நீங்கள் மாதம் குறைந்தது 30,000 க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்.
சுத்தமான வீடு, பாத்ரூம், கழிவறை.
நல்ல சாப்பாடு
வாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட்.
கணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள்.
நல்ல சாப்பாடு
வாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட்.
கணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள்.
வெள்ளிக்கிழமை காலை குளித்து நல்ல உடை தரித்து கோவிலுக்குப் போகிறீர்கள்.
தெருமுனையில் இருக்கும் குப்பைப் பெட்டியில் இரண்டு பேர் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை எளிதாக கடந்துவிடுகிறீர்கள்.
கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் என்ன நினைப்பீர்கள்.
”ஐயோ பாவம் இப்படி அழுக்கில் வேலை செய்கிறார்கள். இந்த நாற்றத்தில் வேலை செய்கிறார்கள்”. என்று நினைத்து அவரைக் கடந்து செல்வீர்கள்.
அது ஒன்றும் போலித்தனமான இரக்கம் கிடையாது. உண்மையில் உங்கள் மனதில் அந்த குப்பை அள்ளுபவரைப் பார்த்து அன்பு சுரக்கவே செய்கிறது.
ஆனால் இந்த அன்பு அந்த குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு பெரிய நன்மை எதையும் கொடுக்காது.
கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள்.
- இப்படி குப்பை அள்ளுகிறாரே, சாக்கடை சுத்தம் செய்கிறாரே இவர் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்?
- இவர் என்ன ஜாதியாய் இருக்கக்கூடும்?
- எப்படி இது மாதிரி சுத்தம் செய்யும் தொழில் செய்பவர்கள் 99 சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்?
- அதற்கு என்ன காரணம்?
- வறுமையினால் தொழில் அழுக்கு சுத்தம் செய்யும் தொழிலுக்கு வந்திருப்பார்கள். இருக்கலாம். நம் குடும்பத்திலும் நிறைய சொந்த பந்தங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் இந்த குப்பை அள்ளும் தொழிலுக்கு வரவில்லை.
-எப்படி இத்தொழிலை தாத்தா அப்பா பையன் என்று பரம்பரையாகக் கூட செய்கிறார்கள். மனமுவந்து செய்கிறார்களா? எப்படி இந்த குப்பை அள்ளும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது?
இப்படியெல்லாம் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு நீங்கள் யோசித்தால் உங்களுக்கு ஒரு குற்ற உணர்வு வரும்.
போதும் அது போதும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
அந்த குற்ற உணர்வு சமூதாயத்தில் உள்ள அனைவருக்கு வருவதுதான் முக்கியமானது. அதுவே நம்மில் பலருக்கு வருவதில்லை.
ஒரு மனிதன் அழுக்கில் வேலை செய்கிறான் என்று பரிதாபப்பட்டு போய்விடுகிறோம்.
ஒரு மனிதனை எது பரம்பரையாக அழுக்கில் வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது என்ற சிந்தனையை தவற விட்டுவிடுகிறோம்.
சரி.
இப்படியாக நீங்கள் குற்ற உணர்ச்சியை கொண்டிருக்கிறீர்கள்.
டிஸ்டர்ப் ஆகிவிட்டீர்கள்.
அது பற்றி பெரியவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ, அலுவலக நண்பர்களிடமோ விவாதிக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்.
- ஆம் பாவம்தான் என்பார்கள். நீங்கள் மேலும் மேலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் ‘நம்மால் என்ன செய்ய முடியும்’ என்பார்கள்.
-நம் சிஸ்டம் தவறு என்பார்கள். எங்கப் பாத்தாலும் ஊழல் என்பார்கள். நம்ம டவுன் பிளானிங்கே தப்பு சார். அதனாலத்தான் பாதிப்பிரச்சனை என்பார்கள்.
- ’அப்படியில்லையே குப்பை அள்ளுரத யார் வேண்டுமானாலும் செய்யலாமே’. இதுல ஜாதி எங்க வந்துச்சி. உனக்கு ஜாதி வெறி என்பார்கள்.
- அப்ப நீ போய் அள்ளு. அள்ளமாட்டதான. பெரிசா பேச வந்துட்ட. சும்மா அன்னைத் தெரசா வேஷம் போட்டுட்டு வந்துட்ட என்பார்கள்.
ஆனாலும் உங்களுக்கு அந்த கேள்வி மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. உறுத்திக் கொண்டே இருக்கிறது.
நான் ஏன் இங்கே சுத்தபத்தமாக இருக்கிறேன்?
அவர் ஏன் அங்கே அழுக்கு அள்ளி இருக்கிறார்?
அவர் ஏன் அங்கே அழுக்கு அள்ளி இருக்கிறார்?
இந்தக் கேள்வி உங்களை வாட்டும் போது நீங்கள் இரண்டு பக்கம் பிரியலாம்.
