Wednesday, 28 May 2014

முன்னுரை வந்தது வண்டியிலே...

முன்குறிப்பு:இதில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே.யாரையும் குறிப்பிடுவன அல்ல...
அந்த வாசகர் எழுத்தாளரைக் காண காத்திருந்தார்.
கையில் உயர்ரக மதுபோத்தலை வேறு உயர்த்திப் பிடித்திருந்தார்.
எழுத்தாளர் மனசெல்லாம் நிறைந்து வாசகரை வரவேற்றார்.
பேசிய கொஞ்ச நேரத்திலேயே எழுத்தாளர் பண உதவி கேட்க,வாசகர் உடனே அதை சாங்சன் செய்ய,எழுத்தாளர் கண்ணீர்மல்குகிறார்.உடனே வாசகரும் உருகுகிறார் இப்படி,
“இதுல என்ன தல இருக்கு”
“அட போப்பா என்னை இந்த தமிழ் இலக்கிய உலகம் எப்படி புறக்கணிக்கிறதென்று உனக்கு தெரியாது.உன்னுடைய அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலையே”
“ஒண்ணும் வேண்டாம் தல”
“நோ வாசகா.எதாவது உனக்கு செய்யனும்.உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீ எனக்கு கொடுக்கிற காசு பணத்த அதவிட எனக்கு பிடிச்சிருக்கு.உன் ஆச என்ன சொல்லு”
“ஒண்ணுமே இல்ல தல”
“அட சொல்லுப்பா”
“அது வந்து ஒரு புக்கு எழுதி பப்ளிஷ் பண்ணனும்.அதுல நல்ல புகழ் அடையனும்.அதுக்கு நீங்க உதவி செஞ்சா வசதி”
“அட இவ்வளவுதான.வா தண்ணியடிக்கலாம்”
“தல புக்கு பத்தி”
“அட வாப்பா வாசகா கோப்பையை நிரப்பு.தண்ணியடிக்கலாம்”
வாசகன் கோப்பையை நிரப்ப, ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டனர்.
இரண்டு ரவுண்ட் போனதும்.
வாசகனுக்கு போன்.
கட் செய்தான் அதை.மறுபடியும் மறுபடியும் போன் அடிக்கிறது.எரிச்சலில் எடுக்க, மறுமுனையில் வாசகனின் மனைவி
“என்னங்க என்னங்க எனக்கு பயமாயிருக்கு”
“என்னாச்சும்மா.. எதாவது பிரச்சனையா”
“ஏதோ நடக்குதுங்க.நீங்க டேபிள்ள பேப்பரும் பேனாவும் வெச்சிருந்தீங்கல்ல.அதுல பேனா மட்டும் தன்னாலேயே பேப்பர்ல ஏதோ எழுதிகிட்டிருக்கு.பேய் பூதமா இருக்குமோ”
வாசகன் திடுக்கிட்டான்.எழுத்தாளனை பார்த்தான்.
எழுத்தாளர் ஆலிவ் காய்களை ஃபோர்க்கினால் குத்தி குத்தி தின்று கொண்டிருந்தார்.புன்னகைத்தார்.
“வாசகா உன் மனைவியை பயப்பட வேணான்னு சொல்லு.என்கிட்ட சேர்ந்தால் அது மாதிரிதான்.அங்கே ரெடியாகிக் கொண்டிருப்பது உன்னுடைய படைப்பு”
வாசகன் ஆசுவாசமாகி மனைவியை சமாதானப்படுத்தினான்.
“நீ பயப்படாத.எல்லாம் தலயோட திருவிளையாடல்.அந்த ’தன்னால எழுதிற பேனாவ’ தடுக்காத.அத அப்படியே எழுத விட்டுடு”
“சரிங்க நீங்க சொல்றபடியே கேக்குறேன்.ஆனா அந்த பொல்லாத பேனா ஒரு மாதிரி பின்னி பின்னி எழுதுதுங்க”
”அது பின்நவீனத்துவம் எழுதுது.அப்படித்தான் பின்னும் பயப்படாதம்மா “ என்று சொல்லி போனை வைத்தான்.
வாசகனுக்கு புல்லரித்தது.எழுத்தாளர் காலில் விழுந்து அழுதான்.
“ஐயா!உங்களுக்கு என்ன நன்றி சொல்வேன் ஐயா.உங்களோட ஐரோப்பிய பயண செலவ கூட நான் ஏத்துக்கிறேன் தல” என்றான்.
அப்போது வாசகனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது.
தன்னை ஒரு அறிவு பிம்பமாக காட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாகிவிட்ட பதிப்பக உரிமையாளரிடமிருந்து வந்தது.
“பாஸ் உங்க வீட்ல உங்க பேனா தனியா எழுதுறதா கேள்விப்பட்டேன்.கண்டிப்பா அத என் பதிப்பகத்துக்கு குடுத்திருங்க.நான் தான் அத பப்ளிஷ் பண்ணுவேன்.கொஞ்சம் செக்ஸ் அதிகமா இருக்கிறது மாதிரி உங்க பேனாகிட்ட சொல்லிருங்க.சரியா.பேனாவுக்கு காண்டம் போடக் கூடாதென்று குஷ்வந்த் சிங்கே சொல்லியிருக்கிறார்”
எஸ்.எம்.எஸ்ஸை பார்த்ததும் வாசகனுக்கு தலை சுற்றியது.
எழுத்தாளருக்கு பலமுறை நன்றி சொல்லி வீட்டுக்கு சென்றான்.
அங்கே வீட்டில் பேனா அந்த இருநூறு பக்க படைப்பை எழுதிமுடித்திருந்தது.வாசகனுக்கு திருப்தி.தன்னுடைய படைப்பு புத்தகமாவது பற்றி மிக்க மகிழ்ச்சி.
அப்போது காலிங் பெல் அடிக்க,கதவை திறந்தான்.
தெருவில் ஒரு மீன்பாடி வண்டி நின்றிருந்தது. அதை பெரிய டார்ப்பாயைப் போட்டு மூடியிருந்தார்கள்.
வண்டியின் சொந்தக்காரர் வந்து வாசகனிடம் சொன்னார்.
“உங்க படைப்பு முடிஞ்சதா.என்ன எழுத்தாளர் அனுப்பி வெச்சார்”
“முடிஞ்சது ப்ரோ.என்ன விசயம்”
“நீங்க ரெண்டு பேரும் தண்ணியடிக்கும் போதே எழுத்தாளர் ரூம்ல அவர் பேனா தன்னாக்குல எழுதுன முன்னுரையாம் இது.இத உங்க படைப்புக்கு முன்னாடி போட்டுக்கச் சொன்னார்.
வாசகன் உணர்ச்சிப் பெருக்கால் தேம்பி தேம்பி அழுதான்.
“எழுத்தாளருக்கு நன்றி சொன்னதா சொல்லுங்க,எங்க அவரு எழுதின முன்னுரைய பார்ப்போம்”
“இருங்க” என்று சொல்லி மீன்பாடி வண்டிக்காரர் டார்ப்பாயை நீக்கினார்.
கிட்டத்தட்ட ஒரு டன் அளவிற்கான பின் நவீனத்துவ முன்னுரை அந்த வண்டியில் வாசகனைப் பார்த்து சிரித்தது.
வாசகன் மயங்கி விழுந்தான் 

Sunday, 18 May 2014

வெஸ்டர்ன் பிலாஸபி...

