Wednesday, 28 November 2012

கதை போல் ஒன்று - 58



”இவனுக்கு மட்டும் எங்கன இருந்துல அசோகா கொட்ட கெடைக்குவு” என்றேன் நான்.

“மக்கா மத்தவன் ஏதோ பண்ணுதான் கேட்டியா.கண்டுபிடிக்காம விடமாட்டேன் என்றான் கண்ணன்.

ஏழாம வகுப்பு மாணவர்களான நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது எங்கள் கூட படிக்கும் சக மாணவனான ’கேஸியஸ்’ என்பவனின் திடீர் வளர்ச்சி பற்றி.

பள்ளியில் எப்போதுமே தெலுகு பெண்கள் மாதிரி நீண்டு உயரமாய் வளர்ந்த ‘அசோகா மரங்கள்” உண்டு.

அதன் கொட்டைகள் அரை இன்ஞ் விட்டத்தில் உருண்டையாய் உறுதியாய் பிரவுண் கலரில் இருக்கும்.

கொஞ்சம் பவர் கொடுத்து எறிந்தால், எறி வாங்குபவருக்கு வலிக்கும்.

முதலில் சாதரணமாக தொடங்கிய இந்த விளையாட்டு, எங்கள் ஸ்கூலுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய விளையாட்டாக மாறியது.

மதிய உணவு இடைவேளையின் போது எல்லோரும் அசோகா கொட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வோம்.

விளையாட்டில் விதி எல்லாம் கிடையாது.

அடுத்தவன் அம்மா என்று வலியால் கத்துவதை பார்த்து ஒரு மகிழ்ச்சி.

ஒன்றை விட்டு விட்டேன்.

ஒரே ஒரு விதி உண்டு.

எறிபவனின் அசோகா கொட்டை எறிபவனுக்கே சொந்தம்.

அதை வேறு யாரும் பொறுக்கவோ அபகரிக்கவோ கூடாது.

ஸீசன் இல்லாத காலத்தில் என்னிடமும் கண்ணனிடம் அசோகா கொட்டைகளே இருக்காது.அதற்கு காரணம் சோம்பேறித்தனம்தான்.

ஒரு ஐந்து முதல் பத்து அசோகா கொட்டைகள் இருந்தால் கூட சமாளிக்கலாம்.

ஆனால் எங்களை போன்ற பேக்குகளால் அதை கூட சம்பாதிக்க முடியாது.

அதனால் மற்றவர்களிடம் செமத்தியாக அடி வாங்குவோம்.

காதில் கொட்டைகள் சுள்ளென்று பட்டு வலிக்கும் போது அழுகையாய் வரும்.

அழமுடியாது.

அது தன்மானத்திற்கு எதிரி.

என்னை விடுங்கள்.

இந்த கண்ணன் பயலை கேஸியஸ் துரத்தி துரத்தி அசோகா கொட்டைகளால் எறிந்து துன்புறுத்தும்போது பசித்த புலி புள்ளி மானை வேட்டையாடுவது போன்றே இருக்கும்.

கேஸியஸ் மிககொடுரமாக கொட்டைகளால் தாக்குவான்.

அதில் அவனுக்கு இரக்கமே கிடையாது.

கேஸியஸ், ஞாயிற்றுகிழமைகளில் அவன் பாவங்களை எல்லாம் கர்த்தரிடமும் சமர்ப்பித்து விடும் தன்னம்பிக்கையில் மேலும் மேலும் எல்லாரையும் துன்புறுத்துவது போல் தோண்றும்.

கண்ணனும் கேஸியஸிடம் அடிவாங்குவதை ரசிக்கிறானோ என்றும் தோண்றும்.

இரண்டு பேரும் சேர்ந்து என்னை பைத்தியக்காரன் ஆக்குவதாக கூடத்தோண்றும்.

ஆனால் விளையாட்டு முடிந்து அடுத்த நிமிடமே கண்ணன், நான் அவனை பற்றி எண்ணியது தப்பு என்று நிருபித்து விடுவான்.

“அடுத்த தடவ அவன் குன்னய  வெட்டாம வுடமாட்டேன்ல. கேஸியஸுக்கு என் அப்பாக்கிட்ட சொல்லி செய்வினை வைக்கிறேனா இல்லையா பாரு” என்று கத்துவான்.

