Wednesday 16 May 2012

கதையில்லாத ஒன்று - 6



சுப்பிரமணியம் பிள்ளைன்னு ஒரு மேத்ஸ் வாத்தியார் இருந்தார்.

‘பிள்ளை’ என்பது அவர் ஜாதிதான். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்.பெரும்பான்மையான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் அழகானவர்கள்.ரோஸ் வெள்ளையாய் சிகப்பும் உதடுமாய் ஆண்கள் கூட ஒளிருவார்கள்.

சுப்பிரமணிய பிள்ளையும் அப்படித்தான். இளமையான மோகன்லால், கலராய் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படித்தான் இருப்பார். ஹிரோ ஹோண்டாவில் வரும் அவர் ஸ்டைலே தனி.

கணிதத்தில் பின்னுவார். கால்குலஸ் பார்முலா தினமும் கேட்ட பிறகே பாடத்தை ஆரம்பிப்பார்.தன்னம்பிக்கை அதிகம்.

நக்கலும் அதிகம்.

பொதுவா ஒருவரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால். அவர் “அசோக் பில்லர்” என்று சொல்கிறார் வைத்துகொள்வோம். விட்டுவிடுவோம் தானே!. அங்குதான் சுப்பிரமணியம் பிள்ளை பஞ்ச் வைப்பார்.

முதலில் மாட்டியவன் நான்.

”ஏய்! எங்க இருந்துடே வரெடே !”.
”சார் நாகர்கோவில்ல இருந்து”.
”ஹா ஹா நாங்கெல்லாம் அரேபியால இருந்து வரல கேட்டியா ! கரக்டா சொல்லு” .
”சார். ஹிந்து காலேஜ் பின் கேட் இருக்குல்லா அங்கின இருந்து வரேன்”
”ஹா ஹா ஹிந்து காலேஜ் பின் கேட்ல இருந்தா.
எப்படி? உன் அப்பா,அம்மா ,குடும்பம் எல்லாம் பல்லி மாதிரி ஹிந்து காலேஜ் பின் கேட்ல ஒட்டிட்டு இருப்பீங்களா.”

வகுப்பு மொத்தமும் அதிரும்.

அடுத்து மாட்டியது ஜியா உல் ஹக்குன்னு ஒரு பையன்.

அவன்கிட்ட கேட்டார்.

’நீ எங்க இருந்து வரடே !
”சார் “மத்தியாஸ் வார்டுல” இருந்து சார்.
ஹா ஹா ! மத்தியாஸ் வார்டு வராண்டலதான் தூங்குவியாடே !

தீர்மானம் பண்ணிவிட்டால் அவனை கிண்டல் பண்ணாமல் ஓய மாட்டார்.
சிரித்து சிரித்து அசந்து விடுவோம் .
ஹெட்மாஸ்டர் கூட அவரை பார்த்தால் வெச்சுக்க மாட்டார்.சிலபஸ் கரெக்டா முடிப்பார்.

ஒரு நாள் லீவு போட்டாலும் அப்பா அம்மாவ கூட்டிட்டு வரணும்பார்.

மொத்த கிளாஸ்யயே கிளாஸா ஆக்கிட்டார். ஒரே கடுப்பு அவர் சர்வாதிகாரம். நக்கல்.

மற்ற நல்ல விசயம், யாருக்கும் தெரியாமல் நிறைய உதவி செய்வார். உண்மையிலேயே கஸ்டபட்டவன் என்றால் என்ன வேண்டுமானால் செய்வார்.

வீட்டிலும் தினமும் அவரை பத்தியே பேசுவேன்.அவர் மாதிரியே மிமிக்ரி பண்ணுவேன்.என் ஹீரோ அவரே.

என் +2 டைரிய எடுத்து பார்த்தால் அவர பத்தி நிறைய எழுதி வைச்சிருப்பேன்.

அப்புறம் நாகர்கோவில்ல் இருந்து சென்னை வந்து மூன்று வருடம் கழித்து ”சுப்பிரமணியம் பிள்ளை சார் ”ஏதோ பிரச்சனைல தற்கொலை செய்துகிட்டதா நண்பன் சொன்னான்.

செம கடியா இருந்தது.

தன்னம்பிகைனாலே அதுல இருந்து காமெடியாத்தான்தெரியுது : )

1 comment: