Saturday, 27 July 2013

மதவெறியின் சுரப்பிகள்...

கிட்டத்தட்ட 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மேல் நடந்த தாக்குதலுக்கு இணையானது 1946இல் ஹிந்துக்கள் மேல்  பெங்காலில் உள்ள நவகாளியில் நடந்த தாக்குதல்.

நவகாளிலுள்ள இந்து மைனாரிட்டிகள் பலர் கொலை செய்யப்படுகின்றனர்.கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.பல பெண்களின் தாலிகளை அறுத்து எறிகின்றனர் மதவெறியர்கள்.

பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதிக்கபடுகின்றன.பெங்காலில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டு கொதித்த பீகார் ஹிந்துக்கள் பீகாரிலுள்ள முஸ்லிம் மைனாரிட்டிகளை கொல்கின்றனர் தாக்குகின்றனர்.நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு என்ன தீர்வென்று யாருக்கும் தெரியவில்லை.

காந்தி தனக்குத்தெரிந்த அகிம்சை ஆயுதமான பாதயாத்திரையை மேற்கொள்கிறார் நவகாளியில்.கிட்டத்தட்ட 65 கிராமங்களை பாதங்களால் கடக்கிறார்.மக்களின் அவலங்களை பார்க்கிறார்.கலங்குகிறார்.தன்னால் முடிந்த அளவுக்கு இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்.அவர் எடுத்துள்ள முறைகளில் வேண்டுமானால் குறை காணலாம்.ஆனால் நோக்கத்தின் மேல் யாரும் குற்றம் சாட்ட முடியாது.

பத்திரிக்கையாசிரியர் சாவி எழுதிய “நவகாளி யாத்திரை” படித்தேன்.படித்து முடிக்கையில் சலிப்பே மிஞ்சுகிறது.எவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கிறது.அதை  தமிழ்நாட்டின் பத்திரிக்கையாசிரியர் தமிழ் மக்களுக்காக எழுதியிருக்கிறார்.ஆனால் தன் கட்டுரையில் எந்த தீவிரத்தன்மையையும் காட்டாமல் ஹாஸ்ய கட்டுரை போல “ஜஸ்ட் லைக் தட் “எழுதிக் கடந்திருக்கிறார்.

படிக்க மிகச்சுவாரஸ்யமானதாக இருக்கிறது சாவியின் எழுத்து.ஆனால் ‘நவகாளி யாத்திரை’ நல்ல கட்டுரை அல்ல.

அது நாட்டின் மதப்பிரச்சனையை சொல்லாமல் காந்தியை ஏற்றி கூறுவதில் மட்டுமே கவனம் கொள்கிறது.’காந்தி இப்படி செய்ஞ்சார்.காந்தி மகாத்தமா.காந்தி மகான்” என்ற் ரீதியிலேயே சாவி சொல்கிறாரே தவிர உண்மையான பிரச்சனை என்ன காந்தி அதற்காக எப்படி உளமாற வருந்தினார் என்பதை படிப்பவரின் மனதை தொடும்படி எழுதவே இல்லை.

உதாரணமாக கட்டுரையை சாவி இப்படி ஆரம்பிக்கிறார்.”அவர் நவகாளி யாத்திரை போகும் முன் பார்க்கில் வேகமாக நடந்து பழகினாராம்.ஏனென்றால் காந்தியுடன் பாதயாத்திரை போனால் வேகமாக நடக்க பயிற்சியாம்” .நாட்டின் முக்கிய கலவரத்தை கவர் செய்யும் லட்சணத்தை பாருங்கள்.

