Monday, 28 October 2013

‘சிதம்பரம்’ என்ற படத்தைப் பார்த்தேன்

நேற்று(27-10-2013) பனுவல் தடாகம் அரங்கில் 1985 யில் தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘சிதம்பரம்’ என்ற படத்தைப் பார்த்தேன்.

விமர்சகரும் எழுத்தாளருமான ஷாஜி வந்திருந்தார்.படம் முடிந்ததும் திருப்தியான உரையாடல் நடந்தது.

கலந்துரையாடல் படத்தை முன்னிட்டே நடந்ததால் முதலில் படத்தின் கதையை சுருங்க பார்த்து விடலாம்.

அந்த மாட்டுப்பண்ணையில் மாடு மேய்க்கும் வேலையை செய்கிறான் தமிழ்நாட்டைச்சேர்ந்த முனியாண்டி( ஸ்ரீனிவாசன்).

அங்கு உயர் பதவியில் இருப்பவர் சங்கரன்( கோபி).திருமணமாகாத மத்திம வயது ஆள்.சங்கரன் கலையில் ஆர்வம் உள்ளவன்.

முனியாண்டியை சகமனிதனாகவே நடத்துகிறார்.சங்கரனின் நண்பனுக்கு இது பிடிக்கவில்லை.

முனியாண்டிக்கு திருமணம் நடக்கிறது.அழகான பெண்ணான சிவகாமியை(ஸ்மிதா பாட்டீல்) மணக்கிறான்.அவரையும் மாட்டுப்பண்ணைக்கு கூட்டி வருகிறார்.சங்கரனின் மனது முனியாண்டியின் மனைவி மீது மெலிதாக அலைபாய்கிறது.இருப்பினும் அவர் கண்ணியமாகவே இருக்க முயற்சி செய்கிறான்.

சங்கரனின் நண்பர்கள் சிவகாமியைப் பற்றி தவறாக பேசும் போது கோபத்தோடு கண்டிக்கிறான்.இதற்கிடையில் சங்கரனின் நண்பன் முனியாண்டியை வேண்டுமென்றே நைட் ஷிப்ட் செய்ய சொல்கிறான்.

முனியாண்டி நைட் ஷிப்ட் செய்யும் போது திடீரென்று சந்தேகம் வந்து தன் வீட்டிற்கு சென்று பார்க்கிறான்.வீட்டின் பின் பக்கமாக உருவம் ஒடி ஒளிகிறது.

கூர்ந்து பார்த்தால் அது சங்கரன்.எந்த மனிதனை மனப்பூர்வமாக நம்பினானோ அவரே துரோகம் செய்து விட்டதை நினைத்து முனியாண்டி தூக்கில் தொங்கி உயிரை விடுகிறான்.

இதைப் பார்த்து சங்கரன் ஒடுகிறான்.

குற்ற உணர்ச்சி அவனை படுத்துகிறது.தீராத குடிப் பழக்கதிற்கு அடிமையாகிவிடுகிறான்.

உடல்நலம் மிக மோசமாக,சங்கரனின் டாக்டர் அவனை ஆன்மீகத் தேடல் செய்யுமாறு சொல்கிறார்.சங்கரன் தமிழ்நாட்டின் சிதம்பரம் கோவிக்கு பாவம் கழுவ வருகிறான்.

அங்கே அதிர்ச்சிகரமாக சிவகாமியை மோசமான நிலையில் பார்க்கிறான்.

சிவகாமியின் முகத்தில் இருக்கும் முனியாண்டி விட்டுச் சென்ற கோரமான தழும்பும் சிவகாமியோடு சேர்ந்து கொண்டு சங்கரனை பார்ப்பதாக படம் முடிகிறது.

தனிமனிதனின் உணர்வுகளை ஆராயும் அல்லது சொல்லும் படமாக இருக்கிறது.

சங்கரனின் கண்ணியம் எங்கு பறிபோகிறது?அல்லது சிவகாமி மாதிரி அழகான பெண்ணைப் பார்த்தால் எந்த ஆணும் இப்படி அடைய ஆசைப்படுவானா?முனியாண்டி ஏன் சங்கரனைக் கொல்லாமல் தான் தற்கொலை செய்து கொண்டான்? ஒருவேளை சங்கரன் மேல் வைத்த மதிப்புதான் காரணமா?சிவகாமி ஏன் சங்கரனின் நிர்பந்ததுக்கு ஒத்துக் கொண்டாள்.அவளுக்கும் காதலா? அல்லது கலவையான உணர்வா?தான் செய்த தவறு யாருக்கும் தெரியாத போது ஏன் சங்கரனால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை.குடித்து குடித்தே அழிகிறான்.அப்படியானால் அந்த குற்ற உணர்வின் வீரியம் என்ன? சிதம்பரத்தில் சங்கரனும் சிவகாமியும் சந்திக்கும் போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? இது மாதிரி எண்ணற்ற கேள்விகளை இந்த சினிமா வைக்கிறது.

சினிமா முடிந்தது எழுத்தாளர் ஷாஜியுடன் கலந்துரையாடல் நடந்தது.வெகு இயல்பாக பேசினார்.எந்த சிக்கலான வார்த்தைகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்தார்.மலையாளத் திரைப்படப் போக்கு,கலாச்சாரம் பற்றி நிறைய தகவல்கள் சொன்னார்.அதில் சிலவற்றை எழுதுகிறேன்.

ஷாஜி சொல்கிறார்

-முப்பது வருடம் இந்தப் படம் பார்க்க சிலிர்ப்பாக இருக்கிறது இப்போதும் இது நம்மை கட்டிப் போடுகிறதே.கலை அனுபவத்தைக் கொடுக்கிறது.

-படத்தின் இசைப் பற்றிய கேள்விக்கு ஷாஜி,இப்போது பார்க்கும் போது இன்னும் நன்றாக இசை அமைத்திருக்கலாம் என்று தோன்றுவதாக சொன்னார்.படத்தில் வரும் தமிழ் பதிகங்களை பின்னனியில் ஒலிக்க செய்திருப்பதில் இயக்குநர் அரவிந்தனின் நுட்பம் தெரிவதாக சொன்னார்.

-படத்தின் இயக்குநர் அரவிந்தன் பற்றி சொல்லும் போது,அவர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு இணையான திறமைசாலியென்றும்,இன்றும் அரவிந்தன்தான் பெரும் படைப்பாளி என்று அரவிந்தன் ஸ்கூலில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

-அரவிந்தன் எதையும் ஒங்கியடித்து காட்டமாட்டார்.நளினமாகவே காட்டுவார்.இந்தப் படத்தில் கூட அவர் நினைத்திருந்தால் படுக்கையறை காட்சிகளை காட்டியிருக்கலாம்.கேரளச்சூழலுக்கு அது நன்றாகவே எடுபட்டிருக்கும்.ஆனால் அதை செய்யவில்லை.நிறைய விசயங்களை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் படைப்பாளி சொல்லக் கூடாது என்று நினைப்பார்.

-எனக்கு(ஷாஜி)பதினாறு வயது இருக்கும் போது ஒரு காஃபி ஷாப்பில் அரவிந்தன் மாதிரியே ஒருவர் இருந்தார்.நான் ஆர்வத்துடன் போய் விசாரித்தேன்.ஆனால் அவர் அரவிந்தனின் தம்பி என்று சொன்னார்.ஆனால் பார்க்க அரவிந்தன் மாதிரியே இருந்தார்.

-இந்தப் படத்தில் காட்டப்படும் மாட்டுப்பண்ணை மூனாறு பக்கத்தில் இருக்கும் ‘மாட்டுப்பட்டி’ என்னும் ஊர்.மிகக் குளிர்ச்சியான இடம்.இந்தப் படம் வரும் போது இங்கு எட்டு மாதம் கம்பி இழுத்தால் போல் மழை பொழியும்.மிச்ச மாதங்கள் குளிர்.அதனால் சாராயம் என்பது, இது மாதிரி ஊர்களில் வெகுஜன கலாச்சாரமாக இருந்தது.

-அரவிந்தன் ஒரு இயக்குனர் மட்டுமல்ல,கார்டூனிஸ்டும், இசையமைபாளரும் கூட

-அரவிந்தன் தன் திரைப்படம் நன்றாக ஒட வேண்டும் என்றெல்லாம் காம்பிரமைஸ் செய்து கொள்வதில்லை.படைப்பாகவே பார்ப்பார்.அது மாதிரி நல்ல கலாச்சாரம் கேரளாவில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் நிறைய இருந்தது.ஆனால் இந்தப் படம் ‘சிதம்பரம்’ வணிகரீதியாய் வெற்றிப் பெற்றப் படமே.

