இந்த பத்தியின் தலைப்பு : இந்திரா பார்த்தசாரதியை பார்த்தேன்...
அஃபீஸ் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டிருந்தேன்.
உனக்கு என்ன பிரச்சனை?மத்தியானம் சாப்பாடிருக்கா? இருக்கு.
தங்க தூங்க இடமிருக்கா? இருக்கு.படிக்க புத்தகங்கள் இருக்கா? இருக்கு.
வேற என்ன வெறுமை வேண்டிக்கிடக்கு உனக்கு? தெரியல.
இதோப் பார் சில சமயம் வாழ்க்கை அப்படித்தான் ஒரேவிதமான எண்ணங்கள் வந்து சலிப்பாக இருக்கும்.அது மாதிரி சமயத்தில் பெரிய அளவில் யோசிக்காமல் சின்ன சின்ன மகிழ்ச்சியில் ஈடுபட வேண்டும்.
ஒரு ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.ஒரு சினிமா பார்க்கலாம்.வேறு ஏதாவது நிகழ்ச்சிக்களுக்கு சென்று வரலாம்.இப்படியெல்லாம் எனக்கு நானே சிந்தித்து கொண்டு மொபைலில் முகநூலை எதேட்சையாக பார்க்கும் போது,ஞாநி சங்கரன்,நாரத கானா சபாவின் எதிரே உள்ள டேக் செண்டரில் இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரைத் தொகுப்பு பற்றி பேசப் போவதாக எழுதியிருந்தார்.
மணி பார்த்தேன் ஆறேகால்.ஏழுமணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம்.அலுவலகத்தில் வேலையை ஒரளவுக்கு முடித்து விட்டேன்.ஆறரை மணிக்கெல்லாம் வெளியே ஒடி வந்து,ஆட்டோ பிடித்து டேக் செண்டருக்கு வந்தேன்.வந்து உட்காரவும் ஞாநி பேசத்தொடங்கவும் சரியாக இருந்தது.இனிமேல் ஞாநி பேசிய உரையையும்,அதன் பின்னார் இந்திரா பார்த்தசாரதி பேசிய பேச்சையும்,கேள்விகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்த பதில்களையும் எழுதுகிறேன்.
ஞாநி இப்படியெல்லாம் பேசினார்:
-நான் 1975 யில் இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இந்திரா பார்த்தசாரதியை பேட்டி எடுக்க சென்றேன்.இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தால் பத்திரிக்கைகளால் அரசியல் பிரச்சனைகளை அதிகம் வெளியிட முடியாமல் போனது.அதனால் தெருப்பிரச்சனைகள், சின்ன சின்னதான மக்கள் பிரச்சனைகளை எழுதி பக்கங்களை நிரப்பினோம்.அடுத்த கட்டமாக தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதலாம் என்று சொல்லி இ.பாவை பேட்டி எடுக்கச் சென்றேன்.அப்போது இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தேன்.
-அடையார் டெலிபோன் எக்ஸ்சேஞ் பக்கத்தில் உள்ள சின்ன குடியிருப்பில் இ.பா தற்காலிகமாக தங்கியிருந்தார்.அவர் டில்லியில் இருந்து ஏதோ ஒரு வேலையாக சென்னையில் ஒரு மாதம் தங்கி அன்றோ அல்லது மறுநாளோ கிளம்ப ஆயுத்தமாயிருக்கும்போது நான் அவரை பேட்டி எடுக்கச் சென்றேன்.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் அவரை பேட்டி கண்டேன்.பாதி தமிழும்,பாதி ஆங்கிலமுமாக பேசிக்கொண்டிருந்தார்.நானும் இ.பாவும் பேசிக்கொண்டிருக்கும் போது இன்னொரு நபர் இந்திரா பார்த்தசாரதியின் துணிமணிகளை எல்லாம் அடுக்கி வைத்து, இ.பாவின் டில்லி பயணத்துக்கான ஆயுத்தங்களை செய்து உதவிக் கொண்டிருந்தார்.பேட்டி முடிந்தது அந்த உதவி செய்த நண்பரை இ.பா எனக்கு அறிமுகப்படுத்தினார் “இவர்தான் தியாகராஜன்.எழுத்தாளர்” என்றார்.அந்த தியாகராஜன்தான் எழுத்தாளர் அசோகமித்திரன்.
