Sunday, 29 January 2017

பெண் குழந்தைகள் தினம்...

இரண்டு நாட்கள் முன்பு பெண் குழந்தைகள் தினம் என்று ஒரு தினத்துக்கு பலர் வாழ்த்துச் சொன்னார்கள்.
அதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு காட்சியைப் பார்த்தேன்.
சென்னை நகரின் மத்தியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது என் மகளின் வயதான ஒரு பெண் குழந்தை நின்று கொண்டிருந்தாள்.
காட்சியை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஆறு வயதிலான பெண் குழந்தை அவள். மேலே டாப்ஸ் அணிந்திருக்கிறாள். கிழே ஜட்டி போடவில்லை. டாப்ஸை முன்பக்கம் கொத்தாக இடது கையால் பிடித்திருக்கிறாள்.
அவள் முன் ஒரு பெரியவர் ஒரு ஒடிந்த மரக்கிளையை கையில் வைத்திருக்கிறார். அது பிரம்பு அல்ல.கிளைகளின் பிரிவுகளோடவே அவர் அதை கையில் வைத்திருக்கிறார்.
அவர் முகம் கோபத்தால் துடிக்கிறது. அவர் முன்னே அந்த அம்மணங்குண்டி ஆறுவயது குழந்தை கொஞ்சம் அசடு வழிந்தாற்போலவும், பயந்தும் சொல்கிறது
“அது டூ பாத்ரூம் போனேன்”
“போவ அதுக்கு அங்கதானா வருவ” என்று சில கெட்டவார்த்தைகளை உதிர்க்கிறார் அந்தப் பெரியவர்.
இந்தப் பெண் அதே அசடு வழிந்து
கொண்டிருக்கிறாள்.
பக்கத்தில் இன்னொரு பெரியவர் வந்து “யாரு இது” என்று கேட்க,
“நம்ம இடத்துல வந்து...” என்று மறுபடியும் திட்டுகிறார்
அந்த கிளையை வைத்துக் கொண்டிருந்த பெரியவர். பின் அப்பிள்ளையை விரட்டிவிடுகிறார். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அப்படி நடந்து அவளைக் கடந்து இன்னும் முன்னே போகும் போது அவள் ஒடி அவள் அம்மாவிடம் நிற்கிறாள். அக்குழந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடிகிறது. அவளின் கலக்கமான முகத்தைப் பார்த்ததும் அம்மா “இயாய்... என்னாச்சிடீ” என்று கத்துகிறார்.
அம்மாவைப் பார்த்ததும் அவளின் அந்த அசடு வழிந்த முகம், ஒரு விநாடியில் வாய் கோணி, உதடு துடித்து கதறி அழுகிறது.
அதை நான் பார்த்துவிட்டேன். அந்த அசடு வழியும் அவமானப்பட்ட முகத்தையும், அந்த அசடு வழிந்த முகம் அம்மாவைப் பார்த்ததும் திடீரென்று மாறும் அந்த மாற்றத்தையும் பார்த்து விட்டேன்.
அதைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் ஒடவில்லை.
மூச்சை சரியாக விட முடியாத மனத்துன்பத்துக்கு ஆளானேன்.
என் இதயத்தை யாரோ வைத்து நைத்து சிதைத்து வைத்தது போல உணர்ந்தேன்.
என் மகளே அப்படி அழுதது போன்று உணர ஆரம்பித்தேன்.
அவள் மகள்தான்.
ஆம் அவள் அழுவது போன்றே அழுதாள்.
அப்படியே.
அப்படித்தான்.
- அந்தக்குழந்தை டூ பாத்ரூம் இருந்து ஆசுவாசமான பிறகு அவர் திட்டினாரா. இல்லை இவர் வருவதைப் பார்த்து அவளுக்கு டூ பாத்ரூம் நின்று போய்விட்டதா.
- நிச்சயமாக ஆறு வயது பெண்குழந்தைக்கு நல்ல சுயமரியாதை வளர்ந்தே இருக்கும். அந்த அவமானம் அவள் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கும்.
-வளர்ந்த பிறகு அப்பெண் குழந்தை இந்த சமூகத்தை எப்படி மதிப்பாள்.
- ஆறு வயது பெண் குழந்தை நிம்மதியாக டூ பாத்ரூம் போகும் விஷயத்தில் கூடவா ”பிறப்பு” ஒரு காரணியாக இருக்கும். அதற்கு கூடவா இந்தியாவில் வசதியான குடும்பத்தில் பிறக்க வேண்டும்.
- எப்படி இந்தியராக பிறக்கும் போது, இந்தியராக இருக்க வேண்டும் என்று உரிமையோ இந்திய அரசு நிர்பந்திக்கிறதோ, அதே அரசுக்கு சுகாதாரத்தின் அடிப்படை வசதிகளை அனைத்து மக்களுக்கும் நிச்சயம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறதுதானே.
சிறுபான்மையினரான மிடில்கிளாஸுகளும், மிகசிறுபான்மையினரான பணககாரர்களும் நினைத்து கூட பார்க்க முடியாத பல பிரச்சனைகளை சிறு குடிசைவாசிகள் அனுபவித்து வருகின்றனர்.
திக்கித் திணறி கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு பொருட்களை சேர்க்கின்றனர். வாழ்க்கையை நிலையாக்கி ஒரு தாளகதிக்கு கொண்டு வருவதே அவர்கள் வாழ்நாள் லட்சியம்.
அவர்களைப் போய்....

பரோட்டாவும் நானும்...

மதியத்துக்கு மேல் இன்றொரு அலுப்பான நாளாக இருந்தது.
ஹாலில் பழைய மெத்தை ஒன்றை விரித்து அப்படியே மலைமாடு மாதிரி படுத்துக் கொண்டேன்.
உருண்டு உருண்டு கிரிக்கட் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதையாவது உருப்படியாக பார்த்தேனா இல்லை.
பக்கத்தில் ஒரு புத்தகம். கையில்; மொபைல். புத்தகத்தை வாசிப்பேன். அப்புறம் விளம்பரத்துக்கு நடுவே சேனலை மாற்றுவேன். மொபைலில் ஃபேஸ்புக் பார்ப்பேன்.
எதையும் ஒழுங்காக செய்வதில்லை.
இப்படியே இருக்கையில் வெறுமையாக உணர்வோம். என்னடா வாழ்க்கை இது என்ற எரிச்சல் வரும்.
கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு தூங்க முயற்சி செய்தேன். மதியம் தூக்கமும் வராது எனக்கு.
மனம் பரபரவென்றே இருக்கும்.
தலை வலிக்க ஆரம்பித்தது. டீ குடித்தேன். ஒரு பதிவு எழுதினேன்.
சலிப்பு சலிப்பு சலிப்பு. யாராவது முதுகில் ரெண்டு குத்து குத்தி விட்டால் தேவலாம் என்பது போன்ற சோம்பேறித்தனம்.
எதையும் செய்ய முடியவில்லை.
யோசிக்க முடியவில்லை.
வாசிக்க முடியவில்லை.
உட்காரமுடியவில்லை.
இரவானது.
திடீரென்று உடையை மாற்றி தெருவில் நடந்தேன்.
ஒரு கிமீ தள்ளி ஒரு பரோட்டா கடை இருந்தது. கூட்டத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு மூன்று பரோட்டா ஒரு ஆம்லேட் ஆர்டர் செய்தேன்.
அந்த அண்ணனை பக்கத்தில் அழைத்து “ பரோட்டா ஃப்ரெஷ்ஷா கொண்டு வாங்கண்ணே” என்று குரல் தழுதழுக்க சொன்னேன்.
சூடாக மூன்று பரோட்டாக்கள் வந்தன.
மேலே சிக்கன் குருமாவை சுடச் சுட ஊற்றினார்.
ஆம்லேட் அம்சமாக வெங்காய வாசனையோடு வந்தது.
மொபைலை ஆஃப் செய்தேன்.
தலையை புரோட்டாவுக்கள் விட்டேன்.
ஒரு துண்டு பரோட்டோவை சால்னாவில் நனைத்து ஆம்லெட்டை பிட்டு வைத்து ஒரு வாய். மறுபடி அதே மாதிரி, மறுபடி அதே மாதிரி.
சுற்றம் மறந்தேன். சூழ்நிலை மறந்தேன்.
என் பெயரை மறந்தேன். என்னை மறந்தேன்.
நான் பரோட்டோ ஆம்லேட்
நான் பரோட்டோ ஆம்லேட்
அப்போது ஒருதடவை கூட மொபைலை ஆன் பண்ண தோன்றவே இல்லை.
ஃபேஸ்புக் பாக்க தோன்றவில்லை. வாட்ஸ் அப் பார்க்க தோன்றவில்லை.
அப்படியே உடல் மனம் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அதெல்லாமும் ஒன்றாய் கலந்து பேரனுபவத்துகு சென்றேன்.
தட்டு இலையை வழித்து நக்கினேன்.
சுயநினைவுக்கு வந்தேன்.
அப்போது அடைந்த புத்துணர்ச்சி இருக்கிறதே வார்த்தையால் விவரிக்க முடியாத மனஎழுச்சி அது.
வரும் போது சோர்வாக வந்தவன் போகும் போது குதியாட்டம் போட்டு போனேன்.
வழியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் கோன் ஐஸ் வாங்கி நக்கிய படியே வீடு நோக்கிச் சென்றேன்.
என்னை மாதிரி எத்தனை கோடிக்கணக்கான தமிழன்கள் இந்த ”பரோட்டா தவ” நிலையை தினமும் அடைகிறான்கள் என்பதை எண்ணி வியந்து கொண்டே சென்றேன்.
ஜப்பானியர்களுக்கு எப்படி டீயோ
தமிழன்மார்களுக்கு அப்படியே பரோட்டா
என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன். 

