Wednesday, 2 January 2013

கதை போல் ஒன்று - 65


இரவில் அரைகுறை தூக்கமாக கண்களை விழிக்காமலே ரெஸ்ட் ரூம் சென்று திரும்பி,கட்டிலில் படுத்து தூங்குவதில் கில்லாடி நான்.

ஆனாலும் குதிகால் எல்லாம் சரியாக தண்ணீர்விட்டு கழுவியே வருவேன்.

அந்த தூக்க கலக்கத்திலும் குதிகால் கழுவாவிட்டால் அதில் சனி ஒட்டிக்கொள்ளும் என்ற வாக்கியம் நினைவுக்கு வரும்.

கண்களை அரைகுறையாக மூடிக்கொண்டு நடந்து வந்தால் அந்த இரவில் டைனிங் டேபிளில் ஒரு உருவம் சாப்பிட்டு கொண்டிருந்தது.

சட்டென்று அந்த காட்சியின் தன்மையை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தால், என் அறையை பகிர்ந்திருக்கும் தஸ்தகீர்கான் தான் அது.

குவைத் போய் சேர்ந்து, தனிமையின் வெப்பத்தில் தவித்து கொண்டிருக்கும் போது என் அறைத்தோழராக வந்தவர்தான் தஸ்தகீர்கான்.

என்னைவிட ஏழுவருடம் சிறியவர்.

முதல் நாள் பார்த்தவுடனே எனக்கும் தஸ்தகீர்கானுக்கு இடையே நட்பு பொங்கிற்று.

“என்ன பாஸ் இப்போ சாப்பிட்டுருக்கீங்க”

தஸ்தகீர்கான் சிரித்தபடியே ” இன்னையில இருந்து நோன்பு தொடங்குது பாஸ்”

உறைத்தது அறிவுக்கு.ஆமா இன்னைல இருந்து ரமஜான் தொடங்குது.

“சாரி பாஸ் மறந்தே போயிட்டேன்”

மணியை பார்த்தேன் மூன்றே முக்கால்.

தூக்கம் கலைந்ததால் சோபாவில் உட்கார்ந்தபடியே சாப்பிடும் தஸ்தகீரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“பாஸ் இன்னையில இருந்து வீட்டலயே காலையில சாப்பிடுறுங்க வெளிய சாண்ட்விச் கடை திறந்திருக்காது”

“நானும் நேத்தே கேள்விபட்டேன். எதாவது சேமியா கிண்டி சாப்பிட வேண்டியதுதான்” என்றேன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு சின்க்கை நோக்கி போனார் தஸ்தகீர்கான்.

தட்டில் பாதி சாப்பாடு அப்படியே இருந்தது.

“ஏன் சாப்பிடலையா” என்றேன்.

”இல்ல சாப்பிட முடியல பாஸ்... முதல் நாள் இல்ல அதனாலன்னு நெனைக்கிறேன்”

”சரி பாஸ் நீங்க சாப்பிடாட்டி போங்க. எனக்கு கொடுங்க பாஸ். நான் சாப்பிடுறேன்” என்றேன்.

“இது எச்சில் நீங்க சாப்பிடுவீங்களா”

“எச்சில்னா நீங்க துப்பியா தந்தீங்க.சும்மா வைச்சிட்டு போங்க. நான் சாப்பிடுறேன். வெளிய வேற சாப்பாடு கிடைக்காது “

சாப்பாட்டை வைத்துவிட்டு ரெடியாகி ஆபீஸ் போய்விட்டார்.

நான் பல்விளக்கி குளித்து சாப்பிட உட்கார்ந்தேன்.

நல்ல சிக்கன் குழம்பு, சிக்கன் பீஸ் செழுமையாக மசாலா பிடித்து ருசியாக இருந்தது.

இருந்தாலும் காலையில் சோறு சாப்பிடுவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

வயிற்றுக்கு சாப்பிட்டேன்.

அல்லது காலையில் சாண்விச் கடையில் நீளமான ரொட்டியில் நம்ம ஊர் வடை போல் ஒன்றை ( பிலாப்பி) வைத்து தருவார்கள். அதையும் பெப்சியையும்தான் குடிக்க வேண்டும்.

