Wednesday, 12 April 2017

Caste Engine...

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட
இரண்டு சிறுகதைகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.
1.முதல் கதை ஆண்டாள் பிரியதர்சினி எழுதியது.
கதையின் பெயர் ‘கழிவு’
கதைச்சுருக்கம் : சோமையா அந்த காலத்தில் எடுப்புக் கக்கூஸ் எனப்படும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தவர்.
அது பற்றிய விவரணைகளை வாசகர்கள் மனதில் படுமாறு ஆசிரியர் எழுதுகிறார்.
அவர் உடம்பில் எப்போதும் அடிக்கும் அந்த நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் மனைவி பிரிந்து போய்விடுகிறார்.
மகன் மட்டும் சோமையா கூட இருக்கிறான். அவனும் கொஞ்சநாளில் அப்பாவின் தொழில் பிடிக்காமல் ஒடிவிடுகிறான்.
வெளியூர் சென்று அமாவாசை என்றிருக்கும் அவன் பெயரை மாற்றி தனபால் என்று வைத்து அங்கே வெறு ஒரு ஜாதிப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதற்கிடையில் சோமையா சொல்ல சொல்ல அவர் அனுபவங்களை மூர்த்தி என்பவன் எழுதி அந்த படைப்புக்கு அம்பதாயிரம் ரூபாய் பரிசு கிடைக்கிறது.
தனபால் எப்படியாவது அப்பாவுக்கு கிடைத்தப் பரிசை வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறான். பரிசு வந்ததும் அப்பாவை உலுக்கி எனக்குக் கொடு என்று கேட்டு அடித்து துன்புறுத்துகிறான்.
உடனே சோமையா ”நான் இந்தப் பணத்தை மூர்த்தி நடத்தும் ஸ்கூலுக்குதான் கொடுப்பேன். என்னை கவனிக்காத உனக்கு கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி விட மேலும் கீழ்தரமாக தனபால் திட்ட, தனபாலை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். ஒரு கழிவாக வெளியே தனபாலை அனுப்புகிறார்கள்.
2.இரண்டாவது கதை ’கருக்கு’ பாமா எழுதியது
கதையின் ‘வயிறும் வாழ்க்கையும்’
ஒரு அரசுப் பள்ளிக்கூட டீச்சரின் பார்வையில் கதை விரிகிறது. ரமேஷ் என்ற தாழ்த்தபட்ட சாதி மாணவன் (ஐந்தாம் வகுப்பு) மேல் மோகன் என்னும் மாணவனின் அம்மா ஒரு குறை சொல்கிறாள்.
என் மகன் மோகனின் சாப்பாட்டை ரமேஷ் வாங்கி சாப்பிட்டு விடுகிறான் என்று. டீச்சர் ரமேஷிடம் நீ சத்துணவு வாங்கி சாப்பிட மாட்டாயா என்று கேட்க, ரமேஷ் அமைதியாய் இருக்கிறான். இன்னும் அதட்ட “நான் வாங்கவில்லை. மோகன் கொடுத்டான்” என்று சொல்ல, மோகன் “சாப்பிடும் போது பக்கத்துலேயே நின்னு தா தான்னு பாத்துகிட்டு இருக்கான் டீச்சர் “என்று சொல்ல, ரமேஷ் அமைதியாய் இருக்கிறான்.
இதில்லாமல் மோகன் இன்னொரு தகவலைச் சொல்கிறான். “ரமேஷ் சத்துணவு தட்டையே எடுத்துட்டு வரதில்ல டீச்சர் .அதுக்கு பதிலா சதீஷ்குமார் வீட்டுக்கு மத்யானம் போயிருவான்” என்று சொல்ல டீச்சர் ரமேஷிடன் ஏன் சதீஷ்குமார் வீட்டுக்கு போகிறாய் என்று கேட்க, சதீஷ் வீட்டில் மீதம் உள்ள சாப்பாட்டை கொடுப்பார்கள் என்றும், அதை வெளியே நின்றுதான் சாப்பிட வேண்டும் என்றும் சொல்கிறான்.
