊரை சேர்ந்த ஒரு Single Mom க்கு பலர் அன்பு காட்ட ரெடி ஆக இருந்திருக்கிறார்கள்.
அதனால் அதையெல்லாம் மறுத்து இருக்கிறார்.
ஆண்கள் பொதுவாக உள்ளப்பூர்வமானவர்கள் அல்ல அவர்கள் உடல் தேவையானவர்கள் என்ற கருத்து அப்பெண்ணுக்கு அழமாக இருந்திருக்கிறது.
அதனால் யாரையும் கிட்ட நெருங்க விடவில்லை.
இருந்தாலும் ஆண்கள் வித்தியாசமாக அப்ரோச் செய்யும் விதம் சிரிப்பாய் இருக்குமாம்.
அப்பெண்ணின் நம்பரை 'அவர் நண்பன்' அவன் நண்பனான ஒரு ஹிந்திகாரரிடம் கொடுத்திருக்கிறான்.
"ஏதாவது பார்ட் டைம் வேலை இருந்தால் சொல்லு இது என் நட்புதான்" என்று.
அந்த ஹிந்திக்காரர் சரி Single Mom தானே என்று அன்பு பெருகி அடிகடி போன் செய்திருக்கிறான்.
தெரியாத எண் என்பதால் இப்பெண் எடுக்கவில்லை.
திரும்ப திரும்ப வரவே சலித்த படி எடுத்திருக்கிறார்.
அங்கே மறுமுனையில் ஹிந்திகாரரின் மனைவி தன கணவர் மொபைலில் அடிக்கடி இந்த நம்பரில் அழைத்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு போன் செய்திருக்கிறார்.
ஹிந்திகாரரின் மனைவிக்கு ஹிந்தி தவிர வேறு மொழி தெரியாது.
இந்த பெண்ணுக்கு ஹிந்தி அறவே தெரியாது.
அங்கே 'ஹிந்திகாரரின் மனைவி' ஹிந்தியில் நீ யார் என்னவென்று விசாரிக்க இப்பெண் முழித்திருக்கிறார்.
திரும்ப திரும்ப 'ஹிந்திகாரரின் மனைவி' போனில் கத்தி இருக்கிறார்.
இந்த அப்பாவி பெண்ணோ அவர் ஏதோ உதவி கேட்பதாக நினைத்துக் கொண்டார்.
'47 நாட்கள்' திரைபடத்தில் வெளிநாட்டில் வைத்து ஜெயபிரதாவை சிரஞ்சீவி கொடுமைபடுத்துவதைப் போல எதிர் முனையில் பேசும் பெண்ணை அவர் கணவன் கொடுமை படுத்துவதாகவும் அவர் தெரியாமல் தன் நம்பருக்கு பேசுவதாகவும் நினைத்துக் கொண்டு இரக்கபட்டு இருக்கிறார்.
ஆங்கிலத்தில் பொறுமையாக அப்பெண்ணுக்கு
"ஹலோ மேடம் நீங்க 911 போன் செய்யுங்கள். அவர்கள் உதவி செய்வார்கள்" என்று திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்.
அங்கே 'ஹிந்திகாரரின் மனைவி' யோ மானாவாரியாக திரும்ப திரும்ப அழைத்து திட்டி இருக்கிறார்.
இது தெரியாமல் இப்பதிவின் நாயகி "ஹலோ மேடம் பயப்படாதீங்க நான் ஹெல்ப் பண்றேன். நீங்க 911 க்கு போன் போடுங்க " என்று அப்பாவியாய் சொல்லி இருக்கிறார்.
அன்று இரவு முழுவதும் 'ஹிந்திகாரரின் மனைவி' க்கு வருந்தி இருக்கிறார்.
போலீசிடம் 'ஹிந்திகாரரின் மனைவி' நம்பரை கொடுத்து விடலாமா அவர்கள் உதவி செய்வார்களே என்று ஒரே குழப்பமாய் குழம்பி இருக்கிறார்.
திரும்பவும் அதே நம்பரில் இருந்து போன். உடனே எடுத்திருக்கிறார்.
அங்கே ஹிந்திகாரன்
"சாரி என் மனைவிக்கு என் மேல அன்பு அதிகம். நான் உங்க மேல இதுவா இருக்கேன்னு நினைச்சுட்டு கோபத்துல பேசி இருக்கிறா?"
" நீர் என் மேல எதுவா இருக்கிறீர்"
"இல்ல பேசலாம்னுட்டு. நீங்க வேலை தேடுறதா உங்க நண்பர்தான் நம்பர் கொடுத்தார். எனக்கு உங்கள ரொம்ப ..... "
"இனிமேல் நீயோ உன் மனைவியோ போன் செய்தா போலீஸ் கிட்ட போவேன்" என்று கத்தி விட்டு போனை வைத்திருக்கிறார்.
அன்று இரவு அப்பெண் தூங்கும் போது அவர் ஹிந்திகாரன் மனைவிக்கு அப்பாவியாய் சொன்ன அட்வைஸ் அனைத்தும் சுற்றி சுற்றி வந்து கும்மி அடித்ததாம்.
"ஹலோ மேடம்.. பயப்படாதீங்க நான் ஹெல்ப் பண்றேன். நீங்க 911 க்கு போன் போடுங்க "

ஆறு வயதி சிறுமியிடம் எப்படி சொல்வது...

'வாழ்க்கை கதை' மீது அதிகாக ஆர்வம் கொண்டிருகிறாள் என் மகள்.
மாயஜாலம், அரசன் காலத்து கதை இவற்றை எல்லாம் விட அன்றாட வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளை விவரித்தால் ரசனையாக கேட்கிறாள்.
நான் ஆரம்பித்தேன்.
"உனக்கு என்ன வயசு?"
"ஆறு"
"ஆறு கூட மூண கூட்டினா என்ன வரும்"
"நைன்"
"ம்ம்ம். அப்பாவுக்கு நைன் வயசா இருக்கும் போது ராத்திரி பாத்து மணிக்கு நாகர்கோவில்ல, வீடு கதவ யாரு தட்டினாங்க"
"ம்ம்ம்"
"டக் டக் டக் .... டக் டக் டக்.. அப்புறம் காலிங் பெல் டின் டயுன் டின் டியூன்"
"யாரு"
"தாத்தா (என் அப்பா) இருக்காங்க, இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு. என்ன நாங்க இருந்த இடத்துல தெருல லைட்டே கிடையாது. அப்படியே இருட்டா இருக்கும். சைக்கிள்ள கடை அடிச்சுட்டு தாத்தா கூட வந்தா குகைக்குள்ள வந்தா மாதிரி இருக்கும். அப்படியே குண்டசா ஓட்டிட்டு வருவோம். சில சமயம் நாயெல்லாம் துரத்தும் அதுல ஒரு நாய் உண்டு அடிக்கடி கால் பக்கம் வந்து குறைக்கும். நாங்க சைக்கிள்ள இருந்தது கிட்டே கால வீசுவோம். அடிவாங்கிட்டு ஓடும் . அத நாங்க 'செருப்படி சுந்தரம்' அப்படின்னு கூபிடுவோம்".
"ம்ம்ம்"
"ஆஹா கதைய விட்டு போறேன் பாரு செல்லம். ஆமா நாங்க இருந்த இடம் அமைதியா இருட்டா இருக்கும். அப்பா கதவ யாரோ தட்டினாங்களா?"
"யாரு"
"ஒரு அக்கா வயசு 25 இருக்கும். சேலை கட்டி இருந்தாங்க. முகமெல்லாம் வியர்வை. பயந்து போன முகம்"
"என்னம்மான்னு தாத்தா கேட்டாங்க"
"ஒரு பையன் என் பின்னாலே வாரான் அண்ணாச்சி. கிட்ட வந்துட்டான். அதான் இங்க வந்துட்டேன்"
"ம்ம்ம்"
"உடனே தாத்தா என்ன பண்ணுனாங்க சட்டைய போடுட்டு ஒரு டார்ச் லைட்ட எடுத்துகிட்டு அந்த அக்காவ வீட்ல விடப போனாங்க"
"ம்ம்ம்"
" அப்போ நானும் தாத்தாவோட போனேன்"
"உங்கள தாத்தா கூட்டுட்டு போனாங்களா"
"ஆமா நான் தாத்தா அந்த அக்கா மூணு பெரும் போனாம். ஒரு மேட்டுல ஏறி நடந்து போனோம். வழியில செடியில நிறைய பூச்சிய பாத்தேன். அப்படியே மரம் செடி கோடி எல்லாம் தாண்டின பிறகு ஒரு ஒன்ரை கிலோ மீட்டர் நடந்த பிறகு அங்க ஒரு சின்ன ஒட்டு வீடு இருந்திச்சி. அதுதான் அந்த அக்கா வீடு. போய் விட்டாச்சு"
"ம்ம்ம்"
"அந்த அக்கா அவுங்க அம்மா அப்பா எல்லாரும் தாத்தாவுக்கு நன்றி சொன்னாங்க. தாத்தா அவுங்கள எல்லாம் மெல்லமா திட்டினாங்க"
"ம்ம்ம்"
"மறுபடி வரும் போது நான் என் அப்பா கைய பிடிசிகிட்டு வந்தேன். அப்போ எப்படி இருந்தி தெரியுமா தாத்தாவ பாக்க"
"எப்படி"
" அப்படி சூப்பர் ஹீரோ மாதிரி இருந்திச்சி. அப்படியே பாசமா"
"ம்ம்ம். ஆமா தாத்தாவுக்கு எல்லாமே தெரியும். நீங்கதான்" ( முகத்தில் அளவிட முடியாத சிரிப்பு)
"மண்ட கிண்டஎல்லாம் ஒடச்சுருவேன். எனகென்ன பிள்ள கொறச்சல்"
"இல்லப்பா அப்படி சொல்லல" என்று சிரித்தாள்.
" ஹா ஹா... ம்ம்ம். அது ஒரு நல்ல பீல் இல்ல. அந்த பீலா சொல்லத்தான் இந்த சம்பவம்"
" ஆமா நல்ல பீல் இருக்கும் இல்ல"
"சரி இப்ப இந்த சம்பவத்துல இருந்து உனக்கு ஒரு கேள்வி. அந்த அக்காவ ஒரு பையன் துரத்தினான். எதுக்கு துரத்தினான்?. நீ சொல்லு பாக்கலாம்"
"ம்ம்ம்... வந்து... அந்த அக்காவோட சும்மா பயங்காட்டி விளையாடுறதுக்கு"
"இருக்கலாம்"
" அப்படி இல்லன்னா அந்த அக்கா கிட்ட இருக்கிற பணம் செயின் எல்லாம் புடுங்குறதுக்கு"
"இருக்கலாம். இது நல்ல பார்வை"
"அல்லது அந்த பைய்யனே ஒரு பேயா இருக்கலாம். அந்த அக்காவ சாப்பிடுறதுக்கு துரத்தி இருக்கலாம்"
"இருக்கலாம்.வேற"
"அவ்வளவுதான் டாடி"
இந்த இடத்தில என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆறு வயது சிறுமிக்கு அந்த ஆண் பாலியல் கொடுமை செய்யத்தான் துரத்தி இருப்பான் என்றும், அதுதான் முதல் காரணமாக இருக்க கூடும் என்று எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று யோசித்தேன்.
அப்படி யோசிக்க வேதனையாக உணர ஆரம்பித்தேன்.
எவ்வளவு கொடுமையான உலகம் இன்னும் இவளுக்கு தெரியாமல் இருக்கிறது.
அந்த கொடுமையான உலகத்தில் நானும் ஒரு புள்ளி என்ற குற்ற உணர்ச்சியும் வராமல் இல்லை.
அதை எப்படி அறிமுகபடுத்துவது.
தெரியாமலே இருந்து விடட்டுமா?
இந்த பார்வையில் சிந்திக்க அவள் மேல் அளவிட முடியாத அன்பும் கனிவும் வாஞ்சையும் வந்தது.
அவளை இழுத்து பக்கத்தில் வைத்து
"நீ ஒன்னு கவனிச்சியா. இப்பல்லாம் அப்பாதான் உனக்கு முத்தம் தரேன். அனா நீ எனக்கு குடுக்கவே மாட்டிக்கிற"
"ஐயே போங்க" என்று எழுந்து ஓடினாள்.