-நான் அன்று இ.பாவை எடுத்த பேட்டியில் அன்றைய (இன்றைய) நாடகங்களை பற்றி கேள்வி கேட்டேன்.அவர் ”இன்றைய நாடங்கள் வெறும் ”துணுக்குத் தோரணங்கள்” தானே என்று சொன்னார். எனக்கு தெரிந்து இந்த ”துணுக்குத் தோரணங்கள்” என்ற சொற்றொடரை இ.பா தான் முதன் முதலாக சொன்னார்.அதன் பின்னர் பலர் அதை எடுத்தாண்டார்கள்.
-அசோகமித்திரன் நட்பு கிடைத்தது என்றேன் அல்லவா! நான் நாடகத்தின் மீது ஆர்வமாயிருப்பதை கண்ட அசோகமித்திரன் என்னை ந.முத்துச்சாமியிடம் அனுப்பினார்.அவரிடம் பயின்ற பிறகு, நான் முயற்சி செய்த முதல் நாடகமும் இ.பாவினுடையதுதான்.அந்த நாடகத்தின் போஸ்டரை இ.பாவுக்கு அனுப்பி வைத்தேன்.பின்னர் இ.பாவின் மனைவியிடம் பேசும் போது “உங்க நாடக போஸ்டரை அவர் பெட்ரூமிலேயே ஒட்டி வைத்திருந்தார்.என்ன எனக்குதான் பார்ப்பதற்கு கருப்பும் வெள்ளையுமாக ஒருமாதிரி இருக்கும் “என்றார்.இ.பாவின் அக்கறையையும் அன்பையும் சொல்ல வந்தேன்.
-”பொருந்தாப் பொருளை” என்றொரு பாரதியார் கவிதை உண்டு.இ.பாவின் கட்டுரைகளை அப்படி சொல்லலாம்.இரண்டு பொருந்தாப் பொருளை இணைத்து அதிலிருந்தொளியை ஏற்படுத்தி வாசிப்பவரை சிந்திக்கத் தூண்டுவார்.கம்பன்,ஆண்டாள்,ஸ்டீடன் ஹாக்கிங்,நவீன் இலக்கியம்,சங்க இலக்கியம் என்று எல்லாவற்றையும் ஒன்றொக்கொன்று பொருத்திக் காட்டுவார்.ஆங்கில வாசிப்பும்,தமிழ் வாசிப்பும் அதிகம் கொண்டிருந்த இ.பாவால் அதை எளிதாக செய்ய முடிந்தது.
-அயோத்தியை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்த கட்டுரைக்குள்ளே போகுமுன்னே நமக்கு என்ன தோன்றும்.அயோத்தி என்றால் பிரச்சனைக்குறிய இடம்.ஏதோ ஒன்று அது பற்றி சொல்லப்போகிறார் என்பது போன்ற மனநிலைக்கு வருவோம்.ஆனால் இ.பா அயோத்தியை “கம்பன் கண்ட அயோத்தி” என்று சொல்லி அது பற்றி எழுதுகிறார்.கம்பன் எழுதுகிறார்.”அயோத்தியில் உண்மை என்று ஒன்று இல்லவே இல்லையாம்.உண்மைக்கு இடமே கிடையாதாம்.ஏனென்றால் பொய் என்று ஒன்று இருந்தால்தான் உண்மை பற்றிய பேச்சு வரும்.பொய்யென்றே ஒன்று அயோத்தி மக்களுக்கு தெரியாத பட்சத்தில் உண்மை எப்படி தெரியும்.”.இ.பா இதோடு விட்டுவிடவில்லை அவருடைய பார்வையும் சொல்கிறார் இப்படி “ஆனால் இப்போதைய அயோத்தியில் பொய் புரட்டுகளுக்கு இடமில்லை.ஏனென்றால் அங்குள்ளவர்களுக்கு உண்மை என்றால் என்னவென்றே தெரியாது” என்று கூர்மையாக சொல்கிறார்.
-இன்னொரு கட்டுரையில் இ.பா வெளிநாட்டிலுள்ள ஒரு வீட்டிற்கு விருந்து சாப்பிட போகிறார்.அவர்களுக்கு இ.பா வந்தது மகிழ்ச்சி.ஏனெறால் என்று அவர்கள் வீட்டில் திதி.யாராவது ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு சாப்பாடு போட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியாம்.அதனால் இ.பா சாப்பிட வந்தது ரொம்ப மகிழ்ச்சியாம்.இ.பா இதை விவரித்து விட்டு இன்னொன்றையும் சொல்கிறார் அந்த கட்டுரையில் நான் சாப்பிட சாப்பிட, எதை கண்டுகொள்ளாமல் பாப் மியூசிக் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த அவர்கள் மகளையும் அவள் மனநிலையையும் என்னால் அறிய முடிந்தது என்று சொல்லி முடிக்கிறார்.