நீ ஏன் அப்படிப்பட்ட வீட்டுக்கு போகிறாய் என்று டீச்சர் கேட்க, “எனக்கு இது மாதிரி சாப்பாடு சாப்பிட பிடிக்கல டீச்சர்,கெட்டித் தயிர்சாதம் மாதிரி நல்ல சாப்பாடா சாப்பிடப் பிடிக்குது” என்கிறான். இன்னொரு மாணவி சந்தியா (தாழ்த்தபட்ட வகுப்பு) தன் வகுப்பு தலைவர் போஸ்டை கிருஷ்ணவேணி என்னும் பெண்ணுக்கு விட்டுக் கொடுக்கிறாள்.
சந்தியாவை அழைத்து டீச்சர் கேட்கும் போது “வேணி, எனக்கு மத்யானம் அவ கொண்டு வந்த சாப்பாட்டுல கொஞ்சம் தருவாளாம். நான் லீடராக விருப்பமில்லன்னு சொல்ல சொல்லிட்டா” . ஏன் அப்படி என்று டீச்சர் இன்னும் விசாரிக்க, ”வேணிக்கு ரொம்ப ஆசை அவ அம்மாகிட்ட சொல்லியிருக்கா, அவ அம்மாதான் இந்த ஐடியாவ அவளுக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று சந்தியா சொல்கிறாள்.
டீச்சர் இதைக் கேட்டு கொதித்து தலைமை ஆசிரியரிடம் சொல்லும் போது “விடுங்க டீச்சர் படிக்கனும்னு வர்ற குழந்தைங்க லீடரா இருக்கட்டும். சாப்பாட்டுக்குன்னு ஸ்கூலுக்கு வர்ற குழந்தைகள் அது பாட்டுக்கு இருக்கட்டும்” என்று பேச,
டீச்சர் இப்படி அனைவரும் ஜாதிவெறியுடன் இருக்கிறார்களே என்று மனதுக்குள் கொதிப்பதாக கதை முடிகிறது.
இந்த இரண்டு கதைகளும் சமூகநீதியை களமாக கொண்டு எழுத வேண்டும் என்று எழுதப்பட்ட கதைகள்தாம்.
ஆண்டாள் பிரியதரிசினிக்கு மலம் அள்ளும் களம் கிடைத்திருக்கிறது. அதை அவர் நன்றாகவே விவரித்திருக்கிறார். மலம் அள்ளுவதால் சோமையாவுக்கு வரும் துன்பம் அனைத்தையும் விவரித்திருக்கிறார்.
ஆனால் பின்னால் போக போக அதை அப்பா மகன் கதையாக்கி விடுகிறார். அப்பாவை வெறுக்கும் மகன். அதாவது ’சம்சாரம் அது மின்சாரம்’ விசு-ரகுவரன் மாதிரி ஆக்கிவிடுகிறார். அந்தக் கதையில் எங்கும் மலம் அள்ளும் தொழில் என்பது சோமையாவின் மேல் சுமத்தப்பட்ட, திணிக்கப்பட்ட தொழிலாக ஆண்டாள் பிரியதரினி பார்க்கவில்லை.
சோமையா அப்படி பிறந்து விட்டார். அதனால் அவர் மலம் அள்ளுகிறார் என்ற முன்கருத்து ஆசிரியருக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. அது பற்றிய கொதிப்பு வாக்கியங்கள் வேண்டாம். ஒரு சிந்தனை வாக்கியம் கூடவா ஆண்டாள் பிரியதரிசினியால்
எழுத முடியாது.
தனபால் என்ற அமாவாசை தன் அப்பா சோமையாவின் நாற்றம் பொறுக்காமல் ஒடிப்போனதை ஆண்டாள் மாபெரும் குற்றமாக பார்க்கிறார். அது சாதரணமான உணர்ச்சி. நம் அப்பாவோ அம்மாவோ பெற்றெடுத்த மகளோ மகனோ இரண்டு நாற்றம் பிடித்த குசுக்களை தொடர்ச்சியாக விட்டாலே நாம் அனைவரும் அவர் மீது சொல்ல முடியாது கோபம் கொள்வோம்.