கலவரத்தில் பிழைத்த நாயிடம் காந்தி காட்டிய அன்பு, முஸ்லிம் மதக்குருக்களுக்கு கொடுக்கும் மரியாதையை அங்குள்ளவர்கள் காந்திக்கும் கொடுக்கும் பாங்கு,கலவரத்தில் இறந்தவர்களின் மண்டையோட்டுகளுக்கு நடுவே காந்தி பிரார்த்திப்பது,காந்தியின் பிரம்மச்சர்ய ஆராய்ச்சி என்று காந்தி என்ற தனிமனிதனை ஏற்றிப்பாடும் பாட்டாக மட்டும் சாவி அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

உண்மையில் நவகாளியில் என்ன நடந்தது? யார் குற்றவாளி? மதவெறியின் வீரியம்? என்று களத்தில் கண்டதை சொல்லும் ஆர்வமே அவருக்கு இல்லை.(அவர் இரண்டே நாட்கள் காந்தியுடன் இருந்தாலும்.அங்கே அவருக்கு மாணிக்கவாசகம் என்ற பிரபல நிருபரின் உதவி கிடைத்திருக்கிறது என்பதை நினைவு கொள்ள வேண்டும்).

சாவி இந்த சுரணையில்லாத நீளககட்டுரை புத்தகத்திற்கு கல்கி கிருக்ஷ்ணமூர்த்தி எழுதிய முன்னுரை எவ்வளவோ பரவாயில்லை.அதில் கொஞ்சமாவது காந்தி எடுத்த சில முயற்சிகளை கல்கி சொல்கிறார்.

கல்கி எழுதுகிறார் (தொகுத்திருக்கிறேன்)

மகாத்மா காந்தி தினமும் பிரார்த்தனையில் “ராம நாம பஜனை” நடத்துவார் என்று எல்லோருக்கும் தெரியும்.

“ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்”

என்பது நவகாளி யாத்திரைக்கு முன்னால் பாடப்பட்ட பஜனை.ஆனால் நவகாளி யாத்திரையின் போது காந்தி இதோ இந்த வரிகளையும் சேர்த்தார்.

“ஈஸ்வர அல்லா தேரே நாம்
ஸப்கோ ஸன்மதி தே பகவான்”

(ஈஸ்வரன் என்றாலும் அல்லா என்றாலும் உன்னுடைய திருநாமந்தான்.பகவானே! எல்லோருக்கும் நல்ல புத்தியை அருள்க)

இந்த வரிகளை மகாத்மா சேர்த்தபோது ஹிந்துக்கள் பலருக்கு அறவே பிடிக்கவில்லை.ஆனால் நவகாளி யாத்திரை முடிந்து அடுத்த ஒருவருடத்தில் காந்தி சுடப்பட்டு இறந்த பின்னர், அதை எதிர்த்தவர்கள் கூட அந்த வரிகளை மனமுருகி பாடுவதை கேட்கிறோம்.

இப்படி சொல்கிறார் கல்கி.

கலவரம் செய்யும் பெரும்பான்மையினோர் இஸ்லாமியர்கள்.அந்த மாநிலத்தை ஆள்வது இஸ்லாமிய கவர்னர்.நாடோ பிரிவினை கலவரத்தில் இருக்கிறது.இதில் ராணுவம் என்று எதுவும் பெரிய அளவில் தொகுக்கபடவில்லை.முஸ்லிம்கள் மனம் குளிர்ந்தால் ஒருவேளை கலவரம் குறையலாம் என்று காந்தி நினைத்திருக்கலாம்.அதற்காகாவும் அந்த வரிகளை சேர்த்து பாடியிருக்கலாம்.

எப்படியாவது கலவரம் முதலில் அடங்கவேண்டும் என்று காந்தி தவித்த தவிப்பை இதன் மூலம் உணரலாம்.அதுதான் தேசநலன் கருதும் தலைவர்.

எப்பேர்ப்பட்ட அறிவாளி காந்தி.பீகாரிலும்,பெங்கால் சிட்டகாங்கிலும் பாதிக்கபட்ட இரண்டு மைனாரிட்டிகளைப் பற்றியும் கவலைப்பட்டார்.

இப்போதைய அரசியல்வாதிகளில் ஒரு முதலைமச்சரே கலவரத்தை தூண்டிவிட்டு மைனாரிட்டிகளை காலி செய்து நியூட்டனின் மூன்றாவது விதியை காரணம் சொல்கிறார்.

காந்தி பிறந்த குஜாராத்திலேயே அவரும் பிறந்திருக்கிறார்.ஆனால் இந்திய பிரதமராக ப்ரியப்படும்அளவிற்கு, காந்தியின் சரித்திரத்தை இன்னும் அவர் தெளிவாக கற்க ப்ரியப்படவில்லை.

