Wednesday, 28 November 2012

கதை போல் ஒன்று - 58



”இவனுக்கு மட்டும் எங்கன இருந்துல அசோகா கொட்ட கெடைக்குவு” என்றேன் நான்.

“மக்கா மத்தவன் ஏதோ பண்ணுதான் கேட்டியா.கண்டுபிடிக்காம விடமாட்டேன் என்றான் கண்ணன்.

ஏழாம வகுப்பு மாணவர்களான நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது எங்கள் கூட படிக்கும் சக மாணவனான ’கேஸியஸ்’ என்பவனின் திடீர் வளர்ச்சி பற்றி.

பள்ளியில் எப்போதுமே தெலுகு பெண்கள் மாதிரி நீண்டு உயரமாய் வளர்ந்த ‘அசோகா மரங்கள்” உண்டு.

அதன் கொட்டைகள் அரை இன்ஞ் விட்டத்தில் உருண்டையாய் உறுதியாய் பிரவுண் கலரில் இருக்கும்.

கொஞ்சம் பவர் கொடுத்து எறிந்தால், எறி வாங்குபவருக்கு வலிக்கும்.

முதலில் சாதரணமாக தொடங்கிய இந்த விளையாட்டு, எங்கள் ஸ்கூலுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய விளையாட்டாக மாறியது.

மதிய உணவு இடைவேளையின் போது எல்லோரும் அசோகா கொட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வோம்.

விளையாட்டில் விதி எல்லாம் கிடையாது.

அடுத்தவன் அம்மா என்று வலியால் கத்துவதை பார்த்து ஒரு மகிழ்ச்சி.

ஒன்றை விட்டு விட்டேன்.

ஒரே ஒரு விதி உண்டு.

எறிபவனின் அசோகா கொட்டை எறிபவனுக்கே சொந்தம்.

அதை வேறு யாரும் பொறுக்கவோ அபகரிக்கவோ கூடாது.

ஸீசன் இல்லாத காலத்தில் என்னிடமும் கண்ணனிடம் அசோகா கொட்டைகளே இருக்காது.அதற்கு காரணம் சோம்பேறித்தனம்தான்.

ஒரு ஐந்து முதல் பத்து அசோகா கொட்டைகள் இருந்தால் கூட சமாளிக்கலாம்.

ஆனால் எங்களை போன்ற பேக்குகளால் அதை கூட சம்பாதிக்க முடியாது.

அதனால் மற்றவர்களிடம் செமத்தியாக அடி வாங்குவோம்.

காதில் கொட்டைகள் சுள்ளென்று பட்டு வலிக்கும் போது அழுகையாய் வரும்.

அழமுடியாது.

அது தன்மானத்திற்கு எதிரி.

என்னை விடுங்கள்.

இந்த கண்ணன் பயலை கேஸியஸ் துரத்தி துரத்தி அசோகா கொட்டைகளால் எறிந்து துன்புறுத்தும்போது பசித்த புலி புள்ளி மானை வேட்டையாடுவது போன்றே இருக்கும்.

கேஸியஸ் மிககொடுரமாக கொட்டைகளால் தாக்குவான்.

அதில் அவனுக்கு இரக்கமே கிடையாது.

கேஸியஸ், ஞாயிற்றுகிழமைகளில் அவன் பாவங்களை எல்லாம் கர்த்தரிடமும் சமர்ப்பித்து விடும் தன்னம்பிக்கையில் மேலும் மேலும் எல்லாரையும் துன்புறுத்துவது போல் தோண்றும்.

கண்ணனும் கேஸியஸிடம் அடிவாங்குவதை ரசிக்கிறானோ என்றும் தோண்றும்.

இரண்டு பேரும் சேர்ந்து என்னை பைத்தியக்காரன் ஆக்குவதாக கூடத்தோண்றும்.

ஆனால் விளையாட்டு முடிந்து அடுத்த நிமிடமே கண்ணன், நான் அவனை பற்றி எண்ணியது தப்பு என்று நிருபித்து விடுவான்.

“அடுத்த தடவ அவன் குன்னய  வெட்டாம வுடமாட்டேன்ல. கேஸியஸுக்கு என் அப்பாக்கிட்ட சொல்லி செய்வினை வைக்கிறேனா இல்லையா பாரு” என்று கத்துவான்.

”மொதல்ல கேஸியஸ்ஸுக்கு எப்படி இவ்வளவு அசோகா கொட்ட கிடைக்குவுன்னு பார்க்கனும்ல” என்பேன்.

“அத நா பார்த்துகிடுறேம் டே. அப்பா கிட்ட சொன்ன மை போட்டு சொல்லிருவாவ” என்று சொல்லி சாயங்காலம் ஹாக்கி விளையாட போயிருவான்.