குழந்தை உருளை...

ஊறுகாய்க்கு பதிலாக,
புளி ஊற்றி அவித்த பாகற்காயை தட்டில் வைத்திருந்தார் மனைவி.
எனக்கும் ஊறுகாய்க்கு பதிலாக அதை ஏற்றுக் கொள்வதில் சம்மதமே.
புளிப்பும் கசப்புமாக பாகற்காய்க்கு அடுத்தது ‘குழந்தை உருளைக்கிழங்கு’ ஆறு ஏழு உருண்டைகள் இருந்தன.
மெல்லிய மசாலாவில் புரட்டி எடுக்கப்பட்ட ருசியான குழந்தை உருளைகள்.
அடுத்ததாக தக்காளியும், பச்சை மிளகாயும், சேர்த்து அவித்து, மத்தால் கடையப்பட்ட மசித்த கட்டி துவரும் பருப்புக்கூட்டு இருந்தது.
சுடு சோறு இருந்தது. தக்காளி ரசமிருந்தது.
ஆனால் என்னை சாப்பிட விடாமல் ஒரு தோழி போனில் இருந்தார்.
அவரிடம் நேரடியாக சொல்ல முடியவில்லை. கல்வி சம்பந்தமான சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
பேச்சு நீண்டு கொண்டே போக வேறு வழியில்லாமல் அவரிடம் சொன்னேன்
“என் முன்னால சோறு இருக்கு, கூட்டுப் பொரியல் எல்லாம் இருக்கு, ஆனா சாப்பிடத்தாங்க முடியல” என்றேன்.
அவர் ஏன் என்று கேட்க, நீங்கதான் போன்லதான் இருக்கீங்களே என்றேன்.
ஹலோ முதல்லே சொல்ல வேண்டியதுதான என்று திட்டி போனை வைத்தார்.
போனைத் தூக்கி அந்தப் பக்கம் தூக்கி எறிந்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். ரசத்தை ஊற்றி பிசைந்தேன்.
குழைத்துப் பிசைந்தேன். குழையச் சாப்பிடுவது தமிழர் பண்பாடு என்று கனடா எழுத்தாளர் முத்துலிங்கம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
எடுத்து குழந்தை உருளையோடு, பருப்பையும், பாகற்காயையும் வைத்து சேர்த்து சாப்பிடும் போது,
கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கு ஊட்டுவதற்காக மனைவி கிண்ணத்தில் சோற்றைப் பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தார்.
ஒரு வாய் சாப்பிடும் போது மகள் வந்து
“அப்பா ஒரு பேபி பொட்டட்டோ எடுத்துகிறேன்” என்று எடுத்துக் கொண்டாள்.
என் தட்டில் ஒன்று குறைந்தது. அடுத்து இன்னொரு உருண்டை குழந்தை உருளை எடுத்துக் கொண்டாள்.
ஒரு குழந்தை ”அவள் தட்டில்” குழந்தை உருளையை எடுத்துக் கொண்டே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியும்.
ஆனால் அதே குழந்தை ”என் தட்டில்” உள்ள குழந்தை உருளையை எடுப்பதை என்னால் அனுமதிக்க முடியவில்லை.
”என்ன இவ்வளவுதான் இருக்கா பேபி பொட்டட்டோ” குரல் ஆட்டோமெட்டிக்காக உயர்ந்தது.
“இல்ல இன்னும் நிறைய இருக்கே” இது மனைவி.
“அப்ப எடுத்து இவளுக்கு கொடுக்க வேண்டியதுதான” இன்னும் குரல் உயர்ந்தது.
“.........................”
“சொல்லு அவளுக்கு அத வைக்க வேண்டியதுதான. ஏன் என் தட்டுல வந்து எடுத்திட்டிருக்கா. அந்த மிச்ச இருக்கிறத என்னப் பண்ணப்போற தூக்கி தூரவா எறியப்போற. அல்லது அவிச்சி கஞ்சி வெச்சி குடிக்கப் போறியா”
“ம்ஹ்ஹும் சரி விடுங்க”
“என்ன விடுங்க. பதில் சொல்லு. அத வெச்சி என்னப் பண்ணப்போற”
“டென்சன் ஆக வேண்டாம். அவளுக்கு சாப்பாடு கூட அதக் குடுத்தா பருப்பே சாப்பிட மாட்டா. அதனால குடுக்க மாட்டேன். இத சாப்பிட்டு முடிச்ச பிறகு கார்டூன் பாத்திட்டிருக்கும் போது கிண்ணத்துல போட்டுக் கொடுத்தா சாப்பிட்டுப்பா. அதான் காரணம் போதுமா” என்றார்.
அப்படியே வெட்கித் தலைகுனிந்தேன்.
ச்சே ஒரு நிமிடம் கீறிப்பிள்ளை மேல் குடமிட்டது மாதிரி எவ்வளவு தவறாக நினைத்து விட்டேன் என்று வெட்கித் தலைகுனிந்தேன்.
வலது கை சோற்றோடு இடது கையோடு சேர்த்து அப்படியே கும்பிட்டு மனைவியிடம் “சாரி பிள்ள ஒரு செகண்ட் உன்ன தப்பா நினைச்சிட்டேன். ச்சே ரொம்ப தப்பா நினைச்சிட்டேன்” என்றேன்.
மனைவி என்னை பரிதாபமாகப் பார்த்து
“சரி சரி சாப்பிடுங்க. நா இதெல்லாம் எடுத்துக்கிறதில்ல” என்றார்.
அதன் பிறகு யோசித்தேன் “நான் கத்திய வேகத்துக்கு அந்தப் பக்கமும் எதிர் கத்தல் வந்திருந்தால் என்னவாகியிருக்கும். ஒரு அம்மா குழந்தைக்கு குழந்தை உருளை கொடுக்காமல் வைத்திருப்பார் என்று எப்படி நான் நம்பினேன். நான்தானே அவளுக்கு பருப்பு கொடு, அவ சரியா சாப்பிட மாட்டேங்குறா என்று சொல்லிக் கொண்டிருப்பேன்.அதைக் கொடுக்கும் உத்தியை நானே தவறாக புரிந்து கொண்டு கத்திவிட்டேன்.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு சாப்பிட்டு எழுந்தேன்.
அதாவது கணவன் மனைவிக்குள்ளோ, அல்லது எந்த வேறு உறவுக்குள்ளேயோ புரிதல் இல்லாமல் சடாரென காட்டுக் கத்தல் கத்தினோம் என்று வையுங்கள், 50 கிராம் கூட இல்லாத “குழந்தை உருளை” கூட பிரச்சனையை ஏற்படுத்தி விடக்கூடும்.
ஆகையால் உறவுகளுக்குள் எப்போதும் கத்தாதீர்கள்.
என்னதான் தெளிவாக எதிராளி தவறு செய்வதாகத் தெரிந்தாலும் பொறுமையாக விளக்கம் கேட்கலாம்.
இல்லாவிட்டால் பாருங்கள் ’குழந்தை உருளை’ கூட பிரச்சனை ஏற்படுத்தி விடக் கூடுமாக்கும் :) :)

