Saturday, 23 March 2013

கதை போல ஒன்று - 77


இரவு ரெண்டு மணிக்கு கண் முழித்தார் அவர்.

அந்த விழிகளின் மொழியை கோபாலகிருக்ஷ்ணாவால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

தினமும் அந்த சின்னப்பெண் வருகிறாள்.வங்கி வாசலில் நிற்கிறாள்.முப்பது விநாடி பார்க்கிறாள்.
அப்புறம் போய்விடுகிறாள்.

ஒரு வயசுப்பெண் இப்படி செய்வது அவருக்கு வித்தியாசமாய் தெரிந்தது.

கிட்டதட்ட இருவாரமாய் இப்படி செய்கிறாள்.

மற்ற ஊழியர்கள் வழியே அவருக்கு அந்த தகவல் வந்தது,

வங்கி ஊழியர்கள் மொத்தமும் அந்தப்பெண் பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.

கோபாலகிருக்ஷ்ணாவும் அவளை இருநாட்களாக பார்க்க தொடங்கினார்.தயக்க பார்வை.தளர்ந்த நடை.

நாளை கேட்டுவிட வேண்டும் என்று யோசித்தபடியே தூங்கினார்.

”இஙக வாம்மா”

தயங்கபடியே நின்றாள்.

“சும்மா வா”

வந்தாள்.வேறு யாரோ உபயோகித்த ஆல்டர் செய்த சுடிதார் அவள் ஏழ்மையை காட்டிற்று.

“எதுக்கு டெய்லி பேங்க் வாசல பார்த்துகிட்டு போற”

“எஜுக்கேசனல் லோன் பத்தி”

“என்ன”

”இல்ல படிக்கிறதுக்கு லோன் குடுக்கிறது பத்தி தெரிஞ்சிக்கனும் அதான்”

“அப்ப உள்ள வந்து கேளும்மா.இது என்ன வரக்கூடாத இடமா.பிளஸ் டூல எவ்வளவு மார்க்”

அவள் தன் பர்சில் மடித்து வைக்கப்பட்ட ஜெராக்ஸ் மார்க் ஷீட்டை கொடுக்க

ஆயிரத்து எழுவத்தியாறு மார்க்

கோபால கிருக்ஷ்ணாவுக்கு ஒருவிதமான பதட்டம் வந்தது.

“இவ்வளவு நல்ல மார்க் வைச்சிருக்கிறியே.கண்டிப்பா கிடைக்கும் உன் குடுமபத்தி சொல்லும்மா”

அப்பா பெயிண்டராம்.குடி போன்ற கெட்ட பழக்கம் எதுவுமில்லை.

ஆனால் உடல்நிலை சரியில்லை.எப்போதும் இருமிக்கொண்டே இருக்கும்.
நுரையீரலில் சளி கோர்த்து கொண்டிருக்கும் டிபிக்கு முந்தின நோய் அவரை ஆசீர்வதித்திருந்தது.

அம்மா வீட்டு வேலை செய்பவர்.
வள்ளியூர் போன்ற டவுனில் வீட்டு வேலை செய்தால் என்ன சம்பாதித்து விட முடியும்.

பொறியியல் எல்லாம் படிக்க முடியாதென்று அந்த பெண்ணுக்கே தெரிந்திருக்கிறது.

வேண்டுமானால் எதாவது ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து பி.ஏ வோ அல்லது பி.எஸ்.சி யோ சேர்ந்து படித்து கொள் என்று அப்பா அம்மா சொல்லிவிட்டார்களாம்.

“உனக்கு எஜுக்கேசனல் லோன் பத்தி யாரு சொன்னது”

“பேப்பர்ல படிச்சேன்”

"கண்டிப்பா கிடைக்கும்”

“கெடச்சாலும் யூஸ் இல்ல சார்.இன்ஜினிரியங் கவுன்சிலிங் முடிஞ்சிட்டு சார்”

கோபால கிருக்ஷ்ணாவுக்கு அது இன்னும் பெரும் அதிர்ச்சி.

பொறியல் கவுன்சிலிங் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும்.எந்த காலேஜில் படிப்பது.பணம் கொடுத்து விடலாம் படிக்க. காலேஜை எப்படி கொடுப்பது.?

தான் கும்பிடும் கடவுளை பழித்தார்.

யோசிப்பது மாதிரி நடித்து.

”நாள மறுநாள் வாம்மா.நான் ஒரு ஐடியா சொல்றேன்” என்று பேருக்கு அனுப்பிவிட்டார்.

அது முதல் அதே நினைவு .சாப்பிடும் போது.அன்றிரவு உறங்கும் போதும் அதே நினைவு.

என்ன செய்வதென்று தெரியாத வேளையில் மனைவி சொன்னார் “ஏங்க அந்த வடக்கன்குளத்து காலேஜ் கரஸ்பாண்டண்ட் நம்ம பேங்குலதான அக்கவுண்ட் மேனேஜ் பண்றார்.அவருக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருங்க”.

கரஸ் முன் அமர்ந்திருந்தது கோபால கிருக்ஷ்ணன்தான்.

“கண்டிப்பா கோபால்.இங்க கவுன்சிலிங்கல நிரம்பாத பல சீட்டு இருக்கு.அதுல ஒரு சீட்ட அந்த பொண்ணு எடுத்து படிக்கலாம்.இருங்க”

போன் செய்து விசாரித்து.

”எலக்டிரிக்கலும்,ஐடியும் இருக்கு எதுனா ஒண்ணு எடுத்துக்கோங்க.பீஸ் பொறுமையா கொடுங்க ஆனா கொடுத்திருங்க” என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தார்.

அப்பா அம்மாவுடன் வந்த பெண்ணை காரில் காலேஜுக்கு கூட்டிப்போய் ஃபார்மெல்லாம் நிரப்பி வைத்து ஐடி எடுக்க வைத்து, லோன் சாங்சன் செய்து காலேஜில் சேர்த்தார்.

