அந்த பிரவுசிங் செண்டரில் ஜெராக்ஸ் கொடுத்துவிட்டு மனதிற்குள்ளாக ஒரு பொம்மையை செய்து கொண்டிருந்தேன்.
”ஒரு பிளாட் வாங்கிரனும்.எங்கயாவது வாங்கிட்டு நிம்மதியா இ.எம்.ஐ கொடுக்கிற அளவுக்கு வந்திரனும்.மீரா கல்யாணத்துக்கு நகை இருக்கே.அதோட சேத்து சம்பாதிச்சிர மாட்டோமா.கடவுள்தான் கண் வைக்கனும்.” அந்த பிரார்த்தனை பொம்மையை செய்து முடித்ததும் அதை தூக்கி ரசித்தேன்.எளிமையான பொம்மை.அழகான பொம்மை.யார் வாழ்க்கையையும் கெடுக்காத பொம்மை.எனக்கே எனக்கான பொம்மை.
ஜெராக்ஸை வாங்கி பணம் செலுத்தி திரும்பும் போது கைகளை பற்றிய மற்றொரு கைகளின் சொந்தக்காரரை நோக்கினேன்.
“சார் எனக்கு நெட்டு தெரியாது.அப்ளிக்கேசன் ஒண்ணு அர்ஜென்டா போடனும்.உதவி பண்ணுங்க”
அவனை பார்க்க பொல்லாதவன் மாதிரி தெரியவில்லை. ஆனா வயது குறைவு.இருத்திரண்டு இருக்கலாம்.கிராமத்தை கடக்காத உடையும் தலையும் அவனை நம்ப வைத்தன.
“நெட்டு தெரியாதா”
“ஆமா சார்.ஒ.என்.ஜி.சி ல ஒரு அப்ளிகேசன் ஆன்லைன்ல
போடனும்.எனக்கு இண்டர்நெட் சரியா தெரியாது.உதவி செய்ங்க”
“உன் ஐடி கார்ட காட்டு” காட்டினான்.
சரி என்று அவனை கூட்டி நெட்டில் உட்கார்ந்தேன்.
“உன் பேரு கங்காதரனா”
“ஆமா”
ஒ.என்.ஜி.சி வெப்சைட்டுக்குள் போனேன்.
வயசு. இருபது.
அப்பா பேரு.செல்வகுமார்
’ம்ம்ம்...அப்பா என்ன பண்றாரு.’
’அப்பா தவறிட்டாரு.’
’எந்த ஊரு.’
’ஆரணி பக்கத்துல தேவிகாபுரம்.’
’அப்பா இல்லாம எப்படி.’
’ஊர்ல கொஞ்சம் நிலம் உண்டு சார்.அத லீசுக்கு விட்டுருவோம்.சொந்த வீடு. குடிசைதான்.அப்படியே சமாளிச்சிருவோம்.’
ஃபார்மை நிரப்பினேன்.
’என்ன படிச்சிருக்க’
’டிப்ளமோ எலக்கிடிரிக்கல் இன்ஜினீரிங்’
’இத யாரு உனக்கு படிக்க சொல்லி சொன்னா.’
’யாருமே சொல்ல நானா படிச்சேன்.’
’ஃபீஸெல்லாம்.’
’வீட்ல நகை ஒண்ணு ரெண்டு இருந்துச்சு அதவெச்சி படிக்க வைச்சாங்க.’
ஃபார்மை நிரப்பி வந்தவன். அவனை நோக்கி திரும்பி “கங்காதரன் நல்லா பாத்துதான் இதுக்கு அப்ளை பண்றீங்களா.இதுக்கு மகாராஸ்டிராவுல உள்ளவங்க மட்டும்தான் அப்ளை பண்ண முடியும்.இதப் பாருங்க அங்க எதாவது எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிஞ்சிருக்கனுமாம்”
கங்காதரன் சோகமாகி விட்டான்.
“நான் இத ரொம்ப எதிர்பார்த்தேன் சார்”
“அட இதில்லனா வேற ஒண்ணு ஃபீல் பண்ணாத.இப்ப உனக்கு வேலை இருக்கா”
“ஏன் கேக்குறீங்க”
“சாப்பிடலாம்.எனக்கு பசிக்குது கம்பெனி கொடு”
கொஞ்சம் தயக்கத்தோடு சிரித்தான்.
“இஸ்டமிருந்தா வா.அல்லது போடே” என்றேன்.
வந்தான். ஆர்டரை கொடுத்து விட்டு.
“இப்ப என்ன வேல பாக்குற.”
“இப்ப எலக்டிரிசீயனா இருக்கேன்”
”எவ்ளோ சம்பளம்”
“ஏழாயிரம்”
“அது பத்துமா”
“பத்தாது,அது இல்லாம தனியா இன்னொருதருக்கு அஸிஸ்டண்டா போவேன்.அதுல கொஞ்சம் கிடைக்கும்”
”வீட்ல எத்தன பேரு.
அக்கா, நானு,தம்பி,தங்கச்சி”
“அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா”
“இனிமேதான் சார் பார்க்கனும்.பாத்துக்கிட்டே இருக்கோம்.அதான் கொஞ்சம் அதிகமா சம்பாதிக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்,”
“பணத்தாலத்தான் அக்கா கல்யாணம் நிக்குதா”
“அப்படி மட்டும் சொல்ல முடியாது.அக்கா கொஞ்சம் கிந்தி கிந்தி நடப்பா.கால் கொஞ்சம் வளைஞ்சிருக்கும்”
“பொம்ள பிள்ளைக்கு கஸ்டம்தான்.உனக்கு இருபதுதான ஆகுது.அக்காவுக்கும் கல்யாணத்துக்கு டைம் இருக்குல்ல.மேக்சிமம் டிரை பண்ணு”.