அம்பேத்கரின் மக்கள்தொகை பார்வை

காந்தியர்கள் புலனடக்கத்தாலும் பிரம்மசரியத்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்ல,
இந்து மத அமைப்புகள் கடவுள் கொடுப்பதை தடுக்க நாம் யார் என்று சொல்ல,
முஸ்லிம் அமைப்புகள் அது எங்கள் மதத்துக்கு எதிரானது என்று சொல்ல,
கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை அகற்றினாலே மக்களுக்கு செல்வம் கிடைக்கும், அதற்கு குடும்ப கட்டுப்பாடு திட்டம் தேவையில்லை என்று சொல்ல,
அப்போதைய பொருளாதார வல்லுனர்கள் கூட குடும்பக் கட்டுபபாடு என்பது கட்டாயம் தேவையில்லை. நாட்டின் உற்பத்தியை பெருக்கினாலே போதும் என்று சொல்ல,
இல்லை இல்லை குடும்பக் கட்டுப்பாடும், குடும்ப நலன் திட்டங்களும் மட்டுமே இந்தியாவை உயர்த்தும் முக்கிய காரணிகளாகும்,
அதைத்தான் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இந்தியர்களிடமும் இந்திய அரசியல்வாதிகளிடம் திரும்ப திரும்ப வலியுறுத்தினவர்
அம்பேத்கர்.

வரலாறு Scale....

வரலாறு பற்றிய உணர்வை எப்படி மாணவர்களுக்கு கொண்டு வருவது?

ஒரு நான்காம் வகுப்பு மாணவனை எடுத்துக் கொள்வோம். அவனு(ரு)க்கு எப்படி வரலாறு பற்றிய உணர்வைக் கொண்டு வருவது.

அதற்கு முன்னால் ”நேரம்” பற்றிய மனநிலையை எப்படி ஒருவருக்கு உருவாக்குகிறோம் என்பதை யோசிக்கலாம்.

-முதலில் ஒரு குழந்தை பகல் இரவு என்பதை அறிந்து கொள்கிறது. இதை யாரும் அதற்கு சொல்லித் தரத் தேவையில்லை. இவ்வறிவை அதுவாகவே உணர்ந்து கொள்கிறது.

-அடுத்து பகலில் வெவ்வேறு பொழுதகளை முதலில் அறிகிறது. காலை மதியம் மாலை. இதுவும் சூரியனின் சுழற்சியை (பூமியின் சுழற்சியை) வைத்து நிழலை வைத்து குழந்தை தெரிந்து கொள்கிறது.

-இரவை இரண்டே இரண்டு பகுதியாக பிரிக்கிறது. இரவில் தூங்குவதற்கு முந்தைய காலம். தூங்கும் காலம்.

-ஆக ஒரு மனிதன் பிறந்து சில வருடங்கள் வரை, கடிகாரம் வந்த பிறகு கூட, கடிகாரத்தை எடுத்து காலம் பற்றிய அறிவை பெறுவதில்லை. கடிகாரம் இல்லாமலேயே அதை பெரிதாக முதலில் வகுத்துக் கொள்கிறான்.

இதே முறையைத்தான் வரலாறு பற்றி மாணவர்களுக்கு அல்லது நம் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் உபயோகப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.

-எப்படி ஒரு குழந்தை இரவு பகலை பெரும் பிரிவாக பிரிக்கிறதோ அது போல வரலாறை பெரும் பிரிவாக பிரிக்க முதலில் கற்றுத் தரவேண்டும். அதை எப்படி செய்யலாம்.