காலேஜ் சேர்ந்து முதல் நாள் குடும்பமாய் வந்து ஆசீர்வாதம் வாங்கி மிட்டாய் கொடுத்து போனாள்.

வங்கியின் செல்லப்பிள்ளையானாள்.

பதவி உயர்வு வர வர வள்ளியூரில் இருந்து ஹைதிராபாத்துக்கும், ஹைதிராபாத்தில் இருந்து சென்னைக்கும் மாற்றலாகிப்போனார் கோபால கிருக்ஷ்ணன்.

மூன்று வருடம் கழித்து அந்தப்பெண்ணிடம் இருந்து மெயில் வந்தது.

அன்புள்ள அங்கிள்,

நான் நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்கினேன்.டி.சி.எஸ் யில் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருக்கிறேன்.நல்ல சம்பளம்.அப்பா அம்மா உங்களத்தான் அடிக்கடி பேசுவாங்க.என் வாழ்க்கையில நீங்க வராம இருந்தா நான் என்ன ஆயிருப்பேன்னு நினைக்கவே பயமாயிருக்கு.இத எழுதும் போதே நான் அழுறேன்.நீங்க அன்னைக்கு பேங்க் உள்ள வான்னு கூப்பிடலன்னா என் கதி.சென்னை வந்தது உங்களை சந்திக்கிறேன் அங்கிள்.

கோபால கிருக்ஷ்ணன் இப்படி பதில் எழுதினார்.

அன்பு பகவதி குட்டிக்கு,

வாழ்த்துக்கள்.

நான் அன்னைக்கு உள்ள கூப்பிட்டேன் .

அது எதுக்குன்னா நீ ரெண்டு வாரம் விடா முயற்சியா பேங்க் முன்னாடி வந்து நின்னதாலத்தான்.

ஏதோ நடக்கும்ன்னு உன் உள்ளுனர்வு சொல்லிருக்கு.நீ எடுத்த நல்ல மார்க்கு உனக்கு அந்த நம்பிக்கைய கொடுத்திருக்கு.

நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நீயும் எதாவது கஸ்டபட்டவங்க, பணத்தால படிக்க முடியாதவங்க உங்கிட்ட வந்த அவுங்களுக்கு உன்னால முடிஞ்ச உதவிய செய்.

அது எனக்கு சந்தோக்ஷம்

நானும் அவளும் உன்னப்பார்க்க ஆசையா இருக்கோம்.சென்னை வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வா.

அன்புள்ள கிருக்ஷ்ணா அங்கிள்.

Thursday, 21 March 2013

கதை போல ஒன்று - 76

ஒவரிக்காரரின் கண்கள் எங்கள் கடையின் கோழிமுட்டை அளவு பெரியது.

பாதி மறைந்த தலைமுடியோடு லொங்கு லொஙென்று இரண்டுகால்களையும் விரித்து நடந்து வருவார்.

கடைக்கு வந்து அப்பாவிடம் பேசும் போது, அவருடைய துடிப்பான நாக்கு,அப்பாவை புகழ்ந்து கொண்டே இருக்கும்.

”நீங்க பெறவி அறிவாளில்லா.நல்ல தீர்க்கமான ஆளுல்லா” என்று பேசிக்கொண்டே இருப்பார்.

அப்பா அதை ஏற்றும் ஏற்காததுமாய் முகபாவனை காட்டி தலையை ஆட்டி வைப்பார்.

ஒவரிக்காரரின் தொழில் வட்டிக்கு விடுவதுதான் என்றாலும் அதனால் அவருடைய நல்லவர் பிம்பத்திற்கு அழிவோ குறைவோ இல்லை.

அப்பாவும் நானும் மட்டும் கடையில் இருக்கும் போது ஒவரிகாரர் டி.எஸ்.சேம்பை நிறுத்திவிட்டு ஒடி வந்தார்.

”அண்ணாச்சி வாங்க.வேலையிருக்கு” என்று அப்பாவை கூட்டிப்போனார்.

போன அப்பா வரவே இல்லை.

பதினொன்றாம் வகுப்பு மாணவனான எனக்கு அதிர்ச்சிதான்.எங்கே போயிருப்பார் போயிருப்பார் என்று மூளையை குழப்பிக்கொண்டே இருந்தேன்.

ஒவரிகாரருடன் போன அப்பா நான்கு மணிக்கு திரும்பினார்.

”என்னப்பா சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க.” என்று கத்தினேன்.

அப்பா என்னை கொஞ்ச நேரம் கத்த விட்டு “இல்லடா அவரு பையன் கோணம் பாலிடெக்னிக்ல படிக்கிறான்லா.கிளாஸ்ல சின்ன பரிட்சை வைச்சிருக்காரு வாத்தியாரு.பையன் ஒருத்தனுக்கு பேப்பர் கொடுத்திருக்கிறான்.பேப்பரை பாத்து காப்பியடிச்சவன் திரும்ப குடுக்கும் போது வாத்தியார் புடிச்சிகிட்டாராம்.அது பிரின்சிபல் வரைக்கும் போய் பிரச்சனையாடுச்சி.”

”சரி அதுக்கு நீங்க எதுக்கு போனீங்க”

“இல்ல ஒவரிகாரரு பேசிக்கிட மாட்டாரு அதான் போனேன்.அங்க போனா நம்ம வள்ளிநாயகம் பிள்ள சார் இருக்கிறார்லா.அவரு அங்க லைபரியன்.அவர வைச்சி தெரிஞ்ச பையன்தான்னு சொல்லி கெஞ்சி கூத்தாடி பிரின்சிபல் மன்னிச்சி விட்டுட்டாரு..அதுக்கு நாலு மணி ஆயிட்டு”

“ம்ம்ம்.நான் உங்க கிட்ட ஃபிராங்கா ஒண்ணு சொல்லுறேன்.நீங்க கடைய போட்டுட்டு அடுத்தவங்களுக்கு சேவை செய்ய போறது எனக்கு பிடிக்கல.நம்மளே இப்போதான் பேங்கல லோன் போட்டு கடைய நடத்திகிட்டு வரோம்.நீங்க அத கவனிக்காம ஒவரிகாரருக்கெல்லாம் உபகாரம் பண்ணப்போனா” என்று கத்தினேன்.