அதே கோபம் தனபாலுக்கும் இருந்திருக்கலாம்.
அங்கேதான் ஆண்டாள் தந்திரம் செய்கிறார்.
தனபாலை மேலும் மேலும் வில்லனாக சித்தரிக்கிறார். அந்த சித்தரிப்பை அந்த கேரக்டர் மீது திணிக்கிறார். தனபால் மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிப்பவன், விஷ வார்த்தை பேசுபவன், அப்பாவை மதிக்காதவன். அடிப்பவன். இப்படியாக வலிந்து சித்தரிக்கிறார்.
சில இடங்களில் ஆண்டாள் பிரியதரிசிணியின் மனதில் உள்ள எண்ணம் வெளியே தெரிகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. குறிப்பாக இப்படி ஒரு வசனம் வருகிறது.
மூர்த்தி சோமையாவின் மகன் தனபாலிடம் கேட்கிறான் // நீ என்ன வேலை செய்ற ஹோட்டல் சானிட்டரி மெயிண்டனஸ்தான. பேருதான் மாறி இருக்கு. அதுவும் உங்கப்பா செய்த வேலைதான. உங்க பொண்ணுகளாவது உங்கள உதறிட்டு போயிராம பாத்துக்கோங்க //
அதாவது சோமையாவின் மகன் தனபாலும் சோமையா செய்யும் தொழில் செய்ய வேண்டியதிருக்கிறது என்ற கோணம் ஆண்டாள் பிரியதரிசினியை வருத்தமடையவில்லை.
ஆனால் சோமையாவை தனபால் அவமானப்படுத்தியதால், தனபாலை அவன் பெண் குழந்தைகள் அவமானப்படுத்தக் கூடும் என்று நினைத்து இன்புறுகிறார்.
ஆக ஆண்டாளுக்கு ஒரு நல்ல பிடிமானம் உள்ள கதை கிடைத்தும் அதை ஒரு தந்தை மகன் உறவுக் கதையாக காமா சோமா என்று எழுதி விகடனிலும் பிரசுரித்து இருக்கிறார்.
கருக்கு பாமா எழுதிய கதைக்கு வருவோம்.
கதையில் பாமா எடுத்திருக்கும் டாப்பிக்கே புதுமையானது.
தலித் இலக்கியம் என்றாலே களம் சார்ந்த அதீதமாக பரிதாபம் வரும்படியாக சொல்வது என்று மட்டும் சிந்திக்காமல் உண்மையில் நடக்கும் ஒரு விஷயத்தை அப்படியே சொல்கிறார்.
சத்துணவு சாப்பிடும் ஏழை மாணவர்களுக்கு உள்ள உணர்வு. அது மட்டுமில்லாமல் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் ஏழைகள் மட்டுமில்லாமல் தாழ்த்தபட்ட மாணவர்களாகவும்( பெரும்பான்மை) இருப்பதை கதையின் போக்கில் படம்பிடித்துக் காட்டுகிறார்.
அதில்லாமல் புலன்களுக்கும் தன்மானத்துக்கும், உரிமைக்கும் நடக்கும் போராட்டத்தை அழகாக காட்டுகிறார்.
சிறுவர்களின் இதே வீக்னஸைதான் (யதார்த்தில் எந்த மனிதனுக்கும் வரும் இயல்பான புலன் சார்ந்த வீக்னஸ்தான். வாழ்க்கை போராட்டம் சார்ந்த வீக்னஸ்தான்) பெரியவர்களிடம் வேறுவிதமாக பயன்படுத்தி தலித் அல்லாத ஜாதியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்.
இதில் பாருங்கள் பாமாவு சொல்லும் முதல் கதை மிக இயல்பாக இருக்கிறது. ரமேஷ் மோகனிடம் தயிர்சாதம் வாங்கிசாப்பிடுவது, சதீஷ் வீட்டுக்கு வெளியே நின்று மிச்சத்தை வாங்கி உண்பது இயல்பாக வந்திருக்கிறது.
