Sunday, 4 November 2012

கல்வியா? செல்வமா? வீரமா?

கல்வியா? செல்வமா? வீரமா? என்று முப்பெரும் தேவியர்கள் தங்கள் “சோதனை எலி”களான மானுடர்களை வைத்து போட்டி போடுவார்கள்.

அதை ஏ.பி நாகராஜன் பக்கத்தில் இருந்து பார்த்தா மாதிரியே நமக்கு படமும் எடுத்து காட்டியிருப்பார்.

அது மாதிரி சரஸ்வதி தேவிக்கும் லட்சுமி தேவிக்கும் சண்டை வந்ததாம்.

அதை எங்கள் வீட்டில் நிகழ்த்தி பார்க்கும் விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது.

”சரஸ்வது பூஜை” முந்தினநாள் எங்கள் பலசரக்கு கடையில் வியாபாரம் அமோகமாய் நடக்கும்.

நிற்கவே நேரம் இருக்காது.

நாகர்கோவில் மக்கள் எந்தளவு பகுத்தறிவையும் கம்யூனிசத்தையும் போற்றுகிறார்களோ அதே அளவு
இந்து மத அதீதிகளாகும் இருப்பார்கள்.

டிப்பிக்கல் கேரளா கலவை அல்லவா? (கம்யூனிஸ்ட்டும் ஆர்.எஸ்.எஸ்யும் பக்கத்து பக்கத்து சீட்டில் இருப்பார்கள்).

பூஜை சாமான்களான சந்தனம் குங்குமம் ,கொட்டைபாக்கு, கற்கண்டு ,விபூதி ,சீனி ,சாம்பிராணி ,அவல், பொரி, சர்க்கரை என்று வியாபாரம் தூள் பறக்கும்.

நாங்கள் நால்வரும் கடைக்கு போய்விடுவோம். 

எனக்கு சரியாக பார்சல் கட்ட வராது என்பதால் கல்லாவில் உட்கார வைத்து விடுவார்கள்.( அதிலும் இந்த முட்டை கட்டும் போது ஒரு நடுக்கம் வருமே. சாமி! எதிரிக்கு கூட அந்த பயம் வரக்கூடாது).

அப்பா அண்ணன்கள் கடைபையன்கள் சுறுசுறுப்பாய் இருப்பார்கள். தம்பிக்கு எடுபிடி வேலை.(ரொம்ப சின்ன பையன் அப்போ).

சரஸ்வதி பூஜைக்கு மூன்று நாளைக்கு முன்னாலே அண்ணன் என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தான்.

வியாபாரத்துக்கு சின்ன சின்ன பொட்டலம் போட சிறிய நோட சைஸ் பேப்பர் நிறைய தேவைப்படும். 

அதற்காக என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தை கேட்டான். 

அந்த புத்தகத்தின் பெயர் “பண்டைய கிரீஸின் வரலாறு” தடியான பழைய புத்தகம். 

என் அத்தை பி.ஏ வரலாறு படித்தார். அவருடைய புத்தகம். 

அத்தைக்கு கல்யாணம் ஆனதாலும், அவர் குடும்பம் நடத்த “பண்டைய கிரீஸின் வரலாறு” தேவைஇல்லாததாலும் அதை எங்கள் வீட்டில் விட்டு போய்விட்டார்.

இந்த சம்பவம் நடக்கும் போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.

அண்ணன் கேட்டதும் அதிர்ச்சியாய் இருந்தது. 

இவன் ஏன் இப்படி கேட்கிறான் ?( கவனியுங்கள் இதை அண்ணன் மூலமாக லட்சுமி தேவிதான் கேட்கிறார்).

என்னால் அந்த வயதில் “பண்டைய கிரீஸின் வரலாறு” புத்த்கத்தை படிக்க முடியாவிட்டாலும், பிற்காலத்தில் அதை படிப்பேன் என்ற ஆர்வத்தில் அதை வைத்திருத்ந்தேன்.

ஆனால் இப்போ அண்ணன் கேட்கிறான்.

“யல அந்த புக்க போய் கேக்குறியே. போல நாய ! அத நா தரமாட்டேன்”

“நினைச்சு பாருல, சரஸ்வதி பூஜைக்கு எப்படி யாவாரம் நடக்கும். அதுக்கு இது மாதிரி சின்ன பேப்பர் இருந்தா வசதியா இருக்கும்ல்ல” இது அண்ணன்.

“இல்லல ஃப்ளீஸ். அத மட்டும் கேட்க்காத. அது நல்ல புக்கு அத தரமாட்டேன்”

அண்ணன் ஒரு முடிவு செய்து விட்டால் நம்மை கன்வின்ஸ் செய்யாமல் இருக்க மாட்டான்.