மதவெறியின் சுரப்பிகள் சுரப்பது இந்தியாவுக்கு நல்லதே இல்லை...

Monday, 22 July 2013

Terry Jones Fairy tales

குழந்தைகளுக்கான இலக்கியம் பற்றியது...

டெர்ரி ஜோன்ஸ் ஃபேரி டேல்ஸ் (Terry Jones Fairy  tales) என்பது டெர்ரி ஜோன்ஸ் என்பவரால் 1981 இல் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதைகள் ஆகும்.

இந்த நூற்றாண்டின் குழந்தையிலக்கியத்தின் சிறந்த ஐந்துபடைப்புகளில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

எல்லாமே சிம்பினான கதைகள்தான்.சில கதைகளுக்கு முடிவே கிடையாது.ஆனால் சுவாரஸ்யமானது.அதிலிருந்து சாம்பிளுக்கு ஐந்து கதைகள்.என்னுடைய பாணியில் சுருக்கி எழுதியிருக்கிறேன்.

கதை ஒன்று -கார்ன் டாலி (Corn dolly)

விவசாயி சோளத்தை அறுவடை செய்யும் போது அழுகைசத்தம் கேட்டது.யார் அழுவது என்று பார்த்தால் வயலில் நிற்கும் “சோளக்காட்டு பொம்மை” தான் அது.

’ஏன் அழுகிறாய்’ என்று விவசாயி பொம்மையை கேட்க,’அறுவடை முடித்து என்னை தனியாக விட்ட் விடுகிறீர்கள் எனக்கு பயமாய் இருக்கிறது’ என்று பொம்மை அழுதது.

சரி வா என்று வெளியே இருக்கும் வைக்கோல் கொட்டகையில் பொம்மையை வைத்தார்.

”பாத்தீங்களா நீங்க மட்டும் கல்லுவீடு நான் வைக்கோல் வீடா “ என்று பொம்மை சொன்னது.சரி என்று விவசாயி அவர் வீட்டுக்கே கூட்டிப்போனார்.

வீட்டுக்கு போனதும் பொம்மை இன்னும் பல குறைகளை சொன்னது.விவசாயியும்  பொம்மைக்காக எல்லாவற்றையும் செய்தார்.

அவர் உணவையே கூட கொடுத்தார்.

நல்ல இருக்கை கொடுத்தார்.கடைசியாக சொன்னது விவசாயிடம் “நீ மட்டும் குளிருக்கு நெருப்பில் குளிர்காய்கிறாய் என்னை டீலில் விட்டுவிட்டாய் “என்று சொல்ல சோளக்காட்டு பொம்மையை நெருப்பின் பக்கத்தில் விவசாயி வைக்க, பொம்மை தீப்பிடித்து எரிந்து போகிறது.


கதை இரண்டு- கேக் ஹார்ஸ் (Cake horse)

ஒரு மனிதன் சிறிய குதிரை உருவத்தில் ஒரு கேக்கை செய்து வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.

தூங்கும் போது ஒரு புனித நட்சத்திரத்தின் ஒளியால் அந்த கேக் குதிரை உயிர்பெற்றது.

இங்கும் அங்கும் தாவித்தாவி ஒடியது.தன்னை செய்த மனிதனிடம் “வா என் மேல் ஏறிக்கொள் “நான் உன்னை சுமக்கிறேன் என்றது.

அதைப் பார்த்து மனிதன் சிரித்து” உன்னால் முடியாது.நீ கேக்கால் செய்யப் பட்ட குதிரை.மேலும் உனக்கு சேணையும் லாடமும் இருந்தால் மட்டுமே ஒட முடியும் என்று சொல்ல, குதிரை ஊர் தச்சனிடம் கேட்க, அவன் கேக் குதிரையிடம் பணம் இல்லாததால் மறுத்து விடுகிறான்.உடனே கேக் குதிரை கடுப்பாகி நாட்டை விட்டு ஒடி காட்டுகுதிரைகளோடு சேர்ந்து கொண்டது. ஆனால் காட்டுகுதிரைகள் வலிமை முன்னால் கேக் குதிரையினால் நிற்க முடியவில்லை.