ஆனால் சந்தியா தன் கிளாஸ் லீடர் பதவியை உணவுக்காக விட்டுக் கொடுப்பது நாடகத்தனமாக ஆகிவிடுகிறது.
ஆனால் பாமா அவர் சொல்ல வரும் கருத்தை தெளிவாக சொல்ல அதைச் சேர்த்திருப்பதால் அது கதையை பாதிக்கவில்லை. சிறப்பாக அமையவே துணை செய்கிறது.
ஆண்டாள் பிரியதரிசிணி நல்லதொரு தொடக்கத்தை ஒருமாதிரி வீணடித்து எந்த பார்வையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்.
சூழ்நிலையையும் காட்சிகளையும் நோக்கமில்லாமல் எழுதும் போது, ஏதோ ஒரு கவனத்தோடு எழுதும் போது அங்கே இலக்கியமாக அதிகம் விவரிக்க வேண்டிய அவசியம் வருகிறது. அங்கேயும் ஆண்டாள் தவறிவிடுவதால் அது ஒரு சுமாரான சிறுகதையாகிவிடுகிறது.
பாமாவோ நல்லதொரு தொடக்கத்தை இன்னொரு கதையையும் சேர்த்து சொல்லி அவர் சொல்ல வந்த நோகத்தைக் கருத்தை வாசகர் மனதில் பதிய வைத்துவிடுகிறார். மேலும் அந்த கதையின் சூழ்நிலையே ஒரு இலக்கியம்தான்.
வாசகன் அதை நினைத்துப் பார்த்தாலே இலக்கிய அனுபவத்துக்குப் போய்விடுவான். அதோடு சேர்ந்து இந்த புலன் தடுமாற்றத்தையும் அதை மற்றவர்கள் அலெட்சியமாக பேசும் அவலத்தையும் சொல்வதையும் சாதரணமாக விவரிக்கும் போது, இது வாசகனுக்கு சமுதாயம் பற்றிய இன்னும் ஒரு முக்கிய பார்வையைக் கொடுத்து முக்கியமான சிறுகதையாகிவிடுகிறது.
ஏன் ஆண்டாள் பிரியதரிசினியால் இந்தக் கதையை இப்படி சாதரணமாக கொண்டு போக முடிந்தது?
ஏன் பாமாவால் இந்தக் கதையை இப்படி நன்றாக கொண்டு போக முடிந்தது.
அனுபவம் என்றுதான் முதலில் சொல்வோம். ஆண்டாளுக்கு அந்த அனுபவம் எதுவும் கிட்டவில்லை. ஆனால் பாமாவோ அந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் அவருக்கு அனுபவம் இருக்கும். அதனால் நன்றாக எழுதியிருக்கிறார் என்று சொல்வோம்.
இல்லை என்பேன். இதை மறுக்க விரும்புகிறேன்.
வாசிப்பும் தைரியமும்தான் வித்தியாசம் என்பேன்.
பாமாவுக்கு நிச்சயமாக அம்பேத்கர் பற்றியும், சமூக நீதி பற்றியும் சரியானதொரு வாசிப்பு இருந்திருக்கும்.
அதனாலேயே அவரால் சாதரண ஒரு சம்பவத்தை உற்று கவனித்து பின்னால் ஒளிந்திருக்கும் சாதிவெறியை கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் அதை எடுத்துரைக்கும் தைரியமும் அவருக்கு இருந்தது. இது மூன்றாவது ஒரு ஆள் பிரச்சனை அல்ல. என் பிரச்சனை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இதை நான் சொல்வதால் யார் என்ன வசதியின்மையை உணர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் இப்படித்தான் என்ற உறுதி இருக்கிறது. பாமாவுக்கு எந்த இந்துத்துவ நண்பர்களையும் வருத்தமுறச் செய்கிறோமே என்ற பிரச்சனை இல்லை.
ஆனால் ஆண்டாள் பிரியதரிசினிக்கோ அது இல்லை. அவருக்கு அம்பேத்கர் வாசிப்பும் புரிதலும் இல்லை. சமூகநீதி பற்றிய தெளிவான பார்வையும் இல்லை.
