Saturday, 22 November 2014

மனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல் ?

மனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல்
ஷேக்ஸ்பியர்,பெர்னாட் ஷா,ஜியார்ஜ் ஆர்வெல்,கபிலர்,திருவள்ளுவர்
போன்ற இலக்கியர்கள்
எப்படி பிரபலங்கள் ஆனார்கள்
என்பதுதான்
என் ஆழ்மனதில் துடித்துக் கொண்டிருக்கும்
நெடுநாளைய சந்தேகம்.

Gabriel's Horn

Graph என்பதை நான் என்றாவது ஃபீல் செய்திருக்கிறோமா?
Graph தெரியாதவர்களே கிடையாது.ஆனால் உணர்ந்திருக்கிறோமா என்பது முக்கியம்.
கணிதத்திலும் அறிவியலிலும் உணர்வு முக்கியம்.இந்தியர்களுக்கு இந்த உணர்வு குறைவு என்பது என் சொந்தக் கருத்து.
பள்ளி நாட்களில் நம் உணர்வை அறிவையை தூண்டி கிளர்ச்சி செய்யக் கூடிய பல அறிவின்பத்தை ஏனோ தானோ என்று படித்து கடந்து விடுகிறோம்தானே.
அது மாதிரி சக்கையாக படித்து வெளியே வரும் டாப்பிக்களில் முக்கியமானது Graph ஆகும்.
Graph ஐ ஒரு பள்ளிச் சிறுவன் ரசித்து புரிந்து உணர்ந்து செய்தால் நிச்சயம் அவனால் பிற்காலத்தில் தன் கணித அறிவியல் கற்பனைகளை விரிக்க முடியும்.
Graph ஐப் பார்ப்போம். Y=1/X என்ற சமன்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
இந்த சமன்பாட்டை Graph யின் துணையோடு வடிவமாக்க முடியும். உதாரணமாக
Y=1/X என்ற சமன்பாட்டில் எக்ஸ்க்கு ஒவ்வொரு மதிப்பாக கொடுத்து புள்ளி ஜோடிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
1.எக்ஸ்க்கு 1 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(1) = 1... அப்படியானால் X,Y = (1,1)
2. எக்ஸ்க்கு 2 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(2) = 0.5... அப்படியானால் X,Y = (2,0.5)
2. எக்ஸ்க்கு 3 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(3) = 0.333... அப்படியானால் X,Y = (3,0.333)
2. எக்ஸ்க்கு 4 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(4) = 0.25... அப்படியானால் X,Y = (4,0.25)
நான்கு புள்ளி ஜோடிகளான (1,1) (2,0.5) (3,0.333) (4,0.25) கிராஃப் தாளில் குறிக்க வேண்டும்.
கிராஃப் ஷீட்டில் எக்ஸ் அச்சில் ஒன்று இரண்டு மூன்று நான்கிருக்கும். வொய் அச்சிலும் அப்படியே.
(1,1) என்பதை எப்படிக் குறிப்போம். வலது கை ஆட்காட்டி விரலை வைத்து எக்ஸ் அச்சில் உள்ள ஒன்றைத்(1) தொட வேண்டும். இடது கை ஆட்காட்டி விரலை வைத்து வொய் அச்சில் உள்ள ஒன்றைத்(1) தொட வேண்டும்.
இரண்டு வரல்களையும் தாளைதடவியபடி மேலே முன்னேற வேண்டும்.இரண்டும் வெட்டும் இடத்தில் (1,1) என்று குறிக்க வேண்டும். இப்படியே மிச்ச மூன்று புள்ளிகளையும் குறித்து அதை இணைத்து பார்த்தால் ஒரு வடிவம் கிடைக்கும்.
ஆக Y=1/X என்ற அல்ஜிப்ரா குறியீடை வடிவமாக மாற்றிவிட்டோம்.
இப்படி உலகில் எந்த சமன்பாட்டையும் வடிவமாக( இருப்பரிமாண, முப்பரிமாண) மாற்ற முடியும். அந்த வடிவத்தையும் சமன்பாடாக மாற்ற முடியும். இதைத்தான் Graph சிறுவயதில் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
இனி வருவது உபரித்தகவல்கள்...
1.இந்த Y=1/X என்பது ”தட்டையான நாதஸ்வரத்தை” (கவனிக்க ”தட்டையான”) நீளவாக்கில், பாதியாக வெட்டி வடிவத்தைக் கொடுக்கிறது. (புரஃபைல் போட்டோ பார்க்கவும்). ஆங்கிலத்தில் Trumphet வடிவம் என்கிறார்கள். நாதஸ்வரமா Trumpet என்று கேட்காதீர்கள்.


2.இந்த தட்டை நாதஸ்வரத்தை முப்பரிமாண வடிவமாக்கிக் அதன் பரப்பளவையும், கன அளவையும் அளந்து காட்டியவர் விஞ்ஞானி டாரிசெலி (Torricelli)
3.அப்படி அவர் பரப்பளவையும் கன அளவையும் கண்டுபிடிக்கும் போது சுவாரஸ்யமான முரண்பாட்டைக் கண்டார்.
4.நாதஸ்வரத்தின் பரப்பளவை தொகைநுண் கணிதம் (Integration) உதவியோடு கண்டுபிடிக்கும் போது அதன் பரப்பளவு (surface area) முடிவற்றதாக அளக்கமுடியாததாக வருகிறது ( infinity)
5.அதே நாதஸ்வரத்தின் கனஅளவை(volume) தொகைநுண் கணிதம் வழியாக கண்டுபிடிக்கும் போது அந்த கனஅளவு அளக்கக் கூடியதாக இருக்கிறது.
6.ஒரே பொருளின் பரப்பளவு அளக்கமுடியாத முடிவற்றதாகவும், ஆனால் அதன் கனஅளவு அளக்கக்கூடியதாகவும் ஆகும் போது அது சுவையான கணித முரண்பாடாக( Paradox) ஆகிவிடுகிறது. அந்த Paradox பெயர் Gabriel's Horn அல்லது Gabriel's Trumpet Paradox ஆகும்.
7.அதாவது அந்த நாதஸ்வரத்துக்கு பெயிண்ட் அடிக்க அடிக்க வந்து கொண்டே இருக்கும். முடிவே இருக்காது பரப்பளவுக்கு... ஆனால் உள்ளே நீரை ஊற்றினால் அதற்கு அளவு இருக்கும் 
8.அது யார் கேப்ரியல் என்று கேட்டால் பைபிளில் வரும் தேவ தூதர் ஆவார். நியாத்தீர்ப்பு நாளுக்கான எக்காளத்தை(Horn) ஊதுவதற்காக காத்திருப்பவர் (?) என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் தூதனாவார்.

ஆண்கள் தினம்...

போன ஜெனரேசனில் ”கற்பு” என்கிற விசயத்தை வைத்து பெண்களை அடிமையாக வைத்திருந்தோம்.
இப்போது அது செல்லுபடியாக வில்லை.
இந்த ஜெனரேசனுக்கு “தாய்மை” என்ற விசயம் இருக்கிறது.அதை வைத்து பெண்களை அடிமைகளாக தந்திரமாக வைத்திருக்கிறோம்.
ஆனால் அதையும் கடந்து விடுவார்கள் போலிருக்கிறதே.
நம் அடுத்த ஜெனரேசன் ஆண்கள் எதை வைத்து, எந்த போலி கற்பிதத்தை வைத்து பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பார்கள்.?
யோசித்தீர்களா ?
ஆண்களாகிய நாம் இந்த “ஆண்கள் தினத்தில்” இது பற்றி யோசித்து எதாவது முடிவெடுத்தே ஆகவேண்டும்.
அடுத்த ஜெனரேசன் கே.ஜி பாடத்திலும் Father is the head of the family என்றுதான் குழந்தைகள் வாசிக்க வேண்டும்...
வாருங்கள் ! ஒன்று கூடுவோம் ஆண்களே !

Friday, 3 October 2014

Kigelia Africana...

புடுக்கு என்றால் ஆணின் அந்தரங்கபகுதியை குறிக்கும் சொல்லாகும்.
சிறுவயதில் எங்கள் கடையில் வேலை பார்த்த தாத்தா ஒருவர், ஒரு பலூனில் கொஞ்சம் நீரை ஊற்றி அதை மிதமான நீளமாக்கி “கழுதைப் புடுக்கு கழுதைப் புடுக்கு பாரு” என்று வேடிக்கையாக சொல்வதை நினைத்துப் பார்க்கிறேன்.
நானொன்றும் வேண்டுமென்றே அதிர்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றோ எழுதவில்லை.
தினமும் ஒருவகையான மரங்களை ஆங்காங்கே கடந்துவருவேன்.ஒன்றரை வருடங்களாக அந்த மரத்தை அண்ணாந்து பார்த்ததில்லை. ஒருநாள் அப்படி பார்க்கையில் அதிர்ச்சி. பெரிய பெரிய் பிரவுன் வெள்ளரிக்காய் தண்டியில் நீளமான மிக நீளமான காம்பில் ஒரு காய் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தக் காய் நம் தலையில் விழுந்தால் என்னவாகும் என்று நினைக்கும் போதே நடுங்கிற்று. “அதெல்லாம் விழாது” என்று அலட்சியப்படுத்தவும் முடியாதபடி அந்தக் காய்கள் ஆங்காங்கே விழுந்தும் கிடந்தன.
ஒரு காயைத் தூக்கிப் பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ.பூமி விசைக்கும், மரம் இருக்கும் உயரத்துக்கு தலையில் விழுந்தால் என்ன வாகும்.சுக்கு நூறாக வெடித்து விடாதா அய்யப்போ.
காற்றில்லாவிட்டால் ஒற்றை மழைத்துளியே புல்லட்டாக இறங்குமாமே நம் உடலில்.இம்மாம் பெரிய காய் விழுந்தால்? இப்படியாக அந்த மரத்தை உற்று கவனிக்க ஆரம்பித்தேன்.
ராணிமுத்து காலெண்டரில் இருக்கும் முருகர் எப்படி நாம் பார்த்தால் அவரும் பார்ப்போரோ, அது மாதிரி மரமும் தன் நூற்றுக்கணக்கான காய்க்களைக் காட்டி என்னை உற்றுப் பார்த்தது போல ஒரு உணர்வு.
அந்த மரத்தின் பெயரைக் கேட்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கும் தெரியவில்லை.அது இந்திய மரமாக எனக்குத் தெரியவில்லை.அதன் பெயரை அறிந்து கொள்ள அதிகம் ஆர்வம் கொண்டிருந்தேன்.
கலை ,இலக்கியம், அறிவு சம்பந்தப்பட்ட ஒன்றை திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது எனக்கு கிடைக்கும் என்று என்மேலேயே எனக்கொரு மூடநம்பிக்கை.
இந்த மரம் விசயத்திலும் அது நடந்தது.
அன்று கோட்டூர்புரம் லைப்பரரியில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, பெரிய பாட்டனி புத்தகம் ஒன்றைப் பார்த்தேன்.
அதில் ஒரு மரத்தின் வித்தியாசமான தமிழ் பெயரைப் பார்த்து சிரித்தேன்.அதன் பாட்டனிக்கல் பெயரை மனப்பாடம் செய்து கொண்டேன்.அப்புறம் மறந்து விட்டேன்.
ஆபீஸில் ஒய்வாக இருக்கும் போது திடீரென்று அந்த வித்தியாசமான தமிழ் பெயர் நினைவுக்கு வந்து அந்த செடியின் பாட்டனிக்கல் பெயரும் நினைவுக்கு வந்தது.
பாட்டனிக்கல் பெயர் Kigelia Africana.
அதை விக்கிப்பீடியாவில் டைப் செய்து பார்த்தால் அசந்து விட்டேன்.
ஆஹா!ஆஹா! அது நான் தினமும் பார்க்கும் மரத்தின் காய்கள் உள்ள மரம். அதன் பெயர் ஆங்கிலத்தில் Sausage tree ( அந்த உணவு போல இருப்பதால்).
கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன் என்று துள்ளினேன்.அதன் வித்தியாசமான தமிழ்ப் பெயரை எல்லோருக்கும் சொன்னேன்.
கேட்ட அனைவரும் சிரித்தனர்.
Kigelia Africana மரத்தின் தமிழ்ப் பெயர் “யானைப்புடுக்கன்”.