-நடிகர் பரத் கோபி,ஸ்மிதா பாட்டீல்.ஸ்ரீனிவாசன் எல்லோரும் குறைந்த சம்ளத்தில் அல்லது சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார்கள்

-இது சி.வி.ஸ்ரீராமன் எழுதிய சிறுகதையை அடிப்படையிலான கதை.என்னைக் கேட்டால் இந்தப் படம் சிறுகதையை விட அழகாக வந்திருக்கிறது.சி.வி ஸ்ரீராமன் மலையாளத்தில் மத்திம தரமான எழுத்தாளர்.

-ஸ்மிதா பாட்டீல் நடிப்பு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்று நான் சொல்ல அதற்கு ஷாஜி ‘ஆம் இப்போது பார்க்க பலகாட்சிகளில் அவரால் ஏழ்மையான் தமிழ் அப்பாவிப் பெண்ணின் கேரக்டரை சரியாக செய்ய முடியவில்லை என்றே தோன்றுகிறது.ஆனால் ஸ்மிதா பாட்டீல் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால்தான் அவரால் இந்த மட்டாவது நடிக்க முடிந்தது.தமிழ் கலாச்சாரம் பற்றி தெரிந்து கொண்டு அதன் படி நடிப்பது கஸ்டமான காரியமே என்றார்.

-கதாநாயகன் ஏன் சிதம்பரம் போவதாக காட்டியிருக்கிறார்கள் என்பதர்கு, கேரளாவில் பாவம் செய்தால் அதைப் போக்க சிதம்பரம் கோவிலுக்கு போவது முன்னர் ஒரு கலாச்சாரமாக இருந்ததாக சொன்னார்.

-ஷாஜி சொல்கிறார் ‘ஒரு படத்தில் நீண்ட காட்சியை இயக்குநர் வைத்தால்,அதில் அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்பது மாதிரி பாருங்கள்.வேகமான காட்சிகளை மட்டும் ரசித்து பழகுவது நம் ரசனையை சிதைப்பதாகும்.

-நமக்கென்று நம் ரசனைக்கு சில அளவுகோல்கள் வைத்திருக்கிறோம்.அடுத்து நம் எல்லோருக்கும் நான் அறிவாளிகள் என்ற எண்ணம் இருக்கிறது.என் அப்பா சிறுவயதில் பாட்டு முடிந்து ஆங்கில இசை போடும் போது ரேடியோவை அஃப் செய்து விடுவார்.அவரை பொறுத்தவரை அவருக்கு ஆங்கில இசைய் தெரியாது.ஆகையால் அவரால் ரசிக்க முடியாது.இப்படித்தான் நம் எல்லோரின் ரசனையும் இருக்கிறது.நமக்கு கடுகெண்ணெய் பிடிக்கவே பிடிக்காது.ஆனால் கோடிக்கணக்கான வட இந்தியர்கள் அதை விரும்பி சாப்பிடுகின்றனர்.மாற்று ரசனை என்பதால் பொறுமையாலும்,நிறைய வாசிப்பதிலனாலும் மட்டுமே பெற முடியும்.

-அரவிந்தன் இன்னொரு படமெடுத்திருக்கிறார்.அதெல்லாம் ரொம்ப ஸ்லோவாக போகும்.ஆனால் அருமையானதாக இருக்கும்.அந்தப் படத்தில் ஒரு சர்க்கஸில் இரண்டு கேமராவை வைத்திருப்பார்.கேண்டீட் கேமரா மாதிரி.பார்வையாளர் ஒவ்வொரு வித்தைகளுக்கேற்ப காட்டும் முகபாவனைகள் அடிப்படையிலான படம்.எவ்வளவு வித்தியாசமான தீம் பாருங்கள்.

-நான் நடிகர் கோபி பற்றிக் கேட்டேன் ஷாஜியிடம்.நடிகர் கோபியின் ஸ்டார் வேல்யூ பற்றி சொல்லுங்கள்? கேரளாவில் அவர் எப்படி கொண்டாடப் பட்டார்? அவருடைய எளிமையான் பர்சானிலிட்டி அவருக்கு தடையாயிருந்ததா? அவருடைய வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது?