எனக்கு எந்த விளையாட்டும் பிடிக்காததால் வீட்டுக்கு போய்விடுவேன்.

தூங்கும் போது சந்தேகமாக இருக்கும். யாரு கேஸியஸுக்கு அசோகா கொட்ட சப்ளை பண்றது.

தூக்கமே வராது.

கண்டிப்பா கேஸியஸ் பொறுக்க மாட்டான்.

அவன் பணக்காரன்.

அப்பா குவைத்துல இருந்து லட்சம் லட்சமா சம்பாதிச்சு அனுப்புறார்.

கேஸியஸ் போடுற சட்ட பேண்டு க்ஷீவே ரொம்ப வெல இருக்கும்.

இண்டர்வலுக்கு பிஸ்கட்டும் குக்கீஸும் கொண்டு வந்து சாப்புடுற ஒரே பையன் கேஸியஸ்தான்.

அவன் குனிஞ்சு நிமிந்து அசோகா கொட்ட பொறுக்க மாட்டான்.

அப்ப யாரு.

அப்படி பொறுக்குனாலும் கேஸியஸுக்கு ஏன் கொடுக்கிறார்கள்.

கேஸியஸ் வீட்டில் பண விசயத்தில் ரொம்ப கண்டிப்பு.

நான் கொண்டு வரும் பாக்கெட் மணி கூட கேஸியஸ் கொண்டு வர மாட்டான்.

கணவன் உயிரை கொடுத்து சம்ப்பாதித்து அனுப்பும் காசை உயிரை கொடுத்து சிக்கனமாக செலவழித்து உலகத்திற்கு தான் ஒரு நல்ல குடும்ப பெண் என்று சொல்வதில் கேஸியஸின் அம்மாவுக்கு ஆர்வம் அதிகம்.

யார் கொடுக்கிறார்கள் அசோகா கொட்டையை?

எதற்கு கொடுக்கிறார்கள் அசோகா கொட்டையை?

கண்ணன் தினமும் அடி வாங்கும் போது அதை காணவே காத்து கிடக்கும் கோஸ்டிகளில் ஒருவனோ பலபேரோ கொட்டையை சப்ளை செய்யலாம்.

ஒருவேளை ஒருவேளை கண்ணனே கூட அசோகா கொட்டைகளை சப்ளை செய்யலாம்.பளீரென்று தோண்றியது.

மறுநாள் கண்ணனிடம் போய் சந்தேகத்தை சொல்ல, என்னை வெறித்து பார்த்து கொண்டே இருந்தான்.

“என் குலதெய்வம் முத்துகுட்டி மேல சத்தியமா நான் அப்படி செய்யல மக்கா.
உங்கூடவே இருக்கிற என்ன இப்படி சந்தேக பட்டுட்டியடே.”

சட்டென்று தன் கன்னத்தில் அடித்து அழுது கொண்டே,

“கேஸியஸுக்கு அசோகா கொட்டை சப்ளை பண்றவன் “ யாருன்னு கண்டுபிடிச்சிட்டு நான் உங்கூட பேசுறேண்ல.

அதுவரைக்கும் பேசமாட்டேன்” என்று அழுத்தமாக சொல்லியபடி போனான்.

அதன் பின் என்னுடன் பேசவே இல்லை.

நான் எதிரே வந்தால் அப்படி போய்விடுவான்.

எனக்கோ குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை.

நல்ல நண்பனை இழந்த துக்கம் அனுபவித்தாலே தெரியும்.

நாம் ஒன்றாய் சேர்ந்து என்னவெல்லாம் செய்திருக்கிறோம் கண்ணா!

கார்த்திகைக்கு, ஒன்றாய் சைக்கிள் டயர் கொளுத்தி குத்து செடிகளில் தூங்கி கொண்டிருக்கு தட்டான் பூச்சிகளை ஆர்வமாய் எரிப்போமே!

சுவரில் ஒன்றுகடிக்கும் போது யார் உயரமாய் அடிப்பது என்று போட்டி போட்டு உயர்த்தி அடிப்போமே!

”தந்தானே துதிப்போமே” என்று நீ சொல்ல, “தூக்கி போட்டு மிதிப்போமே” என்று நான் பாட ஃபாதர் ரூமை கடக்கும் போது கள்ளக்குரலில் பாடி சிரித்து, அன்று மதியமே சர்ச்சில் ஜீசஸிடம் மன்னிப்பும் கேட்போமே!

“நீ அடிக்கடி சொல்லும் பாக்யராஜின் ”இன்று போய் நாளைவா கதையை” இனிமேல் யார் எனக்கு சொல்வார்கள்”

அழுகையாய் வந்தது.