Sunday, 28 September 2014

The Moon and Sixpence -நிலாவும் ஆறுகாசும்

மிஞ்சி மிஞ்சிப் போனால் நாம் நேசிக்கும் கலைக்காக என்ன செய்வோம்.கொஞ்ச நேரம் ஒதுக்குவோம். அவ்வளவுதான் செய்வோம் இல்லையா?

”அப்படியில்லை நான் கலைகாக எதையும் செய்வேன்” என்கிறான் சாமர்ஸெட் மாம் (Somerset Maugham) எழுதிய

The Moon and Sixpence (நிலாவும் ஆறுகாசும்) நாவலில் வரும் நாயகன்.

நான் புரிந்து கொண்ட நாவலின் கதைச் சுருக்கத்தை எழுதுகிறேன்.

// நான் ஒரு எழுத்தாளன்.

எனக்கு திருமதி ஸ்ட்ரிக்லேண்ட் கொடுத்த பார்ட்டியில்தான் சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லேண்டைத் தெரியும்.அவருக்கு இலக்கியம்
மீது ஆர்வமில்லை.கொஞ்சம் பேசினார். ஆனால் திருமதி ஸ்ட்ரிக்லேண்ட்க்கு என் மேல் எழுத்தாளன் என்ற மரியாதை இருந்தது.

அடுத்து ஒரு மாதத்தில் திருமதி ஸ்ட்ரிக்லேண்டிடம் இருந்து அழைப்பு வந்தது.

”என்னை என் கணவர் விட்டுச் சென்று விட்டார்.அவர் இன்னொரு பெண்ணுடன் பாரீஸுக்குப் போய்விட்டார். நான் கடிதம் எழுதினால் என்னுடன் வாழமுடியாது என்று சொல்கிறார். எங்களுக்கு பள்ளியில் படிக்கும் பையனும் பெண்ணும் உண்டு. இந்த சமயத்தில் விட்டுப் போனால் எப்படி நாங்கள் வாழ்வோம்.அதனால் நீங்கள் பாரீஸுக்குச் சென்று சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட்டை வருமாறு நயமாக பேசி அழைக்க வேண்டும்” என்றார்.

நான் பாரீஸுக்கு சென்று சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட்டை பார்த்து விசாரித்தால் அவர் எந்தப் பெண்ணையும் கூட்டி வரவில்லை என்று சொன்னார்.

தான் ஒவியம் வரைவதற்காக குடும்பத்தை விட்டுவிட்டதாகச் சொன்னார். நான் கேட்டேன்.

“என்னது ஒவியம் வரைவதற்காகவா.நாற்பது வயதுக்கு மேல் நீங்கள் எப்போது ஒவியம் கற்றுக் கொண்டீர்களா”

“நான் இரவில் ப்ரிட்ஜ் விளையாடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கற்றுக் கொண்டேன்.”

“அது பொழுது போக்குதானே.அதற்காக குடும்பத்தை விட்டா வருவீர்கள்.”

“இனிமேல் ஒவியம் வரையாமல் என்னால் இருக்க முடியாது.அதை மட்டுமே செய்வேன்.நீங்கள் போகலாம்” என்றார்.

நான் லண்டன் திரும்பி திருமதி.ஸ்ட்ரிக்லேண்டிடம் விசயத்தைச் சொன்னேன். அவர் அழுதுவிட்டு அடுத்தப் பிழைப்பை பற்றிய சிந்தனையில் மூழ்கினார்.

அடுத்து ஐந்து வருடங்கள் நான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டை மறந்துவிட்டேன்.

பின் லண்டன் வாழ்க்கையை விட்டு பாரீஸுக்கு செல்லும் போதுதான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது கூட நானாக கேட்கவில்லை.

மிஸ்டர் டிர்க்கும் அவர் மனைவியும் என்னிடம் சொன்னார்கள்.

டிர்க் என்னுடைய நண்பர் நல்ல ஜனரஞ்சகமான ஒவியர்.அவர் ஒவியங்கள் ’கலை’ என்ற அளவில் மதிக்கப்படாமல் இருந்தாலும் கூட நிறைய விற்கும்.

டிர்க்கும் அவர் மனைவியும் அன்பானவர்கள். டிர்க்கையும் அவர் ஒவியங்களையும் சார்லஸ் மதிப்பதே இல்லையாம்.

சார்லஸ் தான் வரைந்த ஒவியங்களை யாரிடமும் காட்டுவது கூட இல்லையாம். எளிமையான ஒரு அறையில் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு (நாற்காலி வாங்க அவரிடம் பணம் இல்லை) வரைவார். அவர் பெரிய அறிவாளி.கலைஞன் என்றெல்லாம் ஒவியர் டிர்க் சொன்னார்.

அவர் மனைவியோ “சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் திமிர் பிடித்தவன்.எனக்கு அவரை பிடிக்காது என்றார்.

நான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டைப் பார்க்கப் போனேன்.அவர் என்னை அதிகம் மதிக்கவில்லை.

ஒவியர் டிரிக்கை மதிக்கவே இல்லை.

ஒருமுறை சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டுக்கு கடுமையான ஜுரம் வர, நானும் ஒவியர் டிர்க்கும் அவரைத் தூக்கிக் கொண்டு திருமதி டிர்க்கிடம் அனுமதி பெற்று, அவர்கள் வீட்டிலேயே சிகிச்சையும் பணிவிடையும் செய்தோம்.

திருமதி டிர்க்கும் நன்றாக கவனித்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து சார்லஸ் ஸ்டிர்க்லேண்ட் தெம்பாக கிளம்பும் போது,

திருமதி டிர்க் சார்லஸுடன் போக விரும்புவதாக சொன்னார். அவர் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டை காதலிக்கிறாராம்.

நானும் ஒவியர் டிர்க்கும் ஆடிப்போய்விட்டோம். ஒவியர் டிர்க் சொன்னார் “சார்லஸ் கூட சென்றால் நீ ஏழ்மையில் வருந்துவாய்.ஆகையால் இந்த வீட்டிலிருந்து நான் செல்கிறேன். நீயும் சார்லஸும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று சொல்லி வெளியேறினார்.

ஆனாலும் ஒவியர் டிர்க் தன் மனைவியை குறை சொல்லவில்லை நேசித்துதான் வந்தார்.

ஒருநாள் திருமதி டிர்க் ஆசிட் குடித்து தற்கொலை செய்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டு பதறி ஒடினேன்.

சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் பதறவில்லை.அலெட்சியமாக இருந்தார். “நீதான் அந்தப் பெண்ணின் மனதை கெடுத்தாய்” என்றேன்.

“நான் கெடுக்கவில்லை.அவள் என்னை விரும்பினாள். அவளை வைத்து ஒரு நிர்வாண ஒவியம் வரைய வேண்டியதிருந்தது.எனக்கு பிடிக்கவில்லையென்றால் நான் திரும்ப அனுப்பிவிடுவேன் என்று சொல்லிதான் அவளை என்னை காதலிக்க அனுமதித்தேன்.எனக்கெல்லாம் அவள் மேல் காதல் கிடையாது” என்றார்.

“நான் உன்னை வெறுக்கிறேன்”

“நீ என்னை வெறு. வெறுக்காமல் போ.ஆனால் திருமதி டிர்க் ஏற்கனவே இத்தாலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதனால் கர்ப்பமாகி, தந்தையால் வெறுக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றவள். காப்பாற்றியவன் என்ற பெயரில்தான் ஒவியர் டிர்க்கை கல்யாணம் செய்திருக்கிறாள். அவளுக்கு பெரிய விருப்பமெல்லாம் இல்லை.அதைத் தெரிந்துகொள் “ என்றார்.

“நான் உன்னை வெறுக்கிறேன்” என்றேன்.

ஆனால் ஒவியர் டிர்க்கின் மனைவியை சார்லஸ் வரைந்த ஒவியம் கலை அளவில் அற்புதமானது. தன்னிகரில்லாதது. அற்புதமானது.  சார்லஸை நான் வெறுப்பதினால் அது கலையில்லை என்று என்னாலும் ஒவியர் டிர்க்காலும் சொல்ல முடியவில்லை.

அடுத்து சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் பாரீஸை விட்டு மர்லேஸ் நகரம் சென்று விட்டார். அங்கு கொஞ்சநாள் எடுபிடி வேலை செய்து ஒரு குண்டரிடம் அடிவாங்கி ஆஸ்திரேலியா செல்லும் படகில் கூலி ஆளாக வேலை பெற்று டாகிதி (Tahiti) தீவை அடைகிறார்.

அங்கே சென்று ஒவியம் வரைந்து கொண்டே இருக்கிறார்.தீவில் வசிக்கும் அநாதைப் பெண்ணான அட்டாவை திருமணம் செய்து கொண்டு குடிசைவிட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கிறார்.

அட்டாவே உழைத்து சம்பாதிப்பாள். சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் எது பற்றியும் கவலைப்படாமல் குடிசையில் இருந்து ஒவியம் வரைந்து கொண்டே இருப்பார்.

ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, ஏழு கிலோமீட்டர் நடக்கவைத்து ஒரு டாக்டரைக் கூட்டி வருகிறாள் அட்டா.

டாக்டர் பரிசோதித்து விட்டு சார்லஸ் ஸ்டிர்க்லேண்டுக்கு தொழுநோய் வந்திருப்பதாக சொன்னார். சார்லஸ் அதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை. ஒவியம் வரைந்து கொண்டே இருந்தார்.

அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து டாக்டர் அந்தப் பக்கம் வேலையாக போல சார்லஸின் குடிசையை எட்டிப் பார்கலாம் என்று எட்டிப் பார்க்கிறார்.

குடிசை உள்ளிருந்து மோசமான வாடை வீசுகிறது. தொழுநோய் அழுகல் வாடை.

குடிசை சுவரெங்கும் தாகிதி தீவின் அடர் மரங்கள்.அதைப் பார்க்கும் போது காட்டில் இருந்த உணர்வை அடைகிறார் டாக்டர்.

சார்லஸ் இறக்கும் தருவாயில் பாயில் முனகிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அட்டா வருகிறாள்.” இப்போது ஒருவருடமாய் அவருக்கு கண்பார்வையில்லை” என்கிறாள்.

டாக்டர் திகைத்து நிற்கிறார்.

சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லேண்ட் இறந்துவிடுகிறார்.அவர் ஆசைப்படி அந்த ஒவியக்குடிசையை அட்டா எரித்து விடுகிறார்.

சார்லஸின் இல்லாமைக்கு பின் அவர் ஒவியம் லட்சககணக்கில் விலை போகிறது. //

இப்படியாக உருக்கமான நாவலை முடிக்கிறார் சாமர்ஸெட் மாம். இதைப் படித்து முடிக்கும் போது கலையின் மேல் ஒரு மனிதனுக்கு இருக்கும் வெறியின் தீவிரம் புரிகிறது.

இப்படியும் மனிதர்கள் கலை நேசித்திருக்கிறார்கள். அல்லது இப்படி நேசிப்பவர்களிடமிருந்துதான் உண்மையான ஆர்ட் வெளிவருகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

ஏனோ இந்த நாவலைப் படித்து முடிக்கும் போது எனக்கு எழுத்தாளர் பிரமிள் நினைவுக்கு வருகிறார். பிரமிளுக்கும் பாரீஸ் சென்று ஒவியராவதுதான் சிறுவயது லட்சியம் என்று படித்திருக்கிறேன்.

இந்த நாவல் முழுக்க கற்பனை கதையல்ல. புகழ்பெற்ற பிரஞ்சு ஒவியரான பால் காகின் (Eugène Henri Paul Gauguin ) வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நாவல்.

பால் காகின் தன் 40 வது வயதில் தன் பங்குதரகர் வேலையை விட்டுவிட்டு ஒவியராகிறார்.

தாகிதி தீவின் பண்பாட்டை ஒவியமாக தீட்டி புகழ்பெறுகிறார்.

நாவலின் நாயகன் தொழுநோய் வந்த போதிலும் கலையை விடாமல் இருப்பது அவன் மேல் நமக்கிருக்கும் எரிச்சலை நீக்கி  விடுகிறது. மறுபடி நாவலை வாசிக்கும் போது அவனிடம் எந்த எதிர்மறையும் பார்க்க முடியவில்லை.

நா.தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மறக்க முடியாது நாவல் இது. அற்புதம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


Friday, 26 September 2014

லித்துயானியா... ரூபர்ட் புருக் எழுதிய குட்டி நாடகம்...

ருபர்ட் பூரூக் 1915 ஆம் வருடம் (?)எழுதிய “லித்துயானியா” என்ற நாடகத்தைப் படித்தேன்.அதன் கதைச் சுருக்கம் வருமாறு.

கொடுமையான, 

பனி பொழியும் குளிர்காலத்தை  எதிர்பார்த்திருக்கும் காட்டின் தனி வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள்.

கதவைத் திறந்த ஐம்பது வயதான அம்மாவும் அவளுடைய இளம் மகளும் பசித்திருக்கும் வழிப்போக்கன் ஒருவனைப் பார்க்கிறார்கள்.

அவன் வாலிபனாயிருக்கிறான். அவனை உபசரித்து உணவும், குளிர்காயத் தீயும் கொடுக்கிறார்கள்.அவன் சாப்பிடும் போது நிறைய பேசுகிறான்.குடும்பத்தலைவரைப் பற்றி விசாரிக்கிறான். அப்பா வெளியே காட்டுக்கு சென்றிருப்பதாக மகள் கூறுகிறாள். 

அப்போது அப்பாவும் வருகிறார்.வழிப்போக்கன் உற்சாகமாக அப்பாவை விசாரிக்கிறான். தான் காட்டில் தொலைந்து போய்விட்டதாகவும் வழிதெரியாமல் குளிரில்  நடுங்கியதாகவும், இந்த தனிவீட்டைப் பார்த்து ஆர்வத்துடனும் பசியுடனும் வந்ததாகவும். இந்த வீடு தன்னை ஏமாற்றவில்லை என்றும். நல்லவிதமான உபசரிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறான். 

தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகவும் சொல்கிறான்.காட்டுகிறான்.

”நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்” என்று கேட்க, குடும்பத்தினர் மரமாடி அறையில் அவனுக்கு படுக்கை கொடுக்கிறார்கள். அவன் மேலேப் போய் அயர்ந்து தூங்குகிறான்.

அவன் தூங்கப்போனதும் மகளும் மனைவியும் அப்பாவை “எதாவது கொண்டுவந்தீர்களா சாப்பிட” என்று கேட்கிறார்கள். “முயல் கூட கிடைக்கவில்லை” என்று சலித்துக் கொள்கிறார்.

”நீங்கள் ஒரு சொங்கி.உங்களால் எதுவும் முடியாது” என்று பசியுடன் மனைவியும் மகளும் அப்பாவைத் திட்டுகின்றனர்.அப்பா நான் தனியாகப் போய் இன்பமாக வாழப்போகிறேன்.நான் ஏன் உங்கள் இருவருக்கும் சம்பாதித்து போட வேண்டும் என்று திட்டுகிறார்.

பேச்சு வழிப்போக்கனைப் பற்றி வருகிறது. “அவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இந்தக் காட்டில் ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு வருகிறான். அவன் திருடன்தான். மறைந்திருக்கு இடம் தேடி இங்கு வந்திருக்கிறான். எத்தனை பேரின் வாழ்க்கையைக் கெடுத்து சம்பாதித்த பணம் அது.அதனால் அவனைக் கொன்று அந்தப் பணத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அப்பா கத்துகிறார்.

அப்பா இப்படி சொன்னதும், அம்மா சட்டென்று ஒரு கூர் கத்தியை எடுத்துக் கொடுத்து கொடுத்து “ நல்ல யோசனை. இவனை தீர்த்துக்கட்டினால் கேட்க யாருமில்லை.பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலத்தை எளிதாக கடந்து விடலாம்” என்கிறாள்.

அப்பா கத்தியைத் தூக்கிக் கொண்டு மர ஏணியில் நடந்து செல்கிறார்.அம்மாவும் பெண்ணும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். பரபரப்பாக நிற்கிறார்கள். அப்பா மாடி ஏறிவிட்டு திரும்ப ஏணியில் இறங்கி வருகிறார். அப்பாவை ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர் கத்தியில் கறையில்லை.

“நீங்கள் ஒரு கோழை. சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாத முட்டாள். நிச்சயம் வரும் குளிர்காலம் நம்மை கொண்டு போய்விடும்” என்று மகள் கத்துகிறாள்.

“என்னால் சுயநினைவில் அவனைக் கொல்ல முடியவில்லை.அதனால் அவன் பணத்தில் கொஞ்சம் எடுத்துப் போய் வோட்கா சாப்பிட்டுவிட்டு வருகிறேன். குடித்து விட்டு வந்து அவனைக் கொல்கிறேன்” என்று சொல்லி கிளம்புகிறார்.

இங்கே அம்மாவும் பெண்ணும் அப்பாவுக்காக காத்திருக்கிறார்கள். சீக்கிரம் வந்து சீக்கிரம் வழிப்போக்கனைக் கொன்று நல்லது செய்வார் என்று பேசிக் கொள்கின்றனர். அப்போது மேலிருந்து அந்த வழிப்போக்கன் இறங்கி வருகிறான். ஏதோ பேசிவிட்டு மறுபடியும் தூங்கப் போகிறான். நன்றாக தூங்கிப் போகிறான்.

அப்பாவுக்காக காத்திருந்த ,’அம்மாவும் பெண்ணும் ’அப்பா நெடுநேரமாகியும் வராதது பற்றி கவலை கொள்கிறார்கள். அந்த அந்த  அரிக்கேன் இருட்டில் அவர்கள் மனம் மட்டும் எதிர்ப்பார்ப்போடு இருந்தது.

குறிப்பிட்ட நேரமாகியும் வரவில்லையே என்ற எரிச்சலில் மகள் சொல்கிறாள் “அம்மா நான் இந்தக் கோடாலியை எடுத்துக் கொள்கிறேன்.நீ உன் பாவாடையின் கீழ்புறத்தை வைத்து அவன் மேல் போட்டு முகத்தை அமுக்கு. நான் கொன்றுவிடுகிறேன்” என்று சொல்கிறாள்.

அம்மாவும் பெண்ணும் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறிப்போகிறார்கள். அதன் பிறகு ஹா என்று கத்தும் குரல் கேட்கிறது.அதன் பின் அடங்கிவிடுகிறது.

அம்மாவும் பெண்ணும் தரைதளத்துக்கு வந்தவுடன், மகள் கோடாலியை எடுத்து வீசுகிறார்ள்.அதில் ரத்தம் இருக்கிறது.

அம்மா புலம்புகிறாள் “ நீ நெஞ்சழுத்தம் மிக்கவள்தான், நான் என் பாவாடையை வைத்து தூங்கிக் கொண்டிருப்பவனின் முகத்தில் அழுத்தினால், நீ கோடாலியை அவன் தலையில் போட்டுக்கொண்டே இருக்கிறாயே. அவன் அடி வாங்க வாங்க அவன் தாயைக் கூப்பிட்டான் தெரியுமா? என்று சொல்லி அழுகிறாள்.

“நான் ஒருதடவை அடித்த பிறகு எனக்கு வேறு வழியில்லை அம்மா. அடித்துக் கொண்ட்டேதான் இருக்க வேண்டியதாயிருக்கிறது. என்னால் நிறுத்த முடியவில்லை. அவன் துன்பத்தைப் பற்றி நினைக்க எனக்கு நேரமோ மனமோ இல்லை” என்று சொல்கிறாள்.

இப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத்திறந்தால் அப்பா. அப்பாவுடன் ஒட்கா விற்கும் கடைக்காரரும் வருகிறார். அப்பா உற்சாகமாக வருகிறார். அம்மாவிடம்  “இந்த ஒட்கா கடைக்காரர் ஒரு விசயம் சொல்வார்  கேட்டுக் கொள் “ என்று அந்த குடிபோதையிலும் மகிழ்ச்சியாக சொல்கிறார்.