சோகத்தோடு அலைந்து கொண்டிருந்து. அப்போத் அங்கே ஒரு எலி உடல் மெலிந்து சோகமாய் இருந்தது. கேக் குதிரை எலியை விசாரிக்க,எலி தன் கிராமத்தை விட்டு தொலை தூரம் இங்கே மாட்டி கொண்டதாக சொன்னது.

எலியின் பசியைப் பார்த்த கேக் குதிரை “நீ கவலைபடாதே என்னை கொஞ்சம் சாப்பிட்டுக்கொள் என்றது. எலியும் கொஞ்சூண்டு குதிரையின் வாலை தின்று பசி ஆறியது.

பின் எலியே அதால் முடிந்த அளவுக்கு சேணையும் லாடமும் குதிரைக்கு செய்து கொடுத்தது.

பின் எலி குதிரையை ஒட்ட எலியின் ஊருக்கே சென்று எலியும் கேக் குதிரையும் மகிழ்ச்சியாக இருந்தன.



கதை மூன்று - மூன்று மழைத்துளிகள் (Three rain drops)

மூன்று மழைத்துளிகள் வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தன.

அதில் முதல் மழைத்துளி நம்மூவரி நானே சிறந்தவன்.காரணம் நான் பெரிய உருவமாய் இருக்கிறேன் என்றது.

இரண்டாம் மழைத்துளி நானே சிறந்தவன்.காரணம் நான் மூவரில் அழகானவன் என்றது.

மூன்றாவது மழைத்துளி .இல்லை நானே தூய்மையானவன்.அதானால் நானே சிறந்தவன் என்றது.

இம்மூன்று மழைத்துளிகளும் முடிவில் தரை ஒரு அழுக்குகுட்டையில் விழுந்து சிதறி அழுக்குநீராகிவிட்டன.


கதை நான்கு - ஊதாப் பழம் (Purple fruit)

ஒரு கடல் பிரயாணியின் கப்பல் உடைந்து ஆளில்லாத தீவில் மாட்டிக்கொள்கிறான்.அங்கே மிக உயரமான ஒரு மரத்தில் ஊதா நிறப் பழங்களை பார்க்கிறான்.மிகுந்த சிரமங்களிடையே அந்தப் பழத்தை பறித்து சாப்பிடுகிறான்.

சாப்பிட்ட உடன் தூங்கிவிடுகிறான்.அவன் கனவில் அவனை கப்பல் ஒன்று வந்து கூட்டிச்செல்கிறது. ஊரில் மனைவி குழந்தைகளை பார்க்கிறான்.பணக்காரனாகி விடுகிறான்.எல்லாம் கனவில்தான். இப்படியே கனவு கண்டு கண்டு அவனுக்கு அதுவே பிடித்து விடுகிறது.யாரைப் பற்றியும் கவலையில்லாமல் ஊதாப் பழங்களை சாப்பிட்டு தூங்கிகொண்டே இருக்கிறான்.

முடிவில் அந்த தீவுக்கு வந்து இன்னொரு கப்பல் பயணிகள் இவனை தூக்கி மனைவியிடம் சேர்க்கிறார்கள்.இவனோ எனக்கு ஊதாப் பழம் வேண்டும் என்று அழுகிறான்.

இவன் மனைவி “நீங்கள் கனவில் நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதைத்தான் பார்த்தீர்கள்.நாங்கள் இங்கு அழுதுகொண்டிருப்பதை பார்த்தீர்களா” என்றார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்த அந்த பயணி ஊதாப் பழத்தை மறந்து மனைவி குழந்தையோடு உறவாடுகிறான்.


கதை ஐந்து - தூரத்து கோட்டை அல்லது தூரக்கோட்டை (Far away castle)

ஊருக்கு புதிதாய் வரும் வழிப்போக்கன், ஊரின் பக்கத்தில் இருக்கும் ஒரு கோட்டையை பார்க்கிறான்.அந்த கோட்டையின் பெயர் என்ன என்று ஊராரிடம் கேட்கிறான்” அது பேரு ’தூரக்கோட்டை’ என்கிறார்கள்.மேலும் அந்த கோட்டையை அடையவே முடியாது என்கிறார்கள்.