காதல் விளக்கங்கள்

பெண்களுக்கு உண்மையான பாலியல் சுதந்திரம் கிடைத்த பிறகுதான்,
அது சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்ட பிறகுதான்.
ஆண்கள் மாதிரி பெண்களும் இயல்பாக சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்த பிறகுதான்,
அதை ஒரு நல்ல குற்றமில்லாத உணர்வாக ஏற்று கொண்ட பிறகுதான்
காதலை தெளிவாக Define செய்ய முடியும்.
அதுவரை
சொல்லப்பட்டு வரும் காதல் விளக்கங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.
அல்லது
கண்ணைக் கட்டி கொண்டு
யானை தடவி
கருத்து சொன்னது போல விஷயமாகும்

தமிழ்ச் சொல் பொம்மைகள்...

ஒரு ஊர்ல ஒரு பூதம் இருந்துச்சாம்.
அது நாலு பேர குகைல அடைச்சு வைச்சுட்டு விட மாட்டேன்னு சொல்லிச்சாம்.
அவுங்க பேரு என்ன தெரியுமா?
முதல் ஆளு பேரு 'மெட்டு'
இரண்டாவது ஆள் பேரு 'மொட்டு'
மூணாவது ஆள் பேரு 'மேட்டு'
நாலாவது ஆள் பேரு 'மோட்டு '
நாலு பேரும் பூதம் கிட்ட ரொம்ப கெஞ்சினாங்க " பூதம் பூதம் எங்கள விட்டுரு பூதம்"
"இல்ல விட மாட்டேன் சென்னைல ஒரு ஒண்ணாங் கிளாஸ் படிக்கிற பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ உங்க நாலு பேரு பெயரையும் எழுத்து பிழை இல்லாம எழுதினாதான் உங்கள விடுவேன்"
"பூதம் அந்த குட்டிப் பொண்ணு எழுதுறத நாங்க எப்படி பாக்கிறது"
"இதோ இந்த மாயக் கண்ணாடி மூலமாதான்"
அப்போ அங்க கண்ணாடியில ஒரு குட்டி பொண்ணு ரெட்டை ஜடை போட்டுட்டு, செல்லம் மாதிரி எக்ஸாம் எழுத உக்காந்திருக்கு.

மிஸ் எழுத சொல்றாங்க
1."பசங்களா ! பேப்பர்ல நா சொல்றத எழுதுங்க. 'மெட்டு'
உடனே குட்டி பொண்ணு யோசிக்கிறா. 'மெட்டு' . சட்டுன்னு முடிஞ்சிருது. அப்ப அதுக்கு ஒரு கொம்புதான் வரும்.
துணைகால் வருமா?வராதா?. 'ஒ' சத்தம் வந்தாதான் துணைகால் வரும். இங்க 'மெட்டு' ல 'ஒ' சத்தம் வரலியே. அப்ப ஒத்த கொம்புள்ள பொம்மை மட்டும்தாம்". 'மெட்டு' சரியா எழுதிட்டா.
2.அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க 'மொட்டு'
குட்டி பொண்ணு யோசிக்கிறா .இது சட்டுன்னு முடிஞ்சிருது . அப்ப ஒத்த கொம்பு வரும். ஒ சத்தம் வருது. துணைகால் வரும்.
அப்ப இது ஒத்த கொம்புள்ள ஒத்த கால் உள்ள பொம்மை." 'மொட்டு' சரியா எழுதிட்டா
இத அந்த மாயக்கண்ணாடியில பாத்துகிட்டு இருந்த நாலு பேருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
பூதம் மட்டும் அமைதியா இருந்துச்சாம். இன்னும் இரண்டு வார்த்தை இருக்கே.
3. அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க "மேட்டு"
குட்டி பொண்ணு யோசிக்கிறா ' இது சட்டுன்னு முடியல. நீளமா இழுக்குது. அப்ப ரெண்டு கொம்பு வரும்.
ஆனா துணைக்கால் வருமா? 'ஒ' வரலியே அப்ப வராது. இது ரெட்டை கொம்பு கால் இல்லாத பொம்மை. அப்ப 'மேட்டு'. சரியா எழுதிட்டா.
இப்ப கடைசி வார்த்தை. இத அந்த பொண்ணு சரியா எழுதிட்ட நாலு பேருக்கும் விடுதலை. எழுதலன்னா பூதம் விடாது.
ஒரே பரபரப்பு நாலு பேருக்கும்.
4.அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க 'மோட்டு'
குட்டிப் பொண்ணு ரொம்ப நேரம் யோசிக்கிறா. 'இது நீளமா வருது. அப்ப ரெண்டு கொம்பு வரும் . துணை கால் வரும். ஏன்னா 'ஒ' சத்தம் வருது.
அப்ப இது ரெட்டகொம்புள்ள ஒத்தகால் பொம்மை. 'மோட்டு' சரியா எழுதிட்டா.
அன்னைக்கு சாயங்காலம் குட்டி பொண்ணு பள்ளிக்கூடம் விட்டு வீட்ல இருக்கும் போது நாலு பேரு வந்தாங்க.
"என் பேரு 'மெட்டு' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'லிப்ஸ் ஸ்டிக்' மிட்டாய்.
"என் பேரு 'மொட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்'
"என் பேரு 'மேட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'நாகின்' சீரியல் சிடி. நல்ல பாம்பு மாதிரி டான்ஸ் ஆடிக்கோ.
"என் பேரு 'மோட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'வாட்டர் கலர் பாக்ஸ்'
எழுத்து பிழை இல்லாம எழுதினா இவ்வளவு பரிசு கிடைக்குமா அப்படின்னு குட்டிபொண்ணு ஜாலியா டான்ஸ் ஆடினா.
அவள சுத்தி அந்த நாலு பேரும் ஜாலியா டான்ஸ் ஆடினாங்க.
இத பாத்த பூதமும் ஜாலியாகி ஜங் ஜங்குன்னு குதிச்சு குதிச்சு ஆடிச்சாம். smile emoticon smile emoticon

செண்டிமெண்ட் ரத்தத் திலகம்..