அன்று நான் Pascal's wagers என்ற எளிய லாஜிக் ஒன்றை எழுதியிருந்தேன். அதை எளிதாக விளக்க பாஸ்கல் குறிப்பிட்ட அதே கடவுள் நம்பிக்கை உதாரணத்தையே கொடுத்திருந்தேன்.
நண்பர்கள் அந்த லாஜிக்கை விட்டுவிட்டு, உதாரணத்தை எடுத்துக் கொண்டு,கடவுள் நம்பிக்கை,கடவுள் நம்பிக்கை சார்ந்த தத்துவங்கள் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.நான் யாருடைய அறிவையும் குறைத்து எடை போடவில்லை.ஆனால் நாம் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்ல வருகிறேன்.
நமக்கு வெஸ்டர்ன் பிலாசபி என்ற தத்துவம் பற்றிய ஆர்வமே கிடையாது.
எப்படி ஆங்கிலத்தைப் பேச ஏ,பி,சி,டி படிக்க வேண்டுமோ,அது போல தத்துவம் பேச,விவாதிக்க ஒரு அடிப்படை அறிவு வேண்டும்.அந்த அடிப்படை அறிவே நமக்கு இல்லை.எதாவது ஒன்றைச் சொன்னால் இதைத்தான் நம் முன்னோர்கள் எல்லாமே பரம்பொருள் என்று சொல்லிவைத்தார்கள் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிப் போய்விடுகிறோம்.
அது நம் வாழ்க்கைக்கு,நம் சமூகத்தை முன்னெடுத்து செல்ல எந்த விதத்திலும் உதவி செய்யாது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
Francis Bacon இருக்கிறார்.அவர் என்ன செய்தார்? எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக ஏன் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தைப் பற்றி மட்டுமே நிறைய தத்துவங்களை சொல்லியிருக்கிறார். வில் டூரண்ட் இதுவரை உலகை மாற்றிய பத்து பர்சனாலிட்டிகளுக்குள் ஒருவராக பேக்கானை சேர்க்கிறார்.
அவரைப் பற்றி நம்மூர் காலேஜ் மாணவனுக்கு தெரியுமா? தெரியாது. காலேஜ் மாணவனை விடுங்கள்.நம்ம ஊர் அறிவு ஜீவிகளுக்கு. தெரியாது.
நம்ம ஊர் எழுத்தாளர்களுக்கு? தெரியாது.
தெரிந்தாலும் அதை அவர்கள் பரவலாக்க மாட்டார்கள்.பரவலாக்க விரும்புவதில்லை.பரவலாக்க ஆர்வமில்லை.
சிம்பிள் உதாரணமாக ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் மகாபாரத்தை திரும்ப எழுதுகிறார்.பிரமாண்டமாய் எழுதுகிறார்.இதனால் எதாவது பயனிருக்கிறதா?
நிற்க.
ஜெயமோகன் எழுதுவதை நீ எப்படி பயன் பயன் இல்லாதது என்று சொல்லலாம்.அது படைப்பாளியின் சுதந்திரம் என்று சொல்ல வருகிறீர்களா?
மறுபடியும் நிற்க.
ஜெயமோகன் ஏன் மகாபாரத்தை எழுதுகிறார்? ஏன் இந்திய எழுத்தாளர்கள் எல்லோரும் மகாபாரத்தையும் ராமாயணத்தையும் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.ஏனென்றால் இந்தியர்கள் வெளி உலகம் அறிய விரும்பா மடையர்கள்.அவர்களிடம் எளிதாக செல்லுபடியாகும் சரக்கு இந்த இரண்டு இதிகாசங்கள்தான்.
ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்கள் எல்லோருக்கும் அத்து படி.அதனால் அதையே திரும்ப திரும்ப மாற்றி மாற்றி வெவ்வேறு பார்வையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.இதே இந்தியர்கள் மேலைநாட்டுத் தத்துவத்தை கற்க ஆரம்பித்தால்.( நம் நாட்டுத் தத்துவம்தான் நமக்கு தெரியுமே.எல்லாமும் ஒரே பொருளில் அடங்குகிறது.அது பரம்பொருள்) அது பற்றியே பேசிப் பழக ஆரம்பித்தால்,
இந்த எழுத்தாளர்கள் எல்லாம் அந்த தத்துவங்களைப் பற்றி திரும்ப திரும்ப எழுதுவார்கள்.ஏன் மேலை நாட்டுத் தத்துவம்தான் பெரிசா? நம் பாரத நாட்டில் விளைந்த தத்துவங்கள் எல்லாம் சும்மாவா? என்ற கேள்வி வரலாம்.
தற்போது நம் நாட்டுக்கு முக்கிய தேவை இந்த மேலை நாட்டுத் தத்துவங்கள்தாம். வெஸ்டர்ன் பிலாஸிபில் ஒருவர் சொன்னதை மற்றவர் கொண்டாடுவதில்லை.ஆனால் ஆராய்கிறார்.அது பற்றிய இன்னொரு பார்வையை வைக்க அதுவும் தத்துவமாய் விரிகிறது.இன்னொருவர் அதை வேறுவிதமாக பார்க்க அது இன்னொரு தத்துவமாய் ஆகிறது.
ஆக மீண்டும் பார்ப்பது.மீண்டும் மீண்டும் சரி பார்ப்பது.இதெல்லாம் மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
அறிவியலையும் கணிதத்தையும் கலந்தே தத்துவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
கால்குலஸைக் கண்டுபிடித்த லிப்னிஸ் ஒரு தத்துவ அறிஞர்.அனலிட்டிக்கல் ஜியோமெட்டிரியைக் கண்டுபிடித்த டிஸ்காரட்டஸ் ஒரு தத்துவ அறிஞ்ர்.லாஜிக்கைப் பற்றிய அறிவியலை பரவலாக்கிய பெட்ரண்ட் ரசல் தத்துவ அறிஞர்தானே.இவர்களின் எந்த வாக்கியமும் வெற்று வாக்கியமில்லை.
சராசரி இந்திய பிரஜைக்குள் இன்னும் குடிக்கொண்டிருக்கும் ஆழமன மூடநம்பிக்கைகளை போக்க இவர்களைப் போன்ற மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்களால்தான் முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய மரபு பற்றியெல்லாம் அதிகம் பேசும் நம்ம ஊர் எழுத்தாளர்கள் ஏன் மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்கள் பற்றி அதிகம் எழுதுவதில்லை.
ஏனென்றால் உணர்ச்சிகரமாக,உணர்வுபூர்வமாக,நெஞ்சைத் தொடுவது மாதிரி எழுதும் எழுத்தாளர்களுக்கு மேலை நாட்டு தத்துவமே தெரியாது.ஏன் அவர்களுக்கு தெரியாது? அதைத்தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அவர்களுக்கு அடிப்படை கணித மற்றும் அறிவியல் அறிவு வேண்டும்.அவர்களுக்கு ஏன் அடிப்படை அறிவியல் மற்றும் கணித அறிவு இல்லை.ஏனென்றால் அவர்கள் அகடெமிக்கை சரிவர கற்றவர்கள் இல்லை. ஏட்டுச்சூரைக்காயை கல்லாமல் வெளிவந்தவர்கள்.
ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள்.சாரு நிவேதிதாவை எடுத்துக் கொள்ளுங்கள்,பாலகுமாரனை எடுத்துக் கொள்ளுங்கள்.இவர்களுக்கு எல்லாம் நன்றாக எழுத வரும்.ஆனால் அறிவியல் தெரியாது.கணிதம் தெரியாது. எப்படி இவர்களால் தங்கள் எழுத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.முடியவே முடியாது.
ஆகையால்தான் இவர்கள் இந்திய மரபு,மகாபாரதம்,தனிமனித விடுதலை,வாதை,சோழப்பரம்பரை என்று எழுதி நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள்.
நான் அவளை critique of dialectical reason புத்தகத்தை படி என்றேன் என்பார் சாரு. சரி அந்தப் புத்தகத்தை பற்றி நாலுவார்த்தை ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றால் எஸ்கேப்பாகிவிடுவார் ( அபிலாஷ் சந்திரன் ”சாருவின் இந்தத் தன்மை” பற்றி நல்ல பத்தி எழுதியதை நினைவு கூர்கிறேன்).இதைத்தான் தமிழ் சுவாரஸ்ய எழுத்தாளர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.
என்னுடைய ஆவல் என்னவென்றால் மேலை நாட்டுத் தத்துவங்கள் எளிமையாக தமிழுக்கு வரவேண்டும்.அதை நம்மை போன்ற இளைஞர்களால் செய்ய முடியும்.
சுஜாதா என்னும் தமிழின் ஒரே வீரேந்திர சேவாக் ( எல்லா திசைகளிலும் சிக்சர் அடிப்பவர்) இன்னும் 30 வருடங்கள் அதிகம் வாழ்ந்திருந்தால் அவரே நமக்கு அதை செய்து கொடுத்துப் போயிருப்பார்.அல்லது பிரமிள் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்தாலும் அது நடந்திருக்கும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களில்லை.
ஜெயமோகனுக்கோ,சாருவுக்கோ அல்லது எஸ்.ராவுக்கோ இது பற்றியெல்லாம் எழுதுவதற்கான அறிவும் இல்லை.தெம்பும் இல்லை.அவர்களை நிறுவிக் கொள்வதற்கே அவர்களுக்கான நேரம் சரியாக இருக்கிறது.
ஆனால் அடுத்த கட்ட ”முகநூல் எழுத்தாளர்கள்” என்று அறியப்படும் அபிலாஷ்,விநாயக முருகன்,பூ.கோ.சரவணன்,வா.மணிகண்டன்,யுவகிருஷ்ணா,அதிஷா போன்றவர்கள்,
இன்னும் அறிவியலை,கணிதத்தை ஒழுங்காக படித்த தமிழ் மீது ஆர்வமிருக்கும் மாணவர்கள்,
இளைஞர்கள்,
புத்தக கண்காட்சிக்கு ஒல்லியான கவிதை புத்தகம் போடும் எழுத்தாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து மேலை நாட்டு தத்துவங்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும்.
உடனே கச்சம் கட்டிக்கொண்டு குண்டு குண்டு புத்தகங்களை மொழிபெயர்க்க சொல்லவில்லை.
சின்ன சின்ன கட்டுரைகளின் சாராம்சத்தை எழுதலாம்.சின்ன மேலைநாட்டுத் தத்துவ லாஜிக்காக இருந்தாலும் அதை முகநூலில் பகிர்ந்து கொள்ளலாம்.அதுபற்றி நாலு பேர் படிப்பார்கள்.
இன்று அரிஸ்டாட்டிலைப் பற்றி எழுதிவிட்டாயா? நாளை நான் ஹெகலைப் பற்றி எழுதுகிறேன்.நான் மட்டும் மட்டமா? நான் பூக்கோ பற்றி எழுதுகிறேன்.இப்படிப்பட்ட ஒரு போட்டி முகநூலில் உருவாக வேண்டும்.
ஒருவருடத்தில் முகநூல் தமிழர்களில் 5000 பேராவது மேலை நாட்டுதத்துவங்களின் அம்சத்தை வடிவேலு ஜோக்குகளை ரெஃபரன்ஸ் கொடுப்பது போல கொடுத்து பேசலாம்.
“அட நீங்க சொல்றதப் பாத்தா பெர்க்லி சொல்ற இந்த வாக்கியமாதிரில்லா இருக்கு” என்ற ரீதிக்கு வந்து விடலாம்.
தேவை தன்னம்பிக்கை மட்டுமே.
5000 தமிழர்களுக்கு மேலை நாட்டு தத்துவங்களில் அடிப்படை தெரியும் போது,அதிலிருந்து 50 பேர் புத்தகங்கள் எழுதுவார்கள்.அதிலிருந்து 5 பேர்கள் “விஷ்ணுபுரம்” மாதிரி குண்டாக மேலைநாட்டு தத்துவ புத்தகத்தை தொகுப்பார்கள்.
ஒரு வித அறிவுப் பசியும் வெறியும் பரவும்.கல்லூரிகளில் இது பற்றி விவாதிப்பார்கள்.பள்ளிகளில் பேசுவார்கள்.
வேறு வழியில்லாமல் தமிழ் எழுத்தாளர்கள் இது பற்றி எழுதாமல் முடியாது என்று அறிவியல் கணிதம் டியூசன் கற்றுக் கொண்டு எழுத வருவார்கள்.
இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன்.
வெஸ்டர்ன் பிலாசபி என்றவுடன் ஏதோ ஜீன்ஸ்,பர்கர், எல்லாம் வேஷ்டி, சோற்றை அழித்தது மாதிரி அழிக்க வந்தது என்ற எண்ணத்தை இந்திய குருமார்கள் உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.அதை நம்பத் தேவையில்லை என்பது வாதம்.
இப்போதைக்கு நமக்கு தேவை பகுத்தறிவாலும்,கணித அறிவியலாலும் கட்டமைக்கப்பட்ட மேலைநாட்டுத் தத்துவங்கள்தாம்.
வேலையைத் தொடங்குவோமாக.