தினமும் ”வேட்டாளி அம்மன் “ கோவிலுக்கு போய் கண்ணன் எனக்கு மறுபடியும் ஃபிரண்டாய் ஆக வேண்டும் என்று வேண்டிகொள்வேன்.

அமுதன் வேறு அன்று பி.ஈ.டி பீரியடில் வந்து “கேஸியஸுக்கு அசோகா கொட்டை சப்ளை பண்ணுறது ஒரு ஒன்பதாம் கிளாஸ் படிக்கிற அண்ணன்.
நீ கண்ணன சந்தேக பட்டுட்டியடே” என்று என்னை கதற வைத்தான்.

கண்ணனை நோக்கி ஒடினேன்.

பலதடவை மன்னிப்பு கேட்டேன்.

கண்ணன் சட்டை செய்யவே இல்லை. எப்படி மன்னிப்பான்.

ஒரு பெண்ணை பார்த்து நீ கெட்டவளா? என்று கேட்டால். கெட்டவளா என்று கேள்விதானே கேட்டேன். கெட்டவள் என்றாள் கெட்டவள் என்று சொல்லு.
இல்லை என்றால் இல்லை என்று சொல்லு என்று தர்க்கம் செய்த்தால் எரிச்சலாக மாட்டாளா?

கண்ணனுக்கு மனது உண்டுதானே.

உணர்வு உண்டுதானே.

எப்படி பேசுவான்.

அடுத்த பீரியட் சயின்ஸ் பீரியட்.

சயின்ஸ் வாத்தியார் ”சுப்பையா சார்” பாடம் எடுக்க தொடங்குகையில் வாசலில் வகுப்பு சம்பந்தமே இல்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

சுப்பையா வாத்தியாரிடம் தான் கேஸியஸின் அப்பா என்று அறிமுகப்படுத்தி கொண்டு ஒரு பிரசச்னையை சொன்னார்.

தன் வீட்டில் உள்ள அதிக விலையுள்ள ’டிஜிட்டல் டைரி’ ஒன்றை காணவில்லை என்றும்.அதை கேஸியஸ் தன் பையில் எடுத்து வந்து ஸ்கூலில் தொலைத்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாய் சொன்னார்.

யாராவது எடுத்திருந்தால் அதை கொடுத்துவிடும் படி சொன்னார்.

சுப்பையா சார் நிலைமையை புரிந்து கொண்டு கேஸியஸை வாரி இழுத்தார்.

பிரம்பால் ஒங்கி அடித்தார்.

எல்லோரும் பயந்து நின்றோம்.

கேஸியஸ் பயந்து அலறினான்.

அவனுடைய கம்பீரம் முற்றிலுமாக போய்விட்டிருந்தது.

“எந்த மடப்பயலாவது அசோகா கொட்டைக்கு டிஜிட்டல் டைரிய குடுப்பானால” சார் கத்தினார்.

குனிந்து அழுதபடியே சுப்பையா சாரின் காதில் ஏதோ சொன்னான்.

சுப்பையா சார் அதை கேட்டு சட்டென்று கண்ணன் பக்கத்தில் போய் அவன் பையை இழுத்தார்.

உதறி கொட்டினார்.

உள்ளே இருந்து பல நூறு அசோகா கொட்டைகளும் ஒரு அழகான டிஜிட்டல் டைரியும் வெளிய விழுந்தன.

இனம் புரியாத மகிழ்ச்சி மனதை அடைத்த நிலையில் ,அன்று மாலை வேட்டாளி அம்மன் கோவிலில் நெடுநேரம் சாமி கும்பிட்டு நிம்மதியாய் தூங்கப்போனேன்.

கதை போல ஒன்று - 57

”விஜய் சீனியர்கிட்ட பேசும் போது இனிமே மரியாதையா பேசுங்க. அதுவும் லேடீஸ்கிட்ட பேசும்போது கொஞ்சம் டீசண்சி மெயிண்டயின் பண்ணுங்க”

”மேடம் என்ன சொல்றீங்க. புரியல.”

”இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க”

கோவம் வந்தது.

“சும்மா மொட்டையா சொல்லிட்டு இனிமே கேக்காதீங்கன்னா. நான் என்ன லூசா. கரெக்டா உங்க பிரச்சனை என்ன? அத சொல்லுங்க.”

மவுனம்.

எரிச்சலாய் வந்தது.

காவ்யா மேடம்தான் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே என்னுடைய ”மெண்டார்”.

அவர் பிராஜக்ட்டில் நான் டிசைனர்.

வயது முப்பது இருக்கும்.

முகலட்சணம் என்றால் ஆழமான திருத்தமான முகம்.