”மொதல்ல கேஸியஸ்ஸுக்கு எப்படி இவ்வளவு அசோகா கொட்ட கிடைக்குவுன்னு பார்க்கனும்ல” என்பேன்.

“அத நா பார்த்துகிடுறேம் டே. அப்பா கிட்ட சொன்ன மை போட்டு சொல்லிருவாவ” என்று சொல்லி சாயங்காலம் ஹாக்கி விளையாட போயிருவான்.

எனக்கு எந்த விளையாட்டும் பிடிக்காததால் வீட்டுக்கு போய்விடுவேன்.

தூங்கும் போது சந்தேகமாக இருக்கும். யாரு கேஸியஸுக்கு அசோகா கொட்ட சப்ளை பண்றது.

தூக்கமே வராது.

கண்டிப்பா கேஸியஸ் பொறுக்க மாட்டான்.

அவன் பணக்காரன்.

அப்பா குவைத்துல இருந்து லட்சம் லட்சமா சம்பாதிச்சு அனுப்புறார்.

கேஸியஸ் போடுற சட்ட பேண்டு க்ஷீவே ரொம்ப வெல இருக்கும்.

இண்டர்வலுக்கு பிஸ்கட்டும் குக்கீஸும் கொண்டு வந்து சாப்புடுற ஒரே பையன் கேஸியஸ்தான்.

அவன் குனிஞ்சு நிமிந்து அசோகா கொட்ட பொறுக்க மாட்டான்.

அப்ப யாரு.

அப்படி பொறுக்குனாலும் கேஸியஸுக்கு ஏன் கொடுக்கிறார்கள்.

கேஸியஸ் வீட்டில் பண விசயத்தில் ரொம்ப கண்டிப்பு.

நான் கொண்டு வரும் பாக்கெட் மணி கூட கேஸியஸ் கொண்டு வர மாட்டான்.

கணவன் உயிரை கொடுத்து சம்ப்பாதித்து அனுப்பும் காசை உயிரை கொடுத்து சிக்கனமாக செலவழித்து உலகத்திற்கு தான் ஒரு நல்ல குடும்ப பெண் என்று சொல்வதில் கேஸியஸின் அம்மாவுக்கு ஆர்வம் அதிகம்.

யார் கொடுக்கிறார்கள் அசோகா கொட்டையை?

எதற்கு கொடுக்கிறார்கள் அசோகா கொட்டையை?

கண்ணன் தினமும் அடி வாங்கும் போது அதை காணவே காத்து கிடக்கும் கோஸ்டிகளில் ஒருவனோ பலபேரோ கொட்டையை சப்ளை செய்யலாம்.

ஒருவேளை ஒருவேளை கண்ணனே கூட அசோகா கொட்டைகளை சப்ளை செய்யலாம்.பளீரென்று தோண்றியது.

மறுநாள் கண்ணனிடம் போய் சந்தேகத்தை சொல்ல, என்னை வெறித்து பார்த்து கொண்டே இருந்தான்.

“என் குலதெய்வம் முத்துகுட்டி மேல சத்தியமா நான் அப்படி செய்யல மக்கா.
உங்கூடவே இருக்கிற என்ன இப்படி சந்தேக பட்டுட்டியடே.”

சட்டென்று தன் கன்னத்தில் அடித்து அழுது கொண்டே,

“கேஸியஸுக்கு அசோகா கொட்டை சப்ளை பண்றவன் “ யாருன்னு கண்டுபிடிச்சிட்டு நான் உங்கூட பேசுறேண்ல.

அதுவரைக்கும் பேசமாட்டேன்” என்று அழுத்தமாக சொல்லியபடி போனான்.

அதன் பின் என்னுடன் பேசவே இல்லை.

நான் எதிரே வந்தால் அப்படி போய்விடுவான்.

எனக்கோ குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை.

நல்ல நண்பனை இழந்த துக்கம் அனுபவித்தாலே தெரியும்.

நாம் ஒன்றாய் சேர்ந்து என்னவெல்லாம் செய்திருக்கிறோம் கண்ணா!

கார்த்திகைக்கு, ஒன்றாய் சைக்கிள் டயர் கொளுத்தி குத்து செடிகளில் தூங்கி கொண்டிருக்கு தட்டான் பூச்சிகளை ஆர்வமாய் எரிப்போமே!

சுவரில் ஒன்றுகடிக்கும் போது யார் உயரமாய் அடிப்பது என்று போட்டி போட்டு உயர்த்தி அடிப்போமே!