-சமுதாயத்தில் பல பார்வைகள் இருக்கின்றன.தமிழ்தேசியப் பார்வை,இந்துத்துவா பார்வை,பாரத தேசிய பார்வை,திராவிட பார்வை,இடது சாரி பார்வை என்று பல. இதில் ஒரு பார்வையை உடையவர்கள் மற்றவர் கோணம் பற்றி கவலை கொள்வதே இல்லை.அதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றது.இந்திர பார்த்தசாரதி இதில் எந்த் பார்வைகளிலும் சிக்காதவர்.அவருக்கு எல்லா பார்வைகளின் மீதும் ஒரு அக்கறை இருந்தது.எல்லா தரப்பினரும் கொண்டாடிய விமர்சனம் செய்யாத எழுத்தாளர் என்றால் அது இந்திரா பார்த்தசாரதிதான்.அதற்கு காரணம் இ.பா கொண்டாட்டத்தை பற்றி கவலை கொள்ளவிலலை,தன்னை கொண்டாடாமல் போய்விடுவார்களோ என்று கவலை கொள்ளாமல் தன் எழுத்தை தான் நேர்மையாக ரசித்து எழுதினார்.தனக்கும் சமுதாயத்திற்கும் நேர்மையாக இருப்பதை ஒரு நோக்காக வைத்திருந்தார்.
-வாசிப்பது ஆனந்தமடைவதற்காக.வாசிப்பது அறிவை உணர்ந்து களிப்படைவதற்காக.இவையெல்லாம் தாண்டி வாசிப்பு ஒரு மனிதனை அவன் வாழும் வாழ்க்கையை தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்யவும் உதவ வேண்டும்.
-தமிழ் பேராசிரியராயிருந்தாலும் ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த ஆழமான வாசிப்பு அவரை செம்மையாக எழுத வைத்தது.அது போல அரசியல் கருத்து சொல்லவும் இ.பா எப்போதும் தயங்கியது கிடையாது.நான் அவரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.ஏன் நீங்கள் உங்கள் சமகால எழுத்தாளர்கள் பற்றி அதிகம் சொல்வதில்லை.எழுதுவதில்லை.இந்த கேள்வி எனக்கிருக்கிறது.
நன்றி வணக்கம்.
அடுத்து இந்திராபார்த்தசாரதி இப்படி பேசினார்.
-நான் இந்த நிகழ்ச்சியை பார்பப்தற்குதான் வந்தேன்.திடீரென பேச வைத்துவிட்டார்கள்.
-எப்படி ஞாநியின் முதல் பேட்டியாளர் நானோ,அது போல என்னை முதன்முதலில் பேட்டி எடுத்தவர் ஞாநிதான்.
-நான் கணையாழில புனைப்பெயர்ல கட்டுரைகள் எழுதினேன்.அப்புறம் தினமணிக்கதிர்ல கஸ்தூரி ரங்கன் எழுத வாய்ப்பு கொடுத்தார்.அதுல கொஞ்சம் எழுதினேன்.சமீபத்தில் கல்கியில கட்டுரைகள் எழுதினேன்.நான் கல்கியில எண்பது வயசுல எழுதின கட்டுரை “காதல்” (சிரிப்பு.அரங்கம் சிரித்தது)
-ஞாநி அரசியலுக்கு வருவது பற்றி மகிழ்ச்சி.நானும் அவரு கூட கட்சியில சேர்ந்துவிடலாமா என்று நினைக்கிறேன்.நிச்சயமா எம்.பி சீட்டெல்லாம் கேட்க மாட்டேன்.
-அனைவருக்கும் நன்றி இனி ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க நான் பதில் சொல்லுறேன்.அப்படிச் சொன்னாத்தான் எனக்கு வசதியாயிருக்கு.
கேள்வி 1: நாடகம் சிறுகதை நாவல் எதில் உங்களை செம்மையாக முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது ?
அதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்.எழுத்தாளன் அவன் நம்பிய இலக்கியத்தில் குறிப்பிட்ட காலத்தில் அதிகம் ஈடுபடுகிறான்.அவனே பெரிய நோக்கமெல்லாம் கொண்டிருக்கவில்லை.அனைத்து வடிவங்களிலும் எழுதுகிறான்.நம் அடையாளத்தை நாம் தேடிக்கொள்வதுதான் எழுத்து.எதில் நான் சிறப்பு என்பதை வாசகன்தான் சொல்லவேண்டும்.