பார்த்து கொண்டே இருக்கலாம்.

என்னை விட வயது கம்மியாய் இருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொண்டிருப்பேன்.

சின்ன சின்ன விசயத்தையும் அன்பாக சொல்லித்தருவார்.

திட்டினதோ அவமானபடுத்தியதோ இல்லை.குரல் உயர்த்தி பேசமாட்டார்.

வேலை நேரத்தில் வேலைதான்.

ஐந்து மணிக்கு மேல் செம அரட்டை அடிப்பார்.

எளிய ஜோக்குகளுக்கு கூட கண்கள் பனிக்க சிரிப்பார்.

அவர் சிரிப்பதற்காகவே வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நிறைய மசாலா சேர்த்து சொல்வேன்.

சொன்னதும் வெடித்து வாய் பொத்தி சிரிப்பார்.வலது கையை உதறி உதறி சிரிப்பார்.

எனக்கும் காவ்யா மேடத்துக்கும் இடையே எந்த பிரச்சனையுமே வராத அன்பு உருவாகி இருந்தது என்று தீர்க்கமாய் நம்பி கொண்டிருந்த போது இப்படி ஒரு முகவெட்டை அவர் காட்டியதும் நொந்து போனேன்.

“என்னதான் நடந்தது மேடம்.ஃபிளீஸ் சொல்லுங்க” கெஞ்சினேன்.

“போன வெள்ளிகிழமை லன்சுல நீங்க என்ன சொன்னீங்க”

நான் நெடுநேரம் யோசித்து கண்டுபிடித்து விட்டேன்.

“மெட்டிஒலி நாடகத்துல வர டைடில் சாங் மட்டும்தான் பார்ப்பேன் அப்படின்னு சொன்னேன். அதுக்கு நீங்க கூட சிரிச்சீங்களே”

“அத நீங்க எந்த அர்த்தத்தில சொன்னீங்க”

“அதுல மூணு பொண்ணுங்க கிளாமரா ஆடுவாங்க. அந்த அர்த்தத்தில சொன்னேன்”

“கரெக்ட் நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்லும் போது அவரும் இதைத்தான் சொல்லி, ஏன் ஜெண்ட்ஸ்கிட்ட இப்படி பேசுறேன்னு என்ன ரொம்ப திட்டிட்டார்”

தாங்க முடியாத அவமானத்தால் எழுந்த கோவம் ஆடியது என்னுள்.

சுயபிரக்ஞை இழந்தேன்.

“நீங்க அரைவெட்டா. வெள்ளிகிழமை நான் அத சொன்னதும் சிரிச்சீங்க. அப்புறம் உங்க ஹஸ்பண்ட் சொன்னது வந்து திங்கக்கிழமை வந்து திட்டுவீங்களா? முதல்ல இதயெல்லாம் ஏன் ஹஸ்பெண்ட்கிட்ட சொல்றீங்க. அவரு ஒரு லூசு. பெரிசா கண்டுபிடிசிட்டாராமா. நான் தான் லூசுன்னு”

கணவனை திட்டினால் எந்த இந்திய மனைவிதான் பொறுப்பாள்.

தன்னுடைய விசுவாசத்தை காட்ட நல்ல களமாக நினைத்து எனக்கு சரமாரியாக திட்டு விழுந்தது.

“ஹவ் சில்லி யூ ஆர் விஜய்.இனிமே அவர பத்தி எதாவது சொன்னீங்கன்னா, மேனேஜர்கிட்ட உங்கள பத்தி கம்பிளைண்ட் கொடுப்பேன்.இனிமே என்கிட்ட பர்சனலா பேசாதீங்க சரியா”.

உள்ளத்தில் நடுங்கினேன்.

அவமானம், கோவம், அதிர்ச்சி எப்படி காவ்யா மேடத்திடம் இனிமேல் பேசாமல் இருக்க போகிறோம் என்பது மாதிரியான பயம்.

அவசரமாக பாத்ரூம் சென்று கதவை சாத்தினேன்.

சிறுநீரே கழிக்க முடியவில்லை.

ஒரு கணம் மனம் குவிந்தால்தான் யாராலும் சிறுநீர் கழிக்க முடியும்.

அந்த ஒரு கணம் கூட மனம் குவியவில்லை.

என்னை சட்டென்று பேசியது நினைவுக்கு வந்து வந்து பதினைந்து நிமிடம் கழித்து இருந்துவிட்டு, வெளியே வந்தேன்.

அழுதது தெரியாமல் இருக்க முகத்தை நன்றாக கழுவிக்கொண்டேன்.

அடுத்த நாள் முதல் இருவரும் பேசுவதில்லை.