அதற்கு ஷாஜி ‘ஒருபோதும் அப்படி இருந்தது இல்லை.கோபி எப்போதும் மக்களின் முழுஆதரவைப் பெற்றிருந்தார்.அவருக்கு நடிப்பு என்பது இயல்பாய் வரும்.இதே மாதிரி தான் நடிப்பார்.விக் வைக்க மாட்டார்.வில்லனாய் நடித்திருக்கிறார்.அதிலும் அவர் நடிப்பு திறமை மற்ற நடிகர்களை விட அதிகம் பேசப்படும்.அவர் தோற்றத்தினால் அவருக்கு வீழ்ச்சியே வரவில்லை ஆனால் அவரு துரதிஸ்ட்டவசமாக அவருக்கு “ஸ்டிரோக்” வந்து முகம் திரும்பி இழுத்துக் கொண்டது.அப்படி இருந்தாலும் கூட அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.அவர்தான் மறுத்து விட்டார்.மலையாள உலகம் பெற்ற அருமையான கலைஞன் தான் நடிகர் பரத்கோபி

-ஸ்ரீனிவாசனும் அப்படியே.அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.ஸ்ரீனிவாசனும் நடிகர் ரஜினிகாந்தும் ஃபிலிம் இன்ஸ்டிடீயூட்டில் ஒன்றாக படித்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?(சிரிப்பு)

-கலைஞர்கள் எல்லோரும் ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்கள் என்ற கருத்து அல்லது,ஆன்மிகத்தில் இருந்தால் தான் நல்ல படைப்புகளை படைக்க முடியும் என்பதான தவறான கருத்து இருக்கிறது.அப்படியில்லை.கடவுளை நம்பாத பல கலைஞர்களை எனக்கு தெரியும். பீதோவான்,பிக்காசோ எல்லாம் இறை மறுப்பாளர்கள் தாம்

-Comedy என்பது மகிழ்ச்சியாய் முடிவைக் கொண்ட படம்.நகைச்சுவை இல்லை.அது Tragedy யின் ஆப்போசிட்.

-நவீனத்துவம் என்பது சிலவற்றை மறுத்தது.பின் நவீனத்துவம் நன்மை ,தீமை, அழிவு, ஆக்கம் எல்லாவற்றுக்கும் அது அதுக்காக வெளி இருக்கிறது என்று நம்புகிறது.

இந்த பத்தியை முடிக்கும் முன் ஷாஜி சொன்ன ஒரு மலையாள சினிமாக் காட்சியை சொல்லி முடித்து விடுகிறேன்.

நெடுமுடிவேணு ஒரு படத்தில் நாடகம் போடுவார்.நாடகத்தில் நடிக்கும் கதாநாயகியை கண்களாலே காதலிக்கிறார்.இன்னும் நெருக்கமாய் இருக்க சந்தர்ப்பம் எதிர்நோக்குகிறார்.

ஆனால் பிரச்சனை நடிகையின் வயதான தந்தையால் தான். எப்போதும் மகளுடனே இருக்கிறார்.இவரை எப்படி கையாள என்று நெடுமுடிவேணு யுத்தி கண்டுபிடிக்கிறார்.

ஒரு ஃபுல் மது வாங்கி அவருக்கு ஊற்றிக் கொடுக்கிறார். அந்த வயதானவர் ஒவ்வொரு பெக் அடிக்க அடிக்க எழுந்து அவர் நாடகத் திறமையை காட்டுகிறார்.

கதகளி எல்லாம் ஆடிக்காட்டுவார்.நெடுமுடிவேணுவுக்கு எரிச்சலாய் இருக்கும்.அங்கே ஃபுல் முழுவதுமாய் காலி.ஆனால் இங்கே மனிதர் களிநடனம் புரிந்து கொண்டிருக்கிறார்.

இவரைத் தூங்க வைத்து அவர் மகளை அடையலாம் என்றால் முடியவில்லையே என்ற கவலை வேணுவுக்கு. மெல்ல நடிகையின் அப்பாவிடம் வந்து,

‘உங்களுக்கு உறக்கம் வரலியா.ஃபுல் உள்ள போயிருக்கே’ என்பார்.