வழிப்போக்கன் அதை சவாலாய் எடுத்து கோட்டையை நோக்கி நடக்கிறான்.

ஆனால் இவன் நடக்க நடக்க கோட்டை இவனை விட்டு தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

ரோட்டை விட்டு குறுக்கே காட்டுவழி நடக்கிறான் காடு முடிந்ததும் கோட்டை வந்து விடும் என்று நம்புகிறான். கோட்டையும் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. ஆனால் காடு முடிந்ததும் பார்த்தால் கோட்டை பெரிய மலை உச்சிக்கு போனது.

வழிப்போக்கன் மலைநோக்கி நடக்க நடக்க அவனால் முடியவில்லை.களைப்பில் மயங்கி விழுகிறான்.அப்போது அங்கு வந்த மாயக்கிழவி “எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்” என்று விட்டுவிடு என்கிறாள்.

 இவனோ இல்லை நான் கோட்டையை அடைந்தே தீருவேன் என்று போகிறான்.முடிவில் அவனால் முடியவில்லை.”கடவுளே  என்னால் முடியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்” என்று புலம்புகிறான்.

அப்போது அவன் கோட்டை வாசலுக்கு வந்து விடுகிறான்.

கிழவியும் கோட்டை வாசலில் இருந்து  “நான்தான் சொன்னேனே எல்லாவற்றையும் விட்டால் நீ கேட்டது கிடைக்கும் என்று” கோட்டையின் வாசலை திறந்து விட்டாள்.

Tuesday, 16 July 2013

அடிப்படைவாதத்தின் வளர்ச்சி

1.ஒரு நாட்டில், அல்லது மாநிலத்தில், அல்லது குறிப்பிட்ட ஏரியாவில் “எக்ஸ்” என்ற பெரும்பான்மை மதத்தவர் அல்லது ஜாதியினர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அவர்களை தூண்டி ஒட்டுக்களை பெற்றுவிடுவது அடிப்படைவாத கட்சிகளின் குணம்.

உதாரணம் ஒன்று... 

- அயோத்திப் பிரச்சனையில் ரதயாத்திரை மேற்கொண்டு மொத்த இந்தியாவையுமே தேவையில்லாமல் பதட்டப்படுத்தி ( தெரியுமா இதுக்கு திருவனந்தபுரத்தில் பந்த் நடந்தது.) உத்திரபிரதேச அப்பாவி இந்துக்களின் ஒட்டை அள்ளிய பா.ஜ.கவின் தந்திரம்.

உதாரணம் இரண்டு...

வன்னியர்களிடத்து ஒரு அலையை ஏற்படுத்தி அவர்கள் ஒட்டை கவர்ந்த பா.ம.க

2.இப்போது அந்தக் கட்சிகள் பிரபலமாகிவிட்டது.இனிமேல் அவர்கள் “வொய்” என்ற சிறுபான்மையினரை குறிவைப்பார்கள்.அப்படியே அவர்கள் நல்லவர்கள் மாதிரியும்.சிறுபான்மையினரை வெறுக்காதவர்கள் மாதிரியும் காட்டிக்கொள்வார்கள். அது எதற்கென்றால் அந்த “வொய்” ஒட்டையும் பெறத்தான்.

உதாரணம் ஒன்று...

-ஹஜ் பயணிகளுக்கு பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சில சலுகைகள் கொடுத்தார்கள்.முக்தார் அப்பாஸுக்கு மினிஸ்டர் பதவி கொடுத்தார்கள்.இன்னும் பல ஸீன்கள்.

உதாரணம் இரண்டு...

-ராமதாஸ் திடீரென்று தலித்துகளிடம் பாசமாக இருந்தார்.திருமாவளவனிடம் நட்பு கொண்டார். திருமாவிடம் இருந்து “தமிழ்குடிதாங்கி” என்ற விருதை பெற்று அதை பார்த்து ரசித்துக்கொண்டே தன் பண்ணை வீட்டில் விளைவிக்கப்பட்ட இயற்கை உர கத்திரிக்காய்களை வறுத்து தின்றார்.