தலித்கள் பிரச்சனையை வெறும் பரிதாபம் மற்றும் கருணை கொண்டு அனுகும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக மட்டும்தான் அவர் இருக்கிறார்.
சாதியின்தன்மை என்ன? அந்த இயந்திரம் எப்படி செயல்படுகிறது? இது பற்றியெல்லாம் ஆண்டாளுக்கு சுத்தமாக தெரியவில்லை என்று அவர் கதையைப் படிக்கும் போது தெரிகிறது.
அப்படி அவருக்கு வாசிப்பின் மூலம் தெரிந்தாலும் அதை வெளியே உரைக்கும் தைரியமும் அவருக்கு இல்லை.
அப்படி செய்யும் பட்சத்தில் அது அவரை சார்ந்த பலருக்கு வசதிக்குறைவாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆண்டாள் காந்தியையும், பாரதியாரையும் படிக்கும் போது கொஞ்சம் அம்பேத்கரையும் பெரியாரையும் படித்திருந்தால் இச்சிறுகதையை இப்படி எழுதியிருக்க மாட்டார்.
ஆண்டாள் எழுதிய கதை ஆனந்தவிகடனில் சிறுகதையாக வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
அதாவது போலித்தனமாக சமூகநீதிப் பேசுவதை பிரசுரம் செய்வது விகடனின் அப்போதைய கணக்காக இருந்திருக்கலாம்.
அதாவது மலம் அள்ளும் கதையை சொன்னாற்போலும் இருக்க வேண்டும். ஆனால் அது சாதி இயந்திரத்தைப் பற்றி பேசக் கூடாது. மலம் அள்ளும் சோமையா பற்றி அனைவரும் பரிதாபப்பட்டு கண்ணீர் சிந்த வேண்டும் ( ஒகே நாங்க விகடன் குருப்ஸ் சமூகநீதி பேசிவிட்டோம்)
ஆனால் அதன் மூலக் காரணமான சாதி இயந்திரம் பற்றி பேசக் கூடாது ( ஒகே நாங்க விகடன் எங்க இந்துத்துவா ஆட்களையும் திருப்தி செய்து விட்டோம்)
இப்பதிவை நான் விகடனை குறை சொல்ல மட்டும் எழுதவில்லை.
நாம் அனைவருக்கும் இது பொருந்தும்.
சும்மா சாதிக் கொடுமை என்று ஒரு அவல நிகழ்வைப் பார்த்து கண்ணீர் வடித்து பரிதாபம், கருணை, வாஞ்சை தளத்தில் திரிந்துவிட்டு செல்வதால் சமூகநீதி ஏற்பட்டுவிடப் போவதில்லை.
சாதி என்பது என்ன?
அது எதில் இருந்து வருகிறது?
சாதி இயந்திரம் எப்படி வேலை செய்கிறது?
அது எப்படி தன்னைத்தானே மக்களின் சாதி வெறி மூலம் காத்துக் கொள்கிறது.?
மக்கள் ஏன் சாதி வெறி கொள்கிறார்கள்?
அதன் பின்னால் உள்ள மனநிலை என்ன ? மதத்துக்கு ஜாதிக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது?
இதையெல்லாம் உள்ளே உள்ளே போய் ஆராய்ந்து பார்க்கும் தைரியமும் பக்குவமும் வேண்டும்.
இந்தியாவுக்கே உரிய பிரத்யோக மானுடவியல் பார்வை தேவைப்படுகிறது.
அதைப் புரிந்து கொள்ள பெரியாரையும் அம்பேத்கரையும் விடாது படித்தல் வேண்டும்.
அப்போதுதான் Sharp ஆக யார் சமூகநீதி பேசுகிறார்கள்.
ஊரை ஏமாற்ற யார் சமூகநீதி பேசுகிறார்கள்.
சமூக நீதிக்கு தலையையும்,
சாதி ரசிகர்களுக்கு வாலையும் காட்டும்
போலி விலாங்கு மீன்கள் யார் என்று
அடையாளம் கொண்டு கொள்ள முடியும்.