”தந்தானே துதிப்போமே” என்று நீ சொல்ல, “தூக்கி போட்டு மிதிப்போமே” என்று நான் பாட ஃபாதர் ரூமை கடக்கும் போது கள்ளக்குரலில் பாடி சிரித்து, அன்று மதியமே சர்ச்சில் ஜீசஸிடம் மன்னிப்பும் கேட்போமே!

“நீ அடிக்கடி சொல்லும் பாக்யராஜின் ”இன்று போய் நாளைவா கதையை” இனிமேல் யார் எனக்கு சொல்வார்கள்”

அழுகையாய் வந்தது.

தினமும் ”வேட்டாளி அம்மன் “ கோவிலுக்கு போய் கண்ணன் எனக்கு மறுபடியும் ஃபிரண்டாய் ஆக வேண்டும் என்று வேண்டிகொள்வேன்.

அமுதன் வேறு அன்று பி.ஈ.டி பீரியடில் வந்து “கேஸியஸுக்கு அசோகா கொட்டை சப்ளை பண்ணுறது ஒரு ஒன்பதாம் கிளாஸ் படிக்கிற அண்ணன்.
நீ கண்ணன சந்தேக பட்டுட்டியடே” என்று என்னை கதற வைத்தான்.

கண்ணனை நோக்கி ஒடினேன்.

பலதடவை மன்னிப்பு கேட்டேன்.

கண்ணன் சட்டை செய்யவே இல்லை. எப்படி மன்னிப்பான்.

ஒரு பெண்ணை பார்த்து நீ கெட்டவளா? என்று கேட்டால். கெட்டவளா என்று கேள்விதானே கேட்டேன். கெட்டவள் என்றாள் கெட்டவள் என்று சொல்லு.
இல்லை என்றால் இல்லை என்று சொல்லு என்று தர்க்கம் செய்த்தால் எரிச்சலாக மாட்டாளா?

கண்ணனுக்கு மனது உண்டுதானே.

உணர்வு உண்டுதானே.

எப்படி பேசுவான்.

அடுத்த பீரியட் சயின்ஸ் பீரியட்.

சயின்ஸ் வாத்தியார் ”சுப்பையா சார்” பாடம் எடுக்க தொடங்குகையில் வாசலில் வகுப்பு சம்பந்தமே இல்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

சுப்பையா வாத்தியாரிடம் தான் கேஸியஸின் அப்பா என்று அறிமுகப்படுத்தி கொண்டு ஒரு பிரசச்னையை சொன்னார்.

தன் வீட்டில் உள்ள அதிக விலையுள்ள ’டிஜிட்டல் டைரி’ ஒன்றை காணவில்லை என்றும்.அதை கேஸியஸ் தன் பையில் எடுத்து வந்து ஸ்கூலில் தொலைத்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாய் சொன்னார்.

யாராவது எடுத்திருந்தால் அதை கொடுத்துவிடும் படி சொன்னார்.

சுப்பையா சார் நிலைமையை புரிந்து கொண்டு கேஸியஸை வாரி இழுத்தார்.

பிரம்பால் ஒங்கி அடித்தார்.

எல்லோரும் பயந்து நின்றோம்.

கேஸியஸ் பயந்து அலறினான்.

அவனுடைய கம்பீரம் முற்றிலுமாக போய்விட்டிருந்தது.

“எந்த மடப்பயலாவது அசோகா கொட்டைக்கு டிஜிட்டல் டைரிய குடுப்பானால” சார் கத்தினார்.

குனிந்து அழுதபடியே சுப்பையா சாரின் காதில் ஏதோ சொன்னான்.

சுப்பையா சார் அதை கேட்டு சட்டென்று கண்ணன் பக்கத்தில் போய் அவன் பையை இழுத்தார்.

உதறி கொட்டினார்.

உள்ளே இருந்து பல நூறு அசோகா கொட்டைகளும் ஒரு அழகான டிஜிட்டல் டைரியும் வெளிய விழுந்தன.

இனம் புரியாத மகிழ்ச்சி மனதை அடைத்த நிலையில் ,அன்று மாலை வேட்டாளி அம்மன் கோவிலில் நெடுநேரம் சாமி கும்பிட்டு நிம்மதியாய் தூங்கப்போனேன்.

No comments:

Post a Comment