அப்பா சிரித்தபடியே”ஒடனே ஆரம்பிச்சிருவான.இப்படி செய்றதால எல்லாம் நாம் அழிஞ்சிரமாட்டோம்டா.அவருக்கு பேசத்தெரியாது.அந்தப்பையன் தான் அவுங்க வீட்ல மொதல் மொதல்ல படிக்கிறான்.அவன் படிப்பும் பாதில போச்சுன்னா.அந்த குடும்பம் மனசு கஸ்டபடாதா?

அப்புறம் ஒவரிகாரர் பையன அடிப்பார்.அவன் அவமானத்துல விசத்த குடிப்பான்.இப்ப அப்பா போனதால ஏதோ நம்மலாள முடிஞ்சது, பையன மறுபடி கிளாஸுக்குள்ள தள்ளி விட்டோம்.

நீ ரொம்ப யோசிக்காத விஜய். அத விடு. போ அப்பாவுக்கும் உனக்கும் டீ வாங்கிட்டு ஏதாவது கடிக்கிறதுக்கும் வாங்கிக்க” என்று பத்து ரூபாய் தாளை நீட்டினார்.

ஒன்றுமே பேசமுடியாது அப்பாவிடம்.அவருக்கு அவர் ஞாயவான்.அவரின் செயல்களை மேலோட்டமாக பார்த்து விமர்சிக்கவே முடியாது.

இறங்கி சிந்தித்தால் அவர் செய்வது சரி மாதிரியே ஆக்கிவிடுவார்.

ஒரு அண்ணன் மெடிக்கல் காலேஜும் இன்னொருவன் பொறியலும் படிக்கும் வீட்டில்,

இன்னும் இரண்டு பேர் படிக்க காத்திருக்கும் வீட்டில்,

கடையை போட்டுவிட்டு இன்னொருத்தருக்கு உபகாரம் செய்வது தப்பென்று பளிச்சென்று தெரியும்.

ஆனால் அப்பாவிடம் பேசின பிறகு அப்படி தெரியாது.

அன்றிரவு ஒவரிக்காரர் வந்து அப்பாவுக்கு பலமுறை நன்றி சொன்னார்.

மறுநாள் நான் கடைக்கு போகும் போது “லே பிள்ளே நீவயெல்லாம் நல்லா வருவியல.தகப்பன் நல்லாயிருந்த குடும்பம் முன்னேறும்ல” என்று புகழ்ந்து தள்ளினார்.

எனக்கு எப்போதுமே ஒவரிக்காரர் பிடிக்காது என்பதால் அமைதியாக இருப்பேன்.சிரிக்க கூட மாட்டேன்.

இரண்டு நாள் கழித்து பனங்கிழங்கும் மரச்சீனிகிழங்கும் நிறைய கொடுத்துவிட்டுப்போனார் ஒவரிகாரர்.

இருபதாயிரம் சரக்கு போட்டு மாதம் இரண்டாயிரம் அண்ணகள் படிப்பு செலவுக்கு போக, வீட்டுச் செலவு எல்லாம் செய்தால் எங்கே கடை தழைக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக கடை படுக்க ஆரம்பித்தது.

கையில் ஆயிரம் ரூபாய் மறுநாள் கொள்முதலுக்கு இருக்கும்.அதில் ஐநூறை செலவுக்கு எடுத்தால்.மிச்சம் ஐநூறை வைத்து மட்டும் கொள்முதல் செய்ய முடியும்.

ஒரு மூட்டை மைதா மாவு அரைமூட்டையாகும்.

கடையின் தோற்றத்தில் தரித்திரம் தெரிய ஆரம்பித்தது.

ஹார்லிக்ஸ் பாட்டில்களூம்,முறுக்கு பாக்கெட்டுகளும், ரேசன் மண்ணென்னயும், கடலை பாக்கட்டுகளும் மாதிரி கொஞ்ச சரக்கே கடையில் இருந்தன.

”தேங்காய் எண்ணய் அரை லிட்டர்” என்று கேட்ட பக்கத்து கடை பரோட்டா மாஸ்டரிடம்

நான் இல்லை என்று சொல்ல “அட என்னப்பா டவுனுக்கு நடுவுல கடைய போட்டுகிட்டு ஈயடிக்கிரிங்க.முடியலன்னா கடைய விட்டுட்டு போயிருங்க.வேற யாராவது கடைய போடுவாங்கல்லா” என்று சொல்லிப்போனார்.

பொறியியல் ஃபைனல் இயர் புராஜக்டு செய்ய அண்ணன் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வேண்டுமென்று லட்டர் போட்டிருந்தான்.

அப்பாவிடம் சல்லிக்காசு இல்லை.

ஒவரிகாரரிடம் கேட்டார்.ஒவரிக்காரர் கொஞ்சம் அரைமனதாகத்தான் அப்பாவுக்கு அந்தப்பணத்தை கொடுத்தார்.

அடுத்த மூன்று மாத்தில் தினமும் கடைக்கு வந்து கேட்பார்.

அப்பா எதைவாது சொல்லி அனுப்புவார்.

நான் மட்டும் கடையில் இருக்கும் போது வந்து தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

”உங்கப்பா எங்கல.எனக்கு குடுக்க வேண்டிய காசக்கொடுக்காம வீட்ல பொண்டாட்டி கூட இன்னொரு பிள்ளைக்கு ரெடி பண்ராரா” என்று கேட்டார்.

என்னால் அந்த வார்த்தை கேட்டு ஒன்றுமே சொல்ல முடியவில்லை அழுதுகொண்டே இருந்தேன்.

கண்களில் கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது.

அப்பாவிடம் எதையுமே சொல்ல வில்லை.ஆனால் அம்மாவிடம் சொல்லி அழுதேன்.