ஒட்கா கடைக்காரர் சொல்கிறார். 

”என் கடைக்கு ஒருவன் வந்தான். அவன் பதிமூன்று வயதில் இந்த ஊரைவிட்டு ஒடிப்போய்விட்டானாம். இப்போது திரும்பியிருக்கிறான். அவனுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்கிறது. 

உங்கள் மகன் பதிமூன்று வயதில் ஒடிப்போய் விட்டதாக அடிக்கடி சொல்வீர்களே. அவன்தான் திரும்பி என் கடைக்கு வந்திருக்கிறானாம். எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் உங்களின் மகனைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அவனிடம் உங்கள் வீட்டைப் பற்றிச் சொன்னேன்.”

அவன் சொன்னான்.

“நான் வழிப்போக்கனாக எங்கள் வீட்டுக்கு செல்லப் போகிறேன். ஒருநாள் இரவு வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை” நான்தான் உங்கள் மகன்” என்று சொல்லி என் தாய் தந்தை தங்கையை சேர்ந்து விடுவேன். அதன் பின் மகிழ்ச்சியாக என் வாழ்க்கை ஒடும். இதைத்தான் குடிக்க வந்த உங்கள் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சொல்ல

அப்பா மகனைத்தேடி மாடிப்படியில் ஏறுகிறார். கிழே அலறியபடி “கொன்றுவிட்டீர்களா” என்று கத்துகிறார்.

“என் மகன் மகன் “ என்று கதறுகிறாள் அம்மா. மகளும் அழுகிறாள்.

“நான் என் பாவாடையை வைத்து அவன் மூச்சை நிறுத்தும் போது கூட அவன் அம்மாவைத்தானே நினைவு கூர்ந்தான் “ என்று சொல்லியபடி அம்மா மயங்கிவிழுகிறாள்.

இருட்டில் விளக்கு ”அப்படியே” எரிந்து கொண்டிருந்தது...

Monday, 15 September 2014

பேசும் பொம்மைக்கிளிகள்

முதன் முதலில் பேட்டரியால் இயங்கும் விளையாட்டு சாமான் என்று என் மகளுக்கு எதை வாங்கிக் கொடுத்தேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

கண்டுபிடித்துவிட்டேன்.

நுங்கப்பாக்கம் பாலம் பக்கம் ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தின் கீழ்தளத்தில் ? ஒரு காம்பெளக்ஸ் இருக்கிறது. அங்கே சிடிக்கள், செண்ட் பாட்டில்கள் மற்றும் பல வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்கும்.

அங்கே உலக சினிமாக்கள் சிடி வாங்குவதற்காக போயிருந்தேன்.ஒன்றிரண்டு வாங்கிக்கொண்டிருந்த போது என் பக்கத்தில் நின்ற வயதானவரின் நட்பு கிடைத்தது.

அவர் பழைய உலக சினிமா ஒன்றின் கதையை சொன்னார்.சரியாக ஞாபகமில்லை “ ஒரு சிஸ்டர் இருக்காங்க, இறைப்பணி என்ற மக்கள்த் தொண்டு செய்றாங்க.போர் சமயத்துல அவுங்க நடுநிலமையோட அவுங்க வேலைய செய்ய முடியாம போக அவுங்க தன் சிஸ்டர் வேலையை அல்லது இறைத்தொண்டர் வேலையையே விட்டுட்டு வந்துர்ராங்க” என்று சொன்னார்.

அருமையாக இருந்தது.அவரிடம் பேசினேன். அவர் ரிட்டைர்ட் வாத்தியார் என்றும் மகள் வீட்டில் பொழுது போகாமல் இருப்பதாகவும் சொன்னார்.அவரிடம் பேசித் திரும்பும் போதுதான் அந்தக் கிளியைப் பார்த்தேன்.

மஞ்சளும் சிகப்பும் கலந்த வெல்வெட் கலந்த உடலைக்கொண்ட பேசும் பொம்மைக் கிளி அது. அதை பார்த்த உடன் அதன் உடலை வருடச்சொல்லும் உயிர்ப்பைக் கொண்டிருந்தது.

நான் போய் விலை விசாரித்தேன். 350 ரூபாய் என்றார். பின் விலையைக் குறைத்து 250 ரூபாய்க்கு வாங்கினேன். பேட்டரியைப் போட்டு கிளியின் முன்னால் பேசச்சொன்னார்.

நான் “ஹலோ” என்றேன். அந்தக் கிளியும் “ஹலோ” என்றது.

நான் “ ஆமா அப்படித்தான்” என்றேன். அந்தக் கிளியும்” ஆமா அப்படித்தான்” என்றது.

அதற்கென்று எந்த சொந்த சிந்தனைமுறையும் கிடையாது.ஆனால் நாம் சொன்னதை அது திரும்பச் சொல்லும். அப்படிச் சொல்வதைக் கேட்க உண்மையிலே சொல்வது போன்றுதான் இருக்கும்.

அதை வைத்து என் மகள் விளையாடுவதை விட நான் தான் அதிகம் விளையாடினேன். யாரும் இல்லாத சமயத்தில் சில நயம் கெட்ட வார்த்தைகளைச் சொல்வேன். அதுவும் சொல்லும்.

அதன் பின் எப்படியோ அந்தக் கிளி உடைந்து போய்விட்டது. மறுபடியும் அந்தக் கிளியை வாங்கப் பிடிக்கவில்லை.என் மகளும் அந்த வயதைக் கடந்து விட்டாள்.நானும் எனக்காக பேசும் கிளி பொம்மையை வாங்க முடியாது.

இனி எப்படா அந்த பேசும் பொம்மைக் கிளி பொம்மையைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது அந்தக் கவலையில்லை. ஃபேஸ்புக்,பிளாக்,இலக்கியம் அனைத்திலும் எழுத்தாளர்கள் அது மாதிரி பேசும் பொம்மைக்கிளிகளை நிறைய வளர்க்கிறார்கள்.

அந்த பேசும் பொம்மைக்கிளிகள் எழுத்தாளர்கள் சொல்வதை அப்படியே சொல்லும். அப்படியே அட்சரம் பிசுகாமல் பேசும்.

அது மாதிரி பேசும் பொம்மைக் கிளிகளை அதிகம் வளர்ப்பவர் மனுஷ்யபுத்திரன்.

அடுத்து சாரு நிவேதிதா. சாரு நிவேதிதா வளர்க்கும் பேசும் பொம்மைக்கிளிகள் அனைத்தும் அப்படி அழகாக பேசும்.

அடுத்து ஜெயமோகன் வளர்க்கும் பேசும் பொம்மைக்கிளிகள்.இவைகள் ஞானச்செருக்கோடு கூடிய பாவனையை வெளிப்படுத்தும்.

பாலகுமாரனின் பேசும் பொம்மைக்கிளிகளோ அன்பாகவே பேசும்.

இது மாதிரி என்னுடைய பேசும் பொம்மைக்கிளிகளை ரசிக்கும் ஆர்வம் தீர்ந்தது...

Friday, 29 August 2014

புக்கர் பரிசுக்கான போட்டி நாவல்கள்...

2014 ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு போட்டியில் தேர்வான முதல் கட்ட லிஸ்டை எடுத்து (13 நாவல்கள்) அதன் அடிப்படைக் கதையை பிரவுஸ் செய்து அதை மிகச் சுருக்கமாக எழுதினேன்.

இதில் ரொம்ப ரொம்ப சின்னதா எழுதியிருக்கிறேன் தமிழிலில்.

கதையில் தப்பு இருக்கலாம்.முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....

1.History of the Rain  எழுதியவர்  Niall Williams ஐரிஷ் எழுத்தாளர்
 
தன் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும் ரூத் ஸ்வெயின் என்ற பத்தொன்பது வ்யதுப் பெண், தந்தையின் அந்தரங்க எழுத்துக் குறிப்புகளைப் படிக்கிறாள்.தன் மூதாதயரையைப் பற்றி அவர்கள் வாழ்க்கைமுறை எல்லாம் தெரிந்து கொள்கிறாள். அப்படித் தெரிந்து கொள்ளும் போது அது அவள் வாழ்க்கையைப் போல ஒரு வாழ்க்கையாய் இருக்கிறது.

2.How To Be Both எழுதியவர் Ali Smith ஸ்காட்லாந்து எழுத்தாளர்

1490 யில் வாழும் ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஒவியர் பற்றி ஒரு பகுதியும். 1960 ஆம் ஆண்டு தன் அம்மாவை பறிகொடுத்த பெண்ணைப் பற்றி இன்னொரு பகுதியும் நாவலில் தனித்தனியே போகின்றன. குறிப்பிட்ட இடத்தில் இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

3.J எழுதியவர் Howard Jacobson ஆங்கில எழுத்தாளர்

தங்கள் குடும்பங்களில் பின்புலம் வரலாறு அறியாத ஆணும் பெண்ணும் காதல்கொள்கின்றனர். ஏன் அவர்களிடம் அவ்வரலாறுகள் மறைக்கப்படுகின்றன.அவர்கள் காதலின் தன்மை பற்றி நாவல் அலசுகிறது.

4.Orfeo  எழுதியவர் Richard Powers அமெரிக்க எழுத்தாளர்

எழுபது வயதான ”பீட்டர் எல்ஸ்” தன் நாய் மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீஸுக்கு சொல்ல, அதை விசாரிக்க வந்த போலீஸ் எல்ஸ் தன் பொழுது போக்கிற்காக வைத்திருக்கும் புதிய விநோதமான சாதனம் மேல் சந்தேகம் கொள்கிறது. இசையையும் டி.என்.ஏ அறிவியலையும் அடிப்படையாக கொண்ட நாவல்.

5.The Blazing World எழுதியவர் Siri Hustvedt அமெரிக்க எழுத்தாளர்

நியூயார்கைச் சேர்ந்த பெண் ஒவியர் தன்னுடைய படைப்புகள் விமர்சகர்கரால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதை கண்டு வேதனையடைகிறார்.பிரபலமான மூன்று சம கால ஆண் ஒவியர்கள் பெயரில் தன் ஒவியத்தை முன்நிறுத்துகிறார். அதன் விளைவுகள் பற்றிப் பேசும் நாவல் இது.

 6.The Bone Clocks எழுதியவர்  David Mitchell ஆங்கில எழுத்தாளர்

பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஒடிப்போகும் ஹோலி என்னும் பெண்ணின் வாழ்க்கையி்ல் நடக்கும் அடுத்த அறுபது வருடங்கள்தான் நாவல்

7.The Narrow Road to the Deep North எழுதியவர்  Richard Flanagan
ஆஸ்திரிலேலிய எழுத்தாளர் ( தாஸ்மானியா)

இரண்டாம் உலகப்போரில் சந்தர்ப்பவசத்தால் ஜப்பானியர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்ளும் ஆஸ்த்திரேலிய டாக்டர் கதாப்பாத்திரம் பற்றி விவரிக்கும் நாவல்.பலர் உயிரைக் குடித்த பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணிகள் கொடுமை பற்றிய  விவரிப்புகளும் உண்டு.