உங்களையறியாமல் இந்துத்துவா எண்ணங்கள் உங்களிடம் இருந்தால்...


உங்களையறியாமல் இந்துத்துவா எண்ணங்கள் உங்களிடம் இருந்தால்,

கீழ்கண்ட வாக்கியங்களில் சிலவற்றோடு பொருந்தி போவீர்கள்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். தவறு இருக்கலாம்.

-ஜெயமோகன் ரொம்ப பிடிக்கும்.அவர் எழுத்துக்களை அதிகமாக புகழ்வீர்கள்

-அசைவம் உண்பதை அருவருப்பாக,மனித தன்மையற்ற செயலாக பார்ப்பீர்கள்

-சிவன் திருமால் எல்லாம் பெரிய டீசண்டான சாமியாகவும், பேச்சி,சுடலைமாடன்,அய்யனார் எல்லாம் கொஞ்சம் சுமாரான சாமியாகவும் தெரியும்.

-அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை கேசுவலாக கிண்டலடிப்பீர்கள்

-அருந்ததிராயை பிடிக்காது.

-அ.மார்க்ஸ்,ஞானி போன்றவர்களை பிடிக்கவே பிடிக்காது

-விவேகானந்தரை ரொம்ப பிடிக்கும்.அம்பேத்காரை பிடிக்காது.அம்பேத்காரை பிடிக்காது என்று வெளிப்படையாக உங்களுக்கே தெரியாது.அது உங்கள் ஆழ்மனதில் இருக்கும்.

-இடஒதுக்கீடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள்.இடஒதுக்கீடு இல்லாவிட்டால் 1000 பேர் பாதிக்கபடுவர்.இருந்தால் 2 -பேர் பாதிக்கபடுவர் என்ற அறிவெல்லாம் உங்களுக்கு வரவே வராது. சும்மா பிளேனா என் சித்தி பையனுக்கு 1000 மார்க் இருந்துச்ச்சி ஆனா சீட் கிடைக்கல என்று அற ஆவேசம் கொள்வீர்கள்.

-கம்யூனிசம் பற்றி அட்சர சுத்தமாக எதுவும் தெரியாது.ஆனால் கர்நாடக சங்கீதம் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள்.

-பாபர் மசூதி இடிப்பு பற்றி ஆவேசமாக எல்லாம் பேச மாட்டீர்கள்.வி.எஸ் நய்பால் ஸ்டைலில் வரலாறு பேசுவீர்கள்.

-சமஸ்கிருதம் மேல் உங்களை அறியாமல் பற்று இருக்கும்.தமிழில் நாலாயிர திவ்விய பிரபந்தமும்,தேவாரமும் மட்டும் பிடிக்கும்.

-தமிழில் அர்ச்சனை செய்வது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.அது பற்றிய போராட்டங்களில் சமஸ்கிருதம் வெற்றி பெறுவதை ரசிப்பீர்கள்.ஆனால் வெளியே அது பற்றி பேச மாட்டீர்கள்.

-தினமும் காலையில் ஹிந்து படிப்பீர்கள்.தமிழிலி தினமணி படிப்பீர்கள்

-அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று திராவிட கழகம் போராடினால்,” உங்களுக்குதான் கடவுளே கிடையாதே.பிறகு ஏன் இந்த போராட்டம்” என்று லூசுத்தனமாக பேசுவீர்கள்.

-ரஜினிகாந்த கமல் போன்றவர்களை அவர்களுடைய உயர்ஜாதி பிறப்புக்காக பிடிக்கும் என்பதை வெளியே சொல்ல மாட்டீர்கள்.அது உங்களுக்கே தெரியாது.ஆனால் ஆழ்மனதில் கிடக்கும்.

-சர்தார் வல்லபாய் பட்டேல்,திலகர் எல்லாம் சூப்பர் தலைவர்கள் என்பீர்கள்.

-திருமாவளவன் போன்ற ஆளுமைகளின் சமூகத்தேவையை பற்றி ஆராய மாட்டீர்கள்.சும்மாவேனும் அவருடைய ஒரு சில தவறுகளை வைத்து மட்டமாக திட்டுவீர்கள்.

-இந்து மதத்தின் முட்டாள்தனமான பழக்கவழக்கத்திற்கு விஞ்ஞான விளக்கம் கொடுப்பீர்கள்.

-ஜாதி அபிமானம் அதிகம் இருக்கும்.எஸ்.சி, எஸ்.டி எல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைக்கிறார்கள் என்று தாழ்ந்த குரலில் சொல்வீர்கள்.

-பாலகுமாரனின் உடையாரை கொண்டாடுவீர்கள்.

-மதானி பலவருடம் சிறையில் கிடக்கும் அநியாயத்தை பற்றி யாராவது எழுதினால் அதை வாசிக்காமலே கடந்து விடுவீர்கள்.அது பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமே இருக்காது.

-சினிமாவில் ஹீரோ எதாவது நல்லதாக செய்யப்போகும் போது பின்னால் ஒலிக்கும் சமஸ்கிருத சங்கீத வார்த்தைகளை கேட்டால் உங்களை அறியாமலே அது ஒரு உயர்வு என்று நினைத்துக் கொள்வீர்கள்.

-ஆனந்த விகடன்,குமுதம் போன்ற மறைமுக இந்து ஆதரவு இதழ்கள் உங்களுக்கு பிடிக்கும்.

-காந்தி ஒரு உயர் ஜாதிக்காரர் என்பது பற்றி பெருமை உங்களுக்கு மனதிற்குள்ளே உண்டு.ஆனால் வெளியே சொல்ல மாட்டீர்கள்.

-காஞ்சி பெரியவர் போன்றவர்களின் ஜாதி வெறியை நாசூக்காக மறந்து அவரை கொண்டாடுவீர்கள்.

-புட்டபர்த்தி சாய்பாபாவை,ரமணரை பெரிய மகான் என்று தெய்வமாக கும்பிடுவீர்கள்.அவர்கள் சாதரண மனிதர்கள்தாம் என்று சொன்னால் தைய்யோ முய்யோ என்று குதிப்பீர்கள்.

-கஷ்மீர் விவகாரம் பற்றி,அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் பற்றி எதுவும் தெரியாது உங்களுக்கு.

-சோ.ராமசாமிதான் சிறந்த அரசியல் விமர்சகர் என்று நினைப்பீர்கள்.

-வி.பி.சிங் அறவே பிடிக்காது.

-ஒரு இஸ்லாமியர் தொப்பி வைத்து,தாடி வைத்து உங்களருகில் அமர்ந்தால் மனத்துக்குள் பதட்டம் கொள்வீர்கள்

-பெந்தகொஸ்தே கூட்டங்களை மிக நக்கலாக பார்ப்பீர்கள்.ஏன் இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி கதறுகிறார்கள் என்று இரக்கமாக ஒரு நிமிடம் யோசிக்க மாட்டீர்கள்.கிறிஸ்டின் மிசனரீஸ் எல்லாம் மோசமானது என்ற எண்ணம் ஆழ உங்கள மனதில் இருக்கும்.

-மோடியை பிடிக்கும் உங்களுக்கு.மோடி செய்த கொலையெல்லாம் மறந்து விடுவீர்கள்.அவரால் மட்டுமே நல்ல ஆட்சி செய்ய முடியும் என்று நினைப்பீர்கள்."

Tuesday, 25 March 2014

இந்திராபார்த்தசாரதியை சந்தித்தேன்...

இந்த பத்தியின் தலைப்பு : இந்திரா பார்த்தசாரதியை பார்த்தேன்...

வெறுமையான மனதென்றால் என்ன? என்ற கேள்வி நேற்று காலையிலிருந்தே என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

அஃபீஸ் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டிருந்தேன்.

உனக்கு என்ன பிரச்சனை?மத்தியானம் சாப்பாடிருக்கா? இருக்கு.
தங்க தூங்க இடமிருக்கா? இருக்கு.படிக்க புத்தகங்கள் இருக்கா? இருக்கு.
வேற என்ன வெறுமை வேண்டிக்கிடக்கு உனக்கு? தெரியல.

இதோப் பார் சில சமயம் வாழ்க்கை அப்படித்தான் ஒரேவிதமான எண்ணங்கள் வந்து சலிப்பாக இருக்கும்.அது மாதிரி சமயத்தில் பெரிய அளவில் யோசிக்காமல் சின்ன சின்ன மகிழ்ச்சியில் ஈடுபட வேண்டும்.

ஒரு ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.ஒரு சினிமா பார்க்கலாம்.வேறு ஏதாவது நிகழ்ச்சிக்களுக்கு சென்று வரலாம்.இப்படியெல்லாம் எனக்கு நானே சிந்தித்து கொண்டு மொபைலில் முகநூலை எதேட்சையாக பார்க்கும் போது,ஞாநி சங்கரன்,நாரத கானா சபாவின் எதிரே உள்ள டேக் செண்டரில் இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரைத் தொகுப்பு பற்றி பேசப் போவதாக எழுதியிருந்தார்.

மணி பார்த்தேன் ஆறேகால்.ஏழுமணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம்.அலுவலகத்தில் வேலையை ஒரளவுக்கு முடித்து விட்டேன்.ஆறரை மணிக்கெல்லாம் வெளியே ஒடி வந்து,ஆட்டோ பிடித்து டேக் செண்டருக்கு வந்தேன்.வந்து உட்காரவும் ஞாநி பேசத்தொடங்கவும் சரியாக இருந்தது.இனிமேல் ஞாநி பேசிய உரையையும்,அதன் பின்னார் இந்திரா பார்த்தசாரதி பேசிய பேச்சையும்,கேள்விகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்த பதில்களையும் எழுதுகிறேன்.