அம்மா கலங்கிவிட்டார்.தன்னுடைய கையில் போடிருந்து ஒரே ஒரு நெளி மோதிரத்தை விற்று அப்பாவிடம் ஆயிரம் ருபாய் கொடுத்து கொடுக்க சொன்னார்.

முதலில் அம்மாவை திட்டிய அப்பா பின் அந்த ஆயிரம் ரூபாயை ஒவரிகாரருக்கு கொடுத்தார்.

முகபாவனையில் இரக்கம் காட்டாமல் அதை வாங்கிக்கொண்டவர்,”மிச்ச ஐநூறு எப்ப தருவிய” என்றார்.

“சீக்கிரம்” என்று சுருக்கமாக முடித்து கொண்டார் அப்பா.

அடுத்து மூன்று வாரம் பிறகு நானும் அப்பாவும் கடையில் இருக்கும் போது ஒவரிக்காரர் வந்தார்.

அவர் ஐநூறு ருபாயை பற்றி பேசி அவமானபடுத்த பார்க்கிறாரோ என்று பயந்தது அப்பாவின் கண்களில் தெரிந்தது.ஆனால் அதையெல்லாம் பேசவே இல்லை.

“என்ன அண்ணாச்சி எப்படி இருக்கீங்க.தம்பி இந்த லிஸ்ட கொஞ்சம் போடுப்போ என்று என்னிடம் கொடுத்த லிஸ்டை வாங்கி போட ஆரம்பித்தேன்”

”ஹார்லிக்ஸ் பாட்டில் ஐந்து” எடுத்து போட்டேன்.

“மைசூர் சாண்டல் அரை டஜன்” ஏடுத்து போட்டேன்.

“சீனி நாலு கிலோ” கட்டி வைத்தேன்.

“ஏலக்காய் நூறு கிராம்”

“பாமாயில் நாலு பாக்கட்”

இது மாதிரி பில் போயிற்று.எல்லாம் கட்டி அட்டைபெட்டியில் வைத்து தன் வண்டியில் ஏற்றின பிறகு ஒவரிக்காரர் அப்பாவிடம் வந்து சொன்னார்.”சரி அண்ணாச்சி பில் எவ்வளவு”

“பில் ஐநூத்தி நாற்பது ருவா” ஒவரிகாரரே.

“ம்ம்ம்.நான் பொறுமையா தாரேன் அண்ணாச்சி.கணக்குல வைச்சிக்கோங்க” என்று சொல்லிப்போக

நான் அப்பாவிடம் கூவினேன்.”யப்பா நாம கொடுக்க வேண்டிய ஐநூற எப்படி சுரண்டி எடுத்துகிட்டு போறாரு பாருங்க ஒவரிகாரரு”

“அதுக்கென்ன பண்றது நாமளும் அவருக்கு காசு கொடுக்க வேண்டியது இருக்குதான” என்று சொல்லிய அப்பாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

வாழ்க்கையில் அப்பா அழுது முதலில் பார்ப்பது அன்றுதான்.

பிற்காலத்தில் படித்து பட்டம் பெற்று,

முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் முழுவதையும் எடுத்து வந்து,

வீட்டில் யாரும் இல்லாத அறையில் அந்த பணத்தை போட்டு காலால் மிதித்து மிதித்து ஒரு மனநோயாளி போல விளையாடியதற்கும் அப்பாவின் கண்ணீரே காரணம்.

Wednesday, 6 March 2013

கதை போல் ஒன்று - 75


அம்மா அப்பா அவர்களுடைய இருபது வயது பையன் ”பாலன்”மூவரும் ஆசிரமத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

பாலனால் சரியாக நடக்க முடியவில்லை.பயமாயிருந்தது அவனுக்கு.

ஆசிரமத்தை நெருங்க நெருங்க கை காலெல்லாம் உதறியது.

அப்பா அவன் கைகளை பிடித்து கொண்டார்.சிறிய ஏரி போல் கைமுழுவதும் வேர்வை பாய்ச்சி இருந்தது.

அப்பா அம்மாவை பார்த்தார்.

“பாலன் ஒரு மாத்திரை சாப்பிடுறியாப்பா” என்றார்.

“வேண்டாம்மா” என்று பாலன் சொன்னதில் அவனுடைய ஆளுமையற்ற மனபயம் வெளிப்பட்டது.

உள்ளே சென்று காத்திருந்தவர்களை முழுவதும் வெள்ளையுடை அணிந்த இளம்பெண் ஒருவர் வரவேற்றார்.

“அப்பாயிண்மெண்ட் வாங்கியிருக்கீங்களா”

“ஆமா மேடம்” என்று அப்பா தன்னிடம் உள்ள கம்பியூட்டர் பிரிண்ட் அவுட்டை கொடுத்தார்.

வாங்கி சரி பார்த்தபின்.

”அரைமணி நேரம் காத்திருங்கள்” என்று ரோஜாவை முகத்தை மலர்த்தி போனார் அப்பெண்.

அந்த அறையில் பாலன் அம்மா அப்பா தனியாக இருந்தார்கள்.

பிளஸ் டூ பரிட்சை எழுதும் போதுதான் பாலனின் கைநடுக்க நோயின் தீவிரம் எல்லோருக்கும் தெரிந்தது.

கணிதபரிட்சைக்கு முந்தின நாள் இரவெல்லாம் விழித்து படித்து மறுநாள் பரிட்சை எழுத போகும் போதே
“மேத்ஸ் பரிட்சைன்னா எனக்கு பயம்மா இருக்குமா “ என்றான்.

அவனுடைய விழிகளை பார்த்து அம்மா கொஞ்சம் பயந்தாள்.உடல் களைப்பை தாண்டின மன அயர்ச்சியை கண்டுபிடிப்பது எளிதாய் இருந்தது.