8.The Lives of Others எழுதியவர் Neel Mukherjee இந்திய  எழுத்தாளர்

கல்கத்தா மத்திய தர மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல்.

9.The Dog எழுதியவர் Joseph O'Neill ஐரிஷ் எழுத்தாளர்

தன் காதலியை இழந்த வக்கீல் ஒருவர், தன் நண்பனின் சிபாரிசில் துபாயில் இருக்கும் கோடீஸ்வர குடும்பத்தின் ஆலோசகராக வேலைக்கு செல்கிறார்.
அங்கே அவர் சந்திக்கும் அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர்.

10.The Wake எழுதியவர் Paul Kingsnorth ஆங்கில எழுத்தாளர்

1066 யில் ஆங்கிலோ சாக்சன்களை வீழ்த்தினர் நார்மண்டிகள். வில்லியம் டியூக் திறமையாக அந்தப் போரை வழிநடத்தினார். அதை ”பேட்டில் ஆஃப் ஹேஸ்ட்டிங்ஸ்” என்பார்கள். அதை பின்புலமாக கொண்ட நாவல்.

11.Us எழுதியவர் David Nicholls ஆங்கில எழுத்தாளர்

தன்னை வேறாக பார்க்கும் மகனிடத்து எப்படி அன்பால் நெருங்குவது தவிக்கும் அப்பாவைப் பற்றியதும், தன் மனைவியிடம் எப்படி இன்னும் அன்பாய் பழகுவது என்று ஆர்வமாகும் கணவனைப் பற்றிய கதையாகும். அன்பு பாசம் என்று விவரிக்கும் நாவல்

12.To Rise Again at a Decent Hour எழுதியவர் Joshua Ferris
அமெரிக்க எழுத்தாளர்

பால் ரூர்கே என்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த உலகைப் பிடித்திருக்கிறது.ஆனால் அதில் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. வாழ்க்கையை எதிர் எதிர் துருவங்களில்  வைத்து விட்டவனாக முரண்பாடாக வாழ்கிறான்.அவனைப் பற்றிய கதை.

13.We Are All Completely Beside Ourselves எழுதியவர் Karen Joy Fowler
அமெரிக்க எழுத்தாளர்

சிறுவயதில் கலகலப்பாக இருக்கும் ரோஸ்மேரி குக் என்ற கதாபாத்திரம் பெரியவளானதும் அதிகமான அமைதியை கொண்டிருக்கிறாள். அவள் ஏன் தன்னை மவுனத்தில் திணித்து வைத்திருக்கிறாள் என்பதை பற்றிய கதை.

செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த 13 லிஸ்ட் ஆறாகும்.

அக்டோபர் 14 ஆம் தேதி மேன் புக்கர் பரிசுப் பெற்றவரை அறிவிப்பார்கள்.

நாம ஃபாலோ அப் செய்வோமே...


Tuesday, 26 August 2014

குளவியும் நானும்...

என்னைக் கொட்டிய குளவி என்னைப் பார்த்து கொண்டே இருந்தது.அது என்னைக் கொட்டியவுடன், அதை அடித்து விட்டேன்.குளவி தன் உயிரை விடப் போகும் போது பேசியது.

குளவி:நான் உயிரை விடப் போவது துரதிஷ்டமானாதுதான்.எனக்கென்று வாழ்க்கையில் சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தன.
நான்:நீ என் கழுத்தில் கொட்ட முயற்சி செய்தாய்.அதனால் அனிச்சை செயலாய் உன்னை அடித்தேன்.
குளவி:நான் கொட்ட முயற்சி செய்யவில்லை.நம் இருவரது உடலும் தொட்டுக்கொண்டன.நான் கொட்ட முயற்சி செய்தால் இப்படி வரமாட்டேன்.இதை விட ஆக்கிரோசமாக வருவேன்.
நான்:ம்ம்ம்
குளவி: யோசிக்க யோசிக்க தவறு உன்னுடையது என்றுதான் தோன்றுகிறது.
நான் : எப்படி ?
குளவி: சிறுநீர் கழிக்க நீ இந்த ஆளில்லாத தெருமுனைக்கு வந்தாய்.வந்தவன் தைரியமாக நிமிர்ந்து நின்று கழிக்க வேண்டியதுதானே.நீ குளவிகள் சுற்றும் முற்றும் இருப்பதைப் பார்த்து தலையை குனிந்து உன் உடலை தாழ்த்தி சிறுநீர் கழித்தாய்.அப்போது நடந்தது என்ன ? நீ உன் வெளியை உனக்கான வெளியை, உன் உடல் பருப்பொருள் ஆக்கிரமித்திருக்கும் வெளியை தாழ்வுமனப்பான்மையாலும், பயத்தினாலும் விட்டுக்கொடுக்கிறாய்.
குளவியாகிய நான் பறப்பவன்.எனக்கு ஒரு வெளி அடைக்கப்படாமல் இருந்தால் அது நான் பறக்கும் இடம்தான். நான் அப்பாவியாய் பறந்தேன் உன் தலைக்கு மேல். திடீரென்று நீ உன் தலையை நிமிர்த்தும் போது, என்னுடல் உன் மேல் மோதிற்று.ஏற்கனவே குளவிகள் பற்றிய உன் பய முன்கருத்தினால், உன் உடலை சிலிர்த்தாய்.அதே வேகத்தில் உன் கையில் இருக்கும் நோட்டு புத்தகத்தினால் என்னைத் தாக்கி இதோ தரையில் போட்டிருக்கிறாய். உன்னுடைய தன்னம்பிக்கையின்மை என் உயிருக்கு ஆபத்தாய் போய்விட்டது.
நான்: எனக்கு அழுகை வருகிறது. நான் உன்னை வெறுப்பு குரோதம் எதுவுமில்லாமல் முட்டாள்தனத்தால் கொன்றுவிட்டேன்.இப்போது நான் என்ன செய்ய குளவி.
குளவி:தயவு செய்து நான் இறந்த பிறகு அழுதுவிடாதே.கவிதையாய் எதுவும் எழுதிவிடாதே.கல்வெட்டு, ஒவியம் என்று தீட்டிவிடாதே.பொது இடத்தில் இந்த சம்பவத்தைச் சொல்லி உன் குற்ற உணர்ச்சியை பறைசாற்றி ”உன்னை” ”என்னை” பிரபலப்படுத்தி புனிதப்படுத்திவிடாதே.எனக்கு அதில் விருப்பம் இல்லை.இறப்பு என்பது என் இனத்தில் சாதரண ஒன்று.
நான்: ம்ம்ம்
குளவி: நான் சொல்ல வருவதெல்லாம் மனிதா! உன் வெளியை தைரியமாக அடைத்துக் கொள்.மரியாதை மட்டு மாங்கொட்டை அன்பு பாசம் என்று உன் வெளியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே.தன்னடக்கம் என்ற பெயரில் உன் வெளியை நீ குறுக்கிக் கொள்ளும் போது, இன்னொருவர் அது பொதுவெளி என்று உலவக்கூடும்.திடீரென்று உன் வெளியை நீ ஆக்கிரமிப்பு செய்யும் போது, இப்போது போல் இருவரும் மோதிக் கொள்ளலாம்.அது இருவருக்கும் எரிச்சலைக் கொடுக்கலாம்.
இப்படி சொல்லி குளவி கண்ணை மூடியது.பெருவிரல் நகத்தால் அதை மண்ணுக்குள் அழுத்தி மூடிவிட்டு நடந்தேன்.

Saturday, 16 August 2014

இயல்பு...

சட்டென்று, 

உன் நெற்றியில் முத்தமிட்டால்

அதை அனுமதித்துவிடு.

ஒரு கால் மழைத்துளி,

ஆயிரம் லட்சம் கால்களாய்,

தரையில் குதிப்பதான இயல்பு அது...

Buffon's needle problem.

இருநூறு ஆண்டுகள் முன்னால், ப்ரெஞ்சு கணித அறிஞர் பஃப்பன் ( Buffon) ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக் கொண்டார்.

அதில் சம இடைவெளி விட்டு நீள கோடுகளை வரைந்து கொண்டார்.அதன் மேலே ஊசிகளை ரேண்டம் (Random) ஆக தூவினார்.

பேப்பரில் வரைந்திருக்கும் கோடுகளின் மேல் எத்தனை ஊசிகள் பட்டிருக்கின்றன. படாமல் எத்தனை ஊசிகள் இருக்கின்றன என்று ஆராய்ந்தார்.

அதன் பின்னால் எதாவது அறிவியல் இருக்கிறதா என்று யோசித்தார். அதுதான் புகழ்பெற்ற Buffon's needle problem.

பேப்பரில் வரைந்திருக்கும் நீளமான சம இடைவெளி கோடுகளுக்கிடையே, இருக்கும் இடைவெளியை விட,
ஊசியின் நீளம் பெரிதானால், கிட்டத்தட்ட எல்லா ஊசிகளும் கோடுகளை தொட்டுக் கொண்டுதான் இருக்கும்.

அதனால் Buffon's needle problem த்தின் முக்கிய அம்சமாக நீளக் கோடுகளுக்கிடையே இருக்கும் இடைவெளியை விட, ஊசியின் நீளம் குறைவு என்றே எடுத்துக் கொள்வோம். ( ஒரு Ruled note ல குண்டுப் பின்ன போடுறத நினைச்சிக்கோங்க. குண்டுப்பின்னோட நீளம், ரூல்டு கோடுகளின் இடைவெளியை விட குறைவு சரியா)

அப்படிப் போட்டு ஆராய்ச்சி செய்தா இப்படி ஒரு வாய்ப்பாடு தோராயமா கிடைக்குது.



ஊசி குறுக்கே விழும் நிகழ்வு எண்ணிக்கை P = (2/π)( L / d)

இதுல

L = ஊசியோட நீளம்
d = இரண்டு கோடுகளுக்குள்ள இருக்கிற இடைவெளி

P = ஊசி எத்தனை முறை கோட்டில் விழுந்தது என்பதை, எத்தனை முறை ஊசி போடப்பட்டது என்பதால் வகுத்தால் கிடைப்பது ”P” ஆகும்

இதே வாய்ப்பாட இப்படியும் எழுதலாம்  π= (2 / P)( L / d)

”பை” யோட மதிப்பு நமக்கு தெரியும்தானே 3.14

இப்போ பஃப்பனோட இந்த வாய்பாடு சரியா தப்பா அப்படின்னு லாசாரினி  Lazzarini ங்கிறவரு சோதனை போட்டாரு.

லாசாரினி என்ன செய்தாரு...