3.சரி.அடிப்படை வாதத்தினால் “எக்ஸ்” பெரும்பான்மையினரின் ஒட்டு வந்தாச்சு.சலுகைகளால் “வொய்” சிறுபான்மையை கவர்ந்தாயிற்று. இந்த நடுநிலைமை வாதிகள் என்று ஒரு கோஸ்டி இருக்கினறனரே! அவுங்கள எப்படி கவர்வது.அதுக்கும் திட்டம் இருக்கு நம்ம அடிப்படைவாத கட்சிகள் கிட்ட.இல்லாம போன என்ன அரசியல் அது.

உதாரணம் ஒன்று...

-பா.ஜ.கவின் அணுகுண்டு பரிசோதனை( அவனவன் இந்திய தேசப்பற்றுல வெறியானான்),வாஜ்பாயின் ஹிந்தி கவிதைகள்,அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது, இந்தியா ஒளிர்கிறது என்ற கோசங்கள்.

உதாரணம் இரண்டு...

-பா.ம.கவின் தமிழ் வெறி. சிகரெட் மதுவுக்கு எதிரான ஸீன்கள்.ஈழ ஆதரவு போராட்டங்கள், ராமதாஸின் பண்ணைவீட்டுப் படங்களை ஆனந்த விகடனில் போடுதல்,பசுமைதாயகம் போன்ற பற்பல யுத்திகள்.

4.இப்போது மூன்று வகையான ஒட்டுக்களையும் பெற்று அந்த அடிப்படைவாதக் கட்சி ஒரு ஸ்திர நிலைமைக்கு வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.இப்போது “என்ஸ்” பெரும்பான்மை அடிப்படைவாதிகள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள்.பல புதிய அடிப்படைவாதக் கட்சிகள் வரத்தொடங்கும்.

உதாரணம் ஒன்று...

- விஸ்வ ஹிந்து பரிசித், ஆர்.எஸ். எஸ் பகிரஙக்மாக பா.ஜ.கவின் போக்கை அடிக்கடி விமர்சிக்கும் பாங்கு. “நீ இந்துவுக்கு மட்டும்தான் சப்போர் செய்யனும்” என்று பா.ஜ.கவை மிரட்டும் ஸ்டைல்.

உதாரணம் இரண்டு...

-வன்னியர்களுக்கென்று பல புதிய அமைப்புகள் தோண்றுவது.அவைகள் பா.ம.கவை விட அதிகமான அடிப்படை வாதத்தை பேச ஆரம்பித்தது.

5.இப்போது பெரும்பான்மையானவர்களின் ஒட்டுக்கள் மிஸ்ஸாகும்.நடுநிலைமையாளர்கள் எப்போதுமே அடிப்படைவாதக் கட்சிகளை நம்புவதில்லை.பல சமயம் கைவிட்டு விடுவார்கள்.அடிப்படைவாதக் கட்சிகள் தோற்று விடுகின்றன.இப்போ அடிப்படைவாதக் கட்சிகள் தங்கள் செயற்குழுவை கூட்டுகின்றன.அங்கே விவாதிக்கிறார்கள்.ஒருவர் சொல்கிறார்.

“யண்ணே நம்ம பலமே நம்ம மதக்காரங்கதான். நம்ம ஜாதிக்காரங்கதான். நாம சிறுபான்மை ஒட்டுக்கும்,நடுநிலைமைவாதிகள் ஒட்டுக்கும் ஆசப்பட்டு, நம்ம கட்சியோட மெயின் தூண்களையே மறந்துட்டோம்னே.மறுபடியும் கட்சிய வளக்கனுன்ம்னா நாம பழைய ஆயுத்தத்தை எடுக்கனும். கண்டிப்பா மறுபடியும் வெறியத்தூண்டனும்.

உதாரணம் ஒன்று...

-பா.ஜ.க தேர்தல் சமயத்தில் உத்திரபிரதேசத்தில் எழுப்பும் ரதயாத்திரை கோசங்கள்.

உதாரணம் இரண்டு...