பத்தரை மணிக்கு ஸ்கூலில் இருந்து உடனடியாக வரச்சொன்னார்கள்.அம்மா அப்பாவுக்கு போனை போட்டு இருவரும் பள்ளிக்கு வரும்போது பரிட்சை எழுதாமல் பாலன் ஹெட்மாஸ்டர் அறைபக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

அவன் கைகள் கடகடவென்று நடுங்கி கொண்டிருந்தது.

கைகளை எடுத்து இரண்டு தொடைகளுக்கு அடியே வைத்தான்.

இருந்தாலும் கைநடுக்கத்தின் ஆவேசத்தில் தொடையும் சேர்ந்து நடுங்கியது.

“யம்மா கை ஏம்மா இப்படி நடுங்குது. இது நிக்காதாம்மா.நான் பரிட்சையே எழுதலியேப்பா.நான் செத்தரவாப்பா” என்று கன்னத்தை ஒங்கி ஒங்கி அடித்து கொண்டான்.

அம்மா நெஞ்சை பிடித்து உட்கார்ந்து கொண்டாள்.அப்பாவுக்கு வாய் கோணிற்று.

ஹெட்மாஸ்டர் சத்தம் போடாமல் இருகக் சொன்னார்.

வெளியே அரசமரத்தடியில் அரச இலைகள் உதிர்ந்து கிடந்தன.

பாலனின் கைகளை அப்பா இருக்க பிடித்து கொண்டார்.அதையும் மீறி நடுங்கியதை எல்லா அரச இலைகளும் பார்த்தன.

டாக்டர் பாலனுக்கு உடல் பிரச்சனையில்லை மனப்பிரச்சனை என்று சொல்லி ஆனால் நிறைய மூட் சேஞ்சர்ஸ் மாத்திரை கொடுத்தார்.

இரண்டு நாட்கள் பாலனை தூக்கத்திலேயே வைத்திருந்தார்.

மூன்றாவது நாள் கவுன்சிலிங் கொடுத்தார்.

இரண்டு நாட்கள் பரவாயில்லை.ஆனால் மறுபடியும் கைநடுக்கம் போகவில்லை.டாக்டரை மாற்றிப்பார்த்தார்கள்.குணமாகவில்லை.

சித்த மருத்துவத்திற்கு மாறினார்கள்.

அக்கபஞ்சர் ஒர்க் அவுட் ஆகும் என்றார்கள்.

நடக்கவில்லை.

பிளஸ் டூவை முடித்து, டிப்ளமா சேர்ந்து
தத்தி தாவி முடிப்பதற்குள் அப்பாவும் அம்மாவும் தங்கள் மகிழ்ச்சியை இழந்திருந்தார்கள்.

அப்பா தினமும் தண்ணீர்பாட்டிலை நிரப்ப சொல்வர் பாலனிடம்.

பாட்டிலினுள் கால்வாசி நீர் கூட போகாது.வெளியே கொட்டி வைப்பான்.

கோயிலுக்கு நேர்ந்தார்கள்.தங்கதேர் இழுத்தார்கள்.தாந்தோண்றியம்மனுக்கு பாலனின் மாமா தீ மிதித்தார்.

டிரையினில் வந்த ரயில் சிநேகம் ஒன்று ”தேன்மா” சாமியாரை பற்றி சொல்ல, அவரையும் பார்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள் பாலன் அப்பா அம்மா மூவரும்.

உள்ளே வரும்படி ஒரு பெண் கூப்பிட
மூவரும் உள்ளறையில் நுழைந்தார்கள்.

”தேன்மா” சாமியார் அன்றை ரொட்டிக்கான மாவை பிசைய மாவை விரவிகொண்டிருந்தார்.

இவர்களை பார்த்தது சிரித்தார்.

“சாமி உங்கள் பார்த்தா பிரச்சனை தீந்திரும்ன்னு சொன்னாங்க”

“நான் டிரைபண்றேன்.உங்க பிரச்சனைய மெயில்யே படிச்சிட்டேன்”

பாலனை பார்த்தார் தேன்மா.

“பாலன் இந்த மாவுல கொஞ்சம் தண்ணிய விடு” என்றார்.

பாலன் வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை விடும் போது கைகள் வழக்கத்திற்கு அதிகமாக ஆடியது.

அதை கவனியாமல் மாவை பிசைந்தார்.பிசைந்து முடிக்கையில்

“பாலன் நீ அந்த டெஸ்கல இருப்பா. நீங்க இரண்டு பேரும் ஒரு மணி நேரம் வெளிய இருங்க ஃப்ளீஸ்”

கைகளை சுத்தமாக கழுவிகொண்டு பாலன் அருகே அமர்ந்து கொண்டார் தேன்மா.

அவன் கைகளை பிடித்து வேகமாக இங்கும் அங்கும் ஆட்டினார்.முதுகில் தொப் தொபென்று அடித்தார்.

“கடைசியா எப்போ மேஸ்டுருபேட் பண்ணின”

பாலன் வெட்கப்பட்டு “இரண்டு மாசமா பண்ணவே இல்ல ஐயா”

“அட ஏன்பா. நானெல்லாம் உன் வயசுல நாளைக்கு மூணுதடவ செய்வேன்.அதெல்லாம் அடக்காத.அதுவே ஸ்டிரஸ்.உன் மனசுல உள்ள பேண்டஸி உனக்கு மட்டும்தான்.யாருக்கிட்டையும் பகிர்ந்துக்காம நீ மகிழ்ச்சியா இரு” என்று சிரித்தார்.

அப்போதும் பாலன் கைகள் நடுங்கியது.

மறுபடியும் அவன் கைகளை பிடித்தார்.இரண்டு நிமிடம் கண்மூடி ஏதோ முணுமுணுத்தார்.

“நான் ஒண்ணு சொல்வேன் அத செய்வீயா பாலன்”

“சொல்லுங்க ஐயா”

“ஐயான்னு சொல்லாத.தேன்மான்னு சொல்லு”

“சொல்வேன் தேன்மா. தேன்மா!”