ஆபீஸ் விசயமாக சம்பிரதாயமாக பேசுவதோடு சரி.

கடுப்பில் இரண்டு நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டுவிட்டு எல்லா சினிமாவும் பார்த்தேன்.இண்டர்நெட் செண்டருக்கு சென்று முடிந்தவரை பாலுணர்வை தூண்டும் படமாக பார்த்தேன்.

ஆனாலும் அழுத்தம் போகவில்லை.

காவ்யா மேடம் என்னவெல்லாம் பேசுவார்கள்.

அவர்கள் திருமணம் காதல் திருமணம்.

காவ்யா மேடத்தைவிட அவர் கணவர் உயர்ஜாதி என்று சொல்லபடுகிறதில் பிறந்தவர்.

அவர் துரத்தி துரத்தி காதல் சொன்னதை,

பின்னர் திருமணத்தின் போது கணவரின் வீட்டில் ஜாதி பேசி காவ்யா மேடம் குடும்பத்தை அசிங்கபடுத்தியதை,

ஆனாலும் காவ்யா மேடம் கணவர் வீட்டாரிடம் மழுங்கி மழுங்கி பேசுவதை,

அதை சட்டையே செய்யாமல் அவமானபடுத்தும் மாமனார் மாமியார் நாத்தனார்களின் தன்மையை,

எதைத்தான் காவ்யா மேடம் என்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.

நண்பர்களோடு திருவண்ணமலை செல்லும்போது ”எனக்காகவும் வேண்டிக்கோங்க விஜய் என்று சொன்னதை மறக்கமுடியுமா?

அந்த பிரார்த்தனை காவ்யா மேடத்துக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் என்பதைத்தான் சுட்டுகிறது என்பது எனக்கும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் இருந்த அளவிற்கு ஆழமான நண்பன் எனறுதானே நினைத்து கொண்டிருந்தேன்.

காவ்யா மேடத்துக்கு குழந்தை பிறந்ததும் அம்மாவை அழைத்து கொண்டு பார்க்கபோனதை பார்த்து “உனக்கும் பந்தம் பாசம் எல்லாம் தெரியுதேன்னு அம்மா என்னை கிண்டல் செய்ததை மறக்க முடியுமா?

”இனிமே பர்ஸ்னலா எதுவும் பேசாதீங்க” திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதே ஒருவாரத்திற்கு நினைவுக்கு வந்தது.

பின் மெல்ல அந்த அழுத்தம் குறைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக காவ்யா மேடத்தின் மனந்தொந்திரவு குறைந்து சகஜாமானேன்.

காவ்யாம் மேடம் மூன்று நாட்கள் வரவில்லை
ஆபீஸுக்கு.

நாத்தனார் கல்யாணமாம்.

மூன்றாம் நாள் வரும் போது கல்யாணத்துக்கு எடுத்திருந்த புடவையிலே வந்தார்கள்.

பெண்கள எல்லோரும் அந்த புடவை பற்றி விசாரிக்க, ஆணகள் தர்மத்துக்கு “கல்யாண ஸ்வீட் எங்க” என்று கேட்டு போய்விட்டார்கள்.

தீபாவிடம் காவ்யா மேடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“தீபா எனக்கு இந்த கல்யாணத்துல பெரிய ஹாப்பினஸ் கிடைச்சது”

தீபா “என்ன ஹாப்பினஸ் மேடம்” என்று கேட்க வேண்டும். ஆனால் அதை கேட்காமல் தீபா என்கிற முட்டாள்
“மேடம் கல்யாணத்துக்கு ஃபேசியல் செஞ்சீங்களா” என்று கேட்டாள்.

மனிதர்கள் வாளெடுக்காமல் துப்பாக்கி சுடாமல் கையாளும் வன்முறை இது. எதிர்த்தாற்போல் இருப்பவர்களின் உணர்வு தெரியாமல் பேசுவது.

தீபாவின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, மறுபடி காவ்யா மேடம் ஆரம்பித்தார்கள்.

“தீபா இந்த கல்யாணத்துல நான் ரொம்ப ஜாலியா இருக்கேனே”

அதுவும் தீபாவுக்கு புரியவில்லை.ஏதோ சொல்லி அந்த இடத்தை விட்டு போய்விட்டாள்.

காவ்யா மேடம் முகத்தை பார்க்க முடியவில்லை.

கவலையாய் இருந்தார்.

என்னுள் அன்பு பொங்குகிறது.

உடனே அவர் கைகளை பற்றி கொள்ள வேண்டும் என்பது போல் இருக்கிறது.