அதற்கு நடிகையின் அப்பா, ’சும்மா இருந்தா கூட எட்டு மணிக்கெல்லாம் உறங்கிருவேன்.ஆனா சரக்கு உள்ள போயிருச்சின்னா என்னால தூங்க முடியாதுடா.நைட்டு முழுதுக்கும் இன்னைக்கு ஆடப்போறேன்.நீ பாருடா தம்பி’ என்றாராம்.

இதுபோன்று இந்த கலந்துரையாடல் இனிமையான அனுபத்தைக் கொடுத்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வெகு சகஜமாக ஜாலியாக சிந்திக்க வைத்தார் ஷாஜி.

ஷாஜிக்கும்,இதை ஏற்பாடு செய்திருந்த பனுவல் குழுவினருக்கு,பரிசல் சிவ.செந்தில்நாதன் அவர்களுக்கும் நன்றி.

- விஜயபாஸ்கர் விஜய்

Sunday, 13 October 2013

ஜோசப் பிரிஸ்ட்லீ எழுதிய கடிதம்...

நாம் சுவாசிக்கும் ’ஆக்சிஜனை’ கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி ஜோசப் பிரிஸ்ட்லீ, தேர்ந்த பகுத்தறிவாளரும் கூட.

சர்ச்சின் அதிகாரத்தை எதிர்த்தவர்.

பிரெஞ்சு புரட்சி நடைபெறும் போது, இங்கிலாந்திலும் சர்ச் அதிகாரத்தை எதிர்த்து போராட்டம், புரட்சி ஏற்படலாம் என்று அடிப்படைவாதிகள் கூட்டம் நினைத்தது.

அதிலும் பிர்மிங்ஹாம் நகரத்தில் இந்த அடிப்படைவாதம் அதிகமாய் இருந்தது.

அந்தக் கூட்டம் பகுத்தறிவாளர்களையும் சர்ச்சுக்கு எதிரானவர்களையும் எதிரிகளாக பார்க்க ஆரம்பித்தது.

இதுமாதிரியான சூழ்நிலையில் 1791 ஆம் ஆண்டு,பிரிஸ்ட்லீ துண்டு பிரசுரம் ஒன்றை மூடநம்பிக்களைக்கு எதிராக வெளியிட்டார்.

கோபம் கொண்ட மதநம்பிக்கையாளர்கள் ஜோசப் பிரிஸ்ட்லீ ஆராய்ச்சிக்கூடம் மற்றும் அதை ஒட்டிய நூலகத்தை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து போய் விடுகின்றனர்.

ஜோசப் பிரிஸ்ட்லீ கடுப்பாகி அந்த நகரத்தை விட்டே போகிறார்.அப்படி போகும் போது அவர் பிர்மிங்ஹாம் நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தை கொடுக்கிறேன்.

<<என் முன்னாள் நகரமக்களுக்கும் (பிர்மிங்ஹாம் நகர மக்கள்) அயலார்களுக்கும் எழுதிக்கொள்வது,

நீங்கள் விலைமதிக்க முடியாத,உபயோகமான ஆராய்ச்சி சாதனங்கள் பலவற்றை அடித்து உடைத்துப் போயிருக்கிறீர்கள்.அந்த சாதனங்கள் தனிநபருடையதாகவோ,இந்த நாட்டைச் சேர்ந்ததாகவோ, அல்லது பக்கத்து நாட்டைச் சேர்ந்ததாகவோ இருக்கலாம்.அவைகளுக்கு பொருள்சார்ந்த கண்ணோட்டமில்லாமல் நான் நிறைய பணத்தை செலவழித்திருக்கிறேன்.என் குறிக்கோள் என்னவென்றால் அந்த சாதனங்களால், நம் நாட்டையும் மனிதநேயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பதுதான்.

நீங்கள் ஆராய்ச்சி கூடத்தை ஒட்டியுள்ள, எந்தப் பணத்தாலும் திரும்ப வாங்க முடியாத, நூலகத்தையும் எரித்து போயிருக்கிறீர்கள்.

பலவருடங்கள் உழைத்து எழுதி வைத்த ஆராய்ச்சிக்குறிப்புகளைக் கூட விட்டுவைக்காமல் எரித்து போயிருக்கிறீர்கள்.அதை என்னால் திரும்ப மீட்டெடுக்கவே முடியாது. 