- வீட்டுச் சுவரில் பெரிய சார்டை ஒட்டி வையுங்கள். அதில் நீளமான கோட்டை வரையுங்கள். (சார்ட்டின் மேல் பகுதியில்)

- கோட்டின் வலது அற்றத்தில் ஒரு புள்ளியை வைத்து இன்றைய தேதி வருடத்தை எழுதுங்கள் “இப்ப நாம எங்க இருக்கோம். இப்ப நாம 2016 யில இருக்கோம். 2016 ன்னா
என்ன? 1,2,3,.4 ... அப்படி எண்ணி எண்ணி 100 வரைக்கும், அது மாதிரி 100,200,300, அப்படி எண்ணி 1000 வரைக்கும். அத 1000, 2000 ம்ன்னு எண்ணினா 2000 வருசம். அதுகூட 16 எண்ணக் கூட்டினா அதுதான் நாம இப்ப இருக்கிற வருசம்” என்று சொல்லலாம்.

-கோட்டின் இடது மூலை அற்றத்தில் ஒரு புள்ளியை வைத்து. “ஒது என்னது. இத ஒண்ணாவது வருசம்னு சொல்லுவோம். இத ஞாபகம் வைக்க ஜீஸஸ் பிறந்த நாள வெச்சுக்குவோம். ஒண்ணாவது வருசத்துல ஜூஸஸ் பிறந்தாருன்னு வெச்சுக்க்க” என்று சொல்லி “ஜீஸஸ் பிறந்தார்” என்று குறிக்க வேண்டும்.

-இப்போது குழந்தைக்கு காலத்தில் முதல்கட்ட ஆரம்பமும் அதன் தொடர்ச்சியான இன்றைய தேதி பற்றியும் ஒரு அடிப்படை அறிவு வருகிறது. 1 டூ 2016 பற்றி அதற்கு தெரிகிறது.

-இப்போது நடுவில் ஒரு கோடு போடுங்கள். சரியாக நடுவில். அதில் 1000 மாவது வருசம் என்று மார்க் செய்து. அதில் ”ராஜ ராஜ சோழன் பிறப்பு” என்று எழுதுங்கள். இப்போது சொல்லுங்கள் “சரி முதல் வருசம் இயேசு பிறக்கிறாரு, அடுத்து நடுவுல ஆயிரமாவது வருசம் ராஜராஜ சோழன் பிறக்கிறாரு. அதற்கடுத்த ஆயிரமாவது வருசம் நாம பிறந்து இட்லி சாப்பிட்டுட்டு இருக்கிறோம் அப்படித்தானே” என்று கேட்க வேண்டும்.

-எப்படி இரவு பகலை முதலில் பிரிக்கிறோமோ அதுமாதிரி இந்த வரலாறு ஸ்கேலான

1- இயேசு
1000- ராஜ ராஜ சோழன்
2016 - நாம் அல்லது நீ

என்ற ”வரலாறு ஸ்கேலை” குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த முதல் ஸ்கேலைப் புரிய வைத்தால் வரலாறை விஞ்ஞானப்பூர்வமாய் உணர்வதற்கான அடிப்படையை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தித் தருகிறீர்கள் என்று அர்த்தம்.

-மறுபடி 1- 1000 என்னும் புள்ளிகளுக்கு நடுவே 500 வது இடத்தில் ஒரு மார்க் பண்ணுங்கள். 500 யில் குப்தர்கள் காலம்/ அழிவு என்று எழுதுங்கள். 1000- 2016 வருடம் நடுவே மார்க் பண்ணி 1500 வருடம் - ஐரோப்பியர்கள் மொத்தமாய் உள்ளே நுழைய ஆரம்பித்த வருடம் என்று எழுதுங்கள்.

-இப்போது வரலாறு ஸ்கேல் இன்னும் விரிவடைகிறது.

1- இயேசு
500 - குப்தர்களின் காலம்
1000- ராஜ ராஜ சோழன்
1500 -ஐரோப்பியர்கள் வருகை.
2016 - நாம் அல்லது நீ

- இப்படி வரலாறு ஸ்கேலை விரிக்க வேண்டும். முதலில் விரிவாக விரிக்கும் போது சம்பவம் அதே வருடத்தில் நடக்கத் தேவையில்லை. பக்கத்தில் இருந்தால் போதும். பெரிய சம்பவமாக நன்றாக மனதில் நிற்கும் சம்பவமாக சுவாரஸ்யமான சம்பவமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

-இப்போது ஒன்றிலிருந்து 500 வரைக்கும் தனியே ஒரு கோட்டை வரையுங்கள். அப்படிப் போங்கள்.
1-500 ஒரு நீண்ட கோடு
500-1000 ஒரு நீண்ட கோடு
1000-1500 ஒரு நீண்ட கோடு
1500 -2016 ஒரு நீண்ட கோடு.