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே' என்று ரத்த திலகம் படத்தில் வரும் பாடல் பிடிக்காத மனிதனே இருக்க முடியாது.
அந்த திரைப்படம் பிடித்த காரணத்தினால் எனக்கு அது ரொம்ப உருக்கமாய் இருக்கும்.
குமாரும் கமலாவும் கல்லூரியில் பரஸ்பரம் செல்லமாக சண்டையிட்டு கொள்ளும் நண்பர்கள்.
ஒருநாள் குமாரின் டைரியின் மூலமாக அவன் தன்னை காதலிப்பதை கமலா அறிந்து கொள்கிறாள்.
சாவித்திரியும் சிவாஜியை காதலிக்கிறார்.
ஆனால் மறுநாளே அவர் பிறந்த ஊரான சீனாவுக்கு செல்ல வேண்டிய நிலை.
"குமார் நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்ட நேரம் பிரியிர நேரமா இருக்கே" என்று கமலா நெகிழ்கிறார்.
மறுநாள் கூடிப்பிரியும் விழாவில் பாட வேண்டிய பாடல் வரிகளின் ஆரம்ப வரிகளான
'பசுமை நிறைந்த நினைவுகளே' வரியை சிவாஜி பாடுகிறார்.
'பாடித்திரிந்த பறவைகளே' என்ற வரிகளை சாவித்திரி பாடுகிறார்.
விழாவில் இருவரும் அப்பாடலை உருக்கமாக பாடுகிறார்கள்.
சாவித்திரி சீனாவுக்கு போகும் முன் சிவாஜியை பார்த்து கண்கலங்குகிறார். சிவாஜியும் அப்படியே.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கொள்கிறார்கள்.
அன்பிலே 'குமார்' என்றும் 'கமலா' என்றும் குரல் நடுங்க அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள்.
இந்த தழுவலுக்குப பிறகு அவர்கள் இருவரும் யாரையும் வாழ்கையில் தழுவ வில்லை.
சாவித்திரியும் சிவாஜியும் பிரிகிறார்கள்.
அப்போது இந்தியா சீனா போர் மூளப் போவதாக சிவாஜிக்கு தகவல் வருகிறது. இப்பக்கம் சாவித்திரி சீனன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு உளவு சொல்கிறார்.
சிவாஜி பெரிய ராணுவ அதிகாரி ஆகி பணியாற்றுகிறார். யுத்த களத்தில் சிவாஜி கைதி ஆகிறார்.
அங்கிருந்து தப்பித்து செல்லும் போது சாவித்திரி ஒரு புதரில் மயங்கி சோர்ந்து கிடப்பதை பார்க்கிறார்.
கமலா என்று அவர் மனம் ஒரு நொடி நெகிழ்கிறது. ஆனால் தேச துரோகி என்று வெடித்து சாவித்திரியை ஏசுகிறார்.
சாவித்திரி சொல்ல வருவதை கேட்கவே இல்லை. முடிவில் சாவித்திரி சொல்கிறார்
"குமார் இதயமில்லாதவர்கள் கண்கள் சொல்வதை மட்டும்தான் நம்புவார்கள். நீங்கள் இதயமுள்ளவர். கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்து நான் சொல்வதை கேளுங்கள். இத்தனை நாள் உங்களுக்கு வந்த ரகசிய தகவல் அனைத்தும் நான் சொன்ன உளவுதான்."
இதைக் கேட்ட சிவாஜி சாவித்திரியை உருக்கமாக அணைக்க போகிறார். சாவித்திரி அந்த அணைப்பை ஏற்று கொள்ளவில்லை. விலகி விடுகிறார்.
இருவரும் அவரவர் நிலைமையை நினைத்து அழுகிறார்கள்.
சிவாஜி கையில் இருக்கும் ரொட்டி துண்டுகளை சாவித்திரியிடம் நீட்டுகிறார். கொடுமையான பசியில் இருக்கும் கமலா அதை வாங்கி வேகமாக தின்கிறாள்.
குமார் அது பார்த்து அழுகிறான்.
அப்போது அங்கே மாறு வேடத்தில் வரும் சீனத்து கணவன் கமலாவை சுட்டுக் கொள்கிறான். சிவாஜி திரும்ப அவனை அழிக்கிறார்.
ஒடிச் சென்று தன தோழியான, பிரிவதற்கு முந்தைய நாள் காதலை ஏற்றுக் கொண்ட, ஒரே ஒரு முறை அன்பிலும் அன்பாக அணைத்து கொண்ட சாவித்திரியை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார்.
இருவர் கண்களும் இன்பத்தால் சிரிகின்றன.
அனால் இம்முறையும் இது தற்காலிகமான சந்திப்புதான் என்ற வேதனை இருவர் முகத்திலும் வருகிறது.
விசும்புகிரார்கள்.
இதற்கு முன் இருவரும் ஆனந்தமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.
ஒருவருடம் முன்னர் இப்பாடலை இருவரும் பாடிக் கொண்டிருக்கும் கல்லூரிக் காலங்களில் இப்படி ஒரு இடத்தில் மறுபடி சிந்திப்போம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள்.
வாழ்க்கையில் காதல் எப்படி முக்கியமோ அப்படியே கடமையும் முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இப்படி இரு நாடுகளுக்கு இடையேயான போர் அவர்கள் காதலை நட்பை பிரிக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனாலும் என்ன? மனம் அப்படியேதானே இருக்கிறது.
"விமானம் இல்லாவிட்டாலும் சிறகுகள் துணை கொண்டாவது உங்களை பார்க்க வருவேன்" என்பாள் கமலா.
ஆம் அவர் அவள் அன்பு சிறகுகளால் எப்படியோ குமாரை பார்த்து விட்டாள் தானே.
இப்போது அவள் குண்டடி பட்டு உடல் வலியால் துடித்தாலும் மனத்தால் காதல் நிரம்ப குமார் மடியில்தானே வீழ்ந்து கிடக்கிறாள்.
குமாரும் கமலாவும் கனிவோடு பார்த்துக் கொள்கிறார்கள்.
கமலா இதோ தூங்கப் போகிறாள்.
அப்போது சிவாஜி சொல்கிறார்
"பசுமை நிறைந்த நினைவுகளே"
கமலா பதிலுக்கு
"பாடித்திரிந்த பறவைகளே" என்று சொல்லி கண்களை மூடுகிறாள்.
காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம் என்பதை குமாரும் கமலாவும் உணர்ந்து கொள்ளும் நேரம்
பார்க்கும் எனக்கும் அது புரிந்து விடுகிறது.
பிசைந்து பிழிகிறது அன்பு.

வார்த்தை விளையாட்டு.

கடனை திருப்பி கொடுக்காத குற்றத்துக்காக
ஆண்டனியோ உடலில் இருந்து சைலாக் ஒரு பவுண்டு சதையை வெட்டி எடுக்க போகும் போது
இளம் வக்கீல் குறுக்கே புகுந்து
"ஒப்பந்த படி சதையை மட்டும்தான் எடுக்க வேண்டும் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் எடுக்கவேண்டும்"என்று சொல்லி சைலாக்கை திகைக்க வைக்கிறான்.
அன்று ஒரு கதை படித்தேன்.
ஒரு விடுதிக்கு சென்ற வழிப்போக்கன் விடுதியில் இருக்கும் பெண்ணிடம் பணத்தை கொடுத்து
"அம்மா பசிக்கிறது சீக்கிரம் சோறு போடுங்கள்.
ஒரு எலுமிச்சை அளவாவது சோறு போடுங்கள் என்று சொல்கிறான்.
அப்பெண்ணும் இலையில் ஒரு எலுமிச்சை அளவு சோறு போட்டு
"நீங்கள் சொன்ன அளவு சோறு போட்டு விட்டேன்" என்கிறாள்.
பிரச்னை மரியாதை ராமனிடம் வர அவர்
" சோறுக்கு காசு கொடுத்தவன் "எலுமிச்சை அளவு சோறு என்று தான் சொன்னான். எலுமிச்சை அளவு சோற்று உருண்டை என்று சொல்லவில்லை.
அதனால் அவனுக்கு எலுமிச்சை அளவுள்ள ஒற்றை சோற்று பருக்கையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
அப்படி கொடுக்க முடியாவிட்டால் அவன் கொடுத்த காசு மாதிரி பாத்து மடங்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்று சொன்னராம்.
"அவரை அவனா கொன்றான் அவன் கையில் உள்ள துப்பாக்கி தானே கொன்றது "என்றாராம் ஒருவர்.
இதை கேட்டு கடுப்பான இன்னொருவர் "துப்பாக்கி எங்கே கொன்றது தோட்டாதானே கொன்றது". என்றாராம்.
வார்த்தை விளையாட்டு.