ஞாநி இப்படியெல்லாம் பேசினார்:

-நான் 1975 யில் இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இந்திரா பார்த்தசாரதியை பேட்டி எடுக்க சென்றேன்.இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தால் பத்திரிக்கைகளால் அரசியல் பிரச்சனைகளை அதிகம் வெளியிட முடியாமல் போனது.அதனால் தெருப்பிரச்சனைகள், சின்ன சின்னதான மக்கள் பிரச்சனைகளை எழுதி பக்கங்களை நிரப்பினோம்.அடுத்த கட்டமாக தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதலாம் என்று சொல்லி இ.பாவை பேட்டி எடுக்கச் சென்றேன்.அப்போது இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தேன்.

-அடையார் டெலிபோன் எக்ஸ்சேஞ் பக்கத்தில் உள்ள சின்ன குடியிருப்பில் இ.பா தற்காலிகமாக தங்கியிருந்தார்.அவர் டில்லியில் இருந்து ஏதோ ஒரு வேலையாக சென்னையில் ஒரு மாதம் தங்கி அன்றோ அல்லது மறுநாளோ கிளம்ப ஆயுத்தமாயிருக்கும்போது நான் அவரை பேட்டி எடுக்கச் சென்றேன்.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் அவரை பேட்டி கண்டேன்.பாதி தமிழும்,பாதி ஆங்கிலமுமாக பேசிக்கொண்டிருந்தார்.நானும் இ.பாவும்  பேசிக்கொண்டிருக்கும் போது இன்னொரு நபர் இந்திரா பார்த்தசாரதியின் துணிமணிகளை எல்லாம் அடுக்கி வைத்து, இ.பாவின் டில்லி பயணத்துக்கான ஆயுத்தங்களை செய்து உதவிக் கொண்டிருந்தார்.பேட்டி முடிந்தது அந்த உதவி செய்த நண்பரை இ.பா எனக்கு அறிமுகப்படுத்தினார் “இவர்தான் தியாகராஜன்.எழுத்தாளர்” என்றார்.அந்த தியாகராஜன்தான் எழுத்தாளர் அசோகமித்திரன்.

-நான் அன்று இ.பாவை எடுத்த பேட்டியில் அன்றைய (இன்றைய) நாடகங்களை பற்றி கேள்வி கேட்டேன்.அவர் ”இன்றைய நாடங்கள் வெறும் ”துணுக்குத் தோரணங்கள்” தானே என்று சொன்னார். எனக்கு தெரிந்து இந்த ”துணுக்குத் தோரணங்கள்” என்ற சொற்றொடரை இ.பா தான் முதன் முதலாக சொன்னார்.அதன் பின்னர் பலர் அதை எடுத்தாண்டார்கள்.

-அசோகமித்திரன் நட்பு கிடைத்தது என்றேன் அல்லவா! நான் நாடகத்தின் மீது ஆர்வமாயிருப்பதை கண்ட அசோகமித்திரன் என்னை ந.முத்துச்சாமியிடம் அனுப்பினார்.அவரிடம் பயின்ற பிறகு, நான் முயற்சி செய்த முதல் நாடகமும் இ.பாவினுடையதுதான்.அந்த நாடகத்தின் போஸ்டரை இ.பாவுக்கு அனுப்பி வைத்தேன்.பின்னர் இ.பாவின் மனைவியிடம் பேசும் போது “உங்க நாடக போஸ்டரை அவர் பெட்ரூமிலேயே ஒட்டி வைத்திருந்தார்.என்ன எனக்குதான் பார்ப்பதற்கு கருப்பும் வெள்ளையுமாக ஒருமாதிரி இருக்கும் “என்றார்.இ.பாவின் அக்கறையையும் அன்பையும் சொல்ல வந்தேன்.

-”பொருந்தாப் பொருளை” என்றொரு பாரதியார் கவிதை உண்டு.இ.பாவின் கட்டுரைகளை அப்படி சொல்லலாம்.இரண்டு பொருந்தாப் பொருளை இணைத்து அதிலிருந்தொளியை ஏற்படுத்தி வாசிப்பவரை சிந்திக்கத் தூண்டுவார்.கம்பன்,ஆண்டாள்,ஸ்டீடன் ஹாக்கிங்,நவீன் இலக்கியம்,சங்க இலக்கியம் என்று எல்லாவற்றையும் ஒன்றொக்கொன்று பொருத்திக் காட்டுவார்.ஆங்கில வாசிப்பும்,தமிழ் வாசிப்பும் அதிகம் கொண்டிருந்த இ.பாவால் அதை எளிதாக செய்ய முடிந்தது.

-அயோத்தியை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்த கட்டுரைக்குள்ளே போகுமுன்னே நமக்கு என்ன தோன்றும்.அயோத்தி என்றால் பிரச்சனைக்குறிய இடம்.ஏதோ ஒன்று அது பற்றி சொல்லப்போகிறார் என்பது போன்ற மனநிலைக்கு வருவோம்.ஆனால் இ.பா அயோத்தியை “கம்பன் கண்ட அயோத்தி” என்று சொல்லி அது பற்றி எழுதுகிறார்.கம்பன் எழுதுகிறார்.”அயோத்தியில் உண்மை என்று ஒன்று இல்லவே இல்லையாம்.உண்மைக்கு இடமே கிடையாதாம்.ஏனென்றால் பொய் என்று ஒன்று இருந்தால்தான் உண்மை பற்றிய பேச்சு வரும்.பொய்யென்றே ஒன்று அயோத்தி மக்களுக்கு தெரியாத பட்சத்தில் உண்மை எப்படி தெரியும்.”.இ.பா இதோடு விட்டுவிடவில்லை அவருடைய பார்வையும் சொல்கிறார் இப்படி “ஆனால் இப்போதைய அயோத்தியில் பொய் புரட்டுகளுக்கு இடமில்லை.ஏனென்றால் அங்குள்ளவர்களுக்கு உண்மை என்றால் என்னவென்றே தெரியாது” என்று கூர்மையாக சொல்கிறார்.

-இன்னொரு கட்டுரையில் இ.பா வெளிநாட்டிலுள்ள ஒரு வீட்டிற்கு விருந்து சாப்பிட போகிறார்.அவர்களுக்கு இ.பா வந்தது மகிழ்ச்சி.ஏனெறால் என்று அவர்கள் வீட்டில் திதி.யாராவது ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு சாப்பாடு போட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியாம்.அதனால் இ.பா சாப்பிட வந்தது ரொம்ப மகிழ்ச்சியாம்.இ.பா இதை விவரித்து விட்டு இன்னொன்றையும் சொல்கிறார் அந்த கட்டுரையில் நான் சாப்பிட சாப்பிட, எதை கண்டுகொள்ளாமல் பாப் மியூசிக் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த அவர்கள் மகளையும் அவள் மனநிலையையும் என்னால் அறிய முடிந்தது என்று சொல்லி முடிக்கிறார்.

-சமுதாயத்தில் பல பார்வைகள் இருக்கின்றன.தமிழ்தேசியப் பார்வை,இந்துத்துவா பார்வை,பாரத தேசிய பார்வை,திராவிட பார்வை,இடது சாரி பார்வை என்று பல. இதில் ஒரு பார்வையை உடையவர்கள் மற்றவர் கோணம் பற்றி கவலை கொள்வதே இல்லை.அதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றது.இந்திர பார்த்தசாரதி இதில் எந்த் பார்வைகளிலும் சிக்காதவர்.அவருக்கு எல்லா பார்வைகளின்  மீதும் ஒரு அக்கறை இருந்தது.எல்லா தரப்பினரும் கொண்டாடிய விமர்சனம் செய்யாத எழுத்தாளர் என்றால் அது இந்திரா பார்த்தசாரதிதான்.அதற்கு காரணம் இ.பா கொண்டாட்டத்தை பற்றி கவலை கொள்ளவிலலை,தன்னை கொண்டாடாமல் போய்விடுவார்களோ என்று கவலை கொள்ளாமல் தன் எழுத்தை தான் நேர்மையாக ரசித்து எழுதினார்.தனக்கும் சமுதாயத்திற்கும் நேர்மையாக இருப்பதை ஒரு நோக்காக வைத்திருந்தார்.

-வாசிப்பது ஆனந்தமடைவதற்காக.வாசிப்பது அறிவை உணர்ந்து களிப்படைவதற்காக.இவையெல்லாம் தாண்டி வாசிப்பு ஒரு மனிதனை அவன் வாழும் வாழ்க்கையை தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்யவும் உதவ வேண்டும்.

-தமிழ் பேராசிரியராயிருந்தாலும் ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த ஆழமான வாசிப்பு அவரை செம்மையாக எழுத வைத்தது.அது போல அரசியல் கருத்து சொல்லவும் இ.பா எப்போதும் தயங்கியது கிடையாது.நான் அவரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.ஏன் நீங்கள் உங்கள் சமகால எழுத்தாளர்கள் பற்றி அதிகம் சொல்வதில்லை.எழுதுவதில்லை.இந்த கேள்வி எனக்கிருக்கிறது.

நன்றி வணக்கம்.

அடுத்து இந்திராபார்த்தசாரதி இப்படி பேசினார்.

-நான் இந்த நிகழ்ச்சியை பார்பப்தற்குதான் வந்தேன்.திடீரென பேச வைத்துவிட்டார்கள்.

-எப்படி ஞாநியின் முதல் பேட்டியாளர் நானோ,அது போல என்னை முதன்முதலில் பேட்டி எடுத்தவர் ஞாநிதான்.