“இத பாரு விஜய். நாமெல்லாம் யாவாரம் செய்றவங்க.இது மாதிரி சமயத்துல யாவாரத்த தவிர எதையும் நினைக்க கூடாது.அப்பா நமக்காகத்தான கஸ்டபடுறாங்க.காலம்புற ஆறு மணிக்கு போய்ட்டு, நைட்டு பண்ணிரண்டு மணிக்கு வராங்க” என்று பெரிய லெக்சர் கொடுத்தான்.

எனக்கு வேறு வழியே இல்லை. அரை மனதோடு சம்மதித்தேன்.

மறுநாள் கடையில் “பண்டைய கிரீஸின் வரலாறின்” ஒவ்வொரு பக்கமும் கிழிக்கபட்டு குங்குமம் இன்ன பிற பொருட்கள் மடித்து ஒவ்வொருத்தர் வீட்டுக்கு போனது.

பார்க்க கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. 
அப்புறம் சரியாகி விட்டது.

இந்த ஆடு கோழிகளை வெட்டுவதை கண்ணால் பார்த்தால் கஸ்ட்மாய் இருக்கும். அப்புறம் பிரியாணியாய் பார்த்தால் நாக்கில் நீர் ஊறுவது போல.

முடிவில் லட்சுமி தேவி சரஸ்வதி தேவியை ஜெயித்துதான் விட்டாள் அந்த சம்பவத்தின் போது.

அது சரி, எனக்கு ஒரு சந்தேகம்.

நாமெல்லோரும் ஏன் படிக்கிறோம்.

ஏன் சரஸ்வதி தேவியை பூஜிக்கிறோம்.

சரஸ்வதி தேவியை பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதால்தானே.

எப்படியாவது என்ஜினியரிங் முடித்து, வேலை பார்த்து சம்பாதித்து, அமெரிக்கா சென்று புது கார் வாங்கி , அதை படம் பிடித்து பேஸ் புக்கில் போடத்தானே படிக்கிறோம். 

ஞானத்திற்காகவா செய்கிறோம்.

வாழ்க்கையில் ஒரு பாடத்தை அனுபவித்து படித்து இருக்கோமா? 

ஒரு சயின்ஸ் டெபனிசனை புரிந்து கொண்டிருக்கோமா?

The rate of change velocity is acceleration. வாங்கு ரெண்டு மார்க்கு.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” 
வாங்கு ரெண்டு மார்க்கு.

பி.ஏ பிலாஸபி படிப்பவனுக்கு ரஸலைவிட நீட்க்ஷேயை விட நல்ல பிலாஸிப்பக்கள் தோண்றியிருக்கலாம். ஆனால் அதை சொல்ல முடியாதல்லவா? 

ரஸ்லையும் ஹெக்கலை மட்டும் எழுது. புதிதாய் எதுவும் செய்யாதே.

ராமர் பிள்ளைக்கு கெமிஸ்டிரி தெரியாததால் ஐ.ஐ.டி கணவான்கள் அவமானபடுத்தியதும் நினைவுக்கு வருகிறது.

ஆக லட்சுமி தேவிதான் முப்பெரும் தேவியர்களுள் நம்பர் ஒன்.

அவரை அடைய வழி செய்து கொடுப்பதுதான் மற்ற இரு தேவியருக்கான பணி.

பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்தேன். 

குடும்பமே என்னை தூக்கி வைத்து கொண்டாடியது.

பத்தாம் வகுப்பு லீவில் சு.சமுத்திரத்தின்” வாடா மல்லி” நாவல் படித்து கொண்டிருந்தேன்.

என் மாமா கேட்டார் அந்த புத்தகம் பற்றி.
“இது திருநங்கைகளோட வாழ்வு பத்தின நாவல் மாமா “ என்றேன்.

பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுக்கவில்லை. குறைவாகவே எடுத்திருந்தேன். 

குடும்பத்தில் எல்லோரும் திட்டினார்கள்.

அவன் கண்ட புத்தகத்தையும் படிக்கிறான் என்பதையும் சொன்னார்கள்.

மாமாவும் சேர்ந்து கொண்டார் “அவன் திருநங்கைகளை பத்தியெல்லாம படிச்சா எப்படி முன்னேறுவான்.
மனசு கெட்டுத்தான் போகும்” என்றார். 

சடாரென்று கோபம் வந்தது. அடக்கி கொண்டேன்.

”வாடா மல்லி “ நாவலை எழுதிய சு.சமுத்திரத்திடம் மன்னிப்பு கேட்டேன் ,அந்த டென்சனிலும். 

இப்படியாக “வெள்ளைதாமரை பூவிலிருப்பவள்” இந்தியாவில் போற்றப்படுகிறாள்.

No comments:

Post a Comment