அம்மாவும் மழலையும்

பார்ட் டைம் பி.ஈ படிக்கும் போது இரவு வகுப்பு முடிந்து, வீடு திரும்ப நேரமாகிவிடும்.
காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் இரவு 11 மணிக்கு வீடு அடைவேன்.
பசி களைப்பு உடல் வலி என்று எரிச்சலாய் கோபம் பொத்து கொண்டு வரும்.
கோபத்தை காட்ட எளிதான இலக்கு "அம்மா". அம்மாவிடம் எரிந்து எரிந்து விழுவேன்.
- உடனே கதவ திறக்க மாட்டீங்களா
-என்ன சோறு ஐஸ் மாதிரி குளுந்து இருக்கு. நான் என்ன பிச்சக்காரனா பிள்ள.
-ஆம்லேட ஏன் இவளோ வேக விடுறீங்க. எனக்கு வேண்டாம்.
-என்ன மீன் குழம்புல இவ்ளோ முள்ளு மிச்ச மீதிய எனக்கு கொடுபீங்களோ
-என்ன எனக்கு சாப்பாடு போடுறப்ப தூங்கி வழிறீங்க. தேவை இல்ல உங்க சாப்பாடே எனக்கு வேண்டாம்.
-நான் ஒருத்தன் லேட்டா வர்றது உங்களுக்கு எரிச்சலா இருக்கு. நாளையில இருந்து தனியா ரூம் எடுத்து தங்கிகிறேன்.
இப்படி ஏதாவது ஓன்று சொல்வேன்.
சில வரிகள் எல்லாம் கேட்பவர் மனதை குத்தி கிழிக்கும்.
ஆனால் அம்மா அதற்கு பதிலே சொல்ல மாட்டார்.
அமைதியாக இருப்பார்.
பின்னர் ஒருநாள் அம்மாவிடம் அன்பாக பேசும்போது கேட்டேன்
"நான் உங்கள ரொம்ப கோவமா பேசும் போது எல்லாம் உங்களுக்கு கோவமே வராதா பிள்ள . அமைதியா இருக்கீங்க" என்றேன்.
அதற்க்கு அம்மா பதில் சொல்லாமல் சிரித்தார்.
நான் அதிகம் வற்புறுத்தி கேட்கவே அம்மா சொன்னார்
"விஜை ! நீ நீ பிறக்கும் போதே உன்ன எனக்கு உன்ன தெரியும். அம்மாவுக்கு தெரியும்தானே. அப்போ நீ பேச ஆரம்பிக்கும் போது மழலை பேசுவ இல்ல. அப்போ ரசிப்பேன்ல. அதே மாதிரி நீ கோவமா கத்தி டயலாக் விடும் போது நீ மழலை பேசுறதா நினைச்சுப்பேன். அப்ப எனக்கு ஒன்னும் தோணாது. பச்ச புள்ளதான நீ " என்று சொல்லி சிரித்தார்.
பின் விடாமல் சிரித்தார்.
குலுங்கி குலுங்கி சிரித்தார்.
எனக்கு வெட்கமாய் போய் விட்டது.
அம்மாக்கள் வலிமையானவர்கள்.
அவர்கள் ஒரு அன்பினால் பிள்ளைகள் தலையில் தட்டாமல் இருக்கிறார்கள்.