5 மில்லி மீட்டர் அளவுள்ள ஊசிய எடுத்துக் கிட்டாரு... அத 6 மில்லி மீட்டர் இடைவெளி உள்ள கோடுகள் கொண்ட பேப்பரில் போட்டுப் பார்த்தாரு.

நல்லா கவனியுங்க...  5 மில்லி மீட்டர் என்பது 6 ஐ விடக் குறைவு. முதல்லே இந்தக் கண்டிசன சொல்லிருக்கிறோம்.

சரி ஊசியப் போட்டாரா... எத்தன வாட்டிப் போட்டாரு.  3408 தடவ போட்டாராம்.

அதுல ஊசி எத்தன தடவ கோட்ட தொட்டுச்சாம்.  1808 தடவ தொட்டிச்சாம்

அப்ப N = 1808/3408 = 0.53 ஆகும்

இப்ப இந்த மதிப்புள்ள வாய்ப்பாட்ல அப்ளை செய்யலாம் (2 / P)( L / d) = (2/0.53)(5/6)= 3.14

இப்படியும் ”பை” யின் மதிப்பை கண்டறியலாம்.

இது ரொம்ப ரொம்ப எளிதான ஆரம்பம்தான். முடிந்தவரை புரியும் படி கூறியிருக்கிறேன்.

Geometric probability என்ற துறையின் அடிப்படை இது என்று நினைக்கிறேன்.

இதை படித்து புரிந்து கொண்ட போது மிகுந்த மனநிறைவை அடைந்தேன்...


Sunday, 10 August 2014

அப்படியானது உலகம்

கலகலப்பான, ”நம்முடைய உணர்வை பிறர் மீது செலுத்தக் கூடாது” என்ற கொள்கையை உடையவர்களை உலகோர் விரும்புவார்கள்.
நம்முடைய உணர்வை பிறர் மீது செலுத்துவது என்றால் என்ன ? வீட்டில் சண்டை நடந்திருக்கும். மொக்கையான மூடில் வீட்டில் இருப்பார். ஆனால் ஆபீஸ் வந்தால் அந்த எரிச்சலை சக ஊழியரிடம் ஏதோ விசயத்தில் சின்ன அளவாக கூட பிரதிபலிக்க மாட்டார்.இப்படி ஒருவர் இருந்தால் அதுதான் “நம்முடைய உணர்வை பிறரிடம் செலுத்தாத” தன்மையாகும். வீட்டில் என்னுடன் சண்டையிட்டது என் மனைவி அல்லது அம்மா. அந்த கோபத்தை யாரோ ஒருவரிடம் எப்படி நான் பிரதிபலிக்க முடியும் என்று இவர்கள் நினைப்பார்கள்.

ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் இப்படி நினைப்பதில்லை. யார் மீதோ உள்ள கோபத்தை யாரிடமோ காட்டுவார்கள். அதனால் யார் மீதோ உள்ள கோவத்தை யார் மீதோ காட்டாத பக்குவபட்டவர்களை உலகோர் மிக அதிகமாக நேசிப்பார்கள்.

இப்படி கலகலப்பாக பழகும் மனிதர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது உலகத்தோர் அவனுக்கு “செல்லக்கிறுக்கன்” பட்டத்தை மானசீகமாக வழங்கிவிடுவார்கள்.என்றாவது ஒருநாள் அவனுடைய உணர்வுகள் காயப்பட்டு அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவனுக்கு யாருமே இருக்கமாட்டார்கள்.எல்லோரும் அவனை பக்குவப்பட்டவனாக,கலகலப்பானவாக நினைத்து,” உனக்கா ? மனக்கஷ்டமா? ஒஹ்ஹோ” என்று சிரித்தபடி கடந்துவிடுவார்கள். இது அவனுக்கு கிடைக்கும் முதல் அடி.

இரண்டாவது அடிதான் கொடுமையானது. அவன் எப்போதும் சிரிப்பவனில்லையா? எப்போதும் பக்குவப்பட்டவனில்லையா? அதனால் அவன் எப்போதாவது கோபப்பட்டாலோ அல்லது கவலையோடு இருந்தாலோ அதையும் உலகம் வெறுக்கும். “இவன் என்ன கலகலப்பாக ஜாலியாவே இருக்க மாட்டேன் என்கிறான்.இவன் அப்படி இருந்தால்தானே நமக்கெல்லாம் மகிழ்ச்சி.இவன் ஏன் நல்லா போயிட்டிருக்கிற சிஸ்டத்த சிதைக்கிறான்” இதுமாதிரியான அடிதான் அவனுக்கு கிடைக்கும் இரண்டாவது அடி.

கோமாளியின் சிரிப்பைத் தவிர வேறு சாய்ஸ் இல்லைதானே.

ஆஸ்கார் வைல்ட் எழுதிய “இன்ஃபாண்டாவின் பிறந்தநாள்” என்ற கதை கிட்டத்தட்ட இது மாதிரி வரும்.

12 வயதான ”இளவரசி இன்ஃபாண்டாவின்”, பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடுவார்கள்.இளவரசியும் ஆங்காங்கே விளையாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருப்பாள்.அங்கே இளவரசியை ஈர்ப்பது ஒரு குள்ளனின் நடனம். அந்தக் குள்ளனை பார்கக் அசிங்கமாக இருப்பான். அவனைச்சுற்றி கூட்டம் கூடியிருக்கும். அவன் உயரமின்மைக்கும் அசிங்கத்துக்கும் அவன் ஆடும் நடனம் சிரிப்பாக இருக்கும்.அவன் காட்டில் அலைந்து திரிந்த போது, அவனைப் பார்க்க விநோதமாய் இருக்க அந்நாட்டின் தளபதி, குள்ளனை அவன் தந்தையிடம் விலைக்கு கேட்க, இத்தனை நாளும் ஒன்றுக்கும் உதவாத குள்ளப்பிள்ளையை சந்தோஷமாக விற்கிறான் அவன் தந்தை.

குள்ளன் இங்கே இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு ”எண்டர்டெயின்மெண்ட் எலியாக” ஆடிக்கொண்டிருக்கிறான். பார்ட்டி முடியும் போது குட்டி இளவரசி இன்ஃபாண்டா சொல்கிறாள் ”நீ நன்றாக ஆடுகிறாய். உன்னுடன் இன்னொருநாள் நான் விளையாட நடனமாட விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். குள்ளன் துள்ளுகிறான். துடிக்கிறான். இளவரசியே ஆட விரும்புகிறாள் என்று சொல்லி, அரண்மனைக்குள் போகிறான். அங்கே இளவரசியின் அறை இருக்கிறது. அதுனுள்ளே போகிறான். அறையுனுள்ளே அவனுடைய உருவத்தைப் பார்க்கிறான்.

இதுவரை குள்ளன் நிலைகண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தே இல்லையாதலால் அதிர்ச்சியடைகிறான்.அவனுடைய அசிங்கமான உருவம் அவனுக்கு அப்போதுதான் புரிகிறது. உள்ளத்தில் உறைகிறது. அவமானப்படுகிறான். கதறுகிறான். அவனுக்கு புரிகிறது ஏன் பார்ட்டியில் அவனைப்பார்த்து அனைவரும் சிரித்தார்கள் என்று . ஏன் அவன் அப்பா அவனை விற்றார் என்று புரிகிறது. இளவரசியின் அன்பு என்று நினைத்திருந்தது உண்மையில் அன்பில்லை அது ஒரு வேடிக்கை பார்க்கும் மனப்பான்மைதான் என்று தெரிந்த போது அவன் துக்கம் உச்சமாகியிருந்தது.

அப்படியே அழுகிறான்.சத்தமாக அழுகிறான்.தரையில் விழுகிறான். தரையை தன் கையால் அடித்து அடித்து அழுகிறான். குள்ளன் உணர்வுப்பூர்வமாக தரையை அடித்து அடித்து அழுதுகொண்டிருக்கும் போது இளவரசி வருகிறாள். அவளுக்கு அவன் அப்படி அழுவதும் ஒரு விளையாட்டாக நடனமாகத் தெரிகிறது. இளவரசி சிரிக்கிறாள். ரசிக்கிறாள்.

பின் குள்ளனை எழுந்து அவளுடன் விளையாடக் கூப்பிடுகிறாள். குள்ளன் எழுந்திருக்கவில்லை. அப்போது இளவரசியின் மாமா ஒரு பிரபு வருகிறார்.அவரிடம் இளவரசி குள்ளனை எழுப்பச் சொல்கிறாள். அவர் எழுப்ப எழுப்ப எழும்பாமல் இருக்கிறன் குள்ளன்.

அவர் குள்ளன் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கிறாள். குள்ளனின் இதயம் சோகத்தால் நின்று விட்டிருக்கிறது.

இளவரசி மாமாவிடம் கேட்கிறாள் “ ஏன் மாமா இவன் எழுந்திருக்க மாட்டான்” 

“அது இவன் இனிமே எழுந்திருக்க மாட்டான்மா... அவனோட குட்டி இதயம் உடைஞ்சு போச்சு” என்று சொல்வார்.

“இனிமே என்கூட யாராவது விளையாட வர்றாங்கன்னா அவங்களுக்கு இதயமே இருக்ககூடாது ஆமா” என்று சலித்தபடியே செல்கிறாள் குட்டி இளவரசி இன்ஃபாண்டா.

குள்ளனின் சேட்டைகளை கோமாளித்தனத்தை ரசித்த உலகத்துக்கு அவனுடைய உணர்வுகள் கடைசிவரை புரியவில்லை.

அப்படியானது  உலகம். .

Sunday, 3 August 2014

இச்சையும் காதலும் துரோகமும் - சலோமி...

ஆஸ்கர் வைல்டு எழுதிய “சலோமி” என்ற சர்ச்சைக்குரிய குட்டி நாடகத்தை அகிலன் “தாகம்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

படிக்க நல்ல அனுபவமாக இருந்தது.அதன் கதைச் சுருக்கத்தை சொல்ல விரும்புகிறேன். வைல்டு இதை கற்பனைக் கதையாகவே எழுதியுள்ளார்.

ஹெராட் மன்னன்,ஆளும் நாட்டின் பேரழகியாக இருக்கிறார்  இளம்பெண் சலோமி.

ஹெராட் சலோமியின் அப்பாவான, தன்” சொந்த அண்ணனை” சிறைக்கு அனுப்பிவிடுகிறான். அண்ணன் மனைவியான ஹெரோதியஸை திருமணம் செய்து கொள்கிறான்.

ஹெரோதியஸும்  ஹெராட் மன்னனை காதலிக்கவே செய்கிறாள். ஹெரோதியஸின் ஒரே கவலை தன்னுடைய பேரழகு மகள் சலோமி மேல்தான்.

சலோமியின் அழகைப்பற்றி தேசமே பேசுகிறது. ஹெராட் சலோமியின் சிற்றப்பன் ஆனாலும் சலோமியின் அழகு அவனை ஈர்க்கிறது.

சலோமி மேல் காதல் கொள்கிறான்.ஆனால் ஹெரோதியஸுக்காக அதை வெளிப்படுத்தாமல் எரிச்சலுடன் இருக்கிறான்.

ஹெராட் கொடுக்கோல் ஆட்சி செய்கிறான்.மக்களின் உணர்வுகளை மதிப்பதே இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று விடுகிறான்.

அப்படி அவனை கடுமையாக எதிர்த்து, கொல்லப்படாமல் இருக்கும் ஒரே மனிதர் ஞானி மற்றும் தீர்க்கதரிசி ஜோகனான். ஜோகனானுக்கு ஹெராட்டைப் பற்றிய எல்லா ரகசியங்களும் தெரியும்.

ஹெராட் தன் அண்ணனை சதி செய்து அண்ணியை திருமணம் செய்து கொண்டது பற்றி ஜோகனான் கோபமாக எதிர்ப்பை தெரிவித்து சிறையில் இருக்கிறார். ஹெராட் அவரைக் கொல்ல பயப்படுகிறான்.

அவரிடம் இருக்கும் ஞானத்தன்மை பற்றிய பயமோ மரியாதையோ அவனை கொல்லவிடாமல் செய்கிறது. ஆனால் ஜோகனான் சிறையில் இருந்து விடாமல் ஹெரோதியஸை சாடுகிறார் ஜோகனான். யூதர்கள் அவரை தங்கள் ஆசானாக பார்க்கிறார்கள்.

ஜோகனான் விடாமல் சொல்கிறார் “என்னைவிட அறிவிலும் தீர்க்கதரிசனத்திலும் சத்தியத்திலும் சிறந்தவன் வரவிருக்கிறான். அப்போது என்ன செய்வீர்கள் பதர்களே “ என்று.

ஹெரோதியஸுக்கு இது பிடிக்கவே இல்லை. எப்படியாவது ஜோகனானை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள்.ஆனால் அவளால் அது முடியவில்லை.

சலோமிக்கு ஞானி ஜோகனானைப் பார்க்க ஆசை.ஆனால் ஹெராட்டின் கண்காணிப்பில் அது முடியவில்லை. தன்னை காதலிக்கும் “நாராபாத்” என்ற சிரிய நாட்டு இளைஞனிடம் காதல் வசனம் பேசி அவனை தூண்டி, ஜோகனானைப் பார்க்கும் தன் ஆசையைச் சொல்கிறாள். நாராபாத்தினால் சலோமியின் ஆசையைத் தட்ட முடியவில்லை. மிகுந்த பிரயத்தனப்பட்டு சலோமியை பாதாளச் சிறைக்கு கூட்டிச் செல்கிறாள்.சலோமி ஜோகனானைப் பார்க்கிறாள்.

ஜோகனானின் அழுக்கும் ஞானமும் அவளை ஈர்க்கின்றன. ஜோகனான் மேல் மிக மிஞ்சி வெறுப்பும், மிக மிஞ்சிய காமமும் காதலும் விநாடிக்கு விநாடிக்கு மாறி மாறி  வருவதை உணர்கிறாள் சலோமி. சலோமியால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் காதலை ஜோகனானிடம் சொல்கிறாள்.

ஜோகனான் நிராகரித்து ”தூய்மையற்றவளே “ என்று திட்டுகிறார்.சலோமி ஜோகனின் உதட்டில் ஒரே ஒரு முத்தம் கொடுக்க ஆசை கொண்டு கேட்கிறாள். ஜோகனான் சலோமியின் காதலைப் புரிந்து கொள்ளாமல் விரட்டியடிக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிரிய நாட்டு இளைஞன் நாராபாத் மனம் வேதனையுற்று தற்கொலை செய்து கொள்கிறான்.

சலோமியால் ஜோகனான் மேலிருக்கும் காதலை தட்டிவிட முடியவில்லை. தொடர்ந்து அது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறாள்.

நல்ல நிலவின் குளிர்ச்சியில் ஒரு விருந்து நடக்கிறது. ஹெராட் மன்னன் சலோமியையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹெரோதியஸ் தன் மகளையும் கணவனையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

ஹெராட் சலோமியிடம் நடனம் ஆடுமாறு கெஞ்சுகிறான்.

சலோமி மறுக்கிறாள்.

ஆனால் ஹெராட்டினால் தாங்க முடியவில்லை “தயவு செய்து ஆடு சலோமி” என்று கெஞ்சுகிறான். சலோமி தான் ஆடினால் தனக்கொரு வரம் தரவேண்டுமென்று கேட்கிறாள். ஹெராட் சம்மதிக்க சலோமி தன் பேரழகு பரிமளிக்க நடனமாடுகிறாள்.

அம்மா ஹெரோதியஸ் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நடனம் முடிந்தது ஹெராட் சலோமியின் அழகால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு ”உனக்கு என்ன வேண்டும் கேள்” என்கிறான்.

சலோமி ”எனக்கு ஞானி ஜோகனானின் தலை வேண்டும்” என்று கேட்கிறாள். இதைக்கேட்டதும் ஹெராட் நடுங்குகிறான். ஆனால் அம்மா ஹெராதியஸ் மகிழ்கிறாள்.

ஹெராட் ,சலோமியிடம் கெஞ்சுகிறான்.தன் நாட்டில் பாதி கூட கொடுத்து விடுவதாக சொல்கிறான்.ஆனால் சலோமி பிடிவாதத்தை விடுவதாயில்லை. பிடிவாதமாயிருக்கிறாள். முடிவில் ஹெராட் ஜோகனான் தலையை வெட்டிக் கொண்டு வரச் சொல்கிறான்.

ஜோகானானின் துண்டித்த தலையை தட்டில் வைத்து சலோமிக்கு கொடுத்து விடுகிறார்கள்.

சலோமி அந்தத் தலையின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ”இதோ என்னுடைய காதலன். எதிர்ப்பு தெரிவிக்காத அழகன். என்ன அழகான உதடு” என்று உலகின் அத்தனை காதல் உணர்வையும் திரட்டி ஜோகானானின் வெட்டப்பட்ட தலையின் உதடுகளை சுவைக்கிறாள்.

ஹெராட்டினால் அந்தக் காட்சியை பார்க்க முடியவில்லை.

சலோமியின் தலையையும் வெட்டச் சொல்கிறான். சலோமியின் துண்டிக்கப்பட்ட தலை ஜோகானானின் தலைப் பக்கம் திரும்பி விழுகிறது.

இந்தக் நாடகத்தில் துரோகமும் காதலும் பின்னிப்பிணைந்திருப்பதைப் பார்க்கலாம்.

- ஹெரோதியஸ் தன் கணவனை சதி செய்து சிறைக்கு அனுப்பிவிட்டு கணவனின் தம்பியை திருமணம் செய்துக் கொள்கிறாள். (காதல், துரோகம்)

-சலோமி தன் சித்தப்பாவின் காதலை புறம் தள்ளவில்லை .அதை உபயோகித்து கொள்கிறாள். (காதல் துரோகம்)

-சலோமி தன்னைக் காதலிக்கு சிரிய இளவரசனை ஜோகனானைப் பார்க்க உபயோகித்துக் கொள்ளுதல் (காதல் துரோகம்)

-இப்படியாக போகும் தன்மைகளில் தன் மன்னனை விட, ஞானத்தை உடைய ஜோகனான் மீது வரும் சலோமிக்கு வரும் காதல் (காதல்)

-காதலிப்பவன் கிடைக்காவிட்டால் வரும் வெறி. அவனை கொன்றாவது அதை அடைய நினைக்கும் வெறி (காதல்,இச்சை)

இப்படி இந்த நாடகத்தைப் பற்றி யோசிக்க நிறைய இருக்கிறது.

மனித உணர்வுகளின் நிச்சயமற்ற தன்மையை, சுயநலத்தை, ஆழமன இயக்காங்களை ஆஸ்கர் வைல்டு கொடுத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.


Saturday, 2 August 2014

பஸ் ஸ்டாப் காட்சிகள்...

நேற்று பஸ்ஸ்டாப்பில் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டியதாய்ப் போயிற்று.கையில் புத்தகமுல் இல்லை.

அதனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சிகளில் சில...

1.-பஸ் ஸ்டாப் ஸ்டீல் பெஞ்சில் இடம் காலியாகிறது ஒரு யுவதியும் ,இளைஞனும் அந்த இடத்தில் அமர வேகமாய் வருகிறார்கள்.பையன் உட்கார்ந்து விட்டான்.யுவதி ஒரு விநாடி உட்காரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறார்.பின் அமர்கிறார்.இருவரும் அருகருகே இருந்தாலும், நாங்கள் வேறு. எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை என்ற செய்தியை தங்கள் உடல்மொழியின் மூலமாக சமூகத்திற்கு சொல்கிறார்கள்.

2.-மூன்று போலீஸ்காரர்கள் ரோட்டை கடக்கிறார்கள்.ஒருவர் கையில் துப்பாக்கி. இன்னொருவர் மாற்றுத் திறனாளி ஒருவரை கூட்டி வருகிறார்.போலீஸ் கைகாட்டியதும் சீறிவரும் வாகனங்கள் பம்மி நிற்கின்றன. ரோட்டை கடந்து முடிந்த அடுத்த விநாடி போலீஸ்காரர் அந்த மாற்றுதிறனாளியின் கைகளை உதறி வேகமாக தன் நண்பர்களோடு சென்று விடுகிறார்.அந்தக் காட்சியைப் பார்க்க வித்தியாசமானதாக இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து யோசித்தால் யார் முதலில் கையை உதறியது என்ற குழப்பம். போலீஸா ? அல்லது மாற்றுத் திறனாளியா? ஒருவேளை மாற்றுத்திறனாளியாய் இருக்க்குமோ? அது பற்றி யோசிக்க வேண்டும் போல இருந்தது.

3.-வெளிச்சமில்லாத ஒரு பக்க பஸ்ஸடாப் ஸ்டீல் பெஞ்சில் கொஞ்சம் வயதானவர் ஒருவர் நன்றாக குடித்து விட்டு மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

4.-கொஞ்சம் தள்ளி ஒரு கார் நின்றது.அதிலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் இறங்கினார்கள்.பையனும் அழகு தேஜஸ்.அந்தப் பெண்ணும் அழகு தேஜஸ்.அந்தப் பெண்ணின் கைகளை பிடிக்கிறான்.அவள சிரித்தபடியே நாசூக்காக எடுத்து விடுகிறார்.பின் பெண் பஸ்ஸ்டாப்பை நோக்கி வருகிறார்.பையன் பஸ் ஏற்றி விடுவதற்காக பின்னால் வருவதை அந்தப் பெண் தடுக்கிறார்.பஸ் வர பெண் பஸ்ஸைப் பிடித்து ஏறிப் போகிறார்.பையன் காரிலிருந்து அதைப் பார்த்த பிறகு காரை இயக்குகிறார்.ஒருவேளை பெண் லோயர் மிடில் கிளாஸாக இருந்து , பையன் ரொம்ப பணக்காரனாக இருந்தால், திருமணத்துக்கு பின் அந்தப் பெண் தாழ்வுமனப்பான்மையால் வாடக்கூடும் என்பது மாதிரியான சிந்தனைகள் வந்தது.

5.-மொபைல் பேசிய படி ஒரு காலேஜ் மாணவன் பைக்கை வேகமாக ஒட்டிச் சென்றார்.பஸ்ஸ்டாப்பில் நிற்கும் பஸ்ஸின் மீது கிட்டத்தட்ட மோதுவது மாதிரி உரசிச் சென்றார்.கல்லூரி மாணவர்கள் எல்லோரையும் கல்லூரி நிர்வாகங்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஜி.ஹெச் கூட்டிச் செல்ல வேண்டும்.அங்கு வரும் விபத்து கேஸ்களை பார்க்கச் செய்ய வேண்டும்.இப்படியாக எனக்கு தோன்றியது.

6.-ட்ரை சைக்கிளில் ஒருவர் சென்றார்.ட்ரை சைக்கிளைப் பார்த்ததும் ஹெச்.கோரி எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது. பிரபல கிளப்பில் ட்ரை சைக்கிள் பெற வந்த மாற்றுத்திறனாளியை விருந்துக்கு கூப்பிடுவார் ஒருவர்.ஆனால் பணக்கார கிளப் மெம்பர்களுக்கு மட்டும்தான் அந்த விருந்து. பரிசுப் பெற்றவர்களுக்கு இல்லை என்ற விவாதம் நடக்கும். விவாதம் முடித்து கிழே வந்து பார்த்தால் அவர்கள் பரிசாக கொடுத்த ட்ரை சைக்கிள் அதே இடத்தில் நிற்கும்.

7.-ஒரு பெண் நைட்டி அணிந்து நின்று கொண்டிருந்தார்.மேடான வயிறு அவர் கர்ப்பத்தை சுட்டிற்று.பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.ஒரு பஸ் வந்தது. பஸ்ஸில் இருந்து வயதான பெண் ஒருவர் கட்டை பையோடு இறங்கினார். இறங்கியதும் நைட்டிப் பெண் வேகமாக அந்த வயதானப் பெண்ணை நோக்கிப் போனார்.பின் இருவரும் பின்னால் நிற்கும் இன்னொரு பஸ்ஸை வேகமாக வழிமறித்து ஏறுகின்றனர்.பரபரப்பு.

8.-பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஒரு நாற்பது பிளஸ் குடும்பத்தலைவர், காலையில் மனைவி கொடுத்து விட்ட சுண்டலில் இருக்கும் சுண்டலை குட்டி டப்பர் வேர் டப்பாவிலிருந்து தட்டி தட்டி எடுத்து பொறுமையாக தின்று கொண்டிருந்தார்.

இப்படி எங்கேப் பார்த்தாலும் மக்கள் மக்கள் மக்கள். 

ஒவ்வொரு காரியங்களை செய்தபடி. மக்கள் மக்கள் மக்கள்.

மீனவர் வலையை விட்டிருப்பாரா ?

ஹொக்கனேக்கலில் இருந்து வரும் நீர்,மேட்டூர் அணையில் தேக்கி வைக்கபடுகிறது.அணைக்கு முன்னால் இரு கரையிலும் இருக்கும் கிராமங்களில் ஒன்றுதான் நண்பர் ஆனைகவுண்டனின் கிராமம்.

கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் அங்கே இருக்கின்றன.எல்லா குடும்பத்தினரும் மீன்பிடித் தொழிலையே நம்பியிருக்கிறார்கள்.

அணையில்,ஆற்றில் மீன் பிடித்து சம்பாதித்து பிழைக்கிறார்கள். அரசாங்கம் வருடா வருடம் குறிப்பிட்ட அளவு பணத்தை வாங்கிக்கொண்டு, மீன் பிடிக்க அனுமதி கொடுக்கிறது.

அதற்கான லைசென்ஸை வைத்துக் கொண்டுதான் மீன் பிடிக்க வேண்டும்.சிலேபி,சுறா,கட்லா,வாளை,ரோகு,அரஞ்சான்,கெழுத்தி,கல்பாஸ் போன்ற மீன்களை பிடிக்கிறார்கள்.மீன் பிடிப்பதை பரிசலில் போய்தான் செய்கிறார்கள்.

நீண்ட வலையை மாலை நான்கு மணிக்கு வீசினால் அதிகாலை நான்கு மணிக்கு பிரிப்பார்கள்.வலையெல்லாம் செங்குத்தாக நீரைக் கிழித்து மீனை எதிர்நோக்கி காத்திருக்கும்.காலையில் மீனை வலைலிருந்து பிரித்து விற்பார்கள்.

சராசரியாக ஐந்து கிலோ மீன் மட்டுமே கிடைக்கும்.சில நாட்களில் ஒரு கிலோ மீன் மட்டும்தான் கிடைக்கும்.சந்தையில் கமிசன் வியாபாரிகள் ஒரு கிலோ மீன் இருபது ரூபாய்க்கு எடுப்பார்கள்.

ஐந்து கிலோ விற்றால்  பரிசல் போடுபவருக்கு என்ன கிடைக்கும்? நூறு மட்டுமே ரூபாய் கிடைக்கும்.அந்த நூறு ரூபாயை வைத்து எப்படி குடும்பம் நடத்துவார்கள்.

ரேசன் அரிசி இருப்பதால் அரிசிக்கு பிரச்சனையில்லை.கிராமத்தில் அவரவர்க்கு குடியிருக்கு சின்ன வீடுண்டு.நூறு ரூபாயை வைத்து சமாளிப்பார்கள்.பரிசல் முன்னாடி போல மரத்திலானது அல்ல.

இப்போது ஃபைபர் பரிசல் வந்து விட்டன.ஐந்தடி விட்டமுள்ள பரிசல் ஒன்பதாயிரம் ரூபாய்.அந்த பத்தாயிரம் ரூபாயை கடன் கொடுப்பது கமிசன் வியாபாரிகள்.அப்படி கொடுத்தால் வட்டிக்கு மீனை எடுத்துக் கொள்வது எளிது என்பதால் ஆர்வமாக அப்படியான கடனை ஒரு “டேம் மீனவருக்கு” கொடுக்கிறார்கள்.

இப்படியாக ஒரு மீனவரின் வாழ்க்கை நூறு ரூபாய்தாளாகவே ஆகிவிட்ட சூழ்நிலையில்,அவர்களுக்கு சம்பாதிக்க ஒரு வழி வருகிறது.

பெரிய வழியில்லை என்றாலும், அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு முக்கியமான வழி.

ஏப்ரல் மே மாதங்களில் நிறைய குஞ்சு மீன்கள் உலவும் .மேலும் டேமில் அரசாங்கம் வேறு நிறைய புதிய குஞ்சு மீன்களை விடும்.

சென்னாங்கவுணி என்னும் மிகச்சிறிய மீன் நிறைய படும்.நிறைய என்றால் நிறைய.ஐந்து நிமிடம் அதற்கென்றிருக்கும் பிரத்யோக வலையைப் போட்டால், வலை நிறைந்து விடும்.

ஒரு வலையில் கிட்டத்தட்ட இருபதிலிருந்து முப்பது கிலோ தேறும்.வலையை போட்டவுடன் வேக வேகமாக இழுக்க வேண்டும்.

ஏனென்றால் அடுத்த மீனவர் அவர் பங்கிற்கு நிற்பார்.சீக்கிரம் மீன் பிடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும்.ஒருநாளைக்கு ஐந்து கிலோ எங்கே? முப்பது கிலோ எங்கே?

நிறைய வருமானம் வரும் இந்த சென்னாங்கவுனி மீன் பிடியால்.

சில சமயம் அரசு போட்கள் ரோந்து வரும்.யாராவது குஞ்சு மீன்களை பிடிக்கிறார்களா? என்று கண்கானிக்க. அப்போது பரிசல்காரர்கள் வேக வேகமாக தங்கள் பரிசல்களை ஒட்டி மறைவான இடங்களுக்கு சென்று விடுவார்கள்.வேறு வழியில்லை.பிரச்சனையை சந்தித்துதான் ஆகவேண்டும்.

வருடம் முழுவதும் நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற கணக்கிருக்கிறதா என்ன? கிடைக்கும் ஒரே வாய்ப்பு இந்த சென்னாங்கவுனி மீன்பிடிதான்.அதையும் விட முடியாதல்லவா? முடிந்த மட்டும் கஸ்டப்பட்டு பிடிக்கிறார்கள்.

நிறைய சம்பாதிக்க வேண்டிய, பண நெருக்கடியில் உள்ள மீனவர் ஒருவர் அன்று நிறைய சென்னாங்கவுனி மீன் பிடித்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தாராம்.

காலையில் ஒருதடவை பிடித்து விட்டு, மற்ற மீனவர்களிடம் அவர் பணக்கஸ்டத்தை சொல்லி அனுதாபம் தேடி, இரண்டாவது ஒருமுறையும் வலையை வீசியிருக்கிறார்.

வீசும் போது தீராமல் ஆண்டவனிடம் பிரார்த்திருக்கிறார்.அவருக்கு எதாவது செலவிருக்கலாம்.அது முக்கியமான தவிர்க்க முடியாத செலவாயிருக்கலாம்.அதனால் வீரியமாய் உருக்கமாய் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

பத்து நிமிடத்தில் வலையை இழுத்துப் பார்த்தால்.நிறைய மீன்களை உணர முடிந்திருக்கிறது.நல்ல மீன் பாடு.மகிழ்ச்சியில் கூவியபடி வலையை இழுத்திருக்கிறார்.இழுக்க முடியவில்லை.மீண்டும் தம் கட்டி இழுத்திருக்கிறார்.முடியவில்லை.

ரொம்ப நேரம் தன் சக்தியெல்லாம் கூட்டி மீனை இழுக்கவும், அவருக்கு நெஞ்சு வலி வந்தது.அதையும் பொருட்படுத்தாமல் இழுக்க, நெஞ்சு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து,பரிசலில் விழுந்து சுருண்டு துடித்து இறந்திருக்கிறார்.

நண்பர் ஆனைகவுண்டன் இந்த விசயத்தை சொல்லும் போது எனக்கு ஒன்றும் ஒடவில்லை.

இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.இவர்களும் தமிழர்கள்தான்.இது மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

இறந்த மீனவர் தன் கையிலுள்ள வலையை விட்டிருப்பாரா? அல்லது பற்றியே இறந்திருப்பாரா என்ற சந்தேகமும் வந்ததெனக்கு.