“உனக்கு முதன் முதல்ல கைநடுங்கினது ஞாபகம் இருக்கா”

“ம்ம்ம்”

“எப்போ”

“பிளஸ் டூ மேத்ஸ் பரிட்சையில”

“அப்போ என்னப்பார்த்த”

“ஒண்ணுமே பார்க்கல தேன்மா.அப்பாவுடைய அம்மாவுடை அழுது வீங்கின முகம்த்தை தவிர”

“இல்ல பாலன் இன்னும் யோசி. என்னப்பார்த்த”

“ஒண்ணுமே பார்க்கல தேன்மா”

“நீ பார்த்த நான் சொல்லட்டுமா”

“ம்ம்ம்”

“நீ அன்னைக்கு அழுதுகிட்டே தரைய பார்க்கும் போது ஒரே ஒரு அரச இலைய பாத்தியா”

“ஆ...ஆமா ஒரு இலையை பார்த்தேன்

தேன்மா.உங்களுக்கு எப்படி தெரியும்..எப்படி... “

“அதவிடு பாலன் பார்த்தியா அது எப்படி இருந்துச்சி பாலன்”

“நான் அழுதது பிடிக்காம எரிச்சல்ல எல்ல இலையும் மொகத்த திருப்பிகிச்சி தேன்மா.ஆனா ஒரு இலை மட்டும் மத்திம வயசுல உள்ள ஒரு இலை மட்டும் என்னப்பார்த்து ஆறுதல் சொல்லிச்சு”

“எப்படி அது ஆறுதல் சொல்லிச்சுன்னு சொல்ற”

“தெரியல தேன்மா.ஆனா அது ஆறுதல் சொல்லிச்சி”

அத உன்னால இப்ப வரைய முடியுமா.அந்த அரச இலைய.

ஒரு டிராயிங் நோட்டையும் கலர்பென்சில்களையும் அவன் முன்னால் வைத்தார் தேன்மா.

பாலனுக்குள் இருக்கும் இலை பாலன் வழியாக தன்னை வரைந்து கொண்டது.

அரச இலைகளை வளைவும் வாலின் “தலைப்பிரட்டை வால் “அமைப்பும். நரம்புகளும் கலர்பென்சிலில் இருந்து குதித்து குதித்து நோட்டில் படிந்து கொண்டிருந்தன.

பதினைந்து நிமிடத்தில் அன்று பார்த்த அந்த அரச இலையை வரைந்திருந்தான்.

வரைந்து முடித்திருக்கும் போது அவன் கைநடுக்கம் பாதியாக குறைந்திருந்தது.

“பாலன்”

“இதுதான் அந்த இலையா”

“தேன்மா... “ உணர்ச்சித்தான் பாலன்.

”இந்த இலைகள் மாதிரி எல்லா இலைகளையும் வரைந்து விடு.

இனிமேல் இலைகள்தான் உன் நண்பன்,காதலி,நல்லது,கெட்டது எல்லாம்.

உலகின் ஒரு இலையை விடாதே.

புளிய இலையை வரை,ஆல இலையை வரை,யானைசெவி இலையையும் விடாதே,குரோட்டன்ஸ் செடி இலையை வரை. வரைந்து கொண்டே இரு.

இந்த இலைகள்தான் உன்னுடைய கைநடுக்கத்தை நிறுத்தும்.உன்னுடைய கம்பீரத்தை உனக்கு மீட்டுக்கொடுக்கும்.

ஒவியத்தில் கரைந்துவிடு.

பல வர்ணங்களிலும் உன்னுடைய கைநடுக்கம் கரைந்து இந்த வெள்ளைத்தாளில் படிந்து விட்டது.

இனிமேல் உனக்கு கைநடுங்காது.

இந்த கலர்பென்சில் பாக்ஸையும் டிராயிங் நோட்டையும் விடாதே பாலன்.

வேறு எல்லா மருந்துகளையும் தூக்கி போட்டுவிடு பாலன்.

பென்சில்களை நீ வீச வீச இலைகள் பலவித பச்சைகளில் உன் தாளில் தளிரட்டும்.

போய்வா பாலன்.”

கதவை திறந்து வெளியே வந்த பாலனின் கைகள் நடுங்கவே இல்லை என்பதை அப்பாவும் அம்மாவும் அதிசயமாய் பார்க்கும்போதே, அவனுடைய கைகளில் இருக்கும் கலர்பென்சில் பாக்ஸையும் டிராயிங் நோட்டையும் அதைவிட அதிசயமாய் பார்த்தார்கள்.

Sunday, 3 March 2013

கதை போல் ஒன்று - 74


பாத்ரூம் கதவை உள்ளே இருந்து அப்பாம்மை தட்டினார்கள்.

ஏன் தட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

கொண்டி உள்ளே இருக்கிறது.திறந்து கொண்டு வெளியே வரவேண்டியதுதானே.ஏதோ வெளியே பூட்டி வைத்திருப்பதுபோல் தட்டுகிறார்களே.

ஒருவேளை வெளியேதான் பூட்டிவைத்திருக்கிறோமோ என்று வெளிகொண்டியை பார்க்கிறேன்.பூட்டாமல்தான் இருக்கிறது.

நான் கத்துகிறேன் “அப்பாம்ம என்ன பண்றீங்க.வெளிய பூட்டல நீங்கதான் கதவ தொறக்கனும்”

உள்ளே இருந்து வித்தியாசமான குரல் கேட்டது.

அப்பாம்மைக்கு கிட்டதட்ட எழுபதுவயதுக்கு மேலே.

சின்ன வயதில் இருந்தே மிகச்செல்லமான வளர்ப்பு.

ஊரில் எல்லோரும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் போது தன் கணவன் மட்டும் கொழும்பு போய் ஆயிரக்ககணக்கில் சம்பாதித்து கொட்ட ஒரு வித ராணி அந்தஸ்த்தில் வாழ்ந்தவர்.