சாயங்காலம் வந்தவுடன் தஸ்தகீர்கான் கேட்ட முதல் கேள்வி “சாப்பாடு உங்களுக்கு பத்திச்சா. ருசியா இருந்திச்சா”

திருப்தியான பதிலை நான் சொல்ல அவர் முகத்தில் உண்மையான நட்பு மிளிர்ந்தது.

மறுநாள் முதல் தினமும் எனக்கு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தே, அவர் சாப்பிட்டார்.

நானும் சிக்கனும் முட்டையுமாக சாப்பிட்டு வளர்ந்தேன்.

நாங்கள் இருந்தது பிண்டாஸில்.தஸ்தகீர்கானீன் மாமாவின் குடும்பம் இருந்தது ஃபாஹீலீல்.

மாமா வீட்டுக்கு அழைத்துப்போனார்.மாமா தன்னுடைய காரில் குவைத்தை சுற்றிக்காட்டினார்.

தினமும் நானும் தஸ்தகீர்கானும் விடிய விடிய பலகதைகளை பேசுவோம்.

தம்பி மாதிரியான பழக்கத்தை பழகிவிட்டார்.

ஒருகாலையில் நான் சாப்பிடும் போது பக்கத்தில் கிண்ணத்தில் நறுக்கிய பழங்கள் இருந்தன.வடிவமாக நறுக்கப்பட்ட ஆப்பிள், பைனாப்பிள் போன்ற பழங்களில் உலர்பழங்கள் வேறு போட்டிருந்தார்.

அதுபற்றி அன்று மாலை கேட்டதற்கு ”எனக்கு பழம் வெட்டினேன்.அப்படியே உங்களுக்கும்” என்று சிரிக்க, நான் தஸ்தகீர்கான் தோளில் கைபோட்டு கொண்டேன்.

டெபுடேக்ஷனில் என் வேலை முடிந்து ஒரு வாரம் கழித்து என்னை கிளம்ப சொல்லிவிட்டார்கள்.

சொன்னதும் தஸ்தகீர்கானின் கண்கள் கலங்கிவிட்டன.

நானும் உணர்ச்சிமயமானேன் அவர் கைகளை பிடித்து” நாம் உண்மையிலே சொந்தமாகிவிட்டோமா பாஸ்” என்று சொன்னேன் காமடியாக ஆனால் உள்ளே ஒரு நெகிழ்ச்சியை வைத்தே.

தினமும் இன்னும் ஆறுநாள்தான் என்கூட இருப்பீங்க
இன்னும் நாலு நாள்தான் இருப்பீங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

மூன்று நாள் முன்னாடி நான் தஸ்தகீர்கானுக்கு பெரிய டிரீட் வைத்தேன்.அப்புறம் ஒரு பிராண்டட் க்ஷர்ட் பரிசளித்தேன்.

கிளம்ப ஒருநாளே இருக்கும் போது இரவு நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தோம்.

எனக்கு ரூமில் விடிபல்பு எரிவது பிடிக்காது.

கும்மிருட்டு விரும்பி.

இருட்டில் அவரவர் கட்டிலில் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டே இருப்போம்.யார் முதலில் தூங்கிறோமோ அப்போது பேச்சு நிற்கும்.

அன்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று தஸ்தகீர்கான் சொன்னார்.

“பாஸ் நீங்க போகும் போது நான் ஒரு பார்சல் தரேன். அத சென்னையில கொடுத்திருங்க.ஒன்னுமில்ல அது பூஸ்ட் மாதிரி ஒரு எனர்ஜி டிரிங்தான்.மாமா உங்ககிட்ட கொடுக்க சொல்லி சொன்னாரு. இந்தியாவுல எங்கப்பா வாங்கிப்பாங்க. என் மாமா பேத்திக்காம், சூட்கேஸ்ல அட்ஜஸ்ட் செய்து வைச்சி கொண்டு போயிருவீங்கல்ல”

இருட்டில் இதை கேட்டுகொண்டிருந்து நான் பதிலே சொல்லவே இல்லை.

“பாஸ் என்ன தூங்கிட்டீங்களா”
“பாஸ் இவ்வளவு சீக்கிரமா தூங்கிட்டீங்களா”
“சரி சரி தூங்குங்க நாளைக்கு அந்த பார்சல் பத்தி உங்ககிட்ட சொல்றேன்”

நான் தூங்கவில்லை.

குழம்பிக்கிடந்தேன்.