-நான் கணையாழில புனைப்பெயர்ல கட்டுரைகள் எழுதினேன்.அப்புறம் தினமணிக்கதிர்ல கஸ்தூரி ரங்கன் எழுத வாய்ப்பு கொடுத்தார்.அதுல கொஞ்சம் எழுதினேன்.சமீபத்தில் கல்கியில கட்டுரைகள் எழுதினேன்.நான் கல்கியில எண்பது வயசுல எழுதின கட்டுரை “காதல்” (சிரிப்பு.அரங்கம் சிரித்தது)

-ஞாநி அரசியலுக்கு வருவது பற்றி மகிழ்ச்சி.நானும் அவரு கூட கட்சியில சேர்ந்துவிடலாமா என்று நினைக்கிறேன்.நிச்சயமா எம்.பி சீட்டெல்லாம் கேட்க மாட்டேன்.

-அனைவருக்கும் நன்றி இனி ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க நான் பதில் சொல்லுறேன்.அப்படிச் சொன்னாத்தான் எனக்கு வசதியாயிருக்கு.

கேள்வி 1: நாடகம் சிறுகதை நாவல் எதில் உங்களை செம்மையாக முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது ?

அதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்.எழுத்தாளன் அவன் நம்பிய இலக்கியத்தில் குறிப்பிட்ட காலத்தில் அதிகம் ஈடுபடுகிறான்.அவனே பெரிய நோக்கமெல்லாம் கொண்டிருக்கவில்லை.அனைத்து வடிவங்களிலும் எழுதுகிறான்.நம் அடையாளத்தை நாம் தேடிக்கொள்வதுதான் எழுத்து.எதில் நான் சிறப்பு என்பதை வாசகன்தான் சொல்லவேண்டும்.

கேள்வி 2:தமிழ் இதழ்கள்,பத்திரிக்கைகள்,கதைகள்,நாவல்கள் வாசிப்பது குறைந்து விட்டதே?

தமிழ் டீவி தொடர்களை நிறுத்தினால்தான் சரிபட்டு வரும்.( சிரிப்பு).முன்பெல்லாம் நாவல்,சிறுகதை தொகுப்பு வரவேண்டுமானால் இதழ்களில் தொடர்கதையாக அல்லது கதையாக வந்திருக்க வேண்டும்.அப்போதுதான் பதிப்பிப்பார்கள்.ஆனால் இப்போது அப்படியில்லை.நீங்கள் தனியாக எழுதினால் கூட நாவல்களை வெளியிடுகிறார்கள்.இது ஆரோக்கியமான போக்கு என்பேன்.பிளாக் எழுதுவதெல்லாம் நல்ல விசயம்தான். இதனால் என்ன நடக்கிறது பத்திரிக்கைகளில் இதழ்களில் தொடர்கதை வருவது குறைகிறது.அப்படி குறைவதால் மற்ற பல விசயங்களை விவாதிக்க முடிகிறது.இது ஆரோக்கியமான போக்கு.ஆங்கிலத்தில் இது முன்னமே நடந்து முடிந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விட்டது.தமிழில் இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிறது.நல்ல விசயம்.

கேள்வி 3: ஏன் சமகால எழுத்தாளர்கள் பற்றி,எழுத்துக்கள் எதுவும் சொல்வதில்லை நீங்கள்?

மக்களுக்கு தெரியும் யார் நல்ல எழுத்தாளர்.யார் இல்லை என்று .நான் ஏன் சொல்ல வேண்டும்.ஒருவர் என்னிடம் கேட்டார்.நீங்கள் ஒரு எழுத்தாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள்.அவர் உங்களை பற்றி எழுதுவார்.இப்படி தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்று.நான் சொன்னேன் “நாங்கள் அடித்து பிடித்து சண்டை போடுவதை பார்க்க விரும்புகிறீர்களா” என்று. (சிரிப்பு)
ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் எல்லாம் நல்லாவே எழுதுறாங்க.

கேள்வி 4:கடவுள் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?

நாஸ்திகம் பேசுபவன் முட்டாள் எனப்து என் கருத்து.நாஸ்திகம் எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யாது.தர்க்கத்தினால் கடவுள் இல்லை என்று நமக்கு தெரிந்தால் கூட நமக்கான ஒரு கடவுளை சிருஷ்டித்துக் கொள்வது மட்டுமே மனித வாழ்க்கையை வாழ உதவும்.Even it is no god means create it என்பது என் கொள்கை.

கேள்வி 5 : நீங்கள் பல புத்தகங்களுக்கு  எழுதிய அணிந்துரையை உங்கள் சமகால இலக்கிய பார்வை என்று கொள்ளலாமா?

அணிந்துரை,முன்னுரை எழுதுவென்பது,முன்னனி கிரிக்கட் வீரர்கள், கிரிக்கட் ஆடிய பிறகு கமெண்டரி கொடுப்பார்களே அவர்களையொத்தது .எங்களைப் போன்ற ரிட்டைர்ட் எழுத்தாளர்களை அதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் (சிரிப்பு).கொள்ளலாம்.அவை என் கருத்துகள்தானே.நானும் சமகால எழுத்தாளர்கள் மேல் அக்கறையே இல்லாதவன் எல்லாம் இல்லையென்று நினைக்கிறேன் (சிரிப்பு). நேசனல் புக் டிரஸ்ட்டுக்கு சென்று ஆதவனுடைய சிறுகதைகளை எல்லாம் தொகுப்பாக கொண்டுவர பலமுயற்சிகள் செய்திருக்கிறேன்.

நன்றி.

விழா முடிந்ததும்.கவிதா வெளியிட்டுள்ள “இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்” புத்தகத்தை வாங்கினேன்.

இந்திரா பார்த்தசாரதியிடம் போய் அவர் எழுத்துகள் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை சுருக்கமாக சொன்னேன்.என் கைகளை தன் கைகளால் பற்றி குலுக்கினார்.

மகிழ்ச்சியான நாள்.



Sunday, 12 January 2014

பிரமிளும் பிரமிப்பும்...

ஜனவரி ஆறாம் தேதி (2014) பிரமிளின் நினைவு நாளில்,பிரமிளைப் பற்றிய தத்தம் நினைவுகளை படைப்பாளிகள் பகிர்ந்து கொள்ள அகநாழிகை பொன் வாசுதேவனும் துறையூர் சரவணனும் சேர்ந்து ,அகநாழிகை புத்தகக்கடையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.கூட்டத்தில் பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதி செய்திருந்தது சிறப்பாக இருந்தது.

வாசுதேவன்,பிரமிளைப் பற்றி தான் பிரமித்தது பற்றி சுருக்கமாக சொல்லி,பிரமிளின் சில கவிதைகளை நடுநடுவே  சொன்னது புத்துணர்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.இந்த கூட்டம் நடப்பது பற்றிய அளவில்லாத மகிழ்ச்சியை தன் ஒவ்வொரு உடலசைவிலும் வெளிப்படுத்தியது பார்க்க உற்சாகமாய் இருந்தது.

கூட்டத்திற்கு நிறைய இளைஞர்கள் வந்திருந்தனர்.பிரமிளுடைய ஆளுமையை அறிந்து கொள்ள இந்தக் கூட்டம் உதவியாயிருந்தது.இந்த பத்தியில் நான் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை.குறிப்பெடுத்த வரையில் எழுதியிருக்கிறேன்.சில விசயங்களை வேண்டுமென்றே எழுதாமல் தவிர்க்கவும் செய்திருக்கிறேன்.கிட்டத்தட்ட முக்கால் பாகத்தை இங்கே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.பத்தியில் ஏதாவது தகவல் பிழை இருந்தால் சுட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வரிசையாக ஒவ்வொருவர் பேசியதையும் பார்க்கலாம்.

ராஜ சுந்தரராஜன்:


நான் அப்போது எழுதிய சில கவிதைகளை பிரமிள் பரவாயில்லையே ரகத்தில் சேர்த்து இன்று நன்றாய் எழுதலாம் என்று ஊக்கப்படுத்தினார்.நான் இடதுசாரியாக இருப்பதால் பிரமிளின் கடவுள் சார்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளவில்லை.ஒருநாள் கடற்கரையில் கடவுள் பற்றிய  விவாதம் முற்றியது. நான் கடவுளையும் Proabability யை பற்றியும் ஏதோ சொல்ல பிரமிள் உடனே எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.அதன் பிறகு ஒரிரு நாட்கள் பிறகு அவரை சந்தித்த போது திடீரென்று என் கைகளை முறுக்கினார்.முறுக்கிச் “நான் பிராபபிலிட்டி பத்தியும் படிச்சேனே” என்று சொல்லி அன்றைய முடிவுறா விவாதத்தை விட்ட இடங்களில் இருந்து தொடங்கினார்.எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் காட்டும் ஆர்வத்தை சொல்ல வருகிறேன்.

கவிதையில், Abstract ஆக உள்ளதை Concrete ஆகவும்.Concrete ஆக உள்ளதை Abstract ஆகவும் சொல்லக் கூடாது என்று சொல்லுவார்.நாம் பொதுவாக ”கண்களில் நீர்கோர்த்தது”. என்று சொல்வோம்.ஆனால் அவர் வித்தியாசமாக “தத்தளித்தபடி ஈரம் ஏறிக்கொண்டிருந்தது” என்று சொல்லுவார்.சொற்களை கவனமாக பிரயோகிக்க வேண்டும் என்பதை அடிக்கடி சொல்லுவார்.அடிக்கடி சண்டை போடுவார்,திட்டுவார்.என் அக்கா ஒருவர் என்னிடம் அதிகம் பாசம் வைத்திருப்பார்.ஆனால் என்னை தினத்துக்கு இரண்டு மூன்று முறை திட்டி தீர்ப்பார்.பிரமிளைப் பார்க்கும் போது என் அக்காவாக நினைத்துக் கொள்வேன்.

எம்.டி முத்துக்குமாரசாமி:

நான் அவரைப் பார்க்கபோகும் போது அவருடைய பெயர் “தர்மு சிவராம்” என்பதாக இருந்தது.1985 காலகட்டத்தில் அமிர்தராஜ் என்னைக் கூட்டிப் போனார்.கோடம்பாக்கத்தில் சிறிய அறையில் அமர்ந்து கடலை கொறித்துக் கொண்டிருந்தார்.என்னை கண்டுகொள்ளவில்லை.அதனால் நான் வருத்தமானேன்.அதன் பிறகு என்னை கிழே அழைத்துப் போய் கடையில் டீயும் வடையும் வாங்கித்தந்தார்.வடையை தன் கையாலேயே எனக்கு ஊட்டி விட்டார்.எனக்கு வாழ்க்கையில் பிரமிளைத்தவிர யாரும் வாழ்க்கையில் ஊட்டி விட்டதே இல்லை.