- ஒவ்வொரு 500 வருசத்தையும் ஐந்தாகப் பிரியுங்கள். பிரித்து மார்க் செய்துவிடுங்கள். அந்த அந்த நூறு வருடத்துக்கான வரலாறு சம்பவத்தை அவ்வப்போது ஜாலியாகப் பேசி அதில் எழுதி வையுங்கள். கிட்டத்தட்ட பக்கத்தில் இருந்தால் போதும்.

-எப்படி எண்கள் படிக்கும் போது 0,1,2,3... என்று முதலில் போவோமா அப்படி முதலில் கிபி 0,500,1000,2016 என்று போய்விட்டு, அதில் மாணவர்கள் தெளிந்த பிறகு எண்களில் -1,-2,-3 ... என்று போவதற்கு கற்றுக்கொடுப்பது போல கிமு பகுதியைக் கற்றுக் கொடுக்கலாம்.

-எடுத்த உடனே கிமு கிபி போகத் தேவையில்லை (என் கருத்து) கிபியை முடித்து வரலாறு ஸ்கேல் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துவது முக்கியம்.

ஏன் இந்த வரலாறு ஸ்கேலை ஒரு மாணவன் எட்டு வயதில் படிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லுகிறேன் என்றால் பொதுவாக நமக்கு ஒரு பழமையின் மூலம் பற்றிய விழிப்பே இல்லை.

உதாரணமாக ”ஷிரிடி சாய்பாபா” என்று சொல்கிறோம். அவர் எவ்வளவு பழமையானவர் என்று ஒரு பொது ஜனத்தைக் கேட்டுப் பாருங்கள். “அவரு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே வாழ்ந்தவர்” என்ற மனபிம்பத்தைதான் கொண்டிருப்பார்கள். ஷிரிடி சாய்பாபா 1835 ஆண்டு பக்கத்தில் பிறந்தவர்.

ரமணர் பிறந்தது 1879 யில். அம்பேத்கர் பிறந்தது 1891 ஆம் ஆண்டில். ரமணருக்கும் அம்பேத்கருக்கும் வயது வித்தியாசம் 12 ஆண்டுகள்.

ஆனால் ஒரு பொது ஜனம் அம்பேத்கர் பற்றி என்ன பிம்பம் வைத்திருப்பார். ரமணர் பற்றி என்ன பிம்பம் வைத்திருப்பார் என்று ஒரு பொது ஜனமாகவே நின்று யோசித்துப் பாருங்கள். ரமணரை மிகப் பழமையானவர் என்றும் அம்பேத்கர் இப்போதைய காலத்தில் உள்ளவர் மாதிரியும் ஒரு எண்ணம் இருக்கும்.

வள்ளலார் எப்போது பிறந்தார் 1823 ஆண்டு பிறந்தார். நானெல்லாம் வள்ளலார் பல் நூறு வருடங்கள் முன்பு பிறந்தவர் என்றுதான் குழந்தையில் நினைத்திருக்கிறேன்.

இப்படி குழந்தையில் இருந்தே நமக்கு வரலாறு பற்றிய விழிப்பு, இறந்த காலம் பற்றிய விழிப்பு இல்லாமல் போகிறது,

இந்த விழிப்பு வரும்போதுதான் வரலாறு என்பது நமக்கு ஒரு அறிவியல் நிலையாக படியும். அப்படி படியும் போது நாம் பல மயக்கங்களில் இருந்து போலித்தனங்களில் இருந்து விடுதலையாவோம்.

உங்கள் வீட்டில் சார்ட் ஒட்டி விட்டீர்க்ளா?

வரலாறு ஸ்கேல் வரைந்து விட்டீர்களா ? :) :)

பின்குறிப்பு : இதே விஷயத்தை அன்று பள்ளி மாணவர்களிடம் உரையாற்றும் போது சுருக்கமாக சொன்னேன்.