என்ன முடிவு எடுப்பது? பார்சலை கொண்டு போவதா? இல்லையா?

இல்லை என்றால் ஏன்?

நான் ஏன் கொண்டு போகனும் தேவையில்லாம ரிஸ்க எடுக்கனும் கூவினேன்.

மனசாட்சி கேட்டது “இதில் என்ன ரிஸ்கப்பா.ஏன் கொண்டு போகமாட்டேன் என்கிறாய்.தெளிவான காரணத்தை சொல்லு”

“அது அது தஸ்தகீர்கான் ஒரு முஸ்லிம்.அவர் மாமா ஒரு முஸ்லிம். அந்த பார்ச்சலில் என்ன இருக்கு என்று எனக்கு தெரியாது”

”இதுதான் உன் நட்பா? பார்சலில் என்ன இருக்கு என்ற குழப்பம் இருந்தால் அதை தஸ்தகீர்கானிடமே கேள். அதை வாங்கிய பில்லைக்கேள்.அதைவிட்டு பதிலே சொல்லாமல் மவுனமாக கிடந்தால் அது என்ன ஞாயம்.இத்தனை நாள் அவன் சாப்பாட்டை சாப்பிட்டு ருசித்து கொழுத்து விட்டு, இப்போ உதவி என்று வரும் போது ஒடுகிறாயே விஜய்”

மனசாட்சியின் கேள்வியால் மனம் பிசைந்தது.

தூக்கமே வரவில்லை. உதவி செய்ய பயமாய் இருந்தது.

திரும்ப திரும்ப ”எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்” என்று தோண்றியது.

சிறுபான்மையினரை மதித்தல், இலக்கியம்,தீவிர இலக்கியம் எல்லாம் என்னை துன்புறுத்தியது.

கனவில் அ.மார்க்ஸ் வந்து இத்தனை நாளும் என் கட்டுரைகளை படித்து புரிந்துகொண்ட லட்சணம் இதுதானா என்று கேட்பதுபோல் இருந்தது.

என்ன செய்ய? என்ன செய்ய? என்னதான் செய்ய? அப்படியே கிறங்கி தூங்கிவிட்டேன்.

மறுநாள் நான் எதிர்பார்த்தது மாதிரி இல்லாமல் தஸ்தகீர்கான் அந்த பேச்சையே எடுக்கவில்லை.

காத்திருந்தேன்.

ஆனால் அவரோ பார்சல் பத்தி பேசவே இல்லை.

இயல்பாக ஜாலியாக பேசினார்.

ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பியெல்லாம் வைத்தார்.

கடைசி கணம் வரை பேசவே இல்லை பார்சலை பற்றி.

அல்லது அன்று இரவு ”உண்மையாகத்தான் தூங்கினீர்களா என்று.”

வர வர என்னுடைய துரோகம் பற்றி கவலைப்பட்டுகொண்டே வந்தேன்.

“ச்சே என்ன கேவலம்டா நான்” என்ற எரிச்சல் வேறு மண்டியது.

சென்னை வந்ததும் குடும்பம் பார்த்து, சாக்லேட் பகிர்ந்து, குழந்தையை பார்த்து உச்சி முகர்ந்து தஸ்தகீர்கானை மறந்தே விட்டேன்.

மனித சுபாவம்தானே.

இரவு படுக்க போகும் போது மனைவி விடிபல்பு எல்லாத்தையும் அணைத்து கும்மிருட்டாக்கினாள்.

எனக்கு அந்த கும்மிருட்டில் தஸ்திகீர்கான் “பாஸ் இவ்வளவு சீக்கிரமா தூங்கிட்டீங்களா” என்று கேட்பது போலவே இருந்தது.

ஸ்டிரஸ்ஸாக இருந்தது.

எழுந்து விடிபல்பை போட்டேன்.

“உங்களுக்கு கசம் இருட்டுதான பிடிக்கும் ஏன் நைட் லாம்ப போடுறீங்க. குவைத் போயிட்டு வந்து மாற்றம் தெரியுதே “ மனைவி செல்லமாக சலித்து கொண்டாள்.

2 comments:

  1. முஸ்லிம்கள் என்றல்ல,பொதுவாகவே யார் கூறினாலும் நாடு விட்டு நாடு செல்லும்போது இத்தகைய உதவி செய்வது அபாயமாகவே எனக்குப் படுகிறது…!

    ReplyDelete