பிரமிளுக்கு சா.கந்தசாமி,அசோகமித்திரன் என்றால் பிடிக்காது.ஒருமுறை க.நாசுவைப் பார்க்க பிரமிளுடன் போனேன்.உள்ளே அசோகமித்திரன் நிற்பதாக அறிந்து வெளியவே நின்றார்.

குற்றாலம் இலக்கிய சந்திப்ப்பில் நான் வாசித்த கட்டுரையில் அப்போதைய காலகட்டத்தில், தமிழில் சிறந்த சிறந்த கவிஞர்களாக நான்கு பேரைச் சொன்னேன்.அதில் பிரமிள் பெயரை சேர்க்கவில்லை.கட்டுரை வாசித்துக் கொண்டிருக்கிருக்கும் போது பிரமிள் குறிப்பிட்டு சில கேள்விகளை கேட்டார்.நானும் சலிக்காமல் அவருக்கு பதில் சொன்னேன்.அவர் கோபத்தில் வெளிநடப்பு செய்தார்.அதை கண்டு கொள்ளாமல் நான் கட்டுரையை வாசித்து முடித்தேன்.

பிரமிளை பார்க்க ஒரு Live wire மாதிரி இருப்பார்.மிக அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடந்து கொள்வார்.என்னை “அமுல் பேபி” என்றுதான் கூப்பிடுவார்.

பிரமிளுடைய சிறப்பாக நான் கருதுவது அவருடைய ஆழமான வாசிப்புதான்.நபக்கோவ் பற்றி பதினைந்து நிமிடம் கூர்மையாக பேசுவார்.அப்படி பேசுவதற்கு அவர் நபக்கோவை ஆழமாக படித்திருக்க வேண்டும்.அவர் படித்திருப்பார்.தேடி தேடி படிப்பார்.அடையார் லைப்ரரியில் அடிக்கடி பார்ப்பேன்.கடைசியாக அவரைப் பார்க்கும் போது கையில் சுந்தர ராமசாமி எழுதிய கவிதை புத்தகத்தை வைத்திருந்தேன்.அதற்கே பிரமிள் என் மீது கோபப்பட்டார். நான் எதிர்த்து சொன்னேன் “எல்லாரும் ஒவ்வொரு மாதிரி நல்லா எழுதுறாங்க.சுந்தர ராமசாமி படிச்சா  என்ன தப்பு ? என்று பதிலுக்கு கேட்டேன்.அதற்கு ”அவர் ராமசாமி பத்தி உனக்கு தெரியாது.நான் கொள்கை ரீதியாகவே சுராவை எதிர்க்கிறேன்.” என்று சொன்னார்.

நிறைய போஸ்ட் கார்டு வைத்திருப்பார்.அடிக்கடி கடிதம் போடுவார்.இப்போதும் அந்த கடிதத்தை வைத்திருக்கிறேன் அவர் ஞாபககார்த்தமாக இப்போதும் அந்த கடிதத்தைப் படிக்கும் போது, மகிழ்ச்ச்யான நினைவையே கொடுக்கிறது.பிரமிளின் அறிவு அழமானது.இப்போதிருக்கும் தொழில்நுட்ப வசதி, அப்போது இல்லாத போதே தேடி தேடி படித்து அறிவை வளர்ந்து வைத்திருப்பார்.

என்னிடம் ஒருமுறை நபக்கோவ் பற்றி பதினைந்து நிமிடம் பேசினார்.அப்போது எனக்கு தோன்றியது “பிரமிளுடன் சரி சமமாக பேசுவதற்கு கூட இங்கே ஆள் இல்லை.அதனால் கூட மற்றவர்கள் பிரமிளுக்கு ஒரு கோபம் இருக்கலாம்” என்று.மறக்க முடியாத ஆளுமை பிரமிள்.

எஸ்.ராமகிருஸ்ணன்: 

பிரமிள் தங்கியிருக்கும் அறையை வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் அவர் ஜிப்பாவைப் வைத்து சொல்லிவிடலாம்.நிறைய நடப்பார்.அவரோடு நடக்கும் போது அவர் பார்வையில் படும் காட்சிகள் பற்றி சொல்லும் போது பார்வையின் நுணுக்கம் தெரியும்.பொதுவாக நான் இடுப்புக்கு மேலேதான் உலகத்தைப் பார்ப்போம்.தரையில் என்ன நடக்கிறது என்று தெரியாது.ஆனால் பிரமிள் தரையில் இருக்கும் மனிதர்களை உயிர்களை,நிகழ்வுகளை பார்க்க கற்றுக் கொடுத்தார்.

சில பிச்சைக்காரர்களிடம் பேசுவார்.ஒருமுறை என்னை ரொம்ப தூரமாக கூட்டிப் போனார்.அங்கே குப்பைத்தொட்டியில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.அவரிடம் பிரமிள் தெளிவான ஆங்கிலத்தில் பேசினார்.பிச்சைக்காரரும் ஆங்கிலத்திலேயே பேசினார்.அவர் ஒரு சித்தராம்.பிரமிள் எப்படி இது போன்றவர்களை இனங்கண்டுகொள்கிறார் என்பது அதிசயம்தான். போகும் போது அந்த பிச்சைக்காரருக்கு ஏதாவது காசு கொடு என்றார்.நான் கொடுத்தால் பிச்சைக்காரர் கையால் வாங்கவில்லை.குப்பைத் தொட்டியில் போட வேண்டுமாம். அங்கிருந்து பிச்சைக்காரர் எடுத்துக் கொள்வாராம்.

பிரமிளோடு லைப்பரரிக்கு போயிருக்கிறேன்.இப்போது மாதிரி அமெரிக்கன் லைப்ரரி இவ்வளவு கெடுபுடியாக அப்போதெல்லாம் இருக்காது.எளிதாக உள்ளே சென்று விடலாம்.அங்கே பிரமிள் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.சில கடினமான மூளையை பிசையும் புத்தங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, “போய் எண்டரி போட்டு வா” என்பார்.நான் அவரை நீங்கள் எடுத்த புத்தகத்திற்கு நான் ஏன் எண்டரி போடவேண்டும் என்ற அர்த்ததில் பார்த்தால், “போ அறிவாளி மாதிரி உன்ன காட்டிக்க.இதுதான் நல்ல சந்தர்ப்பம்” என்று தள்ளிவிடுவார். (சிரிப்பு).

பிரமிளிடம் யாரையாவது அறிமுகப்படுத்தி வைத்தால் கண்டுகொள்ள மாட்டார்.காயப்படுத்திவிடுவார்.தெரிந்த கவிஞர் ஒருவர் பிரமிளிடம் என்னை அறிமுகப்படுத்துங்கள் என்று நச்சரித்தார்.நான் வேறு வழியில்லாமல் அறிமுகப்படுத்தினேன்.பிரமிள் அறிமுகம் ஆகும் மனிதருக்கு நேருக்கு நேராக  கும்பிட மாட்டார்.சைடில் எங்கோ கும்பிடுவார்.வணக்கம் என்று அவர் கும்பிடுவதே எதிராளிக்கு அதிர்ச்சியாய் இருக்கும்.

நான் சொன்னேன் “இவர் ஒரு கவிஞர்”. 
“கவிஞரா” என்று கேட்டு “பெயர் என்ன?” என்று கேட்டார்.
நான் “அவர் பெயர் துருவ நட்சத்திரம்” என்றேன்.
உடனே “துருவ நட்சத்திரத்திற்கு பகலில் என்ன வேலை? “ என்று கேட்டார். 
அப்படி கிண்டலாக கேட்டதுமே வந்த நண்பர் ஆடிப்போய் விட்டார்.எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

மறுநாள் பிரமிளின் அறைக்கு போகும் போது முந்தின நாள் அவர் தாக்கிய அந்த கவிஞரை தன் பக்கதில் உட்கார வைத்து. ஏதோ ஒரு கவிதையை வாசித்துக் காட்டி அன்பாக,வார்த்தைக்கு வார்த்தை விளக்கி அர்த்தம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ந்தார்.யாரையாவது உண்மையிலேயே காயப்படுத்திவிட்டோம் என்று நினைத்தால் அப்படியே இறங்கி வந்துவிடுவார்.

ஒருமுறை போட்டோ எடுக்க வேண்டும் என்று என்னை ஸ்டுடியோவுக்கு கூட்டிப் போனார்.அங்கே படம் எடுக்கும் இளைஞனுக்கு புகைப்படம் எடுக்கும் கலையை விலாவாரியாக விளக்கினார்.இவர் விளக்க விளக்க அவர் கைகால் எல்லாம் உதறியது.பிரமிளை அவர் பெரிய போட்டோ கிராபர் என்று நினைத்து விட்டார்.இப்படியெல்லாம் முடிந்து அவர் எடுக்கப் போகும் போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை எடுக்க மறுத்துவிட்டார்.”இன்று என் முகம் வாடியிருக்கிறது.வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூட்டிச்சென்றுவிட்டார்.இப்படி அவரை புரிந்து கொள்ளவே முடியாது.

ஒருமுறை அவரும் நானும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம்.அப்போது அசோகமித்திரன் எங்கள் பக்கத்தில் வந்தமர்ந்தார்.அசோகமித்திரன் வந்தது வெளியே போய் நின்று கொண்டார்.தான் வந்ததும் பிரமிள் வெளியேறியதைப் பார்த்து அசோகமித்திரன் வெளியே கிளம்பிவிட்டார்.அப்படி அசோகமித்திரன் சினிமா பார்க்காமல் கிளம்பிவிட்டது பிரமிளின் மனதை தொட்டிருக்க வேண்டும். என்னைப் பார்த்து “அவர் ஏன் கிளம்புறார்” என்றார்.”நீங்க கிளம்பின மாதிரி அவரும் நினைச்சிருக்கலாம்” என்றேன். “இவரெல்லாம் இந்த படத்துக்கு வந்ததே தப்பு.இப்போ வெளிநடப்பு வேற செய்றாரா?”(சிரிப்பு).