சல்மா - ஆவணப்படம்

எழுத்தாளர் சல்மா பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன்.(பரிசல் செந்தில்நாதன் கொடுத்த தகவலால்)
என்னை மிகவும் ஈர்த்த அப்படம் பற்றி
1.இப்படம் சல்மா என்ற தனி மனுஷியை பற்றி கூறுவது போல் தெரிந்தாலும்,
'சல்மா' ,அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகத்தின், இந்திய சமூகத்தின் பானை சோற்றின் "ஒரு சோறாகவே" எடுத்து காட்ட பட்டிருக்கிறார். அதுதான் இப்படத்தை தொடர்ந்து ஆர்வத்துடன் என்னை பார்க்க வைத்தது.
2.சல்மா என்னும் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி தன் சொந்த ஊரான துவரங்குறிச்சிக்கு வருவதாக படம் தொடங்குகிறது. சல்மா தன் ஊரின், தன் வீட்டின் ஒவ்வொரு இடமாக நினைவு கூர்கிறார்.
அதன் மூலமாக இஸ்லாமிய சமூகத்தில் எவ்வாறு பெண்கள் அடக்கபட்டிருகிறார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
3.சல்மா வீட்டில் சிறிய ஜன்னல் இருக்கிறது. ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் அந்த ஜன்னல் வழியே மட்டும்தான் பார்க்க முடியும். பள்ளிக்கு பாடம் படிக்க அனுப்புவதில்லை.15 வயதில் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். அது மத சட்டத்தில் வருவதால் அதை கேள்வி கேட்கவும் முடியாது.
அந்த ஜன்னல் பார்க்க யார் உட்காருவது என்று சல்மாவுக்கும் அவர் அக்காவுக்கும் சண்டை வருமாம். "சரி நீயே இருந்துந்துக்க" என்று அக்கா விட்டு கொடுத்து விடுவாராம்.
3.சல்மாவின் அம்மா சொல்கிறார். "நான் இரண்டாம் தாரமாதான் வந்தேன். முதல் தாரத்துக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தால். என்னை இரண்டாம் தாரமாக கட்டிகொண்டார். எனக்கும் பெண்ணாக சல்மா பிறந்ததால் அவளை என் வீட்டிலேயே கூட சேர்க்கவில்லை இவர்.
சல்மா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தார்.
4.கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் போது சல்மா துடித்து போகிறார். "நான் பெரியவளாக ஆகும் முன் பெரியவளாக இருக்கும் அக்கா எல்லாம் வெளியே வராமல் இருப்பது பற்றி கவலை கொள்வேன். நாளை நமக்கும் இந்நிலைமைதான் என்று நினைக்கும் போது நடுங்கும்"
5. சல்மாவின் அத்தை அல்லது சித்தி சொல்கிறார்
"நான் வயசுக்கு வந்த விஷயத்தையே அம்மா கிட்ட சொல்லல. சொன்னா வெளிய விட மாட்டாங்க. அதனால சொல்லாம ஒருவாரம் இருந்தேன். அப்போ இப்ப மாதிரி நேப்கின் கிடையாது. அலசித்தான் உடுத்தணும். அம்மாவுக்கு தெரியாம துணி அலசுவேன். ஆனா அம்மா எனக்கு வயசுக்கு வர்றதுக்கு மருந்து கொடுக்கும் போது பயந்து சொல்லிட்டேன்" என்கிறார்.
6.சிறு வயதில் கிடைத்த செய்தி தாள்கள் மூலமாக தன் அறிவை வளர்த்து கொள்ளும் சல்மா, எப்போதும் தான் அடக்கப படுவதற்கு எதிராகவே இருக்கிறார்.
சிலசமயம் உயிர் இருக்கும் கரண்ட் வயரில் தன் கைகளை வைக்கும் அளவுக்கு கூட போராடுகிறார். மிகுந்த பிரச்சனைக்கு பின் தன்னைச் சுற்றி ஒரு சிறு வெளியை மிகுந்த பிரச்சனைக்கு அப்புறம் கட்டமைக்கிறார். சல்மா சொல்கிறார் "எப்போதும் இந்த பெரிய உலகை காண நான் ஆர்வமாய் இருந்தேன். இந்த கூடு போன்ற அடக்கப்பட்ட உலகத்தை விட்டு தப்பவே நினைத்தேன்"
7.அவ்வாறு தப்புவதற்கு இறைவன் சல்மாவுக்கு கொடுத்த சாதனம் 'பேனா'.
தப்பிக்கவே முடியாத சிறையில் உள்ளவன் தன் கனவில் ஒரு திறந்த வாசல் கொண்டு வந்து தப்பியதை போல, தப்பிக்க சிரமமான அடைப்பட்ட சமூக முறையில் இருந்து தன் பேனாவின் உதவியாலும் தன்னம்பிக்கையாலும், போராட்டத்தாலும் தப்பிக்கிறார்.
8.சல்மா யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுகிறார். அக்கவிதைகளை தன் அம்மாவின் மூலமாக பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறார். ஓன்று இரண்டு கவிதைகள் வெளியாகி அவர் எழுதும் ஆர்வத்தை அதிக படுத்துகிறது.
9 சல்மாவுக்கு 19 வயது இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணம் வேண்டாம் என்றிருந்தவரை அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது மாதிரி நாடகம் ஆட செய்து உணர்வுபூர்வமாக மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள்.
10.சல்மா கவிதை எழுதுவது கணவருக்கு பிடிக்கவில்லை. எழுத கூடாது என்று எல்லா இந்திய ஆண்களை போல் கொடுமை படுத்து கிறார். முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுகிறார்.
இது பற்றி சல்மா சொல்லும் போது "எங்கே ஏதாவது ஆசிட் ஊற்றி விடுவாரோ என்று பயமாய் இருக்கும். தூங்கும் போது என் குழந்தை முகத்தை என் முகத்தோடு சேர்த்து வைத்து கொண்டு தூங்குவேன். குழந்தை முகத்தை பார்த்தல் அது மாதிரி ஊற்ற தோன்றாது அல்லவா".
11.சல்மாவின் முதல் கவிதை தொகுப்பை பதிப்பித்த பதிப்பாளர் சொல்கிறார். "சல்மாவின் கவிதையில் எழுத்து பிழை இருந்தாலும், வாசிக்க ஒரு இலக்கிய அம்சம் இருக்கும்.
அவரது முதல் கவிதை தொகுப்பை வெளியிட வரும்போது உணவகத்தில் எப்படி சாப்பிடுவது, சாலையை எப்படி கடப்பது, என்பது போன்ற மிக அடிப்படியான விஷயம் கூட அவருக்கு தெரியாது. அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அனால் எந்த நல்ல விஷயங்களையும் உடனே கற்று கொள்ளும் பண்பை கொண்டிருந்தார்"
12.சல்மாவை முதன் முதலில் பேட்டி எடுத்தவர் சொல்கிறார். நான் சல்மாவின் ஊருக்கு அவரை பேட்டி எடுக்க சென்று இருந்தேன். சுற்றிலும் ஆட்கள் இருக்க அவரை பேட்டி கண்டேன். அவரை இதுவரை யாரும் புகைப்படம் எடுத்தது கிடையாது.
நான் கேட்டேன். "அப்படியா எடுக்கணுமா" என்று கேட்டவர் யாரும் இல்லாத சமயத்தில் தன் பர்தாவை விலக்கி முகத்தை காட்டினார். நான் உடனே ஒரு போட்டோ எடுத்தேன். அது இதழில் வெளியாக ஊரில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
13.சல்மாவின் கணவர் சொல்கிறார்" மற்றவர்கள் உடன் ஒப்பிடும் போது நான் இவளுக்கு சுதந்திரம் கொடுத்துதான் இருந்தேன்."
14. சல்மா கவுன்சிலராகி, எம்.எல். ஏவும் ஆகிறார்.
15. இந்த இடத்தில இந்த ஆவண படத்தை நிறுத்தாமல் எடுத்து இருப்பது இதன் சிறப்பு.
சல்மா சென்னைக்கு தன் அக்காவோடு வருகிறார். அங்கே இருவர் குடும்பமும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.
16.சல்மாவின்அக்கா பையன் ஒரு யுவன் முஸ்லிம் பெண்கள் புர்கா போடுவது அவர்கள் அடையாளதுக்குதான், பாதுகாப்புக்குத்தான் என்று வாதிடுகிறான்.
அவன் வாதம் அனைத்தும் பலவீனமானவை. ஒரு பொது புத்தி முஸ்லிம் செய்யும் "பெண் அடக்கும் வாதம்".
சல்மாவும் அவர் அக்காவும் அதை கேட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில ஆவன பட இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.
ஒரு தெளிவான பிற்போக்கான வாதத்தை அப்படியே அனுமதிப்பது மூலமாக பார்வையாளர்கள் அதற்க்கு எதிரான மனநிலையை அடைவதற்கு வழி செய்கிறார்.
17.படத்தின் விவாத்தில் ஒருவர் சல்மாவிடம் "நீங்கள் ஏன் விவாகரத்து செய்யவில்லை" என்று கேட்க "அது பல்வேறு விஷயங்கள் கொண்ட கண்ணி. அதை வெட்டினால் பல பிரச்சனைகள் வரும் என்று நினைத்தேன்" என்றார்.
இன்னும் பல பார்வையாளர்கள் பேசியது மைக் இல்லாத காரணத்தால் எனக்கு கேட்கவில்லை. விலாசினி கேட்ட கேள்வி எல்லாம் எனக்கு கேட்கவில்லை என்பது வருத்தம்.
18.ப்ரீதம் "இது சல்மாவின் ஆங்கில மொழி பெயர்ப்பு எழுத்துக்களை படித்து இதன் இயக்குனர் அவரை அணுகி எடுத்த படம். சல்மாவை போற்ற வேண்டும் என்று எடுத்த படமில்லை" என்று சொன்னார்.
19.இப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன.
-முதிர்ந்த இலக்கியவாதிகள், வாசகர்கள். "சல்மா எல்லாம் ஒரு ஆளா.அவர பத்தி ஒரு படம் அது போய் பாக்கனுமாக்கும்" என்ற மனநிலையை கொண்டிருக்கலாம்.
-சல்மாவின் சமகால படைப்பாளிகள் இப்படத்தின் மூலமாக சல்மா மீது பொறாமை கொண்டிருக்கலாம். (அவர்களை அறியாமல்). அவர்கள்.
-காலச்சுவடு குழுமத்தில் இருப்பார் என்ற பெயர் கொண்டதால் சல்மா மீதான எரிச்சல் கொண்டவர்கள்.
-சல்மாவின் கட்சி முகம் பிடிக்காதவர்கள்.
- மத அடிப்படைவாதிகள்.
இப்படி நிறைய மனநிலையில் இதை முன்முடிவுடன் அணுகாமல் இருந்தால்,
ஒரு அடக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் பெண்ணின் கதை என்று நினைத்தால்,
சல்மா என்ற ஒரு பெண் வெளியே வந்து விட்டார். ஆனால் பல பெண்கள் மதத்தின் ஆண்களின் சட்டதிட்டங்களின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டு இன்னமும் சிதைந்து கொண்டும் புழுங்கி கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாகத்தான் சல்மா இப்படத்தில் வருகிறார் என்பதை உணர்ந்து கொண்டால் அதுவே இப்படத்தின் வெற்றியாக இருக்கும்.
20.சல்மாவின் முதல் புகைப்படத்தில் இருக்கும் தேஜசும் அழகும் தன்னம்பிக்கையும் 'உலகமெங்கும் இப்படி எத்தனை பெண்கள் திறமை இருந்தும் இன்னும் அடக்கி வைக்க பட்டு கொண்டிருக்கிறார்கள்" என்பதை தெளிவாக சொல்கிறது.
இப்படத்தை திரையிட்டு காட்டிய
"இமானுவேல் கண்ட் அறிந்த" வெங்கடேஷ் சக்கரவர்த்திக்கு நன்றி.