இந்த பாழாய் போன தன்மானத்தை வைத்து அவித்து கஞ்டி குடிக்கவா முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சுழலும் நாற்காலியை காவ்யா மேடத்தை நோக்கி திருப்பி அவர்கள் கணகளை ஆழப்பார்த்து சிநேகமாய் புன்னகைத்தேன்.

காத்திருந்ததை போல காவ்யா மேடமும் புன்னகைத்தார்.

“யாருக்கு கல்யாணம்”

”என் நாத்தனாருக்குதான்”

“நல்லா நடந்துச்சா”

”ஆமா நல்லா நடந்துச்சு”

இது பத்தாது அவர்கள் மனம் விட்டு பேச வேண்டுமானால். இன்னும் அணையை உடைக்க வேண்டும். மனம் கணக்கு போட்டது.

“மேடம் இப்பல்லாம் உங்க மாமனார் மாமியார் உங்களுக்கு பிரண்ட்ஸ் ஆகிட்டாங்களா”

காவ்யா மேடத்தின் கண்கள் விரிந்தன.

பிடித்து விட்டேன்.இதுதான் காவ்யா மேடத்தின் மகிழ்ச்சிக்கு காரணம். இதைத்தான் காவ்யா பகிர்ந்து கொள்ள நினைக்கிறார்.

“ஆங் விஜய் லாட் ஆஃப் சேஞ்சஸ் யூ நோ”

“அப்படியா மேடம். கலக்குறீங்க”

“ஆமா நாத்தனார் கல்யாணத்துல அவ்வளவு வேலை செய்தேன் விஜய்.என் மாமியாருக்கு சரியா நடக்க முடியல. கால் சுளுக்கிடுச்சி. அவங்களுக்கு மருந்து போட்டு, வெந்நீர் வெச்சு ஒத்தடம் போட்டு கவனிச்சு, கல்யாண வீட்டுக்கு வந்தவஙகள உபசரிச்சி, நான் இருந்த அக்கறைய பார்த்து நாலு வருசம் கழிச்சி இப்பத்தான் என்ன அவுங்க குடும்பத்துல மனப்பூர்வமா சேர்த்திருக்காங்க”

“ம்ம்ம்...”

”என் மாமனார் முதல் தடவையா, நானும் ஹஸ்பண்டும் வீ ட்டுக்கு திரும்பும் போது எங்களுக்கு சாமி கும்பிட்டு விபூதி குங்குமம் வெச்சி விட்டார்”

சொல்லும் போதே காவ்யா மேடத்தின் கண்கள் கலங்கின.

சொன்ன பிறகு அளப்பெரிய திருப்தி தெரிந்தது.

”மேடம் அந்த மெட்டி ஒலி சீரியல் டைட்டில் சாங் பத்தி நான் சொன்னத மனசுல வெச்சுக்காதீங்க”

“சேச்சே அத அன்னைக்கே மறந்துட்டேன். நான் சட்டுன்னு உங்கள் திட்டினத நினைச்சி ஃபீல் பண்ணிட்டிருக்கேன் விஜய். சாரி இஃப் ஐ ஹர்ட் யூ”

”தேங்கஸ் மேடம்”

“ஆமா நம்ம சண்ட நடந்த உடனே இரண்டு நாள் லீவு போட்டீங்களே ஏன்? “

“அது பயங்கர வைரல் ஃபீவர் மேடம்.வாமிட் வேற.பிளட் டெஸ்ட் எடுத்து கூட பார்த்தேன்” என்று கூசாமல் பொய்யை எடுத்து விட

காவ்யா மேடம் பரிதாபப்பட்டு கொண்டிருந்தார்.

நட்பில் நிறைய தன்மானமின்மையும், கொஞ்சம் போலித்தன்மையும் சேர்ந்தால் நட்பு நெடுநாள் வாழும் என்பதை அறிந்தேன் அன்று.

Monday, 5 November 2012

ஜேம்ஸ் சார் கவிதை - 7



சண்டை வந்தது.

எழுத்தாளனுக்கும்
அவன் எழுதிய
சிறந்த புத்தகத்துக்கும்.

தீரா வெறுப்பில்
பரஸ்பரம்
துப்பித்தெளித்தனர்.
எச்சிலை.

ஜேம்ஸ் சாரிடம்
வந்தனர் குமறலோடு.

நான் உயிரோடு
இருக்கவேண்டும்
அல்லது என் புத்தகம்
உயிரோடு இருக்க வேண்டும்.
சொல்லி முடிக்கும் முன்
எழுத்தாளனை அடித்து கொன்று
புத்தகத்தை அணைத்து கொண்டார்
ஜேம்ஸ் சார்...



Sunday, 4 November 2012

கல்வியா? செல்வமா? வீரமா?