பிரிய வாய்ப்பிருக்கிறது.
1.இது அனைத்தும் கர்மா.
முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் வரக்கூடியது. அவன் குப்பை அள்ளும் பரம்பரையில் இருக்கிறான். நீ குப்பை அள்ளாத பரம்பரையில் இருக்கிறாய் என்றால் அது போன பிறவியில் அவன் பாவம் செய்ததையும், நீ நன்மை செய்ததையும் சுட்டுகிறது.
நீ கலங்கத் தேவையில்லை.
நீ இன்னும் ஏற்றம் பெற கடவுளைத் துதி. விளக்கு பூஜை செய். கடவுள் நாம ஜெபி.
இந்த ஜாதி வித்தியாசம் கூட கர்மாதான். நீ புண்ணியம் செய்ததால் இந்த மகத்தான ஜாதியில் பிறந்தாய். இது உன் பெருமை. இதை அனுபவி.
மற்றவர்களுக்கு நீதான் வழிகாட்ட வேண்டும். அவர்கள் புண்ணியம் செய்து அடுத்த பிறவியில் நம் ஜாதியில் பிறக்கட்டுமே. யார் வேண்டாம் என்று சொன்னது. இப்போது குப்பை அள்ளட்டும். இதில் குற்ற உணர்வு கொள்ள எதுவுமில்லை.
இந்த கர்மா வழி சென்றால் மனித நேயம் போய்விடும்,அடுத்த கட்ட சிந்தனை அனைத்தும் மனதில் இருந்து சுத்தமாக போயிவிடும்.
கொள்கை அளவில் ஜாதியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு உங்கள் மனம் அடங்கிவிடும்.
மெல்ல மெல்ல அடிப்படைவாதத்தை நோக்கி நீங்கள் திரும்பி இருப்பீர்கள்.
2. நீங்கள் அம்பேத்கர் சிந்தனை பக்கம் இதே கேள்விகளை வைத்து திரும்பலாம்.
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
நீ குப்பை அள்ளுவதே உன் மீதான திணிப்புதான். அந்தத் திணிப்பை பலநூறு வருடங்களாக உன் மீது திணித்து வைத்துள்ளனர்.
மதத்தின் மதநூல்கள் அடிப்படையில் உன்னை அடக்கி இருக்கின்றனர். நீ இதை எதிர்த்து போராட வேண்டும். எப்படி இந்த தொழிலை உன் மீது திட்டமிட்டு சுமத்தினார்கள் என்பதை அறிந்து கொள்.
கல்வி கொள்.கேள்வி கேள் எதிர்த்துப் போராடு. அப்போது மட்டுமே உன் விடுதலை சாத்தியம் என்கிறார்.
உங்கள் கேள்வியோடு அம்பேத்கரைப் படிக்கும் போது உண்மையை தெரிந்து கொள்கிறீர்கள். கொள்கை அளவிலாவது ஜாதிக்கு எதிராக திரும்புகிறீர்கள்.
ஜாதியின் கொடுமை உங்களுக்குப் புரிகிறது. ஜாதி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு வருகிறீர்க்ள்.
இதனால் “மக்கள் நலம்” கிட்டுகிறது.
பாருங்கள் ஒரே கேள்வியோடு
கர்மா பக்கம் போனால் ஜாதியை ரசிக்கும் அயோக்கியமாக, சமூகத்திற்கு தீமை விளைவிக்கும் மனநிலைக்கும்,
அம்பேத்கர் பக்கம் போனால் ஜாதியை எதிர்க்கும் அன்பாக, சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும் மனநிலைக்கு போகிறீர்கள்.
இந்த புள்ளியில்தான் அம்பேத்கர் அடுத்த இருநூறு வருடங்களுக்கு இந்தியாவுக்கு அதிகமாக தேவைப்படுகிறார்.
”நான் ஆணையிட்டால்” பாடலைப் பார்க்கும் போது ஏன் கிளர்ச்சியடைகிறோம்.
தொடர்ச்சியாக நியாயத்துக்கு எதிராக ஒருவன் அடிமைப்படுத்தப்படும் போது,
ஒருநாள் அவன் அதை எதிர்த்து போராடும் போது சவுக்கை வீசும் போது,
நம்மை அறியாமல் நேர்பக்கம் நிற்கும் நம் மனது மகிழ்கிறது. விசில் அடிக்கிறது.
அப்படியானால் பலநூறு வருடங்கள் நியாயத்துக்கு எதிராக, மதத்தின் பெயரால் அடக்கி வைக்கப்பட்டு அடிமைப்படுத்தபட்ட மக்களின் சார்பாக
‘நான் ஆணையிட்டால்’ என்று தன் சவுக்கை வீசிய அம்பேத்கரை எப்படியெல்லாம் நாம் கொண்டாடி இருக்க வேண்டும்.
யோசித்துப் பாருங்கள்.