குட்டி நாயனார்

மகளை ஓவிய வகுப்பில் இருந்து கூட்டி வரும் போது மனைவிடம் இருந்து போன்.
"கோவில்ல இறங்கிருங்க. இன்னைக்கு சனி பிரதோஷம் போயிட்டு வரலாம்.".
அதிர்ந்து இருந்தேன். இது மாதிரி சமயத்தில் கோவிலில் அதிக கூட்டம் இருக்கும். எனக்கிருக்கும் கடவுள் கொள்கைக்கு எதிரானது இந்த கூட்டம்.
ஆனால் மனைவிடம் மறுக்க முடியாது. மறுத்தால் அது ஒரு பனி போரின் ஆரம்ப சங்கிலியாக எடுத்து கொள்ளப்படும்.
மகளோடு கோவில் வாசலில் நின்றேன். மனைவி வந்தார். அவ்வளவு செருப்பு குவியல்களிலும் பாதுகாப்பான இடம் தேடி வைத்தார்.
கோவில் உள்ளே போனால் கூட்டம். அங்கே ஒரு கோஷ்டி பெண்கள் 100 முறை ஓம் நம சிவாய எழுதிக் கொண்டிருந்தார்கள்.
மனைவி ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு தாள் வாங்கி கொண்டார். அதை வைத்து எழுத ஒரு காலண்டர் அட்டை வாங்கி கொண்டார்.
என்னிடம் "நீங்களும் எழுதுறீங்களா?" என்று கேட்க "எனக்கு இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போக வேண்டும். காலை வேளையில் அமைதியாக இருக்கும் போது மட்டும்தான் எனக்கு கோவிலுக்கு வரப்பிடிக்கும் என்பது உனக்கு தெரியும்தானே" என்று சொன்னேன்.
வரிசையில் நின்றால் கால் சுட ஆரம்பித்தது.
எனக்கு அந்த கால் சூடு பிடிக்கும்.
மகளிடம் கேட்டேன் "உனக்கு கால் சுடுதா"
"சுடுது அப்பா ஆனா சுகமா இருக்கு" என்றாள்.
நான் குஷியானேன் " உனக்கு பிடிச்சி இருக்கா. சின்ன வயசுல அப்பா என்ன பண்ணுவேன் தெரியுமா? உச்சி வெயில்ல மொட்டை மாடி தரை ஒட்ல போய் நிப்பேன். அப்போ கால்ல சூடு ஏறி உள்ளங்கால இருந்து தண்ணி வரும். செம சுகமா இருக்கும்"
"இப்ப என் கால்ல இருந்து தண்ணி வருமா?"
"இது ஒரு வெயிலா.நல்ல வெயில்ல அப்படி வரும். நீ இன்னும் பெரிய பிள்ளை ஆனா பிறகு சொல்லித்தரேன்"
அப்போது மனைவி குறுக்கிட்டு "பேனா இருக்கா" என்று கேட்டார்.
இல்லை என்றேன். பேனா இல்லாமல் எப்படி ஓம் நமசிவாய எழுதுவது என்று தவித்தார். நான் அதை கண்டு கொள்ளாமல் நின்றது பற்றி என் மேல் எரிச்சல் வந்தாலும் அதை பிறகு காட்டிக் கொள்ளலாம் என்று இருந்தார்.
ஐந்து நிமிடம் போன பிறகு ஒரு பெண் வந்து மனைவி தோளை தட்டி ஒரு பேனா கொடுத்தார். மகிழ்ச்சியாக வாங்கி கொண்டு எழுத ஆரம்பித்தார்.
அதை கொண்டு கொடுத்து விட்டு வந்தார். சாமி கும்பிட்டு வெளியே வந்தோம்.
"இப்படி கூட்டத்துல வரதுக்கு. இன்னும் தேவாரம் திருவாசகம் எல்லாம் படிச்சிட்டு காலைல அமைதியா இருக்கும் போது வந்து ஒரு மணி நேரம் கும்பிடேன் உன் மனசுக்கு உண்மையான நிம்மதி கிடைக்கும். எனகென்னவோ இங்க பெரிய ஆடம்பரம் தெரிஞ்சா மாதிரி இருக்கு. சுத்தமா பக்தி உணர்வே வரல"
என்றேன்.
"வாய மூடுறீங்களா"
அமைதியாக வந்தேன். என்னை கலகலப்பாக்க ஏதோ பேசினார். நானும் பிகு பண்ணாமல் பேசினேன்.
"இந்த நாயன்மார்கள் இருக்காங்க இல்ல. 63 மூணு பேர்"
"ஆமா"
"அதுல டபுள்ஸ் வருவாங்க தெரியுமா?
ஆமா ஒரே கதைல ரெண்டு நாயன்மார்கள்"
"அப்படியா "
"ஆமா அரசி சாமி பூவை எடுத்து முகர்ந்து பார்த்த உடனே ஒரு நாயனார் அவர் மூக்கை வெட்டிராரு. அவரு ஒரு நாயனார்.
அரசன் வர்றான். ஏன் வைப் மூக்கை வெட்டுனீங்க. அவுங்க கையாள பூவா எடுக்கும் போதே கைய வெட்டி இருக்க வேண்டாமான்னு சொல்றார். அவரும் ஒரு நாயனார்தான். ஒர்ரே கல்லுல ரெண்டு மாங்கா" என்றேன்.
"பாவம் அந்த குவீன்" இது மகள்.
நான் தொடர்ந்தேன் மனைவியை நோக்கி.
"இன்னொரு டபுள்ஸ் சொல்றேன் கேளு. அரசனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மகளை கொடுக்கும் போது, திருமணத்துக்கு முந்தைய நாள் சிவன் கனவில் வந்து சொல்றார் " அப்பனே உன்ர மகள் தலை முடி எனக்கு காணிக்கையா வேணும்".
உடனே அப்பா என்ன பண்றார் சர்ர்க்கு சர்ர்க்குன்னு மக தலை முடிய மொட்டை அடிச்சி முடிய சிவனுக்கு காணிக்கை வைக்கிறார். மறுநாள் மாப்பிள்ளை எப்படி மொட்டை பெண்ணை கல்யாணம் செய்துப்பார்?
ஆனால் அந்த அரசன் நிலைமை புரிந்து கொண்டு கல்யாணம் செய்து கொண்டார். இப்போ அப்பா ஒரு நாயனார் ஆகிறார். புருஷன் ஒரு நாயானார் ஆகிறார்"
"அப்ப முடிய கொடுத்த அந்த பொண்ணு" இது மனைவி.
"அப்பா மற்றும் கணவன் புகழ் தானே ஒரு பொண்ணுக்கும் புகழ்." என்றேன்.
நறுக்கென்று ஒரு கிள்ளு விழுந்தது.
நான் தொடர்ந்தேன் "கேளு ஏன் இந்த டபுள்ஸ் கதைய சொன்னேன்னா.
இப்போ 'ஓம் நம சிவாய' எழுதியே தீரணும்னு நின்ன நீயும் ஒரு 'குட்டி நாயானார்தான்'.
உனக்கு அத எழுதுறதுக்கு பேனா கொடுத்த அந்த லேடியும் ஒரு குட்டி நாயனார்தான்.
இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒரு டபுல்ஸ்தான்" என்றேன்.
மனைவி ரசித்து சிரிக்கும் போது வீட்டின் கேட் வந்து விட்டிருந்தோம்.

வட்டிக்கு கடன் வாங்கி

அடிக்கடி பழம் வாங்கும் வண்டி பழக்கடைகாரரிடம் கேட்டேன்.
"சிகப்பு கொய்யா பழத்தை இப்படி ரோஜா மாதிரி வெட்டி வெச்சி இருக்கீங்க.அது எப்படின்னே அந்த கலை உங்களுக்கு மட்டும் வருது"
"நீயும் வட்டிக்கு கடன் வாங்கி வண்டி கடை வைய்யி. ஆட்டோமட்டிகா கட்டிங் வரும்"
என்றார் அந்த லொள்ளு பிடித்தவர்