எதற்கெடுத்தாலும் கொழும்பு புகழ் பாடுவார்.”எனக்கு இந்த கொழும்பு தேங்காத்துருவல்தான் பிடிக்கும்ல” என்பார்.

குடும்பத்தில் அப்பாம்மை பேச்சுக்கு மறுபேச்சு சொல்ல ஆளே கிடையாது.

அப்பாம்மை அம்மாவை படுத்தியதை எல்லாம் இரண்டு தடி நோட்டில் எழுதினாலும் தீராது.

எல்லா சர்வாதிகாரிகளும் வீழ்ச்சிக்குறியவர்களே என்ற தத்துவம் அப்பாம்மைக்கும் பொருந்தியது.தாத்தாவின் காலத்திற்கப்புறம் தனியே இரண்டுமாதங்கள் இருந்தார்.

அந்த தனிமை அவர் மனநலத்தை பாதித்திருந்தது.

சென்னைக்கு வரமாட்டேன் என்றவர் அவரே வருகிறேன் என்று சொல்ல, அப்பா கூட்டி வந்துவிட்டார்.

வழக்கம்போல சென்னை அப்பாம்மைக்கு பிடிக்கவில்லை.

ஊருக்கு போகவேண்டும் என்று அடம்பிடித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக மனச்சமன்நிலையை இழந்தார்.

அதிலும் ஊரில் காத்தோட்டமாக “ஒண்ணுக்கு” இருந்து பழகிவிட்ட அப்பாம்மைக்கு இந்த சென்னை அட்டாசிடு பாத்ரூம் சுத்தமாக பிடிக்கவில்லை.

சரியாக தண்ணீர் ஊற்றமாட்டார்.நான் கத்துவேன்.

மறுபடியும் அப்பாம்மையை பார்த்து கத்தினேன்.ஏனேன்றால் எனக்கும் பாத்ரூம் தேவையாய் இருந்தது.அன்று ஆபீஸுக்கு சீக்கிரம் போகவேண்டிய வேலை.

“நீங்கதான் பூட்டிகிட்டு இருக்கீங்க திறங்க”

உள்ளே இருந்து “ஹீங் ஹீங்” என்று குரலெழுபினார் அப்பாம்மை.

“அப்பாம்ம உள்ள கொண்டி இருக்கு பாருங்க அத உங்க பெருவிரலும் ஆள்காட்டி விரலும் வெச்சு அப்படியே மேலே தூக்கி இழுங்க திற்ந்துரும்”

“ஹீண் ஹீன் “அழும் குரல்.

“யம்மா இங்க வாங்க உங்க மாமியார பாருங்க. சனியன் மாதிரி உள்ள இருந்து மொக்க போடுறாங்க.எனக்கு பாத்ரூம் வேணும்.இவங்க எல்லாம் யாரு ஊர்ல இருந்து இங்க கூட்டிட்டு வரச்சொன்னது. சரியான லூசு”

அம்மா முறைத்தாள்.

“இப்படி பெரியவங்கள மதிக்காம பேசுறதா இருந்தா என்கிட்ட பேசாத நாய. அப்பா கேட்டா உன் கிட்ட மொகங்குடுத்து பேசமாட்டாங்க”

“அப்பா எங்க”

“முடிவெட்ட போயிருக்காங்க”

“ஆமா உங்க மாமியார் உங்கள இவ்வளவு கொடும படுத்தியும் இப்படி சப்போர்ட் பண்றீங்கன்னா நீங்களும் ஒரு அரைவெட்டுதான்”

இப்போ அம்மா பாத்ரூம் பக்கம் போய்.

“அத்த நான் கீதா பேசுறேன்.அப்படி மேல்ல கொண்டிய திறந்து பாருங்க அத்த”

“ஹீங் ஹீன் ஹீன்”

“அத்த அப்படி மெல்ல” அம்மா பேசிகொண்டிருக்கும் போதே நான் கத்தினேன்.

“ஏய் சனியன சீக்கிரம் வெளிய வா லூசு நாய” கத்தும்போதே அம்மா தொப்பு தொப்பென்று என் முதுகில் அடிக்க நான் திமிர

காலை வாக்கிங்கை முடித்து வீட்டிற்குள் நுழைந்த இரண்டு அண்ணன்களும் பிரச்சனையை தீர்க்க யோசித்தார்கள்.

எனக்கும் அம்மாவுக்கு இடையே ஆன ஆக்ரோச சண்டை பிரச்சனையின் தீவிரத்தை கூட்டியிருந்தது.

இப்போ அண்ணகள் முறை. அப்பாம்மையிடம் நயந்து பணிந்து சொல்லிப்பார்த்தான்கள்.

ஆனால் கதவு வேகமாக ஆடுகிறதே தவிர அவரால் திறக்க முடியவில்லை.

பெரியண்ணன் பாத்ரூமின் பின் பக்கம் போய் ஜன்னலில் பொருத்தியிருக்கும் கண்ணாடிகள் ஒவ்வொன்றாய் எடுத்தான்.கம்பி வழியே அப்பாம்மையை கூப்பிட்டான்.

எட்டிப்பார்த்தேன்.

உள்ளே அப்பாம்மை நடுங்கியபடியே நின்றிருந்தார்கள்.கண்களில் கண்ணீர்.முகமெல்லாம் என்ன செய்யவென்று தெரியாத பரபரப்பு பதட்டம்.
கைகால் எல்லாம் உதறிக்கொண்டே இருந்தன.

எனக்கு ஒரு குரூர சந்தோக்ஷம் வந்தது.எப்படியெல்லாம் எங்கம்மாவை கஸ்டபடுத்திருப்பார்கள்.இப்போ பாரு” இதுமாதிரி யோசிக்கும் போது எனக்கு பாத்ரூம் வேண்டிய யதார்த்தம் உரைக்க கத்த ஆரம்பித்தேன்.

“அந்த கொண்டிய எடுத்து வாங்க.எனக்கு பாத்ரூம் வேண்டாமா? காலங்காத்தால ஏன் இப்படி எரிச்சலாக்குறீங்க.