நீங்கள் இந்தக் கொடுமையையெல்லாம் உங்களுக்கு தீங்கோ,கொடுமையோ செய்வதை கற்பனை கூட செய்யாத எங்களுக்கு செய்திருக்கிறீர்கள்.

இந்த விளையாட்டில் நாங்கள் எப்போதும் ஆடுகள்.நீங்களோ ஒநாய்கள்.நாங்கள் எங்கள் குணங்களை பாதுகாத்துகொள்கிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.

எந்த சூழ்நிலையிலும் உங்கள் சாபங்களுக்கு பதிலாக ஆசீர்வாதத்தையே உங்களுக்கு கொடுக்க விரும்புகிறோம்.

பிர்மிங்ஹாம் மக்களின் முந்தைய தனித்தன்மை அவர்களின் அமைதியான நல்ல குணங்களில் இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.அந்த தனித்தன்மையையே நீங்களும் பின்பற்றி நல்வழி திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் உண்மையான
ஜோசப் பிரிஸ்ட்லீ >>

Monday, 7 October 2013

Leblanc's Process

நீங்கள் கண்டுபிடிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு உங்களுக்கு எதைத் தரும்.புகழைத் தரும்.பணத்தைத் தரும்.இன்னும் வேறு என்னவெல்லாம் அது தரும் ?

Nicholas Leblanc என்னும் பெயரை எப்படி உச்சரிப்பது என்று கண்டிபிடிக்க முடியாததால்.நான் ’லீப்லான்’ என்றே உச்சரிக்கிறேன்.

கந்தகம் (Sulphur) ஆதிகாலத்திலிருந்தே மனிதன் உபயோகிக்கும் தனிமம்.அதை வெடிப்பதற்கும் எரிப்பதற்கும் மட்டுமே உபயோகித்தனர்.

அதன் பிறகு கந்தக அமிலம் கண்டுபிடித்தனர் (Sulphuric acid).இது கெமிஸ்டிரி உலகத்தில் இன்னொரு முக்கியமான நிகழ்வாகும்.

இந்த சமயத்தில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ’காரம்’ (Alkali) அதிகம் தேவையாயிருந்தது.எது அதிகத் தேவையோ அதைக் செய்யும் முறையை கண்டுபிடிக்க போட்டிகள் இருக்கும் என்ற முறையில் காரம் கண்டுபிடிக்க போட்டியிருந்தது.

எல்லோரும் அதைப் பற்றிய ஆராய்ச்சியை செய்து கொண்டு இருந்தனர்.அதிலும் ’சோடியம் கார்பினைடு காரம்’ கம்பெனிகளால் அதிகம் விரும்பப்பட்டது.ஆனால் அதை செய்ய முடியவில்லை.கொஞ்சமாகத்தான் செய்ய முடிந்தது.

1737 ஆம் ஆண்டு சோடா ஆஷ்( சோடியம் கார்பனைடு என்னும் சோப்பு கம்பெனிக்காரர்களால் காதலிக்கபட்ட கெமிக்கல்) மற்றும் உப்பு (Nacl என்னும் நாம் வீட்டில் உபயோகிக்கும் உப்பு) என்ற இந்த இரண்டு கெமிக்கலும் சோடியத்தில்(தனிமம்) இருந்து வந்தவைகள்தான் என்று மொன்சியூ (Monceu) விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

1772 இல் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்கிலீ (Scheele) என்பவர் சல்பூரிக் அமிலத்தை உப்போடு கலந்தால் சோடியம் சல்பேட் கிடைக்கும் என்று கண்டுபிடித்தார். (நமக்குத் தேவை சோடியம் கார்பனைடு அத கண்டுபிடிக்கிறதுக்குதான் ஒவ்வொன்னா வருது).

பிரிட்டன் விஞ்ஞானி ஜேம்ஸ் கெயர் (James keir) கண்டுபிடிக்கப்பட்ட சோடியம் சல்பேட்டுடன், சோடியம் ஹைடிராக்சைடை (Slacked lime) சேர்த்தார்.சோடியம் கார்பனைடு கிடைதது.அதனுடன் கிரியா ஊக்கியாக நிலக்கரியையும் இரும்பையும் உபயோகித்தார்.

கெமிக்கல் ரியாக்சனில் பங்கேற்காது ஆனால் துரித்தப்படுத்தவோ அல்லது மெல்ல நடக்கச்செய்வதோ கிரியா ஊக்கி (Catalyst) என்போம்.