இட்லி வடகறியுடன் அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்

காலையில் மகளுக்கு இட்லியும் வடகறியும் வைத்து ஊட்டி விட்டு கொண்டிருந்தேன்.
நான் ஊட்டுவது அவளுக்கு இஷ்டம். எந்த கலவையில் ஊட்டினால் சுவையாய் இருக்குமோ அப்படி ஊட்டுவேன்.
மீன் குழம்பு சாதம் என்று எடுத்து கொண்டால் முதலில் சாதத்தை சுட சுட பிசைந்து கொள்வேன்.
அதன் மேல் குழம்பை ஊற்றி, அக்கலவையை கொஞ்சம் எடுத்து,
அதில் குழம்பில் போட்ட மீனை கொஞ்சம் பிய்த்து வைத்து,
அடுத்து பொறித்த மீனை கொஞ்சமாய் பிய்த்து வைத்து, சிறு துண்டு ஆம்லெட்டை வைத்து கொடுப்பேன்.
நான் கொடுப்பதை நம்பி வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும் என்பதுதான் என் கண்டிஷன்.
முள் இருக்காது என்பதற்கு கூட உத்திரவாதம் கொடுப்பேன்.
அப்படி கொடுத்து கொண்டிருக்கும் போது இரண்டு வாய் போனதும் தண்ணீர் குடித்தாள். அடுத்து இரண்டு வாய் போனதும் தண்ணீர குடித்தாள்.
நான் ஆரம்பித்தேன்.
"உனக்கு செம பசி. உன் முன்னாடி நிறைய இட்லி இருக்கு. ஆனா குடிக்க தண்ணி இல்லை"
"ம்ம்ம்"
"உன்னால அந்த இட்லிய சாப்பிட முடியுமா?"
கொஞ்ச நேரம் யோசித்தவள். "சாப்பிடலாம்" என்று அரைகுறையாக இழுத்தாள்.
"அது எப்படி பிள்ள முடியும். இப்ப ரெண்டு வாய் வாங்கிரதுக்குக்கே மூணு தடவ தண்ணி குடிக்கிற. உனக்கு விக்காதா?"
"ஆமா விக்கும்"
"இது மாதிரி ஒரு பையனுக்கு நடந்திருக்கு. இப்ப இல்ல 80 வருஷம் முன்னாடி"
"எப்படி"
"ஒரு பையன் அவன் அண்ணனோட சேர்ந்துகிட்டு அவன் அப்பாவ பார்க்க போனானாம்"
"ம்ம்ம்"
"அவன் அம்மா அவனுக்கு சாப்பிடுறதுக்கு நல்ல சாப்பாடு செய்து கொடுத்தாங்களாம்"
"ம்ம்ம்"
"ஆனா தண்ணி கொடுக்கலியாம். வழியில யார் கிட்டயாவது வாங்கி குடிச்சிக்கன்னு சொல்லிட்டான்ங்களாம்"
"ம்ம்ம்"
"அந்த பையனும் அவன் அண்ணனும் சரி சாப்பிடலாம்ன்னு, குடிக்க தண்ணி வேணும்ன்னு வழியில ஒரு கிராமத்துல கேட்டாங்களாம்"
"ம்ம்ம்"
"அங்க யாரும் தண்ணி கொடுக்கல."
"ஏன்"
"ஏன்னு சொல்றேன். கேளு. சாப்பிட சாப்பாடு இருக்கு. ஆனா குடிக்க தண்ணி கொடுக்க மாட்டேன்குறாங்க. அதனால சாப்பிடவே முடியாம அந்த பையனும் அண்ணனும் நைட் எல்லாம் பசியோட அப்பா கிட்ட போய் சேர்றாங்க"
"ம்ம்ம்"
"நினைச்சு பாரு சாப்பிட சாப்பாடு இருக்கு ஆனா சாப்பிட முடியல. பாவம் இல்ல"
"ஆமா. ம்ம்ம். ஏன் அவருக்கு தண்ணி கொடுக்க மாட்டேங்குறாங்க"
"சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ 'Discrimination ' ன்னு ஒரு வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சிக்கணும். 'Discrimination ' னா 'பாகுபாடு' '
"ம்ம்ம்"
"இப்ப சும்மா சொல்றேன். ஒரு கதைக்கு.உன் கிளாசுல மிஸ் வந்து பையன்களுக்கு எல்லாம் சாக்லேட் கொடுக்குறாங்க. பொண்ணுங்களுக்கு கிடையாதுன்னு சொல்றாங்க. அது என்னது"
"அதெப்படி ரெண்டு பேருக்கும் கொடுக்கணும்"
"அப்படி கொடுக்கலன்னா. அதுதான் பாகுபாடு 'Discrimination '
"ம்ம்ம்"
"இப்ப அமெரிக்காவுல அந்த காலத்துல எல்லாம் கருப்பா இருக்கிறவங்கள வெள்ளையா இருக்கிறவங்க மதிக்க மாட்டாங்க. ட்ரைன்ல கூட ஏற விட மாட்டாங்க . அதாவது வெள்ளையா இருக்கிறவன் உசத்தின்னு பாகுபாடு காட்டுனாங்க"
"ம்ம்ம்"
"அது மாதிரி இந்தியாவுல அந்த காலத்துல உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு பிரிச்சு வைச்சி. தாழ்ந்த ஜாதிகாரங்களுக்கு தண்ணி கூட குடுக்காம அவமான படுத்தினாங்க"
"அந்த பையன் அப்போ தாழ்ந்த ஜாதியா.அதனாலதான் அவனுக்கு தண்ணி கொடுக்கலியா"
"ஆமா"
"அது தப்புதானே"
"ஆமா அது பாகுபாடுதான். அத்தான் அந்த பையன் பின்னால நல்ல படிச்சு பெரிய ஆளா வந்து அப்படி பாகுபாடு தப்புன்னு தட்டி கேட்டார்."
"ம்ம்ம்"
"தட்டி கேட்டு உரிமை வாங்கி கொடுத்தாரு"
"யாரு அது"
"அது நம்ம அம்பேத்கர்தான்"
"ஹா ஹா அம்பேத்கரா. எனக்கு அவர தெரியுமே. நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்களே.நம்மவீட்ல அவர் கேலண்டர் கூட இருக்கே"
"ஆமா அதே அம்பேத்கர்தான்"
இட்லி வடகறியுடன் அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்

பலூனும் ஆட்டோ டிரைவரும்...

ஷேர் ஆட்டோவில்
பின்னால் ஏறினேன்.
பெண்கள் வருகிறார்கள் என்று என்னை முன்னால் வரச்சொன்னதில் சிறிய வருத்தம் இருந்தாலும் வேறு வழி இல்லாததால் ஆட்டோ அண்ணனின் தோளில் கை போட்டு அமர்ந்தேன்.
அண்ணன் வேறு அவசரபடுத்தினார்
"சட் சட்ன்னு ஏறுங்கம்மா சீக்கிரம் கிளம்பலாம்" என்று அதட்டினார்.
ஆட்டோ டுர் டுர் என்று கிளம்பியது. வேகமாக ஒட்டிய அண்ணன் திடீரென்று வண்டிய மெல்லமாக்கி நிறுத்துவது போல செய்தார்.
அப்படி செய்து
"பலூன் பலூன்" என்றார்.
"என்னன்னே பலூனா"
"பலூன்" என்று கண்ணை காட்டினார்.
கிழே பார்த்தால் ஒரு "பலூன் கொத்து" ரோட்டில் கிடந்தது. வெள்ளை பலூன்களும் சிகப்பு பலூன்களும் கலந்து கட்டிய பலூன் கொத்து.
"ஆமா பலூன்" என்றேன்.
"வேணுன்னா எடுத்து வீட்ல குழந்தைக்கு கொடுங்க" இது ஆட்டோ அண்ணன்.
"யண்ணே சும்மா இருங்க எனக்கு எதுக்குன்னே. உங்களுக்கு வேணுமா எடுக்கவா?"
"எனக்கு வேண்டாம். இல்ல பலூன் நல்லா இருந்துச்சி அதான் "
"போங்கண்ணே அது பக்கதுல்லேயே துப்பி போட்டுருக்காங்க நீங்க வேற"
மறுபடி ஆட்டோ அமைத்தாக போக, அவரை காய ப்படுத்தி விட்டோமோ என்று குற்ற உணர்ச்சி வந்தது.
நான் ஆரம்பித்தேன்.
"பலூன் நல்லாத்தான் இருந்துச்சி, இருந்தாலும் ரோட்ல போட்டத எப்படி எடுக்கிறது" என்று சொல்லும் போது ஆட்டோ அண்ணனின் முகத்தை கவனித்தேன்.
பலூன் என்ற வார்த்தையை கேட்கும் போது அவர் முகம் குழந்தை முகம் மாதிரி கனிகிறது.
சிரிக்கிறது.
அவருக்கு பலூன் பிடிக்கும் போல. ஒருவேளை யாரும் இல்லாத சமயமாய் வீட்டில் ஒரு பாகெட் பலூனை ஊதி கூட விளையாடுவாரோ என்ற சந்தேகம் வந்தது.
அண்ணன் பதில் சொன்னார்.
"இல்ல நல்ல இருந்த்துச்சி"
" உங்களுக்கு எத்தனை பசங்க"
" ஒரு பொண்ணு ஒரு பையன்"
"என்ன பண்றாங்க"
"பொண்ணு காலேஜ் போறா பையன் பிளஸ் ஒன்"
அப்படியானால் அவர் பலூன் என்று வியந்தது பரவசமானது எல்லாம் திட்டமிடாமல் எவ்வித சுயநலமும் இல்லாமல் தன்னிச்சையாய் நடந்திருக்கிறது.
அது பற்றி யோசிக்க இனிமையாய் இருந்தது.
உலக திரைப்பட விழா நடக்கும் போது உட்லாண்ட்ஸ் தியேட்டர் எதிரே பாதி கொய்யா பழம் மிளகாய் பொடியோடு தரையில் கிடப்பதை பார்த்தேன்.
ஆரோக்கியமான கொய்யா அது.
ஒரு வினாடி அதை எடுத்து துடைத்து சாப்பிடலாம் போல ஒரு உணர்வு வந்தது.
அதன் பின் அது பற்றி வெட்கப்பட்டேன்.
எனக்கு கொய்யா பழம்.
ஆட்டோ டிரைவருக்கு பலூன்

உணவுப் பழக்கத்தை கிண்டல் செய்யலாமா?