கங்காதரன் அசட்டு சிரிப்பு சிரித்தான். ”எனக்கும் அக்காவுக்கும் எட்டு வயசு வித்தியாசம்.அதுக்கப்புறம் அடுத்தடுத்து தம்பி தங்கச்சி.அக்காவுக்கு பொறுப்பு ஜாஸ்தி.அவதான் எல்லாத்தையும் கவனிச்சிப்பா”
“ஆமா மூத்தது பொண்ணா இருந்துட்டாலே வேலை இருக்கும்தான்.எங்க வீட்ல கூட எங்க அம்மாவுக்கு அஞ்சு தம்பி அஞ்சு தங்கச்சி.பொறுப்பு ஜாஸ்தி.இப்போ வீட்ட உங்க அக்காவும் அம்மாவும் பாத்துகிறாங்களா”
“அம்மாவுக்கு முடியாது சார்.அவங்களால பாத்துக்க முடியாது”
“ஏன் வயசானதாலையா”
“இல்ல அவுங்களுக்கு கண்ணு தெரியாது”
அமைதி.
“ம்ம்ம். என்னாச்சி கண்ணு மங்கலா தெரியுமா”
“இல்ல தங்கச்சிக்கு ரெண்டு வயசா இருக்கும் போது அப்பா குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தார்.அம்மாவ போட்டு அடிச்சார் எப்பவும் அடிக்கிறாப்ல.வலி தாங்கமுடியாம அம்மா பதிலுக்கு அடிச்சா.அப்பாவுக்கு வெறி வந்துட்டு.அம்மாவ பிடிச்சி சுவத்துல வேகமா மோதிட்டாரு.பின் தலையில்ல அதுல அடி. ரத்தமே இல்ல. ஆனா பின் பக்கம் வீங்கி போயிடுச்சி.முதல்ல தைல எண்ணய் தேச்சிட்டோம். ஆனா மறுநாள் அம்மவுக்கு வாந்தி,மயக்கம். டாக்டர்கிட்ட போனா செக்கப் பண்ணி ஸ்கேன் பண்ண சொல்லிட்டாரு”
”ஐயோ அப்புறம்”
“ஸ்கேன் பண்ணதுல ஏதோ கட்டி கட்டிடுச்சாம்.கண்ணுக்கு போற மூளை நரம்புல”
“ஆப்டிக் நெர்வஸா”
“ஆமா அதுல ஏதோ பிரச்சனையாம்.இப்போ தலையில இருக்கிற கட்டிய எடுக்காட்டி உயிர் போயிடுமாம்.அப்படி எடுத்தா அந்த நரம்பில பாதிப்பு வந்து கண்ணு தெரியாம போயிடுமாம்”
இறுக்கம் வந்தது. கங்காதரன் தொடர்ந்தான்.
“உயிரா கண்ணா அப்படின்னு ஆயீட்டது சார்.டாக்டர் உடனடியா ஆப்பிரேசன் பண்ணச்சொன்னார்.அம்மா என்னக்கொன்னுடுங்கன்னு கதறுராங்க.அவங்கள சமாதானப்படுத்தி ஆப்பிரேசன் தியேட்டருக்குள்ள அனுப்பி வெச்சோம்.வாழ்க்கையில என்னால அத மறக்கவே முடியாது.யாரோ நெஞ்ச பிடிச்சி பிசைஞ்சு பிசைஞ்சு விட்டாப்போல இருந்துச்சி”.
பலவருடம் பிறகு அதைக் கேட்ட மூன்றாம் மனிதனான எனக்கே முடியவில்லை.
பட்டுபுடவைக் கடையில் கடைக்காரன் ஒவ்வொரு புடவையாய் எடுத்து விரித்து காட்டி பிடித்ததை எடுத்துக்கொள்ளச் சொல்வதுபோல ஏன் இந்த கடவுள் வாழ்க்கையை அது மாதிரி விரித்து போட்டு “அடேய் மனுக்ஷா புடிச்சத எடுத்துக்கோ” என்ற சொல்ல மாட்டேன் என்கிறார்.
இவ்வளவு கொடூரம் ஏன் இவன் வாழ்க்கையில்.இருபது வயதில் இதையெல்லாம் சுமந்து கொண்டு எப்படி இவன் தூங்குவான்.தலை வெடிக்கும் போல் இருந்தது.
இவனுடைய பிரார்த்தனை எப்படியாக இருக்கும். அது எவ்வளவு வீரியமுள்ளதாக இருக்கும்.அவன் பிரார்த்த்னை பொம்மை பக்கத்தில் வைக்க கூட தகுதியில்லாத என்னுடைய “பிளாட் வாங்கும் பிரார்த்தனை பொம்மை” மீது ஆயாசம் வந்தது. இயலாமையின் எரிச்சல்.
“ம்ம்ம் கேக்கவே முடியல கங்கா.எப்பத்தான் சமாதானமானாங்க”
“ஒருவாரத்துல சமாதானமாயிட்டாங்க சார்.ஆனா”
“ஆனா”
“இந்த மார்கழி மாசம் வந்தது பாருங்க அந்த முதல் நாளுதான் அம்மா ஒப்பாரி மாதிரி வெச்சி வெடிச்சி வெடிச்சி அழுதாங்க.ஏன்னா அவுங்க நல்லா பெரிய பெரிய கலர் கோலமா போடுவாங்க. அது ஒண்ணுதான் அவுங்களுக்கு வாழ்க்கையில பிடிச்சதே”
சொல்லிவிட்டு கங்காதரன் வெறும் சிரிப்பை சிரித்தான்.
அழுகையையே சிரிப்பாக்கி வெளிப்படுத்தும் கலையை கடவுள்தான் கங்காதரனுக்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.