Wednesday 16 May 2012

கதைபோல ஒன்று - 8

ஆறாங்கிளாஸ் படிக்கும்போது ராஜீவ்காந்தி நாகர்கோவில் வர்ராருன்னு, சட்டை கூட போடாமல் ஓடிப்போனேன்.

நாகர்கோவில் பறக்கைல உள்ள ரிசர்வ் போலீஸ் கேம்பு கிரவுண்ட்ல, மத்தியானம் 12 மணிக்கெல்லாம் வந்து நின்னுட்டேன். 

கூட்டம்.

சவுக்கு கம்பத்த வேலியா நட்டு அது பின்னாடி எங்கள் நிறுத்தி இருக்காங்க. ரொம்ப நேரமா ராஜீவ் காந்தி வரல. ஜனங்க சவுக்கு கம்பமெல்லாம் வெத்தல போட்டு மிச்சமிருக்கிற சுண்ணாம்ப தடவ ஆரம்பிச்சிட்டானுங்க.

பல கதைகளையும் பேசிகிட்டே இருந்தாங்க.ராஜீவ் காந்தி கலரா இருக்கிறத பத்தியும், அவரு நல்லா இங்கிலீஸ் பேசுரதப் பத்தியும் அடிச்சி விடுறாங்க ஆளாளுக்கு.

ஒரு தாத்தா இன்னும் மேல போய் , ராஜிவ் காந்தி டெய்லி காலை டிபனா ஒரே ஒரு ஆப்பிள் மட்டும்தான் சாப்பிடுவார் என்றும் , அதுவும் வெளிநாட்டில் இருந்து தரவிக்கபட்ட தரமான ஆப்பிள் மட்டுமே சாப்பிடுவார் என்று பக்கத்திலேயே இருந்து ஆப்பிள் வெட்டி கொடுத்த மாதிரி சொன்னார்.

ஒரு வழியா ஹெலிகாப்டர் இறங்கிற்று அந்த காத்தாடி சுத்தி முடிக்கயே ரொம்ப நேரம் ஆச்சு .

அதுல இருந்து சின்ன உருவம் கைய்ய அசைச்சுட்டு சட்டுன்னு டெண்டுக்குள்ள போயிற்று. அதுதான் ராஜீவ் காந்தின்னு ஒரே பரபரப்பு.

எனக்குன்னா கடுப்பு.

என்ன இவர பாக்க 12 மணில இருந்து பச்ச தண்ணி கூட குடிக்காம நாயா கிடக்குறேன், இவரு என்ன இப்படி போயிட்டார்ன்னு கோவம்.

திரும்ப வரும் போது பக்கத்துல வருவாருன்னு ஒரு போலீஸ்காரர் சொல்ல ஜனங்க பொறுமையா வெயிட் பண்ண நான் வெளியே வந்துட்டேன்.

வழி நெடுக போலீஸ்.

நடந்து வரும்போது ,ஒரு விளையை பார்த்தேன் . விளை முழுதும் கொல்லா மரம் (முந்திரி மரம்) . அதுல கொல்லாம்பழம் சிகப்பும் மஞ்சளுமாய் குண்டு குண்டாய் இருக்குது.

யாருமே இல்லை.

பயமாய்த்தான் இருந்தது. ரெண்டு பழத்த பறிச்சு சாறு பொங்க பொங்க சாப்பிட்டேன். நாக்கை இழுத்து பிடித்தது கொல்லாம்பழம் சுவை.

“என்னடா பண்ற “ ஒரு குரல் கேட்டது .

உடம்பு பதறிற்று.

நடுங்கி பாத்தா,காவலுக்கு நிக்கும் போலீஸ்காரர் ஒண்ணுக்கடிக்கும் போது நான் திருடரத பாத்து விளையாட்டா மிரட்டி கூப்பிட்டிருக்கிறார்.

உண்மையிலேயே மிரட்டுரதா நம்பிட்டேன்.

“ மேல பாரு” . பார்த்தேன் .

”ரெண்டு ஹெலிகாப்டர் பறந்து போயிட்டு இருக்கு பாரு! அந்த ஹெலிகாப்டர் கேமரால உன்ன படம் எடுத்துடுவானுங்க. எடுத்த உடன உன்ன பிடிச்சிருவாங்கன்னு ”சொன்னார்.

எம்முகத்துல ரத்தமே இல்ல.

ஓடினேன் வீட்டை நோக்கி, கால் நடுங்க.

ஹெலிகாப்டரோ என்னை துரத்துது.

நான் முருகா! முருகா! ன்னு சொல்லிட்டே ஒடினேன் .

ஒரு வழியா வீட்டுக்கு வந்து கதவை பூட்டினேன்.

அரைமணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் சத்தம் நின்ன பிறகுதான் வெளியே வந்தேன்.

அந்த போலீஸ்காரர் முகத்தையும் , கொல்லாம்பழத்தயும் மறக்கவே மாட்டேன் . :))

No comments:

Post a Comment