-நேற்று வந்த விஜயகாந்த் கூட வளர்கிறார் என்ற பொருமலில் ராமதாஸ் “செண்டு ஜீன்ஸ் போட்டு எங்க வன்னியப்பொண்ணுங்கள ஏமாத்துறானுங்க” என்று அடிப்படைவாதத்தை பேசி வன்னியர்களை தூண்டிவிடுவது, இந்திர விழா கொண்டாடி வன்னிய வெறியை ஒருங்கிணைப்பது.

இதைத்தான் நான் சொல்கிறேன். இது மாதிரி அடிப்படை வாதக் கட்சிகளிடம் கவனமாய் இருங்கள்.

ஒட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள்.சக மனிதர்களை துன்புறுத்துவதைக் கூட.

Saturday, 6 July 2013

சாரு நிவேதிதாவின் அடியாட்கள்...

சாரு இரண்டு நாட்கள் முன்னால் “ரவுத்திரம் பழகு” என்றொரு பத்தி எழுதியிருந்தார். அதில் தன்னை அவமானப்படுத்தும் மற்றவர்களை வாசகர்களாகிய நீங்கள் ஏன் என்னவென்று ரவுத்திரம் பழக வேண்டாமா என்று கேட்டிருந்தார்.

அது கேட்டு அவர் அடியாட்களில் (வாசகர்கள் இருக்கிறார்கள்.நான் சொல்வது அடியாட்கள்) பலருக்கு என்ன செய்யலாம்? தலைவருக்கு எதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது.

இது எல்லாம் தெரியாமல் நான் சாரு தன்னுடைய ஆளுமையை முன்னிறத்த சரிவர தெரியாமல் இருக்கும் மனிதர் என்று விமர்சிக்க போக,

சினம் கொண்ட வீரனாக நம் டேய் மனோ எப்படி கமெண்ட் போட்டிருக்கிறார் பாருங்கள். இதுதான் சாருவின் எழுத்தின் வெற்றி. இப்போது டேய் மனோவின் கமெண்ட்.

<<எப்போதும் எதிர் கருத்து சொல்றவனுகள விடமோசமான முட்டாள்கள் இந்த நடுநிலைவாதிகள்... அதிலும் என்னைப் பொறுத்தவரை அடி முட்டாள் நீ. இப்படியெல்லாம் ஸ்டேடஸ் போட்டு யாருக்கு சொறிஞ்சு விட்டு என்ன ஆகப் போகுது... போய்யா நீயும் உன் மயிரு கருத்தும்.>>

இவ்வளவு இனிமையான கமெண்ட்டை நான் பார்த்தே இல்லை. இதில் Charu Nivedita வின் வெற்றி எங்கு வருகிறது என்றால், இதே டேய் மனோ என்னுடைய நட்பான புதிதில் “பாஸ் உங்க பதிவுகள் அருமை. என்னால் லைக்கே போட முடியவில்லை. என்ன பிரச்சனை என்று புரியவில்லை” என்னிடம் விவாதித்திருப்பார் இன்பாக்ஸில்.

இப்போது “போய்யா நீயும் உன் மயிரு கருத்தும்” . எப்படி பாருங்கள் என் கருத்து மயிராம். சாரு சொல்வது மட்டும் டேய் மனோவுக்கு உயிராம்.( எதுகை எதுகை).

Charu Nivedita உங்களுடைய ‘ரவுத்திரம் பழகு’ பத்தியின் வெற்றிகளில் இதுவும் ஒன்று.

இன்னும் பல டேய் மனோக்கள் இப்படி வரவேண்டும் சாருவின் உள்ளம் குளிர வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

ஜெயமோகன் ‘தட்டைத்தமிழன்’ என்று சொன்னது மாதிரி டேய் மனோ போன்றவர்களை “சாரு தமிழன்” என்று கூற ஆசைப்படுகிறேன்.

இது போன்று இன்னும் கோணல் பக்கங்களை மட்டும் படித்து பல புதிய சாருதமிழன்கள் வருவார்கள்.சாருவுக்கு பணமும், அடியாள் வேலையும் செய்வார்கள்.

சாரு அப்படியே வாழ்க்கையை ஒட்டுவார்.

சாருவுக்கு ஜாலிதான். நீங்க கலக்குங்க சாரு...