என்னிடம் சு.ராவின் ஜே.ஜே சில குறிப்புகளைப் பார்த்து நபக்கோவ் திருடி எழுதிவிட்டார் என்று  சீரியசாக சொன்னார்.”அது எப்படி நபக்கோவ் எழுதின பிறகுதானே ஜே ஜே சில குறிப்புகள் வந்தது” என்றேன். அதெல்லாம் தெரியாது தமிழ் நாவல் வர்றது பத்து வருசம் முன்னாடியே அதக் காப்பிடிச்சிட்டான் நபக்கோவ்” என்றார் (சிரிப்பு).

சி.சு செல்லப்பாவுக்கு பிரமிளைப் பிடிக்கும்.”அவன் என் பிள்ளை” என்பார்.பிரமிளுக்கும் சி.சு செல்லப்பாவை பிடிக்கும்.அவர் பற்றி கேட்பார்.ஆனால் பார்க்க போகமாட்டார். “செல்லப்பா இல்லன்னா நானில்லை” என்று சொல்வார்.

வெளி ரங்கராஜன்:

மவுனி கதைகளுக்கு பிரமிள் எழுதிய முன்னுரை அற்புதமானது.ஒருமுறை தி.நகரில் நானும் அவரும் வரும் போது, வழியில் வந்த பெரியவருக்கு தன் கையில் இருந்த காசையெல்லாம் கொடுத்து விட்டு, தி.நகரில் இருந்து அடையாருக்கு நடந்தே போனார்.நடப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் அலாதியானது.அவர் படுக்கையில் இருக்கும் போது இதுதான் அவரை நான் கடைசியாக பார்க்கிறேன் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.மிக முக்கியமான மறக்கமுடியாத ஆளுமை பிரமிள்.

இந்திரன்:

ஒருநாள் இரவு ஒன்பது மணி இருக்கும்.அழகிய சிங்கரோடு பிரமிள் என் வீட்டுக்கு வந்தார்.தன் புத்தகத்தில் அட்டைப் படமாக போடுவதற்கு ஒரு போட்டோவை கொண்டுவந்தார்.என்னிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
அந்த போட்டோ சாதரணமாகத்தான் இருந்தது.இதை விட நல்ல போட்டோ போடலாமே என்றேன்.
“இல்லை ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி உரை நிகழ்த்த அதன் பின்னனில் நான் எடுத்துக் கொண்ட போட்டோ” என்றார்.
“இதில் ஜே.கேவை காணவில்லையே” என்றேன்.
“அதில் தெரியமாட்டார் அவர் தள்ளியிருந்து பேசினார்” என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.திடீரென்று ஒரு கண்ணாடி கொண்டு வரச்சொன்னார்.என் மனைவி கொஞ்சம் அதிசயமாக பார்த்த படியே கண்ணாடியை எடுத்து வர, கண்ணாடியில் அந்த போட்டோவைப் பார்த்தார்.ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்.அப்படி பார்க்கையில் தெரியாமல் கிழே விட்டுவிட்டார்.கண்ணாடி கிழே விழுந்து உடைந்து விட்டது.எல்லோரும் பதறினோம்.ஆனால் பிரமிள் பதறாமல் உடைந்த கண்ணாடி துண்டுகளின் பக்கத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்து ரசித்தார்.அப்புறம் நிதானமாக சொன்னார் “எவ்வளவு அழகா உடைஞ்சிருக்கில்ல” .இன்னொருமுறை ஒரு பிச்சை எடுக்கும் பெண்ணை எனக்கு காட்டித்தந்து “இவர் பெரிய ரிஷி” என்று சொல்லிப் போனார்.அவரை புரிந்து கொள்வது கடினம்.

கவுதம சித்தார்த்தன்:

இலக்கிய உலகில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டவர் பிரமிள்தான்.திட்டமிட்டு அவரை ஒதுக்கினார்கள்.பிரமிளை ஒரு கோமாளியாக சித்தரித்து சித்தரித்தே அவர் மேதைமையை மழுங்கலாக காட்டினார்கள்.எண்பதுகளில் தூய இலக்கியம் இருந்த போது பிரமிள் மட்டுமே அதை உடைத்தார்.சீரியஸ் இலக்கியத்திற்கான ரசனை கோட்பாட்டை வகுத்தவர்,அதை திரும்ப திரும்ப அலசி அதை தெளிவாக்கி வைத்தவர்.

பிரமிளை இடதுசாரி என்று ஒருபிரிவினர் ஒதுக்கி வைப்பார்கள்.பிரமிளை இந்துத்துவா ஆள் என்று இடதுசாரிகள் ஒதுக்கி வைப்பார்கள்.இப்படி அவரை புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.பாரதிக்கு பிறகு வந்த ஒரே கவிஞன் பிரமிள்தான்.பிரமிளை உண்மையாக புரிந்து கொள்ள அவர் படைப்புகளை நோக்கி போகவேண்டும்.

முதன் முதலில் அவரைப் பார்க்க நான் சென்ற போது அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.கோபத்தில் வந்துவிட்டேன்.அதன் பிறகு சொன்னார் “பனைமரத்தில் ஏறுவதற்கு முன்னால் மரம் ஏறுபவன் மரத்தோடு மானசீகமாக பேசுவான்.அதை நட்பாக்கி.அது அனுமதி கொடுத்த பின்னரே ஏறுவான்.அது போலத்தான் கலைஞனும்.அவனை எளிய தர்க்கங்களோடு அளந்து பார்த்தால் நஸ்டம் அளப்பவர்க்கே”. 

நான் கதை எழுதிய போது,அவர் சொன்னார் “கதை எழுதுவதற்கு முன்னால் நிறைய நாவல் அல்லாத ஆழமான புத்தகங்களை படி.பல்தரப்பட்ட அறிவோடு கதை  எழுத உட்கார்ந்தால் அது தனி படைப்பாகவும்,தரமானதாகவும் வரும்” என்றார்.மேஜிக்கல் ரியலிசம் என்பதெல்லாம் அவர் சொல்லித்தான் பலருக்கு தெரியும்.அவரோட பன்முகத்தன்மையான பார்வைதான் அவரோட சிறப்பு.போஸ்ட் மார்டனிஸ்ம் பற்றியெல்லாம் பிரமிள் சொல்லித்தானே தெரிந்து கொண்டோம். போர்ஹேவின் “வ்ட்டச்சிதைவுகள்” சிறுகதையை பிரமிளைத் தவிர வேறு யாராவது மொழிபெயர்க்க முடியுமா?.அவர் படுக்கையில் இருக்கும் போது அவரைப் பார்க்க போனேன்.என்னால் பார்க்கமட்டுமே முடிந்தது.மறக்க முடியாது மனிதர் பிரமிள்.

இராசேந்திர சோழன்:

முன்பு இலக்கியத்தில் செம்மலருக்கும் கசடதபற வுக்கு இடையே ஒரு பரஸ்பர விமர்சனம் இருக்கும்.இடதுசாரிகளுக்கும் தூய இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுதான் அது.அந்த நிலையில் சமபார்வையாக இரண்டையும் பார்த்து தற்போதைய இலக்கியத்திற்கான கோட்பாட்டை தெளிவுபடுத்தியவர் பிரமிள்.

புதுக்கவிதை என்பது நீர் கொட்டிய பழைய துணியாக இருக்கக் கூடாது.காய்ந்து போன பழைய துணியாக இருக்கவேண்டும்.பற்ற வைத்தால் உடனே பற்றி எரியவேண்டும்.அது மாதிரியான கவிதைகளை எழுதியவர் பிரமிள்.

பிரமிளை வரலாற்றில் மறைத்தது பற்றி பலர் கவலைதெரிவித்தனர்.நான் அந்த வரலாற்றையே மதிக்கவில்லை.வரலாறு என்பது ஆதிக்க சக்திகள் தங்களை புகழ்ந்து பேசவும், தங்களை எதிர்ப்பவர்களைப் பற்றி தவறாய் பேசவும் திட்டமிட்டு உருவாக்கிய கோட்பாடாகும்.

படைப்பாளி படைக்கும் சமயத்தை தவிர மற்ற எல்லா காலங்களிலும் சாதரண மனிதனே.படைக்கும் மனநிலையில் அவன் என்ன படைக்கிறான் என்பதுதான் முக்கியம்.அப்படிப்பட்ட படைக்கும் உத்வேகத்தில் பிரமிள் படைத்தவை எல்லாமுமே தீவிரமானவை,இலக்கியதன்மையுடைதாகவே இருக்கிறது.


செந்தில்நாதன்:

நான் பிளஸ் டூ முடித்ததும் பிரமிளை படிக்க தொடங்கினேன்.பிரமிள் சமூகத்தோடு இருக்க வேண்டும் என்றே நினைப்பார்.சமூகத்தை விட்டு பிரிந்து தனியே ஒன்றை படைப்பது அவருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன்.அவரை ஒரு சண்டை மனிதராக சித்திரிப்பது என்பதன் பின்னால் அரசியல் இருக்கிறது என்று நம்புகிறேன்.விடுதலைப்புலிகளுக்காக பல ஆங்கில நூல்களை தமிழாக்கி கொடுத்துள்ளார்.அவர் நினைத்திருந்தால் ஒதுங்கியிருந்திருக்கலாம்.ஆனால் அப்படியில்லை.நம்பும் கோட்பாடுகளுக்காக களம் இறங்குவதில் நம்பிக்கையுடையவராக திகழ்ந்தார்.இன்றுள்ள பல இளம் பிள்ளைகள் பிரமிளைப் பற்றி அழமாக தெரிந்து கொள்ள முன்வர வேண்டும்

அருள் சின்னப்பன்:

பிரமிளைப் பற்றி பேசும் தகுதி எனக்கிருக்கிறதா என்று தெரியவில்லை.ஆனாலும் அவர் கூட பழகியிருப்பதால் பேசுகிறேன்.( இப்போது கவுதம சித்தார்த்தன் குறுக்கிட்டு, அருள் சின்னப்பன் எண்பதுகளில் நிறைய கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.முக்கியமானவர்.தன்னடக்கத்திற்காக இப்படி பேசுகிறார் என்று சொன்னார்).என்னைக் கேட்டால் பாரதியை விட பிரமிள் பெரிய கலைஞன் என்பேன்.ஒவியம்,சிற்பம்,புகைப்படக்கலை,மொழிபெயர்ப்ப்யு என்று அவர் எதை செய்யவில்லை சொல்லுங்கள்.எல்லாமே செய்தார்.