கல்வியா? செல்வமா? வீரமா? என்று முப்பெரும் தேவியர்கள் தங்கள் “சோதனை எலி”களான மானுடர்களை வைத்து போட்டி போடுவார்கள்.

அதை ஏ.பி நாகராஜன் பக்கத்தில் இருந்து பார்த்தா மாதிரியே நமக்கு படமும் எடுத்து காட்டியிருப்பார்.

அது மாதிரி சரஸ்வதி தேவிக்கும் லட்சுமி தேவிக்கும் சண்டை வந்ததாம்.

அதை எங்கள் வீட்டில் நிகழ்த்தி பார்க்கும் விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது.

”சரஸ்வது பூஜை” முந்தினநாள் எங்கள் பலசரக்கு கடையில் வியாபாரம் அமோகமாய் நடக்கும்.

நிற்கவே நேரம் இருக்காது.

நாகர்கோவில் மக்கள் எந்தளவு பகுத்தறிவையும் கம்யூனிசத்தையும் போற்றுகிறார்களோ அதே அளவு
இந்து மத அதீதிகளாகும் இருப்பார்கள்.

டிப்பிக்கல் கேரளா கலவை அல்லவா? (கம்யூனிஸ்ட்டும் ஆர்.எஸ்.எஸ்யும் பக்கத்து பக்கத்து சீட்டில் இருப்பார்கள்).

பூஜை சாமான்களான சந்தனம் குங்குமம் ,கொட்டைபாக்கு, கற்கண்டு ,விபூதி ,சீனி ,சாம்பிராணி ,அவல், பொரி, சர்க்கரை என்று வியாபாரம் தூள் பறக்கும்.

நாங்கள் நால்வரும் கடைக்கு போய்விடுவோம். 

எனக்கு சரியாக பார்சல் கட்ட வராது என்பதால் கல்லாவில் உட்கார வைத்து விடுவார்கள்.( அதிலும் இந்த முட்டை கட்டும் போது ஒரு நடுக்கம் வருமே. சாமி! எதிரிக்கு கூட அந்த பயம் வரக்கூடாது).

அப்பா அண்ணன்கள் கடைபையன்கள் சுறுசுறுப்பாய் இருப்பார்கள். தம்பிக்கு எடுபிடி வேலை.(ரொம்ப சின்ன பையன் அப்போ).

சரஸ்வதி பூஜைக்கு மூன்று நாளைக்கு முன்னாலே அண்ணன் என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தான்.

வியாபாரத்துக்கு சின்ன சின்ன பொட்டலம் போட சிறிய நோட சைஸ் பேப்பர் நிறைய தேவைப்படும். 

அதற்காக என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தை கேட்டான். 

அந்த புத்தகத்தின் பெயர் “பண்டைய கிரீஸின் வரலாறு” தடியான பழைய புத்தகம். 

என் அத்தை பி.ஏ வரலாறு படித்தார். அவருடைய புத்தகம். 

அத்தைக்கு கல்யாணம் ஆனதாலும், அவர் குடும்பம் நடத்த “பண்டைய கிரீஸின் வரலாறு” தேவைஇல்லாததாலும் அதை எங்கள் வீட்டில் விட்டு போய்விட்டார்.

இந்த சம்பவம் நடக்கும் போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.

அண்ணன் கேட்டதும் அதிர்ச்சியாய் இருந்தது. 

இவன் ஏன் இப்படி கேட்கிறான் ?( கவனியுங்கள் இதை அண்ணன் மூலமாக லட்சுமி தேவிதான் கேட்கிறார்).

என்னால் அந்த வயதில் “பண்டைய கிரீஸின் வரலாறு” புத்த்கத்தை படிக்க முடியாவிட்டாலும், பிற்காலத்தில் அதை படிப்பேன் என்ற ஆர்வத்தில் அதை வைத்திருத்ந்தேன்.

ஆனால் இப்போ அண்ணன் கேட்கிறான்.

“யல அந்த புக்க போய் கேக்குறியே. போல நாய ! அத நா தரமாட்டேன்”

“நினைச்சு பாருல, சரஸ்வதி பூஜைக்கு எப்படி யாவாரம் நடக்கும். அதுக்கு இது மாதிரி சின்ன பேப்பர் இருந்தா வசதியா இருக்கும்ல்ல” இது அண்ணன்.

“இல்லல ஃப்ளீஸ். அத மட்டும் கேட்க்காத. அது நல்ல புக்கு அத தரமாட்டேன்”

அண்ணன் ஒரு முடிவு செய்து விட்டால் நம்மை கன்வின்ஸ் செய்யாமல் இருக்க மாட்டான்.