பதினோரு வருடங்கள் முன்பு என் சீனியர் ஒருவரை உணவு வேளையில் 'ஓன்று இரண்டு' பேர் வம்பு இழுப்பார்கள்.
மீன் முட்டை போன்றவற்றை எடுத்து அவரிடம் நீட்டி "பாஸ் சாப்பிடுங்க, சாப்பிடுறீங்களா" என்று கேட்பார்கள்.
அவர் சிரித்து கொண்டே "வேண்டாம் பாஸ்" என்பார்.
அவருக்கு அசைவம் சாப்பிடும் பழக்கம் கிடையாது என்று தெரிந்து இருந்தும் அவரை இப்படி செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதற்கு முன் நான் 5 வருடங்கள் சைவமாக இருந்திருக்கிறேன். அப்போது என்னிடம் யாராவது அப்படி பேசினால் எரிச்சலாய் இருக்கும்.
இப்படி கிண்டல் செய்து கொண்டிருபவர்களை நான் எதுவும் சொல்ல முடியாது. அவர்களும் சீனியர்கள்.
சைவவாதி ஒருநாள் பார்த்தார்.
அதுமாதிரி கிண்டல் செய்யும் போது அவர்களைப் பார்த்து
"பாசு தப்ப எடுத்துகாதீங்க. தப்பா மட்டும் எடுத்துகாதீங்க. நீங்க இப்படி கிண்டல் பண்றது மாதிரி வேற யாராவது என்ன கிண்டல் செய்தானன்னு வெச்சுக்கோங்க. செருப்ப கழட்டி அடிப்பேன்." என்றார்.
அவர் அப்படி சொல்லி முடித்ததும் நான் அவருக்கு கை கொடுத்து விட்டேன்.
எனக்கும் அவ்வளவு ஆத்திரம். இப்போதும் சினிமாவில் சைவ உணவு பழக்கம் உடையவர்களை ஒரு மாதிரி நளினமாக மைதா மாவு மாதிரி காட்டுவதை எல்லாம் எதிர்க்கவே செய்வேன்.
சைவ உணவு பழக்கம் உடையவர்கள் பலசாலி இல்லை என்ற நக்கல் மொக்கையானது. முட்டாள்தனமானது
அதிலிருந்து நாலு வருடங்கள் போன பிறகு,
நான் அமெரிக்கா சென்று இருந்தேன்.
அங்கே என் நண்பர் "ரஸ்டி பீசா" என்று ஒரு உணவை அறிமுக படுத்தினார். பெரியதாக இருக்கும் பிசா அது .
அதன் மேல் மாட்டு கறியை பக்குவம் செய்து அழகான சிறு உருண்டைகளாக்கி நிறைய தூவி இருப்பார்கள். சாப்பிட்டால் நாக்கு சுண்டி இழுக்கும்.
ஒரு பிசா வாங்கி நானும் நண்பனும் பிரித்து கொள்வோம். நான் அதில் பாதி சாப்பிட்டு விட்டு குளிர் பெட்டியில் போட்டு விடுவேன்.
மறுநாள் காலை உணவுக்கு சூடு செய்து சாப்பிடுவேன்.
இது என்னுடன் வந்த தோழிக்கு பிடிக்கவில்லை.
என்னை அழைத்து
"நாம இந்து. நாம எப்படி மாட்டு கறி சாப்பிடலாம். நீங்க சாப்பிடாதீங்க விஜய்" என்று உரிமையுடன் சொன்னார்.
எனக்கு தர்ம சங்கடமாகி விட்டது.
ஏனென்றால் அவரை எனக்கு பிடிக்கும். ஆனால் சொன்னது பிடிக்கவில்லை. அதனால் சுற்றி சுற்றி அதன் பின் நேரடியாக அது என் உணவு பழக்கம். நான் என்ன உண்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். மாட்டு கறி உண்பதில் எனக்கு தயக்கம் இருப்பதற்கு காரணம் பழக்கமில்லை என்பதால்தான். கொள்கை அளவில் அதை வரவேற்கிறேன் என்பது மாதிரி சொல்லி அனுப்பி விட்டேன்.
அன்று அண்ணன் போன் செய்து நான் கிருஷ்ணகிரியில் படிக்கும் போது சிக்கன் வாங்கி சாப்பிட காசு இருக்காது. (அப்போது எங்கள் வீட்டில் வறுமை). ஒருநாள் மாட்டு கறி வறுவல் வாங்கி சாப்பிட்டேன். எவ்வளுவு அருமையான சுவை. இதைப் போய் இதனை நாளும் தவறாக நினைத்தேனே என்றெல்லாம் யோசிச்சேன் விஜய். அதுல இருந்து இப்ப வரைக்கும் மாட்டு கறி சாப்பிட்டுதான் இருக்கேன்" என்றான்(ர்).
இப்படியாக அடுத்தவர் உணவு பழக்கத்தை மதிக்கும் வழக்கம் எனக்கு இருந்தது.
ஆனால் இந்த சைவ உணவு உண்பவர்களுக்கு உள்ள கர்வம் அலாதியானது. மிக எளிதாக அடுத்தவர் உணவு பழக்கத்தில் மூக்கை நுழைப்பார்கள்.
"உடல் நலம்" என்ற போர்வையில் வருவார்கள்.
இதில் பிறப்பால் பிறந்துவிட்ட சைவர்கள் செய்யும் "பேரன்பு" மிகவும் கொடுமையானது.
இப்போதும் கூட ஒரு பிறப்பு சைவரோடு உணவகத்துக்கு சென்றால் "எங்கே அசைவம் ஆர்டர் செய்தால் அவருக்கு தர்மசங்கடமாகிவிடுமே என்று சைவம்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவேன்.
இத்தனைக்கும் அசைவ உணவின் அழுத்தமான ஆதரவாளன் நான். அசைவ உணவை ஒரு அருவருப்பு உணவு என்றும் அது உடல் நலத்துக்கு எதிரானது என்றுமான பிரச்சாரம் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் எழுந்து கொண்டு வருகிறது.
வள்ளலார், திருவள்ளுவர் போன்றவர்களின் அரைகுறை கருத்துக்களை இதற்கு எடுத்து காட்டாக சொல்கிறார்கள்.
அன்று இ.சி.ஆர் கோவளம் சென்று மீன் வாங்கும் போது வள்ளலார் மீது கோபம் வந்தது.
அவர் ஒரு பகுதி மீனவர்களையே சைவமாக்கினாராம்.
மீன் என்பது எப்பேர்பட்ட அருமையான உணவு.அது கடவுள் கொடுத்த கொடை.
சாதரணமாக நாகர்கோவில்காரன் குருசடி மீன் சந்தையில் மீன் வாங்கி ஆறுநாளும் மீன் மட்டுமே சாப்பிடுவான். ஏழாம் நாள் மீன் வேண்டாம் என்று சொல்லி விடுவான். அன்று அவன் கருவாடு சாப்பிடுவானாம்.
இந்த அறிவெல்லாம் வள்ளலாருக்கோ வள்ளுவனுகோ இல்லாமல் போனது நம் கஷ்டம் என்று சொல்லலாம்.
பழைய கம்பனியில் ஒரு அதிகாரி உண்டு . முழுக்க முழுக்க சைவ உணவு பழக்கம் கொண்டவர்.
ஆனால் மனிதர்களின் உணர்வை துளி கூட புரிந்து கொள்ள மாட்டார். நான் தினமும் அவரிடம் காரணமே இல்லாமல் திட்டு வாங்குவேன்.
சனிக்கிழமை வேலையே இருக்காது வரசொல்லுவார். சனி மாலை வீடு திரும்பும் போது மட்டும் ஒரே ஒரு சிரிப்பு சிரிப்பார்.
ஆனால் அலுவலகத்தில் எலி மாட்டினால் அதை கொல்ல மாட்டார்.அதை தள்ளி போய் விட்டு வரசொல்லுவார்.
ஒருவேளை சைவ உணவு அருளை கொடுக்கும் என்றால் அவர் வேறு மாதிரி இருந்திருப்பார். அது கொடுக்கவில்லை.
குவைத்தில் இருக்கும் போது ஒரு பாக்கிஸ்தானி டிராப்ஸ்மான் என்னிடம் மிக அன்பாய் இருப்பான்.
ஒரு குழந்தைப் போல உற்சாகமாய் பேசுவான். தினமும் எனக்காக சான்விச்சும் ஜூசும் வாங்கி வருவான்.
அவன் எதாவது நோக்கத்துக்காக அப்படி இருந்தானா என்று பார்ப்பேன்.
இல்லை அன்பாய் இருப்பது அவனுக்கு பிடிக்கும். அதை அவன் எங்காவது கற்று கொண்டானா. இல்லை. இயல்பாகவே அவன் அன்பாகத்தான் இருக்கிறான்.
அவன் அசைவம்தான் உண்பான்.
உணவு பழக்கத்துக்கும் மனிதனின் குணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதே ஒரு செல்லு படியாகாத பேச்சு.
ஒரு தட்டு சமைத்த கீரையும், ஒரூ தட்டு மாட்டுகறியும் ஒரே மதிப்பிலான உணவு. (கருத்து அடிப்படையில் ).
அதில் ஒன்றை விட ஓன்று எப்போதும் புனிதம் கிடையாது, சுத்தம் கிடையாது.
இரண்டும் சம உணவு.
அது ஒரு உணவு.
தீண்டாமை ஒரு பாவசெயல், மனிதத்தன்மையற்ற செயல், பெருங்குற்றம் என்று பாட புத்தகத்தில் அச்சிடபடுவது போல,
அடுத்தவர் உணவு பழக்கத்தை மதிக்க வேண்டும் என்று கூட அச்சடிக்கலாம்.
ஒருவேளை அது மாற்றத்தை உருவாக்கலாம்.