கம்பியூட்டர் எப்படியிருக்கும் என்று பார்க்க என் வீட்டுக்கு வந்தார்.என்னிடம் ”இரவு பூமியின் நிழல்” என்று சொன்னார்.எவ்வளவு ரசனை பாருங்கள்.எவ்வளவு நுண்ணுனர்வு.அவ்ருடன் பேசுவதற்கு எதிராளிக்கு ஒரு தகுதி வேண்டும் என்று அவர் நினைப்பதற்கு காரணம் திமிர் அல்ல. அவர் கற்ற கல்வியும் வளர்த்துக் கொண்ட அறிவும்தான்.

நிறைய போஸ்ட் கார்டு வைத்திருப்பார்.நின்று கொண்டே எழுதுவார்.நடந்து கொண்டே எழுதுவார்.பஸ்ஸில்போய் கொண்டே எழுதுவார்.அவர் எப்படி எழுதினாலும் எழுத்து வடிவம் ஒரே மாதிரிதான இருக்கும்.இது சாதரண மனிதனால் செய்ய முடியுமா?அவருக்கு ஜோசியத்தில் ஆர்வம் உண்டு.அது பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பார்.அவர்கிட்ட ஒரு தீர்க்கதரிசி பார்வை இருக்குன்னு நான் தனிப்பட்ட விதத்தில் நம்புறேன்.ஒருதடவை எனக்கு Astronomy பத்தி ஒரு புஸ்தகம் வாங்கி வெச்சிருந்தாரு.என் வீட்டுக்கு வந்தவர் அந்த புத்தகத்த கொடுக்கவே இல்லை.இரண்டு நாள் பிறகு என் மகளிடம் “இந்த இது உனக்குதான்” என்று கொடுத்தார்.வளர்ந்து பெரியவளாகி என் மகள் Astronomy பற்றிய ஆராய்ச்சிலேயே பெரிய ஆளாகினாள்.சமீபத்தில் கூட அது பற்றிய கருத்தரங்த்திற்கு வெளிநாடு சென்று வந்தாள்.எனக்கென்னவோ இதை பிரமிள் முன்னமே யூகித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.அவருக்கு எழுத்தாளர்கள் தாண்டி நிறைய பேர்கள் தெரிந்திருந்தது பலருக்கு தெரியாது.

ஒருமுறை நானும் அவரும் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒருவர் தன் மனைவியை ரோட்டில் வைத்து அடித்துக் கொண்டிருந்தார்.பிரமிள் அதைப் பார்த்து உடனே போய் அவன் கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்தார்.அவன் தயங்கி தள்ளாடி “இது என் மனைவி” என்று சொல்ல, ”யாருன்னாலும் அடிக்க கூடாது.அடிச்சன்னா நான் அடிப்பேன்” என்று அடிக்க ஆரம்பித்தார்.பல இடங்களில் கொள்கை வேறு,நடத்தை வேறு கிடையாது அவரைப் பொறுத்தவரையில்.எப்போதும் அவர் என் மனதில் இருக்கிறார்.


காலசுப்பிரமணியன்:

பதினேழு வருஷமா பிரமிளோட பழகியிருக்கிறேன்.1979 - 1997 வரை.

நான் வேலையில்லாமல் இருக்கும் போது அவ்வப்போது பிரமிளுடன் பத்து நாட்கள் அது மாதிரி தங்கி அவருடன் பல விசயங்களை விவாதித்துச் செல்வேன்.நான் வருவதை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்.நான் வந்தால் வீட்டிலேயே நாங்கள் சமைப்போம்.பிரமிளுக்கு சாப்பாடு மேல பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது.கூட்டு காய்கறிகளை போட்டு பிசைந்து சாப்பிடுவார்.”வயித்த நிரப்புறதுக்கு ஏதோ ஒண்ணுய்யா” என்பார். 

அவர் திட்டாத ஒரே ஆள் நான்தான் என்று நினைக்கிறேன்.

அவர் எந்த கோணத்தில் சிந்திக்கிறார் என்பதை யூகிக்கவே முடியாது.அவர் யாரை விமர்சிக்கிராரோ அவரை பல நேரங்களில் பாராட்டவும் செய்வார்.தனிமனித வெறுப்பு அவரிடம் குறைவாகவே இருந்தது என்று நினைக்கிறேன்.

சுந்தர ராமசாமியும் நகுலனும் கொஞ்சம் நீர்த்துதான் எழுதிக்கொண்டிருந்தார்கள்.பிரமிளின் வருக்கைக்கு அப்புறம்தான் அவர்கள் வீரியமாக எழுதினார்கள் என்று நினைக்கிறேன்.அவர்கள் என்றில்லை பல படைப்பாளிகளை பிரமிள் தன் விமர்சனத்தால் செம்மையாக்கினார்.

சினிமா பற்றி அவருக்கு நிறைய தெரியும்.மிக ஆழமான அறிவு உண்டு.தினமும் ஒரு சினிமா பற்றி எனக்கு சொல்லித் தருவார்.சொல்லும் விதம் மிகச் செறிவாக இருக்கும்.இலக்கியம் சாராத நண்பர்கள் நிறைய பேர் அவருக்கு தெரியும்.பலர் பிரமிளை சித்தர் என்று சந்திக்கவருவதும் நடந்திருக்கிறது.அவருடைய இலக்கிய முகமே தெரியாதவர்கள் அவர்கள்.அவர்களிடம் உரையாடுவார்.

பிரமிளுக்கு ஜோசியம்,மந்திரம்,அமானுஷ்யம்,நியூமராலாஜி போன்றவைகள் மீது நம்பிக்கை உண்டு.எனக்கு நம்பிக்கை கிடையாது.ஆனால் அவர் இருபது வருசமாக பெரிய சார்ட் ஒன்றை ஜோசியத்திற்காக தயாரித்தார்.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜோசியம் பற்றி புத்தகம் எழுத வேண்டியதுதானே என்று கேட்டால்,”இதை எழுதினால் மக்களிடையே மூடநம்பிக்கைதான் அதிகரிக்கும்.இதை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் ஆபத்தான மூடநம்பிக்கையாய் போய்விடும்.இதையெல்லாம் எழுதக் கூடாது.பேசனும்” என்பார்.

அவருக்கு சயின்ஸ் ஃபிக்சன் மேல் காதலுண்டு.ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சயின்ஸ் ஃபிக்சன் படிக்காமல் மர்மக்கதைகள் ஏன் படிக்கிறார் என்று திட்டுவார்.

சாது அப்பாத்துரையைப் பற்றிய தியானதாரா புத்தகத்தை அவர் எழுதியது எல்லோருக்கும் தெரியும்.அந்த சாது அப்பாத்துரை மேல் பிரமிளுக்கு மதிப்பு அதிகம்.”அவர் இல்லாவிட்டால் நான் கிரிமினலாக ஆகியிருப்பேன்” என்பார்.யோகிராம் சூரத் குமாருக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு.அடிக்கடி யோகி வரச்சொல்வார்.இருவரும் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.

எந்த ஒரு துறையைப் பற்றியும் ஆழமாக பேசுவார்.தெரியும் என்பது மாதிரி காட்டிக்கொள்வது அவருக்கு பிடிக்காது.சின்ன வயதில் நடந்த சம்பவத்தை கூட தெளிவாக சொல்லுவார்.சில சமயம் “இந்த நினைவுகளிலில் இருந்து வெளியேற வேண்டும்” என்று ஆதங்கத்தோடு சொல்வார்.

அவர் வரைந்த ஒவியங்கள் என்னிடம் இருக்கின்றன.ஆனால் சிற்பங்களை பிடித்தவர்களுக்கு கொடுத்துவிட்டார்.

இரண்டு முறை கடுமையான மஞ்சள் காமாலை நோய் வந்து கஸ்டப்பட்டார்.அதன் பின் வயதாக ஆக அடிவயிற்றில் கேன்சர் வந்தது.அதனால மிகவும் கஸ்டப்பட்டார்.அவரால் இயல்பு வாழ்க்கை நடத்த முடியாதது பற்றிய கவலை அதிகம் கொண்டார்.அவர் இறந்துபோனதாகவே எனக்கு தோன்றாது.அவருடைய சமாதி வேலூரை அடுத்துள்ள கரடிக்குடி என்ற ஊரில் இருக்கிறது.

சமீபத்தில் அங்கு சென்றிருந்த போது சமாதியில் உள்ள படங்கலையெல்லாம் அழித்திருகின்றனர் யாரோ தெரியாவதர்கள்.பிரமிளை தெரியாத அவர்களுக்கு அது ஒரு விஷமத்தனம்.பிரமிளோடு பழகிய எனக்கு அது வேதனை.

இன்னும் நிறைய பேசலாம்.ஆனால் இந்த இடத்தில் இது போதுமென்று நினைக்கிறேன்.

பிரமிளின் மொத்த படைப்புகளையும் வெளியிடும் வேலையை செய்து வருகிறேன்.இங்கு வந்து தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இந்த வருடத்தின் மிகச்சிறந்த நிகழ்ச்சியை நடத்திய பெருமையை அகநாழிகை பெற்றுக் கொண்டது.

விஜயபாஸ்கர் விஜய்