கேள்வி 2:தமிழ் இதழ்கள்,பத்திரிக்கைகள்,கதைகள்,நாவல்கள் வாசிப்பது குறைந்து விட்டதே?
தமிழ் டீவி தொடர்களை நிறுத்தினால்தான் சரிபட்டு வரும்.( சிரிப்பு).முன்பெல்லாம் நாவல்,சிறுகதை தொகுப்பு வரவேண்டுமானால் இதழ்களில் தொடர்கதையாக அல்லது கதையாக வந்திருக்க வேண்டும்.அப்போதுதான் பதிப்பிப்பார்கள்.ஆனால் இப்போது அப்படியில்லை.நீங்கள் தனியாக எழுதினால் கூட நாவல்களை வெளியிடுகிறார்கள்.இது ஆரோக்கியமான போக்கு என்பேன்.பிளாக் எழுதுவதெல்லாம் நல்ல விசயம்தான். இதனால் என்ன நடக்கிறது பத்திரிக்கைகளில் இதழ்களில் தொடர்கதை வருவது குறைகிறது.அப்படி குறைவதால் மற்ற பல விசயங்களை விவாதிக்க முடிகிறது.இது ஆரோக்கியமான போக்கு.ஆங்கிலத்தில் இது முன்னமே நடந்து முடிந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விட்டது.தமிழில் இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிறது.நல்ல விசயம்.
கேள்வி 3: ஏன் சமகால எழுத்தாளர்கள் பற்றி,எழுத்துக்கள் எதுவும் சொல்வதில்லை நீங்கள்?
மக்களுக்கு தெரியும் யார் நல்ல எழுத்தாளர்.யார் இல்லை என்று .நான் ஏன் சொல்ல வேண்டும்.ஒருவர் என்னிடம் கேட்டார்.நீங்கள் ஒரு எழுத்தாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள்.அவர் உங்களை பற்றி எழுதுவார்.இப்படி தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்று.நான் சொன்னேன் “நாங்கள் அடித்து பிடித்து சண்டை போடுவதை பார்க்க விரும்புகிறீர்களா” என்று. (சிரிப்பு)
ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் எல்லாம் நல்லாவே எழுதுறாங்க.
கேள்வி 4:கடவுள் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?
நாஸ்திகம் பேசுபவன் முட்டாள் எனப்து என் கருத்து.நாஸ்திகம் எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யாது.தர்க்கத்தினால் கடவுள் இல்லை என்று நமக்கு தெரிந்தால் கூட நமக்கான ஒரு கடவுளை சிருஷ்டித்துக் கொள்வது மட்டுமே மனித வாழ்க்கையை வாழ உதவும்.Even it is no god means create it என்பது என் கொள்கை.
கேள்வி 5 : நீங்கள் பல புத்தகங்களுக்கு எழுதிய அணிந்துரையை உங்கள் சமகால இலக்கிய பார்வை என்று கொள்ளலாமா?
அணிந்துரை,முன்னுரை எழுதுவென்பது,முன்னனி கிரிக்கட் வீரர்கள், கிரிக்கட் ஆடிய பிறகு கமெண்டரி கொடுப்பார்களே அவர்களையொத்தது .எங்களைப் போன்ற ரிட்டைர்ட் எழுத்தாளர்களை அதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் (சிரிப்பு).கொள்ளலாம்.அவை என் கருத்துகள்தானே.நானும் சமகால எழுத்தாளர்கள் மேல் அக்கறையே இல்லாதவன் எல்லாம் இல்லையென்று நினைக்கிறேன் (சிரிப்பு). நேசனல் புக் டிரஸ்ட்டுக்கு சென்று ஆதவனுடைய சிறுகதைகளை எல்லாம் தொகுப்பாக கொண்டுவர பலமுயற்சிகள் செய்திருக்கிறேன்.
நன்றி.
விழா முடிந்ததும்.கவிதா வெளியிட்டுள்ள “இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்” புத்தகத்தை வாங்கினேன்.
இந்திரா பார்த்தசாரதியிடம் போய் அவர் எழுத்துகள் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை சுருக்கமாக சொன்னேன்.என் கைகளை தன் கைகளால் பற்றி குலுக்கினார்.
மகிழ்ச்சியான நாள்.