“இத பாரு விஜய். நாமெல்லாம் யாவாரம் செய்றவங்க.இது மாதிரி சமயத்துல யாவாரத்த தவிர எதையும் நினைக்க கூடாது.அப்பா நமக்காகத்தான கஸ்டபடுறாங்க.காலம்புற ஆறு மணிக்கு போய்ட்டு, நைட்டு பண்ணிரண்டு மணிக்கு வராங்க” என்று பெரிய லெக்சர் கொடுத்தான்.

எனக்கு வேறு வழியே இல்லை. அரை மனதோடு சம்மதித்தேன்.

மறுநாள் கடையில் “பண்டைய கிரீஸின் வரலாறின்” ஒவ்வொரு பக்கமும் கிழிக்கபட்டு குங்குமம் இன்ன பிற பொருட்கள் மடித்து ஒவ்வொருத்தர் வீட்டுக்கு போனது.

பார்க்க கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. 
அப்புறம் சரியாகி விட்டது.

இந்த ஆடு கோழிகளை வெட்டுவதை கண்ணால் பார்த்தால் கஸ்ட்மாய் இருக்கும். அப்புறம் பிரியாணியாய் பார்த்தால் நாக்கில் நீர் ஊறுவது போல.

முடிவில் லட்சுமி தேவி சரஸ்வதி தேவியை ஜெயித்துதான் விட்டாள் அந்த சம்பவத்தின் போது.

அது சரி, எனக்கு ஒரு சந்தேகம்.

நாமெல்லோரும் ஏன் படிக்கிறோம்.

ஏன் சரஸ்வதி தேவியை பூஜிக்கிறோம்.

சரஸ்வதி தேவியை பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதால்தானே.

எப்படியாவது என்ஜினியரிங் முடித்து, வேலை பார்த்து சம்பாதித்து, அமெரிக்கா சென்று புது கார் வாங்கி , அதை படம் பிடித்து பேஸ் புக்கில் போடத்தானே படிக்கிறோம். 

ஞானத்திற்காகவா செய்கிறோம்.

வாழ்க்கையில் ஒரு பாடத்தை அனுபவித்து படித்து இருக்கோமா? 

ஒரு சயின்ஸ் டெபனிசனை புரிந்து கொண்டிருக்கோமா?

The rate of change velocity is acceleration. வாங்கு ரெண்டு மார்க்கு.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” 
வாங்கு ரெண்டு மார்க்கு.

பி.ஏ பிலாஸபி படிப்பவனுக்கு ரஸலைவிட நீட்க்ஷேயை விட நல்ல பிலாஸிப்பக்கள் தோண்றியிருக்கலாம். ஆனால் அதை சொல்ல முடியாதல்லவா? 

ரஸ்லையும் ஹெக்கலை மட்டும் எழுது. புதிதாய் எதுவும் செய்யாதே.

ராமர் பிள்ளைக்கு கெமிஸ்டிரி தெரியாததால் ஐ.ஐ.டி கணவான்கள் அவமானபடுத்தியதும் நினைவுக்கு வருகிறது.

ஆக லட்சுமி தேவிதான் முப்பெரும் தேவியர்களுள் நம்பர் ஒன்.

அவரை அடைய வழி செய்து கொடுப்பதுதான் மற்ற இரு தேவியருக்கான பணி.

பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்தேன். 

குடும்பமே என்னை தூக்கி வைத்து கொண்டாடியது.

பத்தாம் வகுப்பு லீவில் சு.சமுத்திரத்தின்” வாடா மல்லி” நாவல் படித்து கொண்டிருந்தேன்.

என் மாமா கேட்டார் அந்த புத்தகம் பற்றி.
“இது திருநங்கைகளோட வாழ்வு பத்தின நாவல் மாமா “ என்றேன்.

பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுக்கவில்லை. குறைவாகவே எடுத்திருந்தேன். 

குடும்பத்தில் எல்லோரும் திட்டினார்கள்.

அவன் கண்ட புத்தகத்தையும் படிக்கிறான் என்பதையும் சொன்னார்கள்.

மாமாவும் சேர்ந்து கொண்டார் “அவன் திருநங்கைகளை பத்தியெல்லாம படிச்சா எப்படி முன்னேறுவான்.
மனசு கெட்டுத்தான் போகும்” என்றார். 

சடாரென்று கோபம் வந்தது. அடக்கி கொண்டேன்.

”வாடா மல்லி “ நாவலை எழுதிய சு.சமுத்திரத்திடம் மன்னிப்பு கேட்டேன் ,அந்த டென்சனிலும். 

இப்படியாக “வெள்ளைதாமரை பூவிலிருப்பவள்” இந்தியாவில் போற்றப்படுகிறாள்.