இன்னொரு வாட்டி வரேன்.

சோடியம் கார்பனைடு + சல்பியூரிக் ஆசிட் = சோடியம் சல்பேட்டு

சோடியம் சல்பேட்டு + சோடியம் ஹைடிராக்சைடு + கரி = சோடியம் கார்பனைடு

ஆனா என்னப் பிரச்சனைன்னா, சோடியம் கார்பனைடு கொஞ்சமாத்தான் கிடைச்சது.ஆனா அதுக்கான தேவை அதிகமா இருந்தது.விஞ்ஞானிகள் ஆராய்ச்சி தொடர்ந்தது.

அப்போதுதான் நம்ம ஹீரோ ’லீப்லான்’ Nicholas Leblanc ஒரு முறையைக் கண்டுபிடிக்கிறார்.மிகவும் எளிமையான முறை அது.

சோடியம் சல்பேட்டு + சோடியம் ஹைடிராக்சைடு + கரி = சோடியம் கார்பனைடு என்று பார்த்தோமில்லையா.

இதனுடன் ‘சுண்ணாம்புக் கல் ( Limestone or Chalk ) சேர்த்துப் பார்த்தார்.

மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

லிப்ளானுடைய முறையால் நிறைய வாசிங் சோடா என்ற சோடியம் கார்பனைடு கிடைத்தது.அவருடைய முறை நடைமுறையில் செய்ய எளிதாய் இருந்தது.எளிதாய் இருந்தது.அளவும் நிறைய கிடைத்தது.

’லீப்லான்’ Nicholas Leblanc அதற்கு பேட்டண்ட் எடுத்து வைத்துக் கொண்டார்.

’லீப்லான்’ Nicholas Leblanc அவரே ஒரு பேக்டரி ஆரம்பிக்க திட்டமிட்டு, இரண்டாம் லூயிஸ் பிலிப் என்ற பிரபுவுடன் சேர்ந்து பேக்டரி ஆரம்பித்தார்.ஒரு நாளைக்கு கால் டன் சோடியம் கார்பனைடு தயாரிக்கும் தொழிற்சாலையாக வளர்ந்தது.

ஆனால் ’லீப்லான்’ Nicholas Leblanc யின் துரதிஸ்டம் அந்த நேரத்தில் பிரஞ்சு புரட்சி வந்தது.அந்த போராட்டக்காரர்கள் பிரபு இரண்டாம் லூயிஸை கில்லட்டின் மெசினில் வைத்து தலையை துண்டித்து கொன்றனர்.

’லீப்லான்’ Nicholas Leblanc வைத்திருந்த பேடண்ட் உரிமையைப் பறித்து அது செல்லாது என்றார்கள்.அந்த முறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்றார்கள்.
ஃபிரஞ்ச் கெமிக்கல் ஜர்னலில் ’லீப்லான்’ Nicholas Leblanc கண்டுபிடித்த முறையை எல்லோரும் பார்க்கும் படியாக வெளியிட்டார்கள்.

ஆனால் ’லீப்லான்’ Nicholas Leblanc அவர் உரிமைக்காக பலமுறை போராடினார்.பல கடிதங்கள் எழுதினார்.தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பின் பேடண்ட் தனக்கே சொந்தம் என்று மனம் புழுங்கினார்.

1806 ஆம் ஆண்டு மனக்கவலையும் இறுக்கமும் அதிகமாக ’லீப்லான்’ Nicholas Leblanc துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது சொல்லுங்கள்...

நீங்கள் கண்டுபிடிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு உங்களுக்கு எதைத் தரும்.புகழைத் தரும்.பணத்தைத் தரும்.இன்னும் வேறு என்னவெல்லாம் அது தரும்.

பின்குறிப்பு : Nicholas Leblanc இறந்த பிறகு Dize என்பவர் அது தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு என்று வழக்கு போட்டார்.அதை விசாரித்து Nicholas Leblanc தான் உண்மையான கண்டுபிடிப்பாளர் என்று அறிவித்தனர்.

நாம் சிறுவயதில் படிக்கும் Leblanc's Process பின்னால் ஒரு விஞ்ஞானியின் மனப்புழுக்கமும் தற்கொலையும் இருக்கிறது.