அண்ணன் கத்தினான் என்னைப்பார்த்து.

“ஏன்ல நாந்தான் பேசிக்கிட்டிருக்கேன்ல கொஞ்சம் அமைதியா இரு. அப்பாம்ம அந்த கொண்டிதான்.உங்க கைபக்கம்தான் இருக்கு அதோ பாருங்க.”

அப்பாம்மை கொண்டியை தவிர எல்லாத்தையும் தொட்டுகொண்டிருந்தார்கள்.நடுங்கிய கைகளால் கொண்டிக்கு மேலே தொடுகிறார்கள்.கீழே தொடுகிறார்கள்.ஆனால் கொண்டிமேல் கைவைக்கத்தெரியவில்லை.

அழுகை.

பாவமாய்தான் இருந்தது.

அண்ணன் காதில் கிசுகிசுத்தேன்.”இவங்கல்லாம் ஏன் உயிரோட இருக்காங்க.பழையகாலத்துல முதுமக்கள் தாழியில வைச்சு வாயில தண்ணி ஊத்தி மூச்ச நிக்க வைப்பாங்களாமே. அதுமாதிரி... “

“யம்மா இந்த நாய அந்தப்பக்கம் போகச்சொல்லுங்கம்மா.கிறுக்கன் தேவையில்லாம பேசுறான்” அண்ணன் கத்த அம்மாவும் திட்ட.

“இன்னும் பத்து நிமிசத்துல எனக்கு பாத்ரூம் வேணும்.அப்படி இல்லன்னா அவுங்கள நானே ஊர்ல கொண்டு விட்டுருவேன்.வயசான காலத்துல நம்மள கஸ்டபடுத்திகிட்டு.அன்னைக்கென்னன்னா நான் பாயில படுத்திருக்கும் போது பக்கதுல தண்ணியா இருக்கு. என்னன்னு பார்த்தா மோண்டு வைச்சிருக்காங்க.நைட்டு ஒரு மணிக்கு எந்திரிச்சி குளிச்சேன்.எனக்கு இவங்க இங்க இருக்க கூடாது.பதினைஞ்சு நிமிசத்துல பாத்ரூம் வேணும்”

“இத உன் அப்பாகிட்ட சொல்லுடா.உனக்கு வயசாகும்தான்” அம்மா கத்தினாள்.

அப்பாவிடம் சொல்ல முடியாது.அப்பாவின் முகத்தை பார்த்த உடனே எல்லா புனிதங்களும் என்னை நிறைத்து விடும்.ஒரு சிறிய சாக்கடைமேல் கங்கை ஆறு விழுந்தால் அதுவும்தானே கங்கை.

சோபாவில் உட்கார்ந்திருந்தேன். அம்மா கதவின் இந்தப்பக்கம் பேச, அண்ணன்களும் தம்பியும் ஜன்னல் பக்கம் விளக்கி சொல்ல அப்பாம்மையால் கடைசி வரை கதவை திறக்க முடியவில்லை.

அழுகையிலிருந்து கதறலாக ஆரம்பித்தார்கள்.சத்தம் அதிகமானவுடன் இன்னும் சத்தமாக கதவை எப்படி திறப்பது எல்லோரும் சொல்ல பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் என்ன விசயம் என்று கேட்க,

ஒட்ட வெட்டிய தலையுடன் அப்பா வீட்டிற்குள் வந்தார்.அப்பா வந்ததும் அவர் முன்னே குதித்து கத்தினேன் .அழுதேன். பாத்ரூம் பிரச்சனையை சொன்னேன்.

அப்பா பாத்ரூம் பக்கம் போனார் “டேய் யாரும் பேசாதீங்க.எல்லாரும் இங்க வாங்க.ஜன்னல் கிட்ட யாரு.எல்லாரும் இங்க ஹாலுக்கு வாங்க.அம்மா அவளாகவே அமைதியாகிவிட்டாள்.நானும் அமைதியாகிவிட்டேன்.

அப்பா தொடர்ந்தார்.

“பத்து நிமிசம் யாரும் பேசாதீங்க.அமைதியா இருங்க.அவுங்க பாத்ரூம்ல அப்பாம்ம மனசளவில ஜாம்மாகி இருக்காங்க.கொஞ்சம் விடுங்க.அமைதியா இருங்க.”

நான் ஏதோ சொல்ல வந்தேன்.

“எதுவுமே பேசாத விஜய்.அமைதியாயிரு.வார்த்தை பேசக்கூடாதுஅவங்க ஈகோவுக்கு தன்னால ஒரு கதவ கூட திறக்கமுடியலன்னு ஒரு தன்னிரக்கம் கோவம் அவமானம் எல்லாம் இருக்கு.அதனால அதுக்கு மேல அவுங்களால யோசிக்க முடியல.நாம அவுங்கள கவனிக்கலன்னு தெரிஞ்சா மட்டும்தாம் நார்மலாவாங்க”

நாங்கள் அமைதியாயிருந்தோம்.ஊசி விழும் ஒசை கேட்கும்.

ஐந்து நிமிடம் ஆனது.அப்பாம்மையின் கதறல் அழுகையையிருந்தது.

இரண்டு நிமிடத்தில் அழுகை நின்றது.

அடுத்த நான்கு நிமிடத்தில் டக்டெக்கென்று கதவு திறக்கப்பட்டது.

அப்பாம்மை வெளியே வந்திருந்தார்.அவருடைய அழுது சிவந்த சுருங்கிய முகத்தை பார்த்தால் பாவமாய் இருந்தது.

அதுவரை அமைதியாய் இருந்த அப்பாவின் கண்களில் கண்ணீர் அரும்பிருந்தது.துடைத்து கொண்டார்.

அவசரமாக உள்ளே கதவை தாளிட்டு ஷவரை திறந்துவிட்டேன்.அப்பாவின் கண்ணீர் ஏதோ செய்தது.

தலைவழியே தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